ராஜகோபுர மனசு
கணநேரத்தில் பூஜை செய்து கொண்டிருந்த மன்னரை, யாரோவொருவன் வாளுருவி கொல்ல முனைந்தபோது, ஒரு ஹொய் சாலத்து வீரன் அலறினான். தடுத்து, “இவரே எங்கள் மன்னர்” என்றான். சொன்னவனைக் குத்திக் கொன்றுவிட்டு, மன்னர் வீரவல்லாளனின் கழுத்தில் கத்திவைத்த சுல்தான் தம்கானி, ‘‘சுலபமாய் போர்முடிந்தது. இந்தக்கிழநாயை கைதுசெய்து அழைத்து வாருங்கள்” எனக் கொக்கரித்தான். எல்லாம் முடிந்தது. மன்னரின் கைதால் ஹொய்சாலத்து வீரர்கள் ஆயுதம் கீழே போட்டு தாமாகவே சரணடைந்தார்கள். அடிவானில் சூரியன் கிளம்பி, இரண்டு பனைமர உயரம் உச்சிக்கு வருவதற்குள் போர் முடிந்துவிட்டது.
விசாரணையென்ற பேரிலும், விடுதலையென்ற பேரிலும், தம்கானி பேரம் பேசினான். பொன்னும், மணியும் தேவையென்றான். எத்தனை தந்தாலும் போதாதென்றான். படைகளோடு மாதப்பதண்ட நாயகர், கிளம்பி வருவதையறிந்து, மன்னர் வீரவல்லாளனை மதுரைக்குக் கொண்டு போனான். அபராதமாக, பெருந்தொகையை தந்தால், உங்கள் மன்னரை விட்டு விடுகிறேன். அருணைக்கு சேதியனுப்பினான். ஆனால், விசாரணையென்ற பெயரில், வயதானவர் என்றும் பாராமல் விடாமல் அடித்து மன்னரை இம்சித்தான். ரத்தக்களரியாக நின்ற மன்னர் வீரவல்லாளன் காலம் நெருங்கி விட்டதை உணர்ந்து கொண்டார்.
“போதும். நகர்ந்துவிடலாம்” என தன் ஆத்மா வழியே யோசித்தார். அப்படி யோசிக்கும்போதே, தன்மகன் விருபாக்ஷனை நினைத்துக்கொண்டார். “மகனே, வீரவிருபாக்ஷா, என்னை மன்னித்துவிடடா. உன்னை இன்னும் நான் கொண்டாடியிருக்க வேண்டும். உன்னோடு இன்னும் சிரித்துப் பேசி குலாவியிருக்க வேண்டும். இந்த நொடி, நீயும், அருணை மலையீசனும் மட்டுமே என்நினைப்பில் இருக்கிறீர்கள். உன்மீது நான் கொண்ட, என் வாய்திறந்து சொல்லாத என் பிரியத்தை, அதுமட்டுமே சொல்லும்.” என நினைத்துக்கொண்டவர், அருணைமலையின் திசைப்பார்த்து கைகள்கூப்பியபடி, “அருணாச்சலா! மரணமெனக்கு பயமில்லை. ஏன் கவலையுமில்லை. காரணம், இதோ, உன் பாதாரவிந்தம், எனக்கு நிரந்தரமாகப் போகிறது. என்கவலையெல்லாம், நீண்டு படுத்திருக்கும் உன்ரூபம் பார்க்காமலேயே மரணிக்கப் போகிறேனே.
அதுஒன்றே.”“ஈசனே, எனக்கு வாக்கு கொடுத்திருக் கிறாய். என்ஆத்மாவிற்கான அந்திமக்கடமைகளைச் செய்வதாக, உறுதி தந்திருக்கிறாய். அந்த கடமைகளை செய்வதற்கு மறந்துவிடாதே.” என மனதுக்குள் பேசினார். அப்படி அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, வேகமாக ஆசனம்விட்டெழுந்த தம்கானி, இடைவாளுருவி, ஒருவீச்சில் மன்னர் வீரவல்லாளனின் தலையைச் சீவினான். ஒரேசீவில், தலை மட்டும் தனியாக உருண்டுபோய் விழுந்தது. கைகள் கூப்பிய நிலையிலேயே, தொப்பையும், தொந்தியும் கொண்ட கனத்த சரீரமாய், தலையற்ற முண்டமாய், மன்னர் வீரவல்லாளன் கீழே சாய்ந்தார்.
