தூண் சிற்பங்களாகக் கயிலாயநாதர்!
பெருந்தூண்களைக் கொண்டு ஆலயங்களில் மண்டபங்கள் அமைக்கப்பட்டன. இத்தகு பெருந்தூண்களில் பெரிய பெரிய சிலைகளை அமைத்து மகிழ்ந்தனர். சில தலங்களில் தூண் சிற்பமாக கயிலாயநாதர் அமைக்கப்பட்டிருப்பதையும் காண்கிறோம். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மீனாட்சி சந்நிதிக்கு நேராக வெளியில் அமைந்துள்ள பெரிய தூணில் கண்ணைக் கவரும் வகையில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய கயிலாயநாதரைக் காண்கிறோம். இது சிற்ப உலகில் தனிச் சிறப்புப் பெற்றதாகும்.
காம்பீலி அம்மன்
வடாற்காடு மாவட்டத்தில் உள்ள சில ஊர்களில் காம்பீலி அம்மன் எனும் பெயரில் எழுந்தருளியிருக்கும் கிராமிய தெய்வத்தைக் காண்கிறோம். இவள் காம்பீலியில் இருந்து கொண்டாடி அழைத்து வரப்பெற்ற குலதெய்வம் ஆவாள். காம்பீலி அந்நாளில் புகழ்பெற்ற நகரமாக விளங்கியிருக்க வேண்டும். அங்கிருந்து இடம் பெயர்ந்தவர் தங்களுடன் தம் குலத்தைக் காத்து அருள்பாலிக்க மடிமண் கோயிலாக இவருடைய ஆலயத்தை அமைத்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
கீழ்வேளூர் அட்சய தாண்டவம்
நாகப்பட்டினம்திருவாரூர் வழியில் உள்ள கீழ்வேளூர் பாடல் பெற்ற பதியாகும். இங்கு பெருமான் பத்து கரங்களுடன் அட்சய தாண்டவத்தை ஆடுகிறார். இது பெருமான் ஆடும் காப்புத் தாண்டவமாகும் வலது காலின் குதிகாலை மட்டும் சற்று உயர்த்தி ஸ்வஸ்திக நிலையில் வைத்துள்ளார். பிரமனும் லட்சுமியும் கர தரளமிட நந்தி மத்தளம் முழக்க, இந்திரன் வேணுகான்ம் இசைக்க திருமால் மிருதங்கள் வாசிக்க பெருமான் ஆடும் கூத்தை அகத்தியரும் லோபா முத்திரையும் கண்டுகளிக்கின்றனர். இதனை சந்தியா தாண்டவம் எனவும் அழைக்கின்றனர்.
வீரட்டகாசர் விரும்பும் சபைகள்
சிவபெருமான் உயிர்களைக் காப்பதற்கும், பகைவர்களை வெல்வதற்கும் கொண்ட கோலங்கள் வீரட்டகாசக் கோலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்கோலத்துடன் பெருமான் எழுந்தருளியுள்ள இடங்களும், சபைகள் என்றே அழைக்கப்படுகின்றன. எடுத்துக் காட்டாக காமனை வென்றழித்த இடமான கொருக்கை வீரட்டத்திலுள்ள சபை காமாங்கினி நாசசபை என்றும், திருக்கடையூரிலுள்ள காலசம்ஹார சந்நிதி காலாந்தக சபை என்றும், வழுவூரில் கஜசம்ஹாரர் எழுந்தருளியுள்ள சபை ஞானசபை என்றும் அழைக்கப்படுகின்றன. வழுவூரில் ரகசிய யந்திரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிதம்பரம் பற்றி வடமொழியில் அமைந்த புராணங்கள்
சிதம்பர மகாத்மியம், புண்டரீக புர மகாத்மியம், வியாக்புர மகாத்மியம் ஆகியவை கிரந்தத்தில் உள்ளன. தில்லைவாரண்ய மகாத்மியம், ஹேம சபாநாத மகாத்மியம் ஆகியவை கையெழுத்துப் பிரதிகளாக உள்ளன. கோயிற்புராணம் உமாபதி சிவத்தால் பாடப்பட்டது. இதில் சிதம்பர மகாத்மியம் சிதம்பரம் சி.எஸ். சச்சிதானந்த தீக்ஷிதரால் வடமொழிக்கு நேர் தமிழ் மொழி பெயர்ப்பாக 1952ல் வெளிவந்துள்ளது.
பொன் வேய்ந்த பெருமான்
இரண்யவர்மன் தில்லைச்சிற்றம் பலத்திற்குப் பொன் வேய்ந்தான். சோழர்கள் பிற்காலச் சோழ மன்னர்களில் ஒருவனான ஆதித்தன் கொங்குநாட்டை வென்று அங்கிருந்து கொண்டு வந்த பொன்னால் தில்லைச் சிற்றம்பலத்தில் பொன் வேய்ந்தான் என்று கூறப்படுகிறது. பின்னாளில் அரசர்கள் பலர் தில்லையில் பொன் வேய்ந்து பேறு பெற்றுள்ளனர். ‘‘பொன் வேய்ந்த’’ காரணத்தால் பொன் வேய்ந்தான், பொன் பரப்பினான் என்னும் பெயர்களைச் சூடினர். தில்லைக்கோயிலில் இருந்து திருஞானசம்பந்தர் ஆலயத்திற்கு பொன் வேயப்பட்டிருந்ததைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
அடையபலம் சகஸ்ரலிங்கேசுவரர்
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்திற்கு அருகில் அடையபலம் உள்ளது. அடைய பலம் சைவ சமய வரலாற்றில் சிறந்த இடத்தைப் பெற்ற ஊராகும். அப்பைய தீக்ஷிதர் அவரது சீடர் நீலகண்ட தீக்ஷிதர், இரத்தின கேடக தீக்ஷிதர் முதலான மகா வித்வான்கள் வாழ்ந்த தலம். இங்கு சகஸ்ரலிங்கேசுவரர் ஆலயம் தனியாக உள்ளது. மகா சிவபக்தர்களாகவும், வடமொழியில் பேரறிஞர்களா கவும் வாழ்ந்த இந்த வம்சத்தினர் ஆயிரம் லிங்கம் அமைத்து வழிபாடு செய்துள்ளனர்.
நாகலட்சுமி