கோவிந்தா கோவிந்தா கும்பிட்டேன் ஓடி வா...
‘‘திருப்பதி சென்று திரும்பி வந்தால், திருப்பம் நேருமடா, உந்தன் விருப்பம் கூடுமடா’’ என்று பல ஆண்டுகளுக்கு முன்னால், கவியரசு கண்ணதாசன், தன்னுடைய சொந்த அனுபவமாக, திருப்பதி வேங்கடவனின் பெருமையை, ஒரு திரைப்படப் பாடலில் பாமரனுக்கும் புரியும் படியாகப் பாடினார். அது மட்டுமல்லாமல், அவர் தனக்கு மனது சரியில்லாத போது, திடீர் திடீரென்று புறப்பட்டு திருமலைக்குச் சென்று வருவார். அவருடைய அனுபவத்தை போல லட்சக்கணக்கான மக்களின் அனுபவமும் உண்டு. புரட்டாசி வந்து விட்டாலே, வேங்கடவன் மனதில் விரும்பி வந்து அமர்ந்து விடுவான். அந்த வேங்கடவனின் எல்லையற்ற மகிமைகளை தொகுத்து வழங்குகின்றோம்.
வேங்கடாத்ரி
திருமலைக்கு பல திருநாமங்கள் உண்டு. வேங்கடாத்ரி, வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்திரி, நாராயணாத்ரி, சேஷாத்திரி. இந்தப் பெயர்கள் ஒவ்வொரு யுகத்திலும் நடந்த ஒரு நிகழ்ச்சியின் காரணமாக அமைந்த பெயர்கள். திருமலைக்கு வேங்கடாத்ரி என்று பெயர் எப்படி அமைந்தது? பொருள் என்ன?‘‘வேங்கடம் ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே’’ என்பது ஆழ்வார் பாசுரம். இது மூன்று சொற்கள் கூடியது. வேம் கடம் அத்ரி = வேங்கடாத்ரி. கடம் என்றால் வினைகள், பாவங்கள். வேம் என்றால் எரிக்கக் கூடியது. வினைகளை. பாவங்களை எரிக்கக் கூடிய சக்திவாய்ந்த மலை வேங்க டாத்ரி. (அத்ரி என்றால் மலை).
கருடாத்ரி
ஒரு காலத்தில் மகா பிரளயம் ஏற்பட்டு, உலகம் முழுவதும் கடல் நீரின் அடியில் மூழ்கி விட்டது. இரண்யாட்சன் என்ற அசுரன், பூமியை எடுத்துக் கொண்டு போய் மறைத்து வைத்து விட்டான். அப்போது பெருமாள் வராக அவதாரம் எடுத்து, இரணியாட்சனுடன் போர் புரிந்து, பூமியை மீட்டு வெளிக் கொணர்ந்தார். பூமாதேவிக்கு எந்தத் தொந்தரவும் வராமல் காக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்காக கருடனை அழைத்து வைகுண்டத்திற்குச் சென்று ஒரு மலையை எடுத்து வரும்படியாக உத்தரவிட்டார். கருடாழ்வார் உடனடியாக வைகுந்தத்தில் இருந்து வண்ண மயமான ஒரு பொன்மலையை எடுத்துக்கொண்டு வந்து இங்கு வைத்தார். பெருமாள், அந்த திருமலையின் மீது ஏறி, திருக்குளத்தின் கரையில் எழுந்தருளினார். அப்படி கருடனால் கொண்டுவரப்பட்ட மலைக்கு கருடாத்ரி என்று பெயர். இத்தலம் வேங்கடவன் சந்நதியாக இருந்தாலும் ஆதியில் இது “வராகத் திருத்தலம்”.
