பாதுகையின் பெருமை
பகுதி 6
ஸ்ரீ பாதுகா சஹஸ்ரத்தின் 9வது பத்ததியான வைதாளி கபத்ததியில், வைதாளி கர்கள், அதாவது அரசவையில் புகழ்ச்சி (துதி) பாட கூடிய புலவர்கள், ரங்கராஜனை துயில் எழுப்பி அரங்கா உம் அழகான பாதுகைகளை அணிந்து கொண்டு வந்து அடியவர்களுக்கு நீ திருவருள்புரிய வேண்டும் என்று கேட்பதை போல அமைத்திருக்கிறார் ஸ்வாமி ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன்.
ரங்கநாத பெருமாள் பாதுகையை தம்முடைய திருவடியில் சாற்றிக்கொள்ளும் போது, வேதாந்தங்களே துதி பாடக் கூடியவர்களாக மாறிவிட்டதாம். ஒரு அரசவையில் அந்த அரசனின் புகழைப் பற்றிப் பாடித் தானே அரசவையில் உள்ள புலவர்கள் துதி பாடுவார்கள்? அப்படி வேதாந்தங்கள் எல்லாம் அகிலத்திற்கே அரசனான ரங்கநாதனின் பெருமையை பாடுகிறதாம். “யதா ரோஹஸ்ய வேதாந்தா வந்தி வைதாலிகா ஸ்வயம்”. சம்சாரம் என்கிற சமுத்திரத்திற்கு பாலமாக இருக்கக் கூடிய பாதுகா தேவியை நான் வணங்குகிறேன் என்று இந்த பத்ததியின் முதல் ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார் ஸ்வாமி தேசிகன்.
ரங்கநாதா, உம் திருக்கண்கள் மலர்ந்து நீ அருள வேண்டும். அந்த அழகை காண்பதற்காகவே அனைவரும் காத்திருக்கின்றனர். உனது கண்கள் பாதி திறந்தும் பாதி மூடியபடியும் இருக்கிற அழகை என்னவென்று சொல்வது? இந்த அழகை பார்த்து உமது நாபிக் கமலத்தில் உள்ள தாமரை மலரும் உம் கண்களை போலவே பாதி மலர்ந்தும் மலராததுமாய் இருக்கிறதே. அந்த அழகை எல்லோரும் பார்த்து பரவசமடைய வேண்டும்.
உம் திருவடிக்கு திருமகள் இரவு முழுவதும் பாத சேவை செய்தாள் அல்லவா? இனி அந்த பாத சேவையை பாதுகா தேவி தொடர நீ அந்த பாதுகையை உம் திருவடியில் சாற்றிக் கொண்டு மெல்ல கண் மலர வேண்டும்” என்று ரங்கநாதனே கண் மலர வேண்டும் என்று வேண்டி நிற்கும் வைதாளிகர்கள், அடுத்த ஸ்லோகத்தில், அந்த ரங்கநாதனை உற்சாகமாக, பாதுகைகளை சாற்றிக்கொண்டு உற்சவங்களுக்கு எழுந்தருளுமாறு பிரார்த்திக்கிறார்கள். பெருமாளுக்கான உற்சவம் ஆரம்பித்துவிட்டது என தன்னுடைய சப்தத்தின் வழி அறிவிப்பது அப்பெருமாள் தன் திருவடியில் சாற்றிக்கொள்ளும் பாதுகைகள் தானே?
“ஸ்ரீ ரங்கநாதா, சுபமான முகூர்த்த காலம் வந்துவிட்டது. ஜோதிட, வைதீக சித்தாந்தத்தங்களின்படி, ஒரு நல்ல முகூர்த்தத்தை பார்த்து அந்த நேரத்தில், உனக்கான உற்சவத்தை ஆரம்பிக்க நிர்ணயம் செய்திருக்கிறார்கள், மகான்கள். பெருமாளே அதனால் நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பாதுகைகளை சாற்றிக்கொண்டு நீ உற்சவங்களுக்கு எழுந்தருளவேண்டும். நீ அப்படி எழுந்தருளும் போது, அந்த பாதுகையிலிருந்து வரக்கூடிய மென்மையான ஒலி, உற்சவ ஆரம்ப வார்த்தையான “இதோ வந்து விட்டார் பெருமாள்” என்று அறிவிப்பது போல இருக்க வேண்டும் என்கிறார்களாம்.
பொதுவாகவே கோயில்களில் உற்சவங்கள் நடைபெறும் போதெல்லாம் முதலில் பாதுகைகளை சாற்றிக்கொண்டுதான் பெருமாள் திருவீதி உலா வருவார் அல்லவா? பிரம்மோற்சவ காலங்களிலே, வெவ்வேறு வாகனங்களில் திருவீதி உலா கண்டு விட்டு திரும்பி வருவார் அல்லவா பெருமாள்? அப்படி பெருமாள் திரும்பி வரும் போது, அவரது திருவடிகளுக்கு சற்றே சிரமமாக இருக்கும், திருவடிகளுக்கு வலிக்கும் என்பதாலேயே திரும்பும்போது மெல்ல வருவார்.
