விநாயகனே வினை தீர்ப்பவனே...
அரச மரத்தடியில் அமர்ந்தது ஏன்?
விநாயகர் விக்கிரங்கள் பெரும்பாலும், குளக்கரையின் அருகில் உள்ள அரச மரத்தடியில் தான் ஸ்தாபனம் செய்யப்பட்டிருக்கும். அரசமர நிழல் படர்ந்த நீரில் குளிப்பது, உடல்நலத்திற்கு நல்லது. பெண்கள் அரச மரத்தைச் சுற்றி வரும்போது கிடைக்கும் தூய பிராணவாயு, பெண்களின் கர்ப்பப்பை குறைபாடுகளை நீக்கக்கூடியது. எனவே கிராமங்களில் குளக்கரையில் அரச மரத்தடியில் பிள்ளையார் வைத்திருக்கிறார்கள்.
கோடி விநாயகர்!
கும்பகோணம் அருகே உள்ள கொட்டையூர் கோடி விநாயகர். இங்கு எல்லாமே கோடி தான். அதாவது கோடி விநாயகர், கோடீஸ்வரர், கோடி தீர்த்தம், கோடி விமானம், கோடி கோபுரம் என எல்லாமே கோடியில் இருக்கும். இத்தலத்திற்கு வந்து இந்த விநாயகரை வழிபட்டு பின் மற்ற தெய்வங்களை வழிபட்டால் கோடிச் செல்வங்கள் பெறலாம் என்பது நம்பிக்கை.
ராகு-கேது தோஷம் நீக்கும் விநாயகர்
கேதுவிற்கு அதிபதியான விநாயகர் வயிற்றில் ஒட்டியாணம் போல ஒரு பாம்பினைக் கட்டியிருப்பார். அதனாலேயே விநாயகரை வணங்கினால் நாகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இந்த விநாயகப் பெருமானை குமாரலிங்கம் தத்தாத்ரேயர் ஆலயத்திலும் திருவள்ளூர் மாவட்டத்திலுளஅள திருமழிசை ஜகந்நாதப்பெருமாள் ஆலயத்திலும் தரிசிக்கலாம்.
ப்ரமோஷனுக்கு விநாயகர்; ட்ரான்ஸ்ஃபருக்கு அனுமன்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை-அணைப்பட்டியில் உள்ள ரீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமனின் அருகே விநாயகப் பெருமான் எழுந்தருளியுள்ளார். பதவி உயர்வு வேண்டுவோர் இங்கு வந்து அறுகம்புல் மாலை சாத்தி விநாயகரை வேண்டிக்கொள்ள அவர்கள் விரும்பிய பதவி உயர்வு கிடைக்கிறது. அதே போல அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட்டால், விரும்பிய இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கிறது! எனவே இந்த விநாயகரை ப்ரமோஷன் விநாயகர் என்றும், அனுமனை ட்ரான்ஸ்ஃபர் அனுமன் என்றும் அழைத்து வணங்குகிறார்கள்.
சோளம் காத்த விநாயகர்
ஒரு காலத்தில் சோளக் கொல்லை ஒன்று இருந்தது. அதில் விநாயகரும் கோயில் கொண்டிருந்திருக்கிறார். அந்த சோளக்கொல்லையில் திருடர்கள் சோளத்தை திருட முயன்றபோது இந்த விநாயகர் ‘திருடன், திருடன்’ எனக் குரல் எழுப்பியுள்ளார். மக்கள் வருவதற்குள் ‘எங்களையா காட்டிக் கொடுத்தாய்?’ எனக் கேட்ட திருடர்கள் அந்த விநாயகர் சிலையின் கைகளை வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். சோளம் காப்பாற்றப்பட்டது. அந்நிலையிலேயே இன்றும் பக்தர்களைக் காத்து வருகிறார் இந்த விநாயகப் பெருமான். ஆலமரத்தடியில் வானமே கூரையாய் கொண்டு அருள்கிறார். பக்தர்கள் இவரை பேசும் தெய்வம் என போற்றுகின்றனர். பங்குனி உத்திரத்தன்று சந்தனக்காப்பில் அருட்கோலம் காட்டும் மூர்த்தி இவர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள களப்பால் எனும் கிராமத்தில் அருள்கிறார், இந்த சோளம் காத்த விநாயகர்.