விருஷபாத்ரி
ஒரு காலத்திலே வ்ருபாசூரன் என்ற அசுரன் இருந்தான். அவன் பகவானை நோக்கி கடும் தவம் இருந்தான். தினசரி புஷ்பம் சமர்ப்பிக்கும் போது, தன்னுடைய தலையையும் வெட்டி சமர்ப்பித்து வந்தான். பெருமாள் அவனுடைய தலை, உடனடியாக, புதிதாக முளைக்கும் படியாக வரம் அளித்தார். ஆயினும் இவன் விடாமல் ஏதோ ஒரு நோக்கத்திற்காக செய்து வருகின்றான் என்று தெரிந்தவுடன், ‘‘என்ன காரணத்திற்காக தவம் செய்கிறாய்?’’ என்று கேட்க, அசுரன் சொன்னான்.‘‘வெகு நாட்களாக போர் செய்ய முடியாததால் என் தோள்கள் தினவெடுக்கின்றன. எனவே நீங்கள் என்னோடு போர் செய்ய வேண்டும். என்னுடைய போர் ஆசையைத் தணிக்க வேண்டும்” என்று பேராசையை வெளியிட்டான். பகவானும் வேறுவழியின்றி, அவனோடு வெகுகாலம் போர் புரிந்தார். அவன் ஆசை தீர்ந்த போது, முடிவில் பிரார்த்தனை செய்தான்.‘‘பகவானே! நாம் சண்டையிட்ட இந்த மலையில், தாங்கள் என்றைக்கும் இருந்து மக்களுக்கு அருள் புரிய வேண்டும். இந்த மலை என்னுடைய பெயரில் வழங்கவேண்டும்.’’ என்று கேட்டான்.அன்றிலிருந்து இந்த குன்றுக்கு “வ்ருஷபாத்திரி” என்று பெயர் ஏற்பட்டது.
அஞ்சனாத்ரி
கேசரி என்பவன் சிவபெருமானைக் குறித்து தவம் செய்தான். அந்த தவத்தின் பயனால் அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தப் பெண் குழந்தைக்கு அஞ்சனை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அந்த அஞ்சனை மிகவும் பக்தி மிக்கவள். திருமலையில் ஆகாச கங்கை என்ற புனித தீர்த்தக் கரையில் வெகுகாலம் தவமிருந்தாள். உண்ணாது உறங்காது அவள் தவம் இருக்கும் பொழுது, அவள் மீது பரிவு கொண்ட வாயு பகவான், அவளுக்கு தினசரி ஒரு பழத்தை பிரசாதமாகக் கொடுத்தான். அந்தப் பழத்தின் சக்தியினால் அஞ்சனாவுக்கு ஒரு ஆண் குழந்தை வானர வடிவில் பிறந்தது. மிகுந்த சக்தி வாய்ந்த அந்தக் குழந்தை அப்போது உதயமாகிக் கொண்டிருந்த சூரியனை, சிவந்த பழமாகக் கருதி உண்ணுவதற்கு சென்றது. அப்பொழுது தேவர்கள் பிரம்ம தேவனிடம் முறையிட, பிரம்மதேவன் தனது தண்டத்தால் அக்குழந்தையின் தலையில் தட்ட, அது மூர்ச்சித்து விழுந்தது. தாயான அஞ்சனாதேவி பதறி, பிரம்மனைக் குறித்து தவம் செய்ய, பிரம்மன் அக்குழந்தையை ஆசீர்வதித்து, பெரும் புகழ் பெறும் சிரஞ்சீவியாக இருப்பான் என்று வரமளித்தார். திருமலையில் அஞ்சனா தேவி தவம் செய்து, வாயுபுத்திரன் அனுமன் பிறந் ததால் “அஞ்சநாத்ரி” என்று பெயர் வழங்கலாயிற்று.
நாராயணாத்ரி
நாராயண முனிவர் என்றொரு முனிவர் இருந்தார். அவர் வெகு காலம் தவம் இருந்தார். பிரம்ம தேவன் அவர் முன்தோன்றி அவர் தவத்துக்கு காரணம் கேட்டார். தான் விஷ்ணு பகவானை தரிசிக்க வேண்டும் என்று சொல்ல, “அப்படியானால் நீ திருமலைக்குச் சென்று தவமியற்று” என்று சொல்லி, பிரம்மன் மறைந்தார். அவரும் திருமலைக்கு வந்து வெகுநாட்கள் தவம் இயற்றினார். முனிவரின் தவத்திற்கு இரங்கிய பகவான், அவர் முன்தோன்றி, அவருக்கு முக்தி வரம் அளித்ததோடு, அவர் தவம் செய்த மலை அவருடைய திருநாமத்தால் “நாராயணாத்ரி” என்று வழங்கப்படும் என்ற வரமும் அளித்தார். பகவான் ஸ்ரீமன் நாராயணன் நிரந்தரமாக தங்கி அருள் தரும் மலை என்பதாலும் நாராயணாத்ரி என்ற பெயர் பொருந்தும்.