பெருமாளே உம்முடைய அந்த திருவடிகளுக்கு வலி தெரியாத வண்ணம் இருக்க செய்யக்கூடியவள் பாதுகைதானே? அப்படிப்பட்ட பாதுகைகளை நீ சாற்றிக்கொண்டு மெதுவாக “லீலா ஸஞ்சரண” மாக நீர் திரும்ப வேண்டும் என்று அந்த அரசவைப் புலவர்கள் ஸ்தானத்தில் இருந்த படி வேதங்கள் வேண்டுவதாக தேசிகர் காண்பிக்கிறார்.அடுத்த “ஸ்ரீருங்கார பத்ததியில்” (சிங்காரப் பாதையில்) ரங்கநாத பெருமாள் பாம்பணையின் மேல் பள்ளி கொண்டிருக்க, அப்பெருமானின் இனிமையான மூச்சுக்காற்று பட்டு அவனது நாபி கமலத்தில் உள்ள தாமரை மலர்கள் அப்படியே மகரந்தத் துளிகளைச் சிந்துகிறதாம். அந்த மகரந்த துளிகள் பாதுகையின் மேல் விழும் போது, அது சந்தனப்பூச்சை போலவே இருந்ததாக அனுபவிக்கிறார் ஸ்வாமி தேசிகன்.
பாதுகாதேவி பெருமாளின் திருவடிக்கு கீழே இருந்துகொண்டு அந்த பெருமாள் அதிகாலையில் கண் விழித்து பார்க்கும் போது அவரது அந்த திருக்கண்களால் செய்யக் கூடிய முதல் கடாட்சத்தைதான் பெற வேண்டும் என்று வேண்டி விரும்பி காத்துக் கொண்டிருக்கிறாளாம். “ப்ரதமநயநபாதம் பாவநம் ப்ராப்துகாமா”. திருமாலின் திருவருள் யாருக்கு முதலில் கிடைக்கும் என்றால் அவரது திருவடிக்கு கீழ் நிற்பவர்களுக்கு தானே? இந்த எடுத்துக் காட்டை தானே யசோதை இளங்சிங்கமான அந்த கிருஷ்ண பரமாத்மாவே நமக்கு மகாபாரதத்தில் அழகாக காட்டி தந்திருக்கிறார்? உறங்குவது போல பாசாங்கு செய்தபடி பாரளக்கும் பரமனான அந்த பரிபூரணன் உறங்கிக் கொண்டிருந்த போது, கண்ணன் எப்போது கண் மலர்வான்? என்று அவன் இரு விழி மலர காத்து கொண்டிருந்த இருவர், துரியோதனும், அர்ஜுனனும்.
திருமாலின் திருவடிக்கு கீழே தன்னை காப்பவனுக்காக காத்திருந்தான் அர்ஜுனன். பெருமாளின் திருமுடி பக்கம் சென்று அமர்ந்து கொண்டான் அல்லவா துரியோதனன்? திருமால் கண்விழித்து பார்க்கும் போது அவனது அந்த முதல் கடாட்சம் என்பது பட்டது என்னவோ பார்த்தனான அர்ஜுனன் மீது தானே? பெரிய போர் ஒன்று வரப்போகிறது அப்போரில் நாங்கள் ஜெயிக்க வேண்டும் என்றால் அதற்கு தேவை உன் அருளும் உன் அருகாமையும் மட்டும் தானே என்ற உண்மையை உணர்ந்த அர்ஜுனன் மீது தானே பகவானின் பரிவும் பார்வையும் பரிசாக சென்றது? எப்போதுமே அப்படி பகவான் எழும் போது அவனது முதல் பார்வை தன் மீதே பட வேண்டும் என்றல்லவா பக்தியோடும் ப்ரியத்தோடும் காத்து கொண்டிருக்கிறாள் பாதுகா தேவி?திருமாலின் திருமார்பை அலங்கரிக்க கூடிய வைஜயந்தி வன மாலையிலிருந்து வரக்கூடிய நறுமணத்தைவிட அப்பெருமாளின் திருவடியில் இருக்கக் கூடிய பாதுகா தேவியிடமிருந்து வரக்கூடிய வேதங்களோடு கூடிய நறுமணமே மேன்மையாக இருக்கிறதாம்.
“சரணகமல ஸங்காத் ரங்கநாதஸ்ய நித்யம்
நிகமபரிமளம் த்வம் பாதுகே! நிர்வமந்தீ
நியதமதி ஶயாநா வர்தஸே ஸாவரோதம்
ஹ்ருதயமதி வஸந்தீம் மாலிகாம் வைஜயந்தீம்
பெருமாளின் ஹ்ருதய கமலத்தில் வீற்றிருக்கும் வைஜயந்தி மாலையைவிட திருமாலின் திருவடியில் வீற்றிருக்கும் பாதுகைக்கு அதிகமான பெருமை ஏற்படக்காரணம் என்ன தெரியுமா? திருமாலின் திருமார்பிலேயே வசித்துக் கொண்டு, அந்த வாசனையையே தன் விலாசமாகக் கொண்டிருப்பது வைஜயந்தி மாலை என்ற போதிலும், திருமாலின் திருவடி வாசத்தை தன்னோடு கொண்டு வருபவள் பாதுகா தேவியே, என்பதுதான் என்கிறார் ஸ்வாமி தேசிகன். திருமாலின் திருவடியில் தானே வேதங்களே வசிக்கின்றன? ( நிகமபரிமளம் த்வம் பாதுகே) வேத மணம் வீசக்கூடிய இடமென்பதே திருமாலின் திருவடி தானே?
அப்படிப்பட்ட அந்த உயர்வான வேதங்களோடு வாசம் செய்து கொண்டு அந்த வேதங்களின் வாசனையையே தன்னோடு தாங்கி கொண்டு வரும் பாதுகைகளே நம்முடைய வேதனைகளை எல்லாம் நிச்சயம் தீர்ப்பாள் என்பதில் சந்தேகமே இல்லை.
(பாதுகா தேவியின் திருவருளோடு பாதுகையின் பெருமையை தொடர்ந்து அனுபவிப்போம்...)