விரைந்து வந்து அருளும் அபிராமியே!
அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்
``தை வந்து நின்அடித்தாமரை சூடிய சங்கரற்குக்
கைவந்த தீயும்தலை வந்த ஆறும்கரந்தது எங்கே
மெய்வந்த நெஞ்சின்அல்லால், ஒரு காலும்விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில்புகல்அறியாமடப்பூங்குயிலே!’’
- தொன்னூற்றி எட்டாவது அந்தாதி
ஆதியாக இப்பாடலை நாம் புரிந்து கொள்வதற்கு முன்பு தமிழ் இலக்கிய மரபில் உள்ள ‘ஊடல்’ என்ற வார்த்தையை புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. ‘ஊடல்’ என்பது தன் கணவன், பிறப் பெண்கள் இடத்தில் கொள்ளும் அன்பை கண்டு இல்லத் தலைவிக்கு உண்டாகும் கோபத்தை `ஊடல்’ என்கிறது. அந்தாதியை பொருத்தவரை ‘ஊடல்’ என்பது திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவாலயங்களில் எழுந்தருளி இருக்கும் சிவகாமி அம்பிகா சமேத நடராஜ சுவாமிக்கு அபிஷேக அலங்காரங்கள் செய்து வீதி உலா நடத்துவார்கள். அந்த விழாவில் நடராஜருக்கு காளியிடத்து சிவபெருமான் அன்பு கொண்டதால் சிவகாம சுந்தரிக்கு நடராஜர் மேல் கோபம் ஏற்படும் அக்கோபத்தினால் சிவகாமி கோயிலுக்குள் நுழைந்து நடராஜர் நுழைவதற்கு முன் கதவை தாழிடுவாள். சிவபெருமான் அக்கோவத்தை தணிக்க முயல்வார். பிறகு சிவகாம சுந்தரி சமாதானம் ஆவாள். அதன் பிறகு இருவரும் இணைந்து ஆனந்த சபைக்கு எழுந்தருள்வர். இந்த விழாவிற்கு `ஊடல் உற்சவம்’ என்று பெயர்.
இந்த ஆலய திருவிழாவை மார்கழி மாதத்தில் கோயில்களில் நடத்தினால் கணவன் மனைவி இடத்து உள்ள ஒற்றுமை பெருகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கோயிலில் நடைபெறும் இந்த விழாவை பற்றிய குறிப்பையே இப்பாடலில் விளக்கிக் காட்டுகிறார், அபிராமி பட்டர். இப்பாடலை இனி சிந்திக்க முயல்வோம்.
“அந்தாதி பொருட்சொல் வரிசை”
தை வந்து
நின் அடித்தாமரை சூடிய சங்கரற்கு
கைவந்த தீயும்
தலை வந்த ஆறும்
கரந்தது எங்கே
மெய்வந்த நெஞ்சின்
அல்லால்
ஒரு காலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில்
புகல் அறியா
மடப் பூங்குயிலே
இவ்வரிசையின் வழி பாடலின்
விளக்கதை இனி காண்போம்.
தை வந்து என்ற சொல்லானது விரைந்து வருதல், தானாக முன்வருதல், பணிந்து வருதல், பயந்து வருதல், கருணையை வேண்டி வருதல் என்ற ஐந்து பொருள்கள் தருவது இந்த ஐந்து பொருள்களையுமே சூட்டும் வண்ணம் “தை வந்து” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். விரைந்து வருதல் எனும் பொருளில் கோப உணர்வு கொண்டவர்கள் இயல்பான நடையில் இருந்து சற்று மாறுபட்டு விரைவாக செல்வார்கள். அவர்களின் சினத்தைத் தணிக்க விரும்புவர்கள். அதைவிட விரைவாக சென்றால்தான் அக்கோபத்தை தணிக்க முடியும் என்பதனால் தான் சிவபெருமான் விரைந்து வந்தார் என்கிறார் பட்டர்.
