கோடிகளைக் கொட்டும் ராகு
ராகு என்றாலே பிரம்மாண்டம். எதையும் பெரியதாக ஆக்குவது. சிலர் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை கோடி கோடியாகச் செலவு செய்து பிரம்மண்டமாகச் செய்வார்கள் அங்கே ராகுவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். மிகப்பெரிய தொழிலை ஆரம்பிப்பவர்களுக்கும், அதில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தவர்களுக்கும் ராகு துணை நின்றிருப்பார். ராகுவால் சினிமா துறையிலும் அரசியலிலும் வெற்றி அடைந்தவர்கள் உண்டு. ஒருவரை எந்த அளவுக்கு மிகக் கீழாக அழுத்துவாரோ அதைப்போல ஒரு சிலருக்கு அவர் மிகப்பெரிய ஏற்றத்தையும் தருவார்.
ராகு 3, 6, 11 ஆகிய ஸ்தானங்களில் இருந்தாலும், கேந்திர பலம் பெற்றிருந்தாலும், மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் முதலிய இடங்களில் இருந்தாலும், ராகுவுக்கு நான்கு கேந்திரங்களிலும் கிரகங்கள் அமைந்திருந்தாலும் அது யோக ராகுவாக செயல்படும்.
இன்னொரு விஷயமும் சொல்லுகின்றேன். ‘‘பற்றித் தொடரும் பாவ புண்ணியமே’’ என்று பட்டினத்தார் பாடியிருப்பார். ஒருவரைப் பற்றித் தொடரும் பாவ புண்ணியமாகச் செயல்படுவது ராகு கேது.
என்னதான் ஒருவர் நினைத்தாலும் கூட அவருடைய நிழல் அவரை விட்டுப் பிரியாது. சில நேரங்களில் கண்ணுக்குத் தெரியாமல் அடங்கி இருக்குமே தவிர, அவரோடு தான் அந்த நிழலும் பிரயாணப்படும்.ஒரு சில நேரங்களில் பார்க்கும்படி வெளிப்படும் சில நேரங்களில் வெளிப்படாது அதைப்போல ராகு கேதுக்கள் ஒருவரை பற்றித் தொடர்ந்து கொண்டே இருக்கும் அந்த கிரகங்களை ஏமாற்றவே முடியாது. அது தரவேண்டிய பலனைத் தந்து தான் தீரும். அது மட்டும் இல்லை, ராகு ஏதோ ஒரு விதத்தில் எல்லா கிரகங்களோடும் இணைந்து தான் இயங்கும்.
ராகு, தான் நின்ற ஸ்தானத்தை முழுமையாக ஆக்கிரமித்து, அதில் எத்தனை கிரகங்கள் இருந்தாலும், அத்தனை கிரகங்களுடைய சக்தியையும் தானே ஏற்றுக்கொண்டு. மிகப் பிரமாண்டமாகச் செயல்படுவார் என்பதால் தான் அது கஷ்டத்தைத் தந்தாலும், சுகத்தைத் தந்தாலும் பெரிய அளவில் தந்து விடுகிறது.
சில ஜாதகங்களைப் பார்ப்போம். இந்த நிகழ்வுகள் நடந்து முடிந்த உறுதி செய்யப்பட்ட நிகழ்வுகள். ராகு இப்படித்தான் செயல்பட்டு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக சில ஜாதகங்களை பார்ப்போம்.
இவர் நல்ல வசதி உள்ளவர். வழக்கறிஞர் தொழில் செய்கிறார். இவருக்கு 25 முதல் 43 வயது வரை, 18 ஆண்டுகள் ராகு திசை நடந்தது.
மிதுன லக்னம். பத்தில் ராகு. 7ல் குரு. லக்னத்திற்கு நான்கில் புதன். ராகு தசம கேந்திரமாகிய பத்தாம் கேந்திரத்தில் ஏறியதாலும், லக்னாதிபதி பார்த்ததாலும், ராகு யோக ராகுவாக செயல்பட்டார். அற்புதமான திருமணம். நல்ல தொழில். இனிய பிரமாண்டமான வீடு. பெரிய கார். என்று எல்லாவற்றையும் அள்ளிக் கொடுத்தது ராகு. ராகுவுக்கு கேந்திரத்தில் உள்ள குருவின் வீட்டில் ராகு இருந்ததும் இந்த ஏற்றத்திற்கு காரணம். கடகம் மீனத்தில் ராகு இருந்தால் மிகப்பெரிய பலனைத் தருவார் என்று சாஸ்திரமும் இருக்கிறது. மீனத்தில் ராகு இருந்ததால் இவர் விஷயத்தில் அது நடந்தது.
அடுத்து ஒரு ஜாதகம். கடக லக்னம். பதினொன்றாம் இடத்தில் ராகு. ராகு திசை மிக உயர்ந்த பதவியையும் மிகச் சிறந்த புகழையும் அள்ளித் தந்தது.
மூன்று ஆறு பதினொன்றில் ராகு குருவின் பார்வை பெற்று அமர்ந்தால் யோகமாகச் செயல்படும் என்பதற்கு இவருடைய ஜாதகம் ஒரு எடுத்துக்காட்டு.மூன்றாவதாக என்னுடைய நண்பர் ஒருவரின் ஜாதகம். மேஷ லக்னம் ஆறாம் இடமான கன்னியில் ராகு அமர்ந்தார்.