சேஷாத்திரி
என்னதான் விஷ்ணுவினுடைய பக்தர்களாக இருந்தாலும் கூட, அவர்களுக்கும் சில நேரத்தில் கர்வம் வந்து விடுவது உண்டு. சில திருவிளையாடல்களின் மூலமாக பகவான் அந்த கர்வத்தை நீக்கி உணர வைத்து, அவர்களுக்கு உரிய புகழையும், திருவிளையாடலின் மூலம் உறுதிப்படுத்துவது உண்டு. அந்த வகையில் ஒருமுறை ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும், ‘‘நீ பெரியவனா, நான் பெரியவனா?’’ என்கின்ற சண்டை வந்துவிட்டது. வைகுந்தத்தில் இருந்த ஒரு மலைச் சிகரத்தை ஆதிசேஷன் இறுக்கிப் பிடித்துக் கொள்ளவேண்டும். வாயு அதை அசைத்து விட வேண்டும். யாருடைய முயற்சி வெற்றி பெறுகிறதோ, அவர்களே வென்றவர்கள் என்று முடிவாயிற்று. பகவான் தன் அன்பனான ஆதிசேஷனுக்கு தற்காலிகமாக வந்திருக்கக்கூடிய கர்வத்தையும் அழிக்க வேண்டும். அதே சமயம் அவனு டைய பெருமைக்கும் எந்தக் குறையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, திருவிளையாடலை நடத்தினார். ஆதிசேஷன் ஒரு மலையை இறுக்கமாக பிடித்துக் கொள்ள, வாயு பகவான் அதை அசைக்க முயன்று முடியாமல் போகவே பகவானிடம் பிரார்த்தனை செய்ய, பகவான் நாரதர் மூலம் ஆதிசேஷனுக்கு ஒரு போக்கு காட்ட, அந்த இடைவெளியில், வாயுபகவான் ஆதிசேஷனோடு, மலையைத் தூக்கி பூலோகத்தில் போட்டார். அந்த மலை விழுந்த இடம் தான் திருமலை. இது ஒரு காலத்தில் வைகுந்தத்தில் இருந்தது. ஆதி சேஷன் சுற்றிய மலை என்பதால் இதற்கு சேஷாசலம் அல்லது சேஷாத்திரி என்று பெயர். திருமலையப்பனுக்கும் சேஷாத்திரி என்ற பெயர் உண்டு.
பலப்பல பெயர்கள்
திருமலைக்கு பலப்பல பெயர்கள் உண்டு. பக்தர்களின் எண்ணங்களை ஈடேற்றுவார் என்பதால் “சிகாமணி” என்று பெயர். ஞானத்தை அளிப்பார் என்பதால் ஞானாத்திரி என்று பெயர். சகல புண்ணிய தீர்த்தங்களும், இத்திருத்தலத்தில் நூற்றுக் கணக்கில் இருப்பதால் “தீர்த்தநாத்திரி” என்று பெயர். தங்க மயமாக சிகரங்கள் இருப்பதால் கனகாத்திரி என்று பெயர். ஒரு காலத்தில் நரசிம்ம அவதாரம் எடுக்க
பகவான் அவதரித்ததால் நரசிம்மாத்திரி என்று பெயர். வைகுண்டத்தில் இருந்து திருமலை இங்கே வந்து இருப்பதால் வைகுண்டாத்திரி என்றும் பெயருண்டு. அகலகில்லேன் இறையுமென்று, மகாலட்சுமி தாயார், மாலவன் மார்பில் ஒரு நொடியும் பிரியாமல் உறைவதால், திருமகள் வாழும் இதயத்தை கொண்ட பகவான் அருள் புரியும் இடம் என்ற பொருளில், “ஸ்ரீநிவாசம்” என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு.