நீண்ட சிகையும், தாடியும்கொண்ட தலை, சில நொடிகள் எதையோ முணுமுணுத்துவிட்டு, உதடுகள் லேசாக திறந்தபடி, பற்கள் தெரியும்படி அப்படியே நின்றது. சுல்தான் கண் காட்ட, யாரோவொரு வீரன், தூரக் கிடந்த தலையை, முடியைப்பற்றி தூக்கினான். கொண்டுவந்து சுல்தானிடம் காட்டினான். அரைக்கண் சொருகலோடும், உதடுகள் திறந்திருந்ததால் புன்னகைப்பதுபோல தோன்றிய தலையை உற்றுபார்த்த சுல்தான், “செத்த பிறகும், இந்தக் கிழவனின்முகம் என்னை ஏதோ செய்கிறது. இந்த முகத்தின் அமைதியும், பொலிவும், பயத்தால் என் உள்ளுக்குள் எதையோ கரைக்கிறது.” எனக் கூறி, முகத்தை திருப்பிக்கொண்டான்.
திரும்பியபடியே, “இந்தக் கிழவன் சடலத்தின் தோலுரித்து, வைக்கோல் அடைத்து, நம் கோட்டை வாசலில் தொங்க விடுங்கள். இதுவே என்னை எதிர்ப்போர்க்கு பாடம்” எனக் கட்டளையிட்டான். அவன் கட்டளைக்கு சபை முகம் சுளித்தது. ஆனால், எதிர்த்துப் பேசாமல் தலைகுனிந்து கொண்டது.சில நாழிகைகளில் மன்னர் வீரவல்லாளனின் உடல், ஆட்டுத்தோல் உரிப்பதுபோல தோலுரிக்கப்பட்டு, உரித்ததோலில் வைக்கோல்போர் திணித்து தைக்கப்பட்டு, கோட்டைச் சுவரில் கயிறுகட்டி மேலேற்றி தொங்கவிடப்பட்டது. “சுல்தானின் எதிரி கிழநாய் வீரவல்லாளன் கொல்லப்பட்டான்” எனப் பெயர்ப் பலகை கழுத்தில் மாட்டப்பட்டிருந்தது.
ரத்த வாடைக்கு காகங்கள் சுற்றி வந்தன. ஊசலாடும் சடலத்தை ஊரே திரண்டு வந்து பார்த்தது. நல்லோர் மனசுக்குள் அழுதனர். பெண்கள் கலங்கினர். அந்தக் கூட்டத்தில் ஹொய்சாலத்தின் உளவாளியும் இருந்தான். சடலம் கண்டும், அதில் தொங்கிய பெயர்ப் பலகையை கண்டும் அதிர்ந்துபோனான், யாரும் பார்க்காத வண்ணம், முகம்பொத்திக் கொண்டழுதான். நடந்ததைச் சொல்ல, அருணைக்கு விரைந்தான். பேயாய்க் குதிரையை விரட்டினான்.
எது நடந்தாலும் இளவரசரின் நகர்வலம் நிற்கக்கூடாது என்கிற மன்னரின் உத்தரவுப்படி, வழக்கம்போல, கோபுரங்களின் நிறைவுப் பணிகளை பார்வையிட, அரண்மனையிலிருந்து கிளம்பி வந்து கொண்டிருந்தார். பல்லக்கேறி வருகிற இளவரசரை, வரவேற்கிற பாவனையில் இரவீந்திரப் பெருந்தச்சன் முன்னே சென்று கொண்டிருந்தார். போர்க்குழப்பங்களால், வழக்கமான உற்சாகத்தோடு இல்லாமல், மக்கள் இளவரசரை வணங்கியபடி வரவேற்றுக் கொண்டிருந்தார்கள்.
சரியாக மயானப் பாதையைத் தாண்டி வரும்போது, குதிரையில் வந்த உளவாளி, பல்லக்கினை மறித்தான். குதிரையை விட்டிறங்கி, அருணாச்சல விக்ரகம் முன் மண்டியிட்டு பெரும் அலறலோடு கதறியழுதான். எல்லோரும் என்னவென்று தெரியவில்லையே எனப் பதற்றத்துடன் பார்த்திருக்க, இவீந்திரப் “பெருந்தச்சர் அவனை உலுக்கினார். என்ன நடந்ததென சொல்? எனக் கத்தினார். அவன் “நம் மன்னர் போய் விட்டாரய்யா. அண்ணாமலையானின் அடித்தாமரை சேர்ந்துவிட்டாரைய்யா” என மீண்டும் பெருங்குரலெடுத்துக் கதறினான். கதறியபடி மதுரையில் நடந்தது மொத்தத்தையும் சொல்லிவிட்டு, தன்னைத்தானே கழுத்தறுத்துக்கொண்டு செத்துப் போனான்.
