புரட்டாசி பிறந்தது புண்ணியம் கிடைத்தது
புரட்டாசி மாதம் புண்ணிய மாதம். எண்ணியது நிறைவேறும் இனிய மாதம். விரதங்கள் நிறைந்த அற்புத மாதம். புரட்டாசி மாதத்தின் அதிதேவதையாக உள்ளவர் இருடீகேசன். பெரியாழ்வார் விஷ்ணுவை இருடீகேசன் என்று போற்றும் பாசுரம் இது.
அண்டக் குலத்துக் கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக்
களைந்த இருடீகேசன் தனக்கு
தொண்டக் குலத்திலுள்ளீர்! வந்தடி
தொழுது ஆயிரநாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத்
தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே.
இருடீகேசன் - ரிஷிகேசன் என்று பொருள்.
ரிஷி கேசன் - முனிவர்களின் தலைவன்.
முற்றும் பற்றற்ற முனிவர்களுக்கு தலைவன் பகவான் விஷ்ணு.புலன்களை வென்றவன். வெல்ல வைப்பவன். இந்த உலகத்தில் ஐம்புலன்களால் அவதிப்படுபவர்கள் தான் அதிகம். இதிலிருந்து விடுபடுவதற்கு வழி இருக்கிறதா என்றால் இருக்கிறது. அதுதான் நாம சங்கீர்த்தனம். கோவிந்த கோஷம். பகவான் திருநாமத்தைச் சொன்னால், நம்மை வசப்படுத்தி மாயை யில் சிக்க வைக்கும் ஐம்புலன்களை வென்று பகவானுக்கு வசப்படலாம்.இதைத் தொண்டரடிப் பொடியாழ்வார் ஒரு அற்புதமான பாசுரத்தில் பாடுகின்றார்.
காவலிற் புலனை வைத்துக் கலிதனைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே
மூவுல குண்டு மிழ்ந்த முதல்வ! நின் நாமம்கற்ற
ஆவலில் இப்புடைமை கண்டாய் அரங்கமா நகருளானே.
“என்னைத் தீயவழியில் செலுத்தி ,உன்னிடமிருந்து விலக்கிய ஐந்து புலன்களை வென்றேன். அப்புலன்கள் என்னைக்கட்டுப் படுத்தி ஆண்டதால், உன்னை அறியவும் அடையவும் தடையாய்க் கிடந்த பாபங்களை இன்று உதறினேன். உதறிவிட்டு, நரக பாதையில் நின்றும் பயம் தவிர்ந்து யமகிங்கரர் தலைமேல் அடியிட்டுத் நின்றேன். இத்தனை வலிமைக்குக் காரணம் உன் திருநாமத்தைச் சொன்னது தான்” - என்பது இந்த பாசுரத்தில் ஆழ்வார் சொல்லும் அனுபவம்.இந்த அனுபவத்தை நாமும் பெறஉதவுவது தான் புரட்டாசி மாத உபவாசம், வழிபாடு எல்லாம்.
‘’பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றினைப் பற்றுக பற்று விடற்கு’’ என்பது வள்ளுவம்.
இந்த ‘’பற்றற்றான்’’ தான் ‘’இருடீகேசன்’’.
12 திருநாமங்கள் 12 மாதங்களுக்குச் சொல்லப்படுகின்றன.
அதில் புரட்டாசிக்கு உரிய விஷ்ணுவின் நாமம் இருடீகேசன்.
புதன் உச்சம் பெறும் கன்னி ராசியின் சூரியன் நுழையும் மாதம்.
இதனால் இந்த மாதத்தை கன்னி மாதம் என்றார்கள்.