ஏழு மலை ஏன் சுமக்கிறது?
நம்மாழ்வார்
“குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை,
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே”
என்று பாசுரம் பாடி இருக்கிறார்.
இதில் திருவிக்கிரம அவதாரத்தையும், கிருஷ்ண அவதாரத்தில் கோவர்த்தன கிரியைத் தூக்கி குடை பிடித்து ஆயர்களைக் காப்பாற்றிய வரலாறும் சொல்லி, அவன் விரும்பி வந்து நின்ற மலை என்பதால், அந்த மலையை வணங்கினாலே உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் என்கிறார். அதில் கிருஷ்ணாவதாரத்தில் மலையை ஏழு நாட்கள் தன்னுடைய விரலால் அவன் சுமந்து கொண்டு இருந்தான். அந்த மலை தான் இங்கே ஏழு மலைகளாக மாறி, எம்பெருமானை நன்றி கடனாகச் சுமந்து கொண்டிருக்கிறது என்று பல பெரியவர்களும் சொல்கிறார்கள். இன்னொரு கோணமும் இருக்கிறது. பகவானிடம் ஒரு பழக்கம் உண்டு. நாம் ஒரு மடங்கு வைத்தால், அவன் உடனடியாக ஒன்பது மடங்கு வைப்பான். இராமாவதாரத்தில் தம்பியாக பிறந்து, வாழ்நாள் முழுவதும் தன்னுடைய வாழ்க்கையைக் கூட தியாகம் செய்து சேவை செய்த லட்சுமணனுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே, கிருஷ்ணாவதாரத்தில் தனக்கு அண்ணனாக பலராமனை பிறக்க வைத்து, “மூத்த நம்பி” என்று பெயர் கொடுத்து, கைங்கரியம் செய்து மகிழ்ந்தான் பகவான். அதாவது “நம்முடைய செயல், அவனுடைய எதிர் செயல்” (Reaction to action) என்பதாகவே அமைந்திருப்பதை கணித்தால், தன்னைத் தாங்கிய மலையை, கிருஷ்ணாவதாரத்தில் ஏழு நாட்கள் தூக்கிக் கொண்டான் என்பதுதான் இன்னும் பொருத்தமாக இருக்கும்.
காரணம் கோவர்த்தனகிரியை குடையாக எடுத்தது கிருஷ்ணாவதாரத்தில். ஆனால் அதற்கு முன், வராக அவதார காலத்திலிருந்தே, திருமலை எம்பெருமானைச் சுமந்து ஆனந்தமடைந்தது.
“தன்னைத் தாங்கிய மலையைத் தான் தாங்கினான்” என்பது இன்னமும்
பொருத்தமாக இருக்கும்,
திருமலைக்கு செல்ல நினைத்தால் என்ன செய்ய வேண்டும்?
திருமங்கையாழ்வார் திருவேங்கடத்தில், பாசுரம் பாடுகின்ற பொழுது வித்தி யாசமாகச் சிந்திக்கின்றார். எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்கள், இந்த நாட்டில் இருந்தாலும், எல்லோரும் திருமலையைச் சென்று சேவிப்பது இல்லையே! தனக்கு மட்டும் எப்படி இந்த ஆர்வம் வந்தது என்பதை சிந்தித்த, திருமங்கையாழ்வார் இப்படி பாசுரம் பாடுகிறார்.
கொங்கலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த
கோவலன் எம்பிரான்
சங்கு தங்கு தடங்கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்கு நீர்ச்
செங்கயல் திளைக்கும் சுனைத்
திருவேங்கடம் அடை நெஞ்சமே
ஒருவன் திருமலைக்கு செல்ல வேண்டும் என்று நெஞ்சார நினைத்தால் ஒழிய அந்த பாக்கியம் கிடைப்பது இல்லை.
