பொறுமையோடு முன்னேறுங்கள்
இந்த உலகிலே நடைபெறுகின்ற அநியாயங்களையும் அக்கிரமங்களையும் பார்க்கும்போது, கடவுள் இருக்கின்றார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. நாள்தோறும் எத்தனையோ ஏழைகள் எளியவர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள், நியாயம் நீதிக்கு இடமில்லை என்று விமல் அவ்வப்போது கூறிக்கொள்வான். விமல் என்னும் அந்தநபர் மிகுந்த கல்வி கற்றவனும், செல்வமுடையவனுமாக வாழ்ந்து வந்ததால், அவனுடைய தத்துவப் பேச்சுக்களானது அவ்வூரில் வாழ்ந்து வந்த சிலரை வெகுவாய் கவர்ந்தது.ஒருநாள் அந்த ஊரிலுள்ள பலர், தம் ஊரில் ஒரு நூலகத்தை அமைப்பதைப்பற்றி கலந்தாலோசிப்பதற்காக அவ்வூரிலிருந்த அனைத்து முக்கியஸ்தர்களும் ஒரு இடத்தில் ஒன்று கூடினர்.
அந்த கூடுகையில் வயோதிக போதகர் ஒருவரும் பங்கெடுத்தார். பல துறைகளை சேர்ந்தவர்கள் தங்கள், நம்பிக்கை சார்ந்த விஷயங்களை பேசிக்கொண்டிருக்கும்போது, கதையின் கதாநாயகன் விமல் தனது வழக்கம் போல கடவுளுக்கு எதிராக வசைபாடினார். யாரும் எதிர்பாராத நேரம் குறுக்கிட்ட வயோதிப போதகர், ‘‘திரு விமல் அவர்களே, ஏழைகள் கஷ்டப் படுவதற்கும், எளியவர்கள் ஒடுக்கப்படுவதற்கும் கடவுள் என்ன செய்தார்? கடந்த வருடத்தில் உமது இரண்டாவது மகன், மது அருந்திய நிலையில் சாலை விதிகளை மீறி, மோட்டார் வண்டியை அதிவேகமாக ஓட்டிச் சென்றபோது வழியோரம் வந்து கொண்டிருந்த ஏழ்மையான குடிமக்கள் மீது மோதியதை நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.
அவர்களில் ஒருவன் சிகிச்சை பலனின்றி பலியானான். இன்னொருவன் இன்றுவரை கை கால் முறிந்து படுக்கையில் கிடக்கிறான். ஐயோ. 2 வயது அழகிய ஆண் குழந்தையின் தலையில் பலமாக அடிபட்டதால் மூளை நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, இன்று மனநல காப்பகத்தில் வளர்ந்துவருகிறான். இன்னும் ஒருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். ஐயா, இந்த விபரீதத்திற்கு யார் காரணம்? பரலோகத்திலிருக்கும் தேவனா? நாட்டின் சட்டமா? அல்லது அதை மீறிய உங்கள் மகனா? கொஞ்சம் பதில் சொல்லுங்க விமல் சார்’’ எனக் கேட்டார். பலர் முன்னிலையில் போதகர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த விமலுக்கு மறுமொழி சொல்ல
வார்த்தைகள் இல்லை.
வயதான போதகர் மேலும் பேசினார்: ‘‘விமல் சார், பலர் முன்னிலையில் நான் உங்களை அவமதிக்கும்படியாக இப்படி கூறவில்லை. மனிதகுலத்தின் அவல நிலைக்கு யார் காரணம் என்பதை நீங்களும் இவ்வூராரும் திட்டமாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் இதைக் கூறுகின்றேன். விமல் உட்பட அனைவரும் போதகர் கூறவரும் கருத்தை உணர்ந்து கொண்டனர்.
இறைமக்களே, ‘‘சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்’’ (யாக்.1:13,14) என இறைவேதம் கூறுகிறது. எனவே, கடவுள் மீது நம் கோபத்தையும் ஆதங்கத்தையும் கொப்பளிப்பதற்கு பதிலாக, சற்று பொறுமையுடன் நம்மையும் நம் சமூகத்தையும் நல்வழிப்படுத்தும் வழிமுறைகளையும் கண்டறிந்து செயலாற்றிட இறையாசீர் யாசித்து இன்பமடைவோம்.
- அருள்முனைவர். பெ. பெவிஸ்டன்.