புத பகவானின் அதி தேவதையான மகாவிஷ்ணுவுக்கு பல்வேறு உற்சவங்கள் கொண்டாடப்படும் மாதம். 108 திருத்தலங்களில், திருமலை, ஒப்பிலியப்பன் கோயில், குண சீலம், கரூர், நாட்டரசன் கோட்டை, மதுரை தல்லாகுளம், திரு வெள்ளக்குளம் எனப்படும் அண்ணன் பெருமாள் கோயில் முதலிய திருத் தலங்களில் பெருமாளுக்கு பிரம்மோற்சவம் கொண்டாடப்படும் மாதம் இந்த மாதம்.ஸ்ரீ ராமானுஜருடைய குருவான பெரிய திருமலை நம்பிகள் இந்த மாதத்தில் தான் அவதரித்தார்.திருமலை திருவேங்கடமுடையான் அவதரித்த புரட்டாசி திருவோணமும், ஆச்சாரியர்களில் ஸ்ரீ வேதாந்த தேசிகர் அவதரித்த திருவோணமும் இம்மாதத்தில் அமைவது சிறப்பு.
பிரம்மோற்சவ விழா
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி வரை திருமலையில் பிரசித்தி பெற்ற வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. பிரம்மோற்சவத்தை ஒட்டி எந்தெந்த நாட்களில், எந்தெந்த வாகனங்களில் பெருமாள் உலா வருவார் என்பதைப் பார்ப்போம்.
24. 9.2025 புதன்கிழமை துவஜாரோகணம்
24. 9. 2025 புதன்கிழமை இரவு பெரிய சேஷ வாகனம்
25.9.2025 வியாழக்கிழமை பகல் சிறிய சேஷ வாகனம்
25.9.2025 வியாழக்கிழமை இரவு ஹம்ச வாகனம்
26.9.2025 வெள்ளிக்கிழமை பகல் சிம்மவாகனம்
26.9.2025 வெள்ளிக்கிழமை இரவு முத்துப்பந்தல் வாகனம்
27.9.2025 சனிக்கிழமை கல்ப விருட்ச வாகனம்
27.9.2025 சனிக்கிழமை இரவு சர்வ பூபால வாகனம்
28.9.2025 ஞாயிற்றுக்கிழமை பகல் மோகினி அவதாரம்
28.9.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு கருட வாகனம்
29.9.2025 திங்கட்கிழமைகாலை அனுமந்த வாகனம்
29.9.2025 திங்கட்கிழமைமாலை தங்கத்திருத்தேர் இரவு யானை வாகனம்
30.9.2025 செவ்வாய்க்கிழமை காலை சூரிய பிரபை வாகனம்
30.9.2025 செவ்வாய்க்கிழமை இரவுசந்திர பிரபை வாகனம் 01.10.2025 புதன்கிழமை காலை திருத்தேர்
01.10.2025 புதன்கிழமை இரவு குதிரை வாகனம்
02.10.2025 வியாழக்கிழமை பகல் சக்கர ஸ்நானம் தொடர்ந்து துவஜாவரோகணம்.
திருமலை பிரம்மோற்சவத்தில் மற்ற நாள்கள் விட கருட சேவை விசேஷமானது. 28.9.25 ஞாயிறு காலை பெருமாள், மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வருவார்.இரவு புகழ்பெற்ற கருடசேவை நடக்கிறது. இந்த கருட சேவையைப் பார்ப்பதற்கு லட்சம் பேருக்கு மேல் கூடுவார்கள்.இந்தச் சேவையைக்காணக் கண்கோடி வேண்டும்.“பரமாத்மா நான்தான்” (அஹம் பிரம்மம்) நான் உன்னைக் காப் பாற்றுகிறேன்கவலைப்படாதே (மாசுச:) என்று பெருமாள், உலக உயிர்களுக்கு தைரியமும் அடைக்கலம் கொடுக்கும் நிகழ்ச்சி கருட சேவை. “பறவை ஏறும் பரம்புருடா” என்று சொல்லி கருட சேவையை மங் களாசாசனம் செய்கிறார் பெரியாழ்வார்.
கருட சேவையில் எம்பெருமானை தரிசித்தால், இருக்கும் வரை சகல செல்வங்களும், அடுத்து ஒரு பிறவி இல்லாத பேரின்ப பேற்றினையும் அடையலாம்.
“பிறவி என்னும் கடலும் வற்றி, பெரும் பதம் கிடைக்கும்” என்றும் இதனை ஆழ்வார் உறுதிபடச் சொல்லியிருக்கிறார்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம்
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது. புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது. எனவே பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் வழி பாடு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர். இந்த புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் விசேஷமான நாள்கள். புரட்டாசி மாதம் முழுவதும் ஒருபொழுது விரதம் இருப்பவர்கள் உண்டு. அப்படி இல்லாதவர்கள் கூட, சனிக்கிழமை மட்டுமாவது விரதம் இருந்து பெருமாளைவழிபடுவது உண்டு.
கிராமங்களில் கூட பெருமாளுக்காக புரட்டாசி விரதம் இருந்து புரட் டாசி தளியல் போடுவார்கள். காலம் காலமாக இந்த மரபு இருந்து வருகிறது. அசைவம் சாப்பிடுகிறவர்கள் கூட, பெரும்பாலும் இந்த புரட்டாசி மாதத்தை விலக்கி விடுவார்கள்.புரட்டாசியில் சனிக்கிழமை விரதம் தவிர, அனந்த விரதம், ஏகாதசி விரதம் உள்பட ஏராளமான விரதங்கள் உண்டு.
திருமலை யாத்திரை மேற்கொள்பவர்கள், குடும்பத்தோடும் உறவினர்களோடும், விரதம் இருந்து, மேளதாளத்தோடு ஊர்வலம் வந்து, தளியல் எனப்படும் அமுது படையல் செய்து, அதை ததீயாராத னமாக நடத்தி, யாத்திரை மேற்கொள்வது உண்டு.
தளிகை என்றால் படையல் என்பதாகும்.தளிகையில் பெருமாளுக்கு ஐந்து விதமான சாதங்கள் படைக்கப்படுகின்றது. தேங்காய் சாதம், தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல் ,புளியோதரை போன்ற சாதங் களும், உளுந்துவடை, சுண்டல் மற்றும் பானகம், துளசி தீர்த்தம் போன்றவை தளிகையில் வைக்கப்படுகின்றது. ஐந்து விதமான சாதங்களை பச்சரிசியில் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
வாழை இலையில் ஐந்து விதமான சாதத்தால் திருமாலின் திரு உருவப் படத்தை வரைந்து தீப தூப ஆராதனை இட்டு கோவிந்தா என கோஷமிட்டு வழிபடுவதாகும். தளிகையின்போது மாவிளக்கு வைத்து வழிபாடுகளை செய்யலாம். தயிர் சாதம் முக்கியம். அதனால்தான் இன்றளவும் திருமலையில் ஏழுமலையானுக்கு மண் பானையில் தயிர் சாதம் நெய்வேத்தியமாகப் படைக்கப்படுகிறது.
அன்றைக்கு யாரேனும் அதிதிகள் வந்தாலோ, விருந்தினர்கள் வந்தாலோ, அவர்களுக்கு உணவளித்து ஆசிர்வாதம் பெற வேண்டும்.இப்பொழுது பாதயாத்திரை இல்லாவிட்டாலும், நிறைய பேர் புரட்டாசி மாதம் முழுக்க திருமலைக்குச் சென்று திருவேங்கடவனை தரிசித்து வருவதில் உற்சாகத்துடன் இருக்கிறார்கள். திருப்பதிக்குச் சென்று திரும்பிவந்தால் ஒரு திருப்பம் நேரும் அல்லவா.சனிக்கிழமை பெருமாளை வழிபாடு செய்ய காரியத்தடைகள் விலகும். காரியம் சித்தி தரும்.