முயற்சியால் மட்டும் நடப்பது இல்லை என்று சொல்லி, இப்பதிகம் முழுக்க, தன்னுடைய நெஞ்சிற்கு அறிவுரை சொல்லுகின்றார். “நெஞ்சகமே! அங்கு செல்ல வேண்டும் என்று நினை! நெஞ்சார நினைத்தால் தான் போகலாம். உன் ஒத்துழைப்பு இன்றிப் போக
முடியாது.”
பலர் திருமலை செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஏதோ ஒரு தடை வரும். ஆனால், அதே நேரத்தில் நினைத்த நேரத்தில் சென்று தரிசனம் செய்து விட்டு வருகின்ற அன்பர்களும் இருக்கின்றார்கள். இந்த உளவியலை பல்லாண்டுகளுக்கு முன்னர் பாசுரத்தில் திருமங்கை ஆழ்வார் பாடி இருக்கிறார் என்பதுதான் வியப்பு.
வைகுந்தம் இது தான்
வைகுந்தத்தில் இருந்து பெருமாள் அடுத்து திருமலைக்கு வந்தார். பிறகு தான் மற்ற பிரதேசங்களுக்குச் சென்றார். இதனை ராமானுஜ நூற்றந் தாதியின் ஒரு பாடல் தெரிவிக்கிறது.
“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்
மாலிரும் சோலை யென்னும்
பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர்’’
இதில் ஏன் திருவரங்கம் பேசப்படவில்லை என்று ஒரு கேள்வி இருக்கிறது. அதற்கு இரண்டு விடைகள்.
1. திருவரங்கன் தான் வைகுந்தநாதன். அதனால் வைகுண்டத்தின் பிரதி தேசமாக அரங்கம் இருப்பதால் வைகுண்டத்தை சொல்லிய பிறகு, அரங்கத்தை தனியாகச் சொல்லவில்லை என்று எடுத்துக்
கொள்ளலாம்.
2. திருவரங்கநாதன் தான் திருமலையில் இருக்கிறான். திருப்பதியில் நின்று திருவரங்கத்திற்குச் சென்று சேர்ந்தான் என்பதால், (“இவனும் அவனும் ஒன்று” என்பதால்) திருவரங்கனைத் தனியாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று விட்டிருக்கலாம்.
நெடியானே வேங்கடவா
இளங்கோவடிகள் போற்றிய வேங்கடவன் வடிவம்.
‘‘பகை அணங்கு ஆழியும் பால்வெண்
சங்கமும்
தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி
நலம்கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம்பூ ஆடையில் பொலிந்து
தோன்றிய
செங்கண் நெடுமால் நின்ற வண்ணம்’’
சங்க காலத்தில் இருந்தே திருமலையின் சிறப்பும், எம்பெருமான் சிறப்பும் பேசப்பட்டிருக்கிறது. அன்று இளங்கோவடிகள் அழகாக பெருமாளை “நெடுமால்” என்று அழைத்துப் போற்றுகிறார். இதே பதத்தை இளங்கோவின் சேர வம்சத்தில் வந்த குலசேகரர்,
“நெடியானே! வேங்கடவா!” என்று
பாடுவதை கவனிக்க வேண்டும்.
திருப்பணி செய்த மன்னர்கள்
தொண்டைமான் சக்ரவர்த்தி என்னும் பேரரசன், இந்தக் கோயிலை எடுப்பித்தவன் என்று “வேங்கடாசல மாகாத்மியம்” நூல் கூறும். பல்லவர்கள், சோழர்கள், பாண்டிய மன்னர்கள், யாதவர்கள் முதலிய அரசர் பெருமக்கள் எல்லாம் கோயிலை விரிவுபடுத்தியிருக்கிறார்கள். ஆயினும் இக்கோயில் மிகவும் பெரிய அளவில் திருப்பணி செய்யப் பெற்றது விஜய நகர மன்னர்கள் காலத்தில்தான். அவர்கள் காலத்தில் கோயிலின் செல்வம் பல்கிப் பெருகியது. சாளுவ நரசிம்மனின் பெரிய பாட்டனான சாளுவ மங்க தேவனே ஆனந்த விமானத்துக்குத் தங்கத் தகடு வேய்ந்தான். விஜயநகர விஷ்ணு பக்தரான கிருஷ்ண தேவராயனும் அச்சுத தேவராயனும் பல துறைகளில் இந்தக் கோயிலை வளப்படுத்தி இருக்கிறார்கள்.