ஜனங்கள் விக்கித்துப் போனார்கள். ஆண்கள் வானம் பார்த்துக் கதறினார்கள். பெண்கள் நடுவீதியிலேயே அமர்ந்து, முடியை விரித்துப்போட்டு, நெஞ்சில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்தார்கள். அதிர்ந்து நின்ற பெருந்தச்சர், பல்லக்கை அரண்மனை நோக்கி திருப்பச் சொன்னார். விஷயமறிந்து அரண்மனை அலறியது. மன்னர் வீரவல்லாளனின் கோரமரணம் குறித்து நினைத்து நினைத்து கதறியது. சில நிமிடங்களில் அரண்மனை சுதாரித்தது. அங்கு எல்லோர்க்கும் மன்னரின் கனவு பற்றி தெரியுமென்பதால் கூடி விவாதித்தது.
அடுத்த ஒருமணிநேரத்தில் பல்லக்கு மீண்டும் கிளம்பியது. மன்னருக்குத் தந்த வாக்கின்படி, அவருக்கான இறுதிச் சடங்கை செய்வதற்காக, முன்னே பறைக்கொட்டு ஒலிக்க, அலங்காரமற்று வெறும் தோள் துண்டுடன் பல்லக்கில் கிளம்பிய இளவரசர் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் அருணையின் கீழ் திசையிலோடும் கௌதம நதிக்கரையை அடைந்தார். நதிக்கரையில், ஜனங்கள் முன்னிலையில், மன்னர் வீரவல்லாளனுக்கு அந்தணர்கள் துணையுடன் தர்ப்பணம் செய்தார். சடங்குகள் முடிந்ததும், “நீரே வீரவல்லாளனின் மகன் எனில், நீரே எம்மன்னனுக்கு இளவரசனெனில், இனி எமையாளப்போகும் அரசரும் நீரே” என்கிற நினைப்புடன், கூடியிருந்த மக்கள், இளவரசருக்கு தலைப்பாகை அணிவித்தனர். அதையும் ஏற்றுக்கொண்ட ஸ்ரீ அருணாசலேஸ்வரர், மீண்டும் பல்லக்கில் அமர்ந்துதுக்க நினைப்புடன் திரும்பிப் போனார்.
கடவுளை, மனிதன் மறக்காது நினைத்து வாழ்தல், இக்கலியில் விசேஷமுமில்லை. நினைத்தால் வரம். மறந்தால் விதிப் பயன். ஆனால், கடவுளே மறக்காதபடி, கொடுத்த வாக்கை மீறாதபடி, ஒரு மன்னன் இம்மண்ணில் வாழ்ந்திருக்கிறான். அதற்கு சாட்சியாக, மன்னர் வீரவல்லாளனுக்கு அன்று கொடுத்த வாக்கை, இன்றுவரை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர், அதைத் தொடர்கிறார். கிட்டத்தட்ட எழுநூற்று ஐம்பது வருடங்கள் தாண்டி, மன்னர் வீரவல்லாளனுக்காக, ஒவ்வொரு வருடமும் தடைப்படாது, மாசிமகத்தன்று, கௌதம நதிக்கரையில் மன்னர் வீரவல்லாளனுக்கு திதி கொடுக்கிறார். அங்குள்ள மக்கள் தருகிற தலைப்பாக்கட்டு சடங்கை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறார்.
அப்படி, ஸ்ரீ அருணாச்சலேஸ்வரரே மறக்காதிருக்கிற மன்னர் வீரவல்லாளனை, நீங்களும் மறக்காதிருங்கள். அடுத்த முறை திருவண்ணாமலைக்குப் போகும்போது, தன்மகனைப் பார்க்க வருகிறவர்களை, வரவேற்கிற வீட்டின் பெரியவர்போல, ராஜகோபுரத்தில் வடக்குப் பார்த்தபடி, கைகள் கூப்பி நிற்கிற அவரை, மனத்தால் வணங்கி மரியாதை செலுத்துங்கள். அவரால் நிர்மாணிக்கப்பட்ட கோபுரங்களையும், நந்தி சிலையையும் காணும்போது, நன்றியுடன் நினைத்துக் கொள்ளுங்கள்.
முடிந்தால், உங்கள் முன்னோருக்கு எள்ளும், நீரும் இறைத்து, திதியளிக்கும்போது, காலத்தால் சரிவர நினைக்கப்படாத அம்மன்னனையும் நினைத்துக்கொள்ளுங்கள்.அப்படிசெய்வது, மன்னர் வீரவல்லாளனுக்கு மகிழ்ச்சி தருகிறதோ, இல்லையோ, திருஅண்ணாமலையாருக்கு அளவில்லாத ஆனந்தத்தைத் தரும். பின்னே, தன் தகப்பனைப்பற்றி பெருமிதத்துடன் பேசுவது அல்லது நினைத்துக் கொள்வது, எந்த பிள்ளைக்குத்தான் ஆனந்தத்தைத் தராது? - நிறைவடைந்தது
குமரன் லோகபிரியா