அதிசய ஆஞ்சநேயர்
வேலூருக்கு அருகே, கல்புதர் ஊரில் சாலையோரம் 5 முகங்கள் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்கிறார். காட்பாடியிலிருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ள இந்த இடத்தில் ஐந்து குரங்குகள் இறந்து கிடந்தனவாம். அவற்றை இந்த இடத்தில் புதைத்துள்ளனர். ஒரு பக்தர் கனவில் அனுமன் தோன்ற பஞ்சமுக அனுமனின் சிலையை அங்கே பிரதிஷ்டை செய்யச் சொன்னாராம். அதன்படி வைக்கப்பட்டதே இந்த அனுமன் சிலை.
கணேச பஞ்சரத்னம் அரங்கேறிய தலம்
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டியில் விநாயகர் சிவப்பு நிறத்தில் அருள்கிறார். ஆதிசங்கரர் இத்தலத்தில் தான் தன் அற்புதமான கணேச பஞ்சரத்னம் எனும் துதியை அரங்கேற்றியருளினார்.
கொடுத்த பணம் திரும்ப வரும்
கோவையில் பேரூர் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் பட்டி விநாயகர் மிக அபூர்வமானவர். இந்தக் கோயில் 5000 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. அழகான திருவுருவம் கொண்ட இவருக்கு அர்ச்சனை செய்து சில ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் கொடுத்த பணம் திரும்பி வரும் என நம்பப்படுகிறது.
கதவில்லா விநாயகர் கோயில்
சென்னை, பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு, அருகிலிருக்கும் நர முக விநாயகர் கோயில் மிகவும் சக்தி வாய்ந்தது. இக்கோயிலுக்கு கதவு கிடையாது. பக்தர்கள், இரவு, பகல் என்று எந்நேரமும் இவரை தரிக்கலாம். அவர்களே தீப ஆரத்தி காட்டி, நிவேதனமும் செய்யலாம். இந்தப் பிள்ளையாருக்கு புதுத்துணி சாத்தி ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் கடன்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஐந்தெழுத்து கணபதி
விநாயகப் பெருமானின் வடிவங்களில் திரையட்சர கணபதி (மூன்றெழுத்து), பஞ்சாட்சர கணபதி என்ற வடிவங்களைக் காண்கிறோம். இவை மந்திர மூர்த்தம் எனப்படும். விநாயகரின் ஐந்து கரங்களும், திருவைந்தெழுத்தாகிய நமசிவாய எனும் மந்திரத்தை உணர்த்துவதாகவே கூறுவர். அங்குசம் ஏந்திய வலது கை சிகரம் என்றும், பாசமேந்திய இடது கை வகரம் என்றும், ஒன்றைத் தந்தம் ஏந்திய வலக்கை யகரம் என்றும், மோதகம் ஏந்திய இடக்கை நகரம் என்றும், துதிக்கையின் சுழிந்த நுனி மகரம் என்றும் கொள்ளுவர். இவ்வகையில் ஐந்தெழுத்தும் அவருள் அடங்குகிறது. ‘‘ஓ’’ என்ற பிரணவம் முகமாக விளங்குகிறது. இவ்வாறு ஓம் நமசிவாய எனும் ஆறெழுத்தால் விநாயகர் திருமேனி தாங்கியவராகக் காட்சியளிக்கிறார். இதையொட்டி ஆறெழுத்து கணபதி என்றும் அழைக்கப்படுகிறார்.
இமயமலையில் முதல்வன்
ஆதிமுதல்வன் என்று போற்றப்படும் விநாயகப் பெருமானுக்கு, இமாச்சலப்பிரதேசம், சிம்லாவில் சங்கட் மோட்சன் மந்திர் எனும் கோயிலின் அருகில் க்ஷோடஸ கணபதி என்ற பெயரில் ஓர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு 16 விநாயகர்கள் எழுந்தருளியுள்ளார்கள். இக்கோயில் தமிழ்நாட்டு பாணியில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இத்திருக்கோயில் மூலவர் உட்பட, பதினாறு விநாயகர் திருஉருவங்களும் தமிழ்நாட்டில் வடிவமைக்கப்பட்டவை என்று சொல்லப்படுகிறது. ‘இமாச்சலப்பிரதேசத்தில் பனி சூழ்ந்த நிலையில் அமைந்திருக்கும் விநாயகர் கோயில் இது மட்டும் தான்’ என்று கூறப்படுகிறது. இக்கோயிலில் அருள் புரியும் விநாயகர்களை ஒரே சமயத்தில் வழிபடுவதால் பதினாறு செல்வங்களும் பெற்று வளமுடன் வாழலாம் என்பது ஐதீகம்.