முதலில் தாயார், பிறகு பெருமாள்
திருமலையப்பன் நெடியோனாக நின்றருளும் திருவேங்கடமும், பத்மாவதி தாயார் குடியிருக்கும் திருக்சுகனூரும் (திருச்சானூர் அல்லது அலர்மேல் மங்காபுரம்) இரு நகரங்களாக விளங்கினாலும், பொதுவில் திருப்பதி என்று ஒரே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. மலைக்கு மேலுள்ளதை மேல் திருப்பதி என்றும், மற்றதை கீழ் திருப்பதி என்றும் அழைக்கிறார்கள். அலர்மேல்மங்கையைப் பார்த்துவிட்டு திருமலையப்பனை தரிசிப்பது சிறப்பானது. முதலில் தாயார், பிறகு பெருமாள் என்பது வைணவ வழிபாடு மரபு.
பச்சைக் கற்பூரம்
ஏழுமலையானின் திருமேனிக்கு வருடத்தில் 365 நாட்களும் பச்சைக் கற்பூரம் தடவுகிறார்கள். பச்சைக் கற்பூரம் ஒரு வகை ரசாயனம் கலந்தது அல்லவா. பொதுவாக . சாதாரண கற்களில் இதைத் தடவி வந்தால், காலப் போக்கில் அந்தக் கல்லில் வெடிப்பு விழும். ஆனால், ஏழு மலையானின் திரு மேனிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை!
வாத்ஸல்யம்
“ஆச்சார்ய ஹிருதயம்” என்கின்ற நூல் ஒவ்வொரு வைணவ திருத்தலத்தின் குண விசேஷத்தை பிரதானமாகச் சொல்லுகின்றது. அதில் திருமலைக்கு சொல்லப்பட்ட குணம் “வாத்ஸல்ய குணம்”. வாத்சல்யம் என்கின்ற குணம், குற்றங்களைக் காணாமல் பக்தருக்கு அருள்புரிகின்ற குணம். கன்றின் அழுக்கை தாய்ப்பசுவானது தன்னுடைய நாவால் நக்கி சுத்தப்படுத்துகின்ற குணம் வாத்சல்யம். அதுபோல இறைவன் ஒரு பக்தனின் குணங்களையும் ஏற்றுக்கொண்டு, தோஷங்களை பரிசுத்தப்படுத்தி ஏற்றுக்கொள்வான் என்பதால் திருமலையப் பனுக்கு வாத்சல்யம் மிகுதி என்று வைணவ ஆச்சாரியர்கள் முடிவு செய்தார்கள். எல்லாக் காலங்களிலும், எல்லா உயிர்களுக்கும், எல்லா விதமான உறவுமாய்க் கொண்டு, எல்லார்க்கும் உயிராய் இருக்கக்கூடிய அந்தர் யாமி குணம் இது. ஆழ்வார் பாசுரம் மிக அழகாக இதை வெளிப்படுத்துகிறது.
“என்னிடத்தில் எந்த தகுதியும் இல்லாத பொழுதும், பாசம் வைத்த பரஞ்சுடர் ஜோதி அவன்” என்று இந்த வாத்சல்ய குணத்தைச் சொல்லுகின்றார். “நீசனேன் நிறை ஒன்றுமில்லேன் என் கண் பாசம் வைத்த பரம்சுடர் ஜோதி” என்று பாடுகிறார் நம்மாழ்வார். அதனால் தான் ஆயிரம் குற்றங்கள் செய்தாலும் அவன் மன்னித்து காப் பாற்றுவான் என்ற நம்பிக்கையில், தாய்ப் பசுவை நோக்கி ஓடும் கன்றினைப் போல், அந்த தயாபரனை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் திரள்கிறார்கள்.