தானாக முன் வருதல்
சிவபெருமான் தன் மனைவியான சிவகாமி இருக்க காளியிடத்து சென்று வருதல் தவறு என்பதை தான் உணர்ந்தே, தான் செய்த பிழைக்கு தானே வருந்தி முன் வருகிறார் என்பதை சூட்டவே ‘தானாக முன் வந்து’ என்ற பொருளில் “தை வந்து” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.
பணிந்து வருதல்
தான் தவறு செய்வதை உணர்ந்தவர்கள், அந்த தவறால் பாதிக்கப் பட்டவர்களிடத்து பணிந்த நடத்தல் வேண்டும் என்கிறது நீதி சாஸ்திரம். தன் தவறால் பாதிக்கப்பட்ட சிவகாமியிடத்து பணிந்து வந்தார் சிவபெருமான் என்பதையே “தை வந்து” என்கிறார்.
பயந்து வருதல்
தவறு செய்தவர்கள் அது குறித்த துன்ப விளைவிற்கு அஞ்சுவார்கள். மேலும் அத்தவறு வெளிப்பட்டுவிட்டது என்று தெரிந்தால் மிகவும் அஞ்சுவார்கள். அது போல் சிவனின் இந்த தவறானது சிவகாமிக்கு தெரிந்து விட்டது. அதனாலேயே அஞ்சி வந்தார் என்பதாலேயே “தை வந்து” என்கிறார்.
கருணையை வேண்டி வருதல்
சிவபெருமான் செய்த தவறு அவருக்கே தெரிகிறது. அது சிவகாமிக்கு தெரிந்து விட்டது என்பதும் தெரிகிறது. அதனால்தான் அவள் கோபப்படுகிறாள் என்பதும் சிவபெருமானுக்கு புரிகிறது. உமையம்மையானவள் அனைவருக்கும் கருணை செய்யும் பண்பை கொண்டவள் என்பதை உணர்ந்து அவள் கால்களில் விழுந்தால் தன்னை மன்னித்து விடுவாள் என்ற உண்மை பண்பை அறிந்துதான், கருணையை வேண்டி வந்தார். மேற்கண்ட ஐந்து பொருள்படும் வகையில் “தை வந்து” என்கிறார்.
நின் அடித்தாமரை சூடிய சங்கரற்கு
“நின்” என்பதனால் நடராஜ பெருமானின் தனிப்பெரும் தேவியாகிய சிவகாம சுந்தரியை குறிப்பிட்டார். “அடி” என்பதற்கு பாதம் என்பது பொருள். சிவகாம சுந்தரியின் பாதம் “தாமரை” மலரை ஒத்த மென்மையை கொண்டது. தாமரையை ஒத்த சிவப்பு நிறத்தைக் கொண்டது. தன்னை நாடி வரும் வண்டுகளுக்கு, மற்ற பூக்களைவிட அதிகமாக தேனை தந்து மகிழ்ச்சி ஊட்டுவது குளிர்ச்சி பொருந்தியது. கதிரவன் வரவால் மலர்வது “தாமரை”. “அடி” என்பது பாதத்தையும், “தாமரை” என்பது மலரையும் குறிக்கும். பாதத்தையும், தாமரையும் ஒப்பிட்டுப் பேசுகிறார் பட்டர். அது எவ்வாறு என்பதை காண்போம்.
“தாமரை” சிவந்த வண்ணம் உடையதாக இருக்கிறது. அது போலவே அபிராமியம்மையின் திருவடியானது தேவர்கள் பலர் நித்தம் வணங்குவதால் சிவந்து தோன்றுகிறது. `சென்னி குனிதரும்’ (4) என்பதனால் இதை அறியலாம். “தாமரை” மென்மையாக இருக்கிறது. அபிராமியம்மையின் திருவடியானது அதைவிட மென்மையானதாக இருக்கிறது. இதை `பஞ்சு அஞ்சும் மெல்லடியார்’ (59) என்பதனால் அறியலாம்.