விபூதி விநாயகர்
மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் பொற்றாமரைக் குளம் உள்ளது. இதன் கரையில் தென்மேற்கு முனையில் பெரிய கல்தொட்டியும், அதன் நடுவில் விநாயகர் திருவுருவமும் உள்ளன. இந்த விநாயகரை விபூதியால் நிறைத்துள்ளனர். இந்த கல்தொட்டியான விபூதி குண்டத்திலுள்ள திருநீற்றை மக்கள் எடுத்து அணிந்து கொள்கின்றனர்.
ஜல விநாயகர்
ஈரோட்டிலிருந்து கோவை செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவில் பழைய பாளையம் பிரிவில் வலது புறமாக அமைந்துள்ளது பாரிநகர். இங்கு எழுந்தருளியுள்ள கற்பக விநாயகர், வள்ளல் பாரியைப்போல் பக்தர்களுக்கு நலன்களை வாரி வழங்கி வருகிறார். தற்போது கோயில் அமைந்துள்ள இடம், நகர் தோன்றுவதற்கு முன்பு பெரிய கிணறாக திகழ்ந்தது. இந்த கிணறு மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக இருந்ததால் அதனைத் தூர்த்துவிட்டு, மேலே ஜல விநாயகர் என்ற பெயரில் விநாயகர் சந்நதியை அமைத்தார்கள். இவரே கற்பக விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். விநாயகர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பாலமுருகன், நவகிரகங்களுக்கு தனித்தனி சந்நதி உள்ளன.
தடைகள் தகர்ப்பார் தேவேந்திர விநாயகர்
சிவகங்கை மாவட்டம், திருமயம் அருகே அமைந்துள்ளது கானாடு காத்தான் கிராமம். இங்கு பழையூர் எனும் பகுதியில் ஊரணிக்கரையில் அருள்பாலித்து வருகிறார் தேவேந்திர விநாயகர். தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு அருளியதால் இவருக்கு இந்தப் பெயர். இவரை 108 முறை வலம் வந்து வழிபட, கல்வி கேள்வியில் சிறந்து விளங்கலாம். தொடர்ந்து ஐந்து சங்கட சதுர்த்தி நாளில் மாலை வேளைகளில் இவரைத் தரிசித்தால் திருமண பாக்கியமும் பிள்ளை
வரமும் பெறலாம்.
மாறுபட்ட கணபதி
நாம் வணங்கும் பிள்ளையார் பொதுவாக தொந்தியும், தொப்பையுமாகத்தான் காட்சி அளிப்பார். ஆனால், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் சமீபம் கோயில் கொண்டிருக்கின்ற விநாயகர் தொந்தியற்று இருப்பதால் அவரை ‘சப்பாணிப் பிள்ளையார்’ என்று நாமமிட்டு இவரை பக்தர்கள் வணங்குகிறார்கள்.
நண்டு பீடத்தில் விநாயகர்
திருவெண்காட்டிலிருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ளது கீழைத் திருக்காட்டுப் பள்ளி. ஈசன் ஆரண்யேஸ்வரராகவும் அம்பிகை அகிலாண்ட நாயகியாகவும் திருவருள் புரியும் திருத்தலம். சந்திரன் தன் பாவம் தீர ஈசனை பிரதிஷ்டை செய்த தலம் இது. இத்தல ஈசன் காட்டழகர் என்றும் வணங்கப்படுகிறார். சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த கந்தர்வன் ஒருவனால் வணங்கப்பட்ட விநாயகர், நண்டு விநாயகர் என வணங்கப்படுகிறார். விநாயகரின் பீடத்தில் மூஷிகத்திற்குப் பதில் நண்டு உள்ளது, சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. இத்தல தட்சிணாமூர்த்தி ஆறு முனிவர்களுடன் ராஜயோக தட்சிணாமூர்த்தியாக போற்றப்படுகிறார். இவரை பூஜித்தால், இவர் அருளால் பதவி உயர்வைப் பெறலாம். இங்குள்ள பரமேச லிங்கத்தை பூஜிக்க 100 அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும் என்றும் சொல்கிறார்கள்.