திருமலையில் ஸ்ரீராமானுஜர் சூட்டிய தமிழ்ப் பெயர்கள்
திருமலை திருப்பதியில் பல்வேறு மண்டபங்கள் உள்ளன. உற்சவ மூர்த்திகளும் உள்ளனர். அந்த மண்டபங்களுக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டி அருளினார் ஸ்ரீராமானுஜர்.
அந்த அருமையான, வியப்புக்குரிய,
அழகான, தமிழ் பெயர்களில் சில:
1. ஞான பிரான் (வராகப்பெருமாள்).
2. மலை குனிய நின்றான் (திருமலையப்பன்).
3. நிலையாக நின்றான்.
4.வேங்கடத்து உறைவார் (போக ஸ்ரீனிவாசன்)
5. அரப்பணி (நாகாபரணம்) கிடந்த .
6. மணவாள பெருமாள் (வெள்ளியில் உள்ள ஒரு திருமூர்த்தி திருச்சானூரில்)
7. யமுனைத் துறை (பூமாலை கட்டும் இடம்)
8. அரங்க மண்டபம் (ஒரு காலத்தில் ரங்கநாதர் இங்கு தங்கியிருந்தார்).
9. திருச்சித்ரகூட மண்டபம், தில்லைக்கு வைத்தான் மண்டபம், (கோவிந்தராஜ பெருமாள் பிரதிஷ்டை செய்த இடம்)
10. ஆழ்வார் தீர்த்தம் (கோவிந்தராஜ பெருமாள் தீர்த்தவாரி செய்யும் இடம்)
11. அவாவறச் சூழ்ந்தான் திருவாயில் (திருமலைக் கோயிலில் உள்ள கோபுர வாயில்படி)
12. வென்று மாலையிட்டான் திருமண்டபம் (துவார பாலகர் மண்டபம்) இப்படித் தனித்தமிழ் பெயர்கள் அக்காலத்தில் சூட்டப்பட்டன.
மொட்டை போடுவது ஏன்?
என் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம். அந்த சிரசுக்கு அழகு கொடுப்பது முடி. இது அபிமானத்திற்குரியது.
தலையில் வைத்து, ‘‘இவன் தலைவன்” என்று காட்டும் அடையாளமான
மகுடத்திற்கு, “முடி” என்று பெயர்.அந்த மகுடத்தை இறைவன் திருவடி
களில் சமர்ப்பித்து, அபிமான பங்கமாய் இருப்பது பக்தர்களின் நிலை.
அரசர்களாக இருந்தால் மகுடத்தை கழட்டி வைக்கலாம், சாதாரண
மக்களுக்கு முடி மகுடம் போல தலையில் அலங்காரமாக இருப்பதால், அதனை காணிக்கையாக்கி, அதன் மேல் உள்ள அபிமானத்தை (ஆசையை) இழக்கிறார்கள் என்பதன் அடையாளம் தான் “மொட்டை
போடுதல்” சடங்கு.
அதற்கு “திருமுடி காணிக்கை” என்றே பெயர்.
இந்த திருமுடி காணிக்கை மூலமாய் மிகப் பெரிய வருமானம் திருமலை தேவஸ்தானத்திற்கு கிடைக்கிறது. சுவாமிக்கு
பதினைந்தாம் நூற்றாண்டிலேயே திருமுடி காணிக்கை செலுத்தும் பழக்கம் இருந்தது என்பதை திருவேங்கட உலாவில் உள்ள, “மெய்த்த மணி வீழாமல் விந்திகை விந்திகையாய் வைத்த கருகூலம் வளராதோ’’ ‘‘வெற்றிப் புழு கொழுகும் மேனியான் காணிக்கை நிற்றல் பற்றாயம் நிரப்புவோன்’’, பாடல்கள் தெரிவிக்கின்றன. கல் வெட்டுகளில் “திருமுன்
காணிக்கை” என்று காணப்படுகிறது.
