தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புன்னகையோடு அருள்வாள் புன்னைநல்லூர் மாரியம்மன்

‘ஆற்று நீருக்கு சுவை உண்டு

Advertisement

மண் நிலத்திற்கு சக்தி உண்டு’.

என்பதற்கு ஏற்ப, புன்னைநல்லூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கிறாள் அன்னை முத்துமாரியம்மன். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சோதனை, வேதனையைத் தீர்த்து நல்லபடி வாழ்வளிக்கும் தேவியவள். சோழர் காலத்தில் கீர்த்தி சோழன் என்பவரால் சிறிய கோயிலாகக் கட்டப்பட்டது. அதன் பின்பு மராட்டிய மன்னர்களால் விரிவுப் படுத்தப்பட்டது.

புன்னைநல்லூர் சிறப்பு

சுமார் 17ஆம் நூற்றாண்டில், தஞ்சை புன்னைநல்லூர் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. சோழர்கள், முத்து மாரியம்மனை தம் குலதெய்வமாக வணங்கி வந்தார். உறையூர் தலைநகரமாகத் திகழ்ந்தது. அதன் பின்பு, மராட்டியரிடம் ஆட்சி மாறியது.

வெங்கோஜிக்கு ஏற்பட்ட துன்பம்

மராட்டிய மன்னன் வெங்கோஜி, தம் மகளை அழைத்துக் கொண்டு சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்து, தஞ்சாவூர் காட்டு வழியாக திரும்பி வந்து கொண்டிருந்தார். இரவானதால், மன்னர் தங்குவதற்கு வீரர்கள் கூடாரத்தை அமைத்தார்கள். அன்றைய இரவு பொழுது அங்கே தங்கி ஓய்வெடுத்தார். வானத்து நிலவு ஒளியில் காடு பிரகாசமாக தெரிந்தது. மனிதர்கள் நடமாட்டத்தால் பறவைகள் சிறகடித்து ஓசையை எழுப்பின. தன் குழந்தை விளையாடிவிட்டு படுக்க திரும்பிய பொழுது, கண் பார்வை மங்கியது. உடனே தந்தையை அழுதபடியே அழைத்தாள். அமைச்சரிடம் உரையாடிக் கொண்டு இருந்த மன்னர், மகள் அழைப்பதும் பதறி அடித்துக் கொண்டு மகளின் அருகில் வந்தார்.

தந்தையிடம், “மகாராஜா.. எனக்கு எதிரில் உள்ளது எதுவும் தெரியவில்லை. அச்சமாக உள்ளது” என அலறினாள். அவளின் கண்கள் சிவந்து ரத்தம் போல தென்பட்டது. “இது என்ன சோதனை அம்மா? உன் ஆலயத்திற்கு வந்து வணங்கி சென்றதற்காக நீ தரும் பரிசு இதுதானா? உன் கோயிலுக்கு நான் மீண்டும் வருகிறேன் தாயே” எனக் கதறி பிரார்த்தனைச் செய்தார், மன்னர். அப்பொழுதும் அவர் மனம் நிறைவடையவில்லை.

“அம்மா, சமயபுரம் மாரியம்மா... என் மகளின் விழிகளை காத்திடு. உனக்கு நான் தங்கத்தால் தாமரை கண்மலர் செய்து சமர்ப்பிக்கிறேன்” என மனம் உருக வேண்டி மகளை தம் அருகே படுக்க வைத்து கண் உறங்கினார். நடு இரவில், ஒரு அசரீரிஒலித்தது. ‘‘வெங்கோஜி.. நீ என்னைக் காண சமயபுரம் ஏன் வருகிறாய்? உன் அருகிலேயே மாரியம்மனாக நான் இருக்கிறேன். தேடி எனக்கு கோயில் கட்டு” எனக் கூறிவிட்டு மறைந்தது. உடனே கண் விழித்தார் மன்னர். தம் மகளை பார்த்தார். அதே நேரம் மகளும் கண் விழித்தாள்.

“மகாராஜா... பார்வை நன்றாக தெரிகிறது” என்றாள். அவளின் கண்களில் சிவப்பு நிறம் மறைந்து, வெண்தாமரை போன்று இருந்ததைக் கண்டு மனம் மகிழ்ந்தார். “மகாராஜா.. பார்வை தெளிவாக தெரிகிறது” என்று உரைத்தாள். தன் அமைச்சர்களை அழைத்துக் கொண்டு எங்கு விக்கிரகம் தென்படுகிறது எனத் தேடினார். புன்னை மரங்கள் அடர்ந்து இருந்த வனத்தில் எங்குமே அன்னை தென்படவில்லை. புன்னை மரத்தின் அடியில் ஒரு மகான் தியானத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டனர். அவர் அருகே சென்று தியானத்தைக் கலைக்காமல் காத்திருந்தார்.

சதாசிவ பிரம்மேந்திரர்

கும்பகோணம் அருகே உள்ள கிராமத்தில் சோமசுந்தர அவதானி, பார்வதி என்ற தம்பதியினருக்கு மகன் பிறந்தார். பெற்றோர் அக்குழந்தைக்கு சிவராம கிருஷ்ணன் என்ற நாமத்தைச் சூட்டினர். கும்பகோணத்தில் குருகுலத்தில் சேர்ந்து வேதம் கற்றார். அஷ்டயோகமும் பயின்றார். ஒரு நாள் “எதற்கெடுத்தாலும் வாதமா.. பேசாமல் இருக்க மாட்டாயா...’’ என்று இவரின் குரு கடுமையாகக் கண்டித்து கூறினார். அந்நொடி முதல் பேசாமல் ஊமையைப் போன்று திரிந்தார். அதன் பின்பு ஆடை அணியாமல் திகம்பரராக ஊர் ஊராக சுற்றி வந்தார். தியானம் செய்ய வேண்டும் எனத் தோன்றியதும் காட்டிற்குச் சென்று புன்னை மரத்தடியில் அமர்ந்து தியானத்தில் அமர்ந்துவிடுவார். அப்படிப்பட்ட நேரத்தில்தான் வெங்கோஜி மன்னர் இவரை சந்தித்தார்.

புற்றில் அம்மன்

புன்னை மரத்தடியில் அமர்ந்திருந்த மகான் கண் விழித்தார். அவர்தான் சதாசிவ பிரம்மேந்திரர். வெங்கோஜி மன்னர் மகானை பணிந்து; “சுவாமி நானும் என் மகளும் சமயபுரம் மாரியம்மாவை தரிசனம் செய்துவிட்டு, வரும் வழியில் என் மகளின் கண்பார்வை இழந்து துன்புற்றாள். நாங்கள் புன்னை வனத்தில் கூடாரம் அமைத்து தங்கினோம். அசரீரியாக மாரியம்மன் கோயிலுக்கு செல்ல வேண்டாம், இங்கே மாரியம்மனாக இருக்கிறேன். தேடி கோயில் கட்டு என்று கட்டளையிட்டாள். எங்கு தேடியும் அவள் தெரியவில்லையே? என்ன செய்வேன்? அவள் இருக்கும் இடத்தை வழிக்காட்ட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். மன்னரின் பேச்சைக் கேட்ட பிரம்மேந்திரர் சிரித்தார்.

``அவள் இருக்கும் இடத்தில் நின்று கொண்டு, ஏனையா வேறு இடம் தேடுகிறாய்? அவள் உன் எதிரிலே தென்படுகிறாளே’’ என்று ஜாடையில் உரைத்தார். ஆச்சரியமடைந்த மன்னர் “சுவாமி என் கண்களுக்கு தெரியவில்லை எங்கே?” எனப் பதறினார், மன்னர். எதிரே இருந்த புற்றைச் சுட்டிக் காட்டினார்.

வியப்படைந்த மன்னர், புற்றை நோக்கினார்; “இங்கே விக்ரகம் சிலை எதுவுமே இல்லையே” என்று உரைத்ததும், எனக்குத் தேவையானப் பொருட்களைக் கொண்டு வந்து கொடு. உன்னுடைய அன்னை எழுந்தருளுவாள் என்று மீண்டும் சைகை காட்டினார். மன்னர் வியப்புடன், மகானை நோக்கி;

“நான் என்ன கொண்டு வரவேண்டும்?” என்று கேட்டார். சாம்பிராணி, அகில் சந்தனம், புனுகு பச்சைக் கற்பூரம் போன்றவற்றை வாங்கிவா.. என எழுதி காட்டினார், சதாசிவ பிரம்மேந்திரர். மன்னர், அவ்வாறே வாங்கி கொடுத்தார்.

சதாசிவ பிரம்மேந்திரர் மனதில் மாரியம்மனை நினைத்து, புற்றில் இருக்கும் மண்ணை எடுத்து, மன்னர் கொண்டு வந்த பொருள்களுடன் சேர்த்து மந்திரங்கள் உச்சாடனம் செய்த வண்ணம், அன்னையின் உருவத்தை வடிவமைத்துத் தந்தார். மன்னரைப் பார்த்து, ``கோயிலை கட்ட தொடங்கு’’ என ஆசிர்வாதம் செய்தார். அவர் கோயிலைக் கட்டிய பின்பு; ‘ஜன ஆகர்ஷண யந்திரம்’ ஒன்றையும் கொடுத்தார், சதாசிவ பிரம்மேந்திரர். இன்றும் இத்தகைய யந்திரம், கோயிலில் இருக்கிறது.

கோயிலில் மன்னனின் சிலை!