சனி தோஷங்களான அஷ்டமச் சனி, ஏழரைச் சனி, கண்டச்சனி, அர்தாஷ்டமச்சனி முதலிய தோஷங்களும், சனி திசா புத்தி தீய விளைவுகளும் அகலும். அன்றைய நாளில் நாம் திருவேங்கடமுடையானை மனதார வழிபட்டு நம்முடைய பிரார்த்தனைகளை விண்ணப்பித்தால் கண்டிப்பாக பெருமாள் சகல காரியங்களிலும் நமக்கு வெற்றி அடையச் செய்வார்.
பல குடும்பங்களில், வருடத்திற்கு ஒரு முறையோ, மூன்று அல்லது ஐந்து வருடத்திற்கு ஒரு முறையோ, திருப்பதி யாத்திரை சென்று வருவதை வழக்கமாக வைத்துக்கொண்டு, அதற்கென்றே “திருப்பதி உண்டியல்” என்று தனி உண்டியலை வைத்து, அவ்வப்பொழுது அதில் காசு போடுவார்கள்.இதை இரண்டு விதமாக செலவுசெய்வார்கள்.
இந்த உண்டியல் பணத்திலிருந்து ஒரு வழிச் செலவாக திருப்பதி யாத்திரையை மேற்கொள்வார்கள். அல்லது திருப்பதி யாத்திரை மேற்கொண்டு, ஆனந்த நிலையத்தை வலம்வந்து, உண்டியலில் இந்த பணத்தை அவனுக்கு உண்டியலோடு காணிக்கையாகச் செலுத்திவிட்டு, புதிய உண்டியல் வாங்கிவந்து, மஞ்சள் துணி முடிந்து, சனிக்கிழமையில், மறுபடியும் தளிகை போட்டு, காணிக்கை சேர்க்க ஆரம்பிப்பார்கள்.இன்றைக்கும் கிராமங்களில் பல குடும்பங்களில் இந்த திருப்பதி உண்டியல் வழக்கம் உண்டு.
குலசேகரன் படி
புரட்டாசி விரதத்தில் ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை பாராயணம் செய்ய வேண்டும். முடியாவிட்டால் சகல மங்களங்களையும் தரும் இந்த பாசுரத்தையாவது பாட வேண்டும்.
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.
இதன் பொருள்:
பெருமாளே! நெடியவனே.! திருவேங்கடவா.! என் ஆசை என்ன தெரியுமா? உன் கோயிலுக்கு வரும் அடியார் எல்லோருடைய திருவடிகளும் என் மேல் பட வேண்டும். அப்படியானால் உன் திருக்கோயிலின் படியாய் கிடக்கும் பேறு வேண்டும்.அதற்குத் தகுதி இருக்கிறதா என்று பார்க்காதே. பற்பல பிறவிகளாய் செய்த ஒன்றுடன் ஒன்று பிணைந்த காட்டுச் செடிகளைப் போல் இருக்கும் என் வலிய வினைக்கூட்டங்களைத் தீர்க்கும் நீ, நான் என்றோ செய்த சிறிய நல்வினையை நினைவில் நெடுங்காலம் கொண்டு எனைக் காப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.! என் பிரார்த்தனை இதுதான். உன் கோயிலின் வாசலில், அடியவர்களும், வானவர்களும், அரம்பையர்களும் வந்து உன்னைக் காணு மாறு, ஒரு படியாய்க் கிடந்து, உன் பவளவாய் காணும் பாக்கியம் பெறவேண்டும்.
இன்றைக்கும் பெருமாள் முன்னிருக்கும் படிக்கு “குலசேகரன் படி” என்றே பெயர்.அப்படி ஆழ்வார் சொன்ன பெருமாளின் கருவறை குலசேகரன் படிக்கு முன் நின்று ,பெருமாளைச் சேவிப்போம். குலசேகரன் படி முன்பு நின்று, குலசேகரனைப் படிப்போம், அதாவது குலசேகர ஆழ்வார் பாசுரங்களைப் படிப்போம். அதில் ஒரு பாசுரம்தான் மேலே சொன்ன பாசுரம். புரட்டாசி விரதம் இருந்து புண்ணிய ஆசிகளைப் பெறுவோம்.
முனைவர் ஸ்ரீராம்