முழங்கால் முறிச்சான்
ராமானுஜர் திருமலையை ஒரு ஆழ்வாராகவே நினைத்து மலை ஏறுவதற்கு அஞ்சினார். ஆயினும் திருமலையப்பனை தரிசிப்பதற்காக மலை ஏறத் துணிந்தார். தன் திருவடிகளால் மலையை மிதிக்காமல் முழங்கால்கள் ஊன்றிச் சென்றார். இடையில் இவரால் ஏற முடியாமல் செங்குத்தான ஓரிடத்தில் முழங்கால்கள் முறிந்து செயலற்று மயங்கினார். திருமலையப்பன் இவர் முன் தோன்றி, இடையூறுகளை நீக்கி, இவர் ஏறுவதற்கு திருவருள் செய்து மறைந்தார். அந்த செங்குத்தான இடம் இன்றைக்கும் “முழங்கால் முறிச்சான்” என்று கர்ண பரம்பரைச் செய்தியாக சொல்லப்பட்டு வருகிறது. ஏன் பிரம்மோற்சவம்?திருமலையப்பனுடைய திருநட்சத்திரம் புரட்டாசி திருவோணம். அதையொட்டியே பிரம்மோற்சவம் நடைபெறும்.
இந்த பிரம்மோற்சவத்தை “திருவோணப் பெருவிழா” என்று அழைப்பார்கள். இது பல ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.பிரம்மோற்சவம் என்பதற்கு பல பொருள்கள் உண்டு.
1.பிரம்மம் என்றால் பெரியது. இருப்பதிலேயே அதிக நாட்கள் நடக்கும் உற்சவம் என்பதால் பிரம்மோற்சவம் என்று பெயர்.
2.பிரம்மன் (நான்முகக் கடவுள்) முதன்முதலாக பெருமாளுக்கு நடத்திய உற்சவம். அதாவது பிரம்மனால் நடத்தப்பட்ட உற்சவம் என்பதால் பிரம்மோற்சவம் என்று பெயர். இது பவிஷ்யோத்ர புராணத்தில் உள்ள வேங்கடாசல மகாத்மியம் 15 ஆம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளது. திருவேங்கடமுடையான் பிரம்மனை நோக்கி, ‘‘பிரம்மனே! எனக்கு நீ கொடி யேற்று விழா தொடங்கி, தேர் உற்சவம் முடிய பல வாகனங்களுடன் பெரிய
திருநாளை நடத்திவைக்க கடவாய்’’ என்று கட்டளையிட, பிரம்ம தேவன் இந்த உற்சவத்தை, தொண்டமான் சக்கரவர்த்தி மூலம் நடத்தி வைத்ததாகவும் ஒரு குறிப்பு உண்டு.
3.உலகத்துக்கும் தேவர்களுக்கும் “பரப்பிரம்மம் யார்?” என்கின்ற கேள்விக்கு “நான் பரப்பிரம்மம்” என்பதை வெளிப்படுத்து முகத்தான் (அகம் பிரம்மாஸ்மி, மாம் ஏகம்) என்று தன்னை பிரம்மமாக பெருமாள் பிரத்யட்சமாக காட்டுகின்ற உற்சவம் என்பதால் பிரம்மோற்சவம் என்று பெயர். இந்த பிரம்மோற்சவ காலங்களில் எம்பெருமான் திருவீதி வலம் வருகின்ற பொழுது, காலையிலும் மாலையிலும் ஆழ்வார்களின் அருந்தமிழைக் கேட்க வேண்டும் என்கின்ற முறையை ஏற்படுத்தி, இன்றைக்கும் அந்த அருந்தமிழை திருவேங்கடமுடையான் கேட்கும்படியான உற்சவ கிரமங்களை ஏற்படுத்தித் தந்தவர் ஸ்ரீராமானுஜர்.
இப்படி தொட்ட தொட்ட இடமெல்லாம் திருவேங்கடமுடையான் பெருமை எல்லையற்று விரிந்து கொண்டே போகும். ஆயிரக்கணக்கான அவருடைய மகிமைகளை “திருவேங்கடமுடையான் திருவருள்” கோவிந்த மாதமான புரட்டாசி மாதம் எல்லோருக்கும் சித்திக்கும்படி வாசகர்களுக்குத் தந்திருக்கிறோம்.