பிள்ளையார் கோயிலில் மாங்கல்ய பிரசாதம்
அம்பாள், ஸ்வாமிக்கு திருக்கல்யாணம் நடத்தும் போது, திருமாங்கல்யம், குங்குமம், மஞ்சள் என மங்கலப் பொருட்களை பிரசாதமாகக் கொடுப்பார்கள். மதுரை அருகே வாடிப்பட்டியிலுள்ள வல்லப கணபதி கோயிலிலும் இவற்றை பிரசாதமாக தருகின்றனர். விநாயகருக்கு பூஜையின் போது இப்பொருட்களை வைத்தும் வழிபடுகிறார்கள். விநாயகர் அம்பிகையிடமிருந்து தோன்றியதால் இவரை சக்தி அம்சமாக கருதி இவ்வாறு செய்கின்றனர்.
உச்சிப்பிள்ளையாரும் கற்பக விநாயகரும்
தில்லை ஆகாயத் தலமாக இருப்பதாக, விநாயகப் பெருமானும் ஆகாச விநாயகராக உச்சிப்பிள்ளையார் என்னும் பெயருடன் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். மேற்கு உள்வாயிலுக்கு நேராக திருமுறைகாட்டிய விநாயகரும் அவருக்கு நேர் மேலே உச்சிப்பிள்ளையாரும் உள்ளனர். தில்லையில் ராஜாக்கள் தம்பிரான் திருமாளிகைப் பிராகாரம் என்று வரலாற்றில் குறிக்கப்படும் பெரிய பிராகாரத்தில் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள பெரிய சந்நதியில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையாருக்கு குலோத்துங்க சோழப் பிள்ளையார் என்பது பெயர். இந்நாளில் இவர் முகக்கட்டண விநாயகர் என்றழைக்கப்படுகின்றனர். ராஜாக்கள் தம்பிரான் என்பது குலோத்துங்கச் சோழனின் பட்டப் பெயராகும். அவன் பெயரால் பெரிய பிராகாரமும், இதிலுள்ள பெரிய விநாயகரும் அழைக்கப்பட்டனர். சிற்சபையைச் சுற்றியுள்ள திருமாளிகையில் எழுந்தருளியுள்ள க்ஷேத்திர விநாயகரான கூத்தாடும் விநாயகருக்குக் கற்பக விநாயகர் என்பது பெயர்.
நின்ற கோலத்தில் கணபதி
கர்நாடக மாநிலத்தில் உள்ள வளமான அழகான ஊர் இடகுன்ஜி. அகிலம் அனைத்தையும் காத்து ரட்சிக்கும் சிவ-பார்வதியின் திருமகன் விநாயகர், இத்தலத்தில் நின்ற கோலத்தில் வலக்கையில் பாசமும், இடக்கையில் மோதகமும் ஏந்தியுள்ளார். ‘‘நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் இவர் இங்கே இரண்டு தந்தங்களும் முழுமையாக உள்ளது’’ என்பதே இத்தலத்தின் சிறப்பு. பாக்குமர பூவினாலேயே பிரமாதமாக அலங்காரம் செய்வது மற்றோர் தனிச்சிறப்பாகும்.
வெண்ணிற விநாயகர்
பெங்களூரு, ஏர்போர்ட் சாலையில் உள்ள சிவாலயத்தில் எழுந்தருளியிருக்கிறார் வெண்ணிற விநாயகர். திருக்கரங்களில் பாசம், அங்குசம், தந்தம் மற்றும் மோதகத்துடன் திகழும் இந்த விநாயகர் செயற்கைக் குகையில் அருள்பாலிப்பது சிறப்பு. இந்த சிவாலயத்தில் 12 ஜோதிர்லிங்கங்களையும் தரிசிக்கலாம்.