மாரியம்மன் கோயில், வித்தியாசமாக இருக்கும். தஞ்சை புன்னைநல்லூர் அருள் மிகு மாரியம்மன் கோயில் நுழைவாயிலே மிகவும் பிரமாண்டமாக அகன்று நீண்டு இருக்கும். தன்னை நாடிவரும் பக்தர்களை கூரையின் மீது அமர்ந்து நின்று வரவேற்பாள். மூலஸ்தானம் கோபுரம் 90 அடி. ஒவ்வொரு பிரகாரமும் லேசான கோபிவண்ண தூண்கள் கண்ணுக்கு குளிர்ச்சியும், மனதிற்கு நிறைவும் தரும். மூலஸ்தானத்திற்கு எதிரில், துவஜஸ்தம்பம் அருகில், வெங்கோஜி மன்னனின் சிலையும், மற்றொருபுறம் சதாசிவ பிரம்மேந்திர சிலையும், இருக்கிறது. மேலும்,

* அர்த்தமண்டபம்.

* மகா மண்டபம்.

* நர்த்தன மண்டபம்.

* துவஜ மண்டபம்.

* அலங்கார மண்டபம்.

* திருமலை மண்டபம்.

* சுக்ரவர மண்டபம்.

- என பல மண்டபங்கள் உள்ளன.

கோயிலில் ஓவியமான அஷ்டலட்சுமிகள்கஜலட்சுமி, வீரலட்சுமி, சௌபாக்கியலட்சுமி, சந்தானலட்சுமி, தனலட்சுமி, தன்யலட்சுமி, வித்யாலட்சுமி, காருண்யலட்சுமி என கோயிலில் அழகிய ஓவியங்களாக அருள் பாலிக்கின்றனர். மூலவர், புற்றுமண்ணால் இருப்பதால் அபிஷேகங்கள் கிடையாது. வெள்ளிக் கவசத்தால் மூடப்பட்டு இருக்கும். ஐந்தாண்டுக்கு ஒரு முறை புனுகு கொண்டு தையில அபிஷேகம் நடைபெறும்.

வியப்புக்குரிய தகவல்

கோடை காலத்தில், மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் அன்னைக்கு, முத்து முத்தாக வேர்வை முகத்தில் படரும். இதனால், மாரியம்மன் என்ற பெயர் மருவி ``முத்துமாரியம்மன்’’ என்ற திருநாமத்தால் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். கண் குறைபாடு உள்ளவர்கள், இங்கு வேண்டிக் கொண்டால் அவர்களின் துன்பம் நீங்கும். அம்மை நோய் வந்தவர்கள் வேண்டிக் கொண்டு நேர்த்தி கடன் செலுத்துவர். உடம்பில் கட்டிகள் இருந்தால், வெல்லக் குளம் என்னும் இங்குள்ள குளத்தில் வெல்லத்தை கரைத்துவிடுவார். மிக விரைவாகவே கட்டிகள், வெல்லம் கரைவதுபோல், கரைந்துவிடுகிறது. பக்தர்கள் என்ன வேண்டுகிறார்களோ, அவற்றை கொடுக்கும் தெய்வம்.

சந்நிதானத்தில், மாவிளக்கேற்றி, பிள்ளைவரம் வேண்டி வணங்குகின்றனர். அருகில் இருக்கும் வேப்ப மரத்தில் மஞ்சள், குங்குமம் பூசி, திருமணம் நடக்க மஞ்சள் கயிறு கட்டியும்,

பிள்ளைவரம் வேண்டுவோர் தொட்டில் கட்டியும் வணங்குகின்றனர்.

வழிபாட்டு முறைகள்

பக்தர்கள், தங்களுக்கு ஏற்பட்ட துயரம் விலகியதும் நேர்த்தி கடன் செலுத்துவர். வேப்பிலை சேலை உடுத்தி கோயிலை சுற்றி வருதல், அக்னி சட்டி எடுத்தல், மாவிளக்கு எடுத்துக் கொண்டு செல்லுதல், உப்பு, மிளகு இடுவது, எடைக்கு எடை கொடுப்பது என இங்கு வழிபாட்டு முறைகளும், நேர்த்தி கடனும் நடைபெறுகிறது.

திருவிழாக்கள்

ஆடி மாதம்: மூன்றாவது வெள்ளிக் கிழமை பூச்சொரிதல், கடை ஞாயிறு,முத்துபல்லக்கு பெருவிழா.

ஆவணி மாதம்: தேரோட்டம்.

புரட்டாசி மாதம்: தெப்ப திருவிழா மிக விமர்சியாக நடைபெறும்.

தல விருட்சம் : வேம்பு, புன்னை மரம்.

தீர்த்தம்: மணிமுத்தாறு, வெல்லக் குளம்.

சிறப்பு: தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில், இக்கோயிலும் ஒன்றாகும்.

* நடைதிறக்கும் நேரம்: திங்கள் முதல் சனிவரை காலை: 5:30 மணி முதல் இரவு 9:00 மணிவரை கோயில் திறந்திருக்கும். ஞாயிறு அன்று மட்டும், காலை 4:30 முதல் 10:30 வரை நடைதிறந்திருக்கும்.

* வழித்தடம்: தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு, ஒரு முறை சென்று முத்துமாரியம்மனை பிரார்த்தித்து வந்தால், நம் பாவங்கள் தொலைந்து புண்ணியங்கள் வந்து சேரும்!

பொன்முகரியன்

Advertisement