நான் ஏற்கனவே சொன்னது போல ராகு அமர வேண்டிய ராசிகளில் கன்னி ராசியும் ஒன்று. அதுவும் ஆறாம் இடம் என்பது மகாலட்சுமி யோகத்தைத் தரக்கூடிய இடம் என்று சொல்வார்கள். அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்த இவருக்கு ராகு மகா திசை யோகமாக வேலை செய்தது. படித்து வேலை பார்க்கும் காலத்தில் ராகு மகா திசை வந்ததால் நல்ல பதவியையும் படிப்பையும் திருமணத்தையும் தந்தது.
இன்னொரு ஜாதகம். இவர் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் பொறியாளர் பதவியில் இருக்கிறார். இவர் துலா லக்னம். அஷ்டமத்தில் ராகு. ராகுவுக்கு வீடு தந்த சுக்கிரன் லக்னத்தில் ஆட்சியாகிவிட்டார். எனவே எட்டாம் இடத்தில் அமர்ந்தாலும் ராகு யோக ராகுவாக மாறி இவருக்கு பதவி உயர்வு, வீடு, குழந்தைகள் என சகல சந்தோஷங்களையும் அள்ளித் தந்தார்.
இன்னொரு ஜாதகம். சிம்ம லக்கனம். லக்னத்திலேயே ராகு. வீடு கொடுத்த சூரியன் மேஷத்தில் உச்சம். குரு ஐந்தாம் பார்வையாக தனுசில் அமர்ந்து சூரியனைப் பார்க்கிறார். அது ஒரு யோகம். அடுத்து செவ்வாய் ரிஷபத்தில் அமர்ந்து எட்டாம் பார்வையாக குருவைப் பார்க்கிறார். குரு தமது ஒன்பதாம் பார்வையாக லக்னத்தையும் லக்னத்தில் அமர்ந்த ராகுவையும் பார்த்தார். இப்பொழுது செவ்வாய், சூரியன், குரு, லக்ன கேந்திரத்தில் அமைந்த ராகு என ஒரு தொடர்பு ஏற்பட்டது. சூரியன் செவ்வாய் குரு ராகுவோடு இணைந்து படிக்கும் காலத்தில் ராகு திசை வந்ததால், நிறைய மதிப்பெண்கள் எடுத்து மருத்துவக் கல்லூரியில் சேரக்கூடிய வாய்ப்பினை ராகு தந்தது.
இதேபோன்று இன்னொரு ஜாதகத்தில் ராகு 12 இல் அமர்ந்து யோகமாகச் செயல்பட்டதால் உள்ளூர் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.
இன்னொரு ஜாதகம். இவர் மிதுன லக்னம் லக்கினத்தில் புதன் அமர பத்ர யோகம். புதனின் இன்னொரு வீடான கன்னியில் ராகு (உத்திரம்)அமர்ந்தார். நட்சத்திராதிபதி சூரியன் லக்னத்திற்கு 12 ஆனால் ராகுவுக்கு திரி கோணமாகிய ஒன்பதாம் இடத்தில் அமர்ந்தார்.
சுக்கிரன் லக்னத்திற்கு 12-ல் ரிஷப ராசியில் ஆட்சி பெற்றதால் அவரோடு சேர்ந்த சூரியனும் லக்னத்துக்கு மறையாமல் இருக்கும் வாய்ப்பை பெற்றார். இவர் இளமையிலேயே மிகப்பெரிய தொழிலதிபராக மாறினார். இப்பொழுது இவருக்கு வருமானம் கோடிக்கணக்கில் வருகிறது.
ராகு சுயசாரம் பெற்று அதாவது திருவாதிரை, சுவாதி, சதயம் முதலிய நட்சத்திரங்களில் அமரும்பொழுது மிகப்பெரிய பலத்தை பெறுவார் என்பதற்கு இது ஒரு உதாரண ஜாதகம்.
ராகுவின் நட்சத்திரங்கள் கால புருஷனின் மூன்றாவது ராசியான மிதுனத்திலும், ஏழாவது ராசியான துலாத்திலும், 11-வது ராசியான கும்பத்திலும் இருக்கின்றது. இங்கே 3, 7, 11 என்ற திரிகோண ஸ்தானங்கள் பலம் பெறுவதால் ராகு இந்த நட்சத்திரங்களில் அமர்ந்து மிகப் பெரிய யோகங்களைச் செய்கிறார்.
இன்னொரு ஜாதகம். தனுசு லக்கனம். லக்கினத்தில் சுக்கிரன். எட்டாம் இடமாகிய கடகத்தில் ராகு. ராகுவுக்கு வீடு கொடுத்த சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெற்றார். கடக ராகு கட்டாயம் நன்மையைச் செய்யும். அதுவும் வீடு கொடுத்த சந்திரன் உச்சம் பெற்று ராகுவுக்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்ததால் மிகப்பெரிய யோகத்தைச் செய்தது. சிறுவயதிலேயே படித்து வெளிநாட்டுக்குச் சென்று செட்டில் ஆகிவிட்டார். காரணம் ராகு மறைவு ஸ்தானங்களில் இருக்கும் பொழுது உள்ளூரில் இருந்து வெளியூருக்கு அனுப்பி வெற்றி பெற வைப்பார். அடுத்து இங்கே ராகு சர ராசி மற்றும் நீர் ராசியாகிய கடகத்தில் நின்றதால் வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டார். அடுத்து கேது என்ன செய்வார் என்பதைப் பார்ப்போம்.