“தாமரை” தன் இடத்தில் வருகின்ற வண்டுகளுக்கு மற்ற மலர்களைவிட தேனை அதிகமாக வழங்குகிறது. அது போல உமையம்மையானவள் தன்னை நாடி வருகிறவர்களுக்கு மற்ற தேவதைகளைவிட அதிகமான அருளை வழங்குகிறாள். இதை `அருட் கடலே’ (95) என்பதனால் அறியலாம். “தாமரை” சூரிய ஒளியை கண்டவுடன் மலர்வது போல அன்பர்களின் முகமாகிய சூரியனை கண்டவுடன் அபிராமியம்மையின் திருவடித் தாமரை மலர்கிறது. இதை `மலர்க்கமலை’ (1) என்ற வார்த்தையால் அறியலாம்.
“தாமரை” வண்டுகளுக்கு இருப்பிடமாகவும் இருக்கிறது. வண்டானது சில நேரங்களில் தாமரையில் உள்ள மிகுதியான தேனை உண்டதனால் ஏற்படும் மயக்கத்தால் அதிலேயே உறங்கிவிடும். இரவு நேரத்தில் தாமரையானது மூடிய போதும் வண்டிற்கு வீடு போல் திகழும். அதுபோல அபிராமியம்மையின் அருளாகிய தேனை உண்ட ஆன்மாக்கள் அவள் திருவடியிலேயே தங்கி
விடுவார்கள். இதையே `சரணார விந்தம்’ (11) என்பதையே ``அடித்தாமரை’’ என்கிறார்.
“சூடிய” என்ற சொல்லை வணங்குதல், துதித்தல், பூசனை செய்தல், என்ற பொருளில் அபிராமி பட்டர் பயன்படுத்துகிறார். அந்த வகையில் உமையம்மை தன்மீது கொண்ட ஊடலை தவிர்ப்பதற்காக அவளின் பாதத்தை குறித்து தலை வணங்குகிறார் என்பது பொருள். இந்த இடத்தில் உலகியலில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிற பெண்களின் காரணமாக ஏற்படும் ஊடலை போக்க கால்களை தீண்டி சமாதானம் செய்ய முற்படுவதையே இங்கு “சூடிய” என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்.
“சங்கரற்கு” சிவனுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளது. அதில் “சங்கரர்” என்ற பெயரை இங்கு சிறப்பாக தேர்ந்தெடுக்க காரணம் என்ன? என்பதை சிந்தித்தால் அது புரியும் “சங்கரர்” இது ஒரு வடமொழி சொல். இதற்கு நன்மையை செய்பவர் என்பது பொருள். நடராஜப் பெருமானானவர் சிவகாமியை குறித்து என்னிடத்தில் உள்ள இந்த சிறு பண்பை யோசிக்காமல் மிகுதியான உள்ள அன்பை யோசித்து இந்த சிறு பண்பை விலக்கி, முன் போல் என்னிடத்து ஊடல் நீக்கி அன்பாய் இருந்து எனக்கு நன்மையை செய் என்பதையே ``நின் அடித்தாமரை சூடிய சங்கரற்கு’’ என்கிறார்.
கைவந்த தீயும்
``கைவந்த தீயும்’’ என்ற சொல்லால் சிற்ப சாஸ்திர குறிப்பை பயன்படுத்தி நமக்கு உமையம்மையின் மிகுந்த கோபத்தை “கை வந்த தீ” என்ற சொல்லால் குறிப்பிட முயல்கிறார். நடராஜர் கையில் இருக்கும் அந்த தீயை ஊழி தீ என்பர். இந்த ஊழி தீயானது சிவபெருமான் உலகத்தை அழிக்க முற்படும்போது பயன்படுத்துகிற “தீ”. அந்த தீயானது உலகியலில் அடுக்களையில் அடுப்பில் உள்ள தீ மற்றும் விளக்கில் உள்ள தீயைப் போல் அல்ல. அவர் கையை விட்டு நீங்கினாலே உலகு அனைத்தையும் ஒரு நொடியில் ஒருங்கே அழித்து விடும் வல்லமை பெற்றது. அப்படிப்பட்ட அதிகமான தீயானது நடராஜர் கையில் மட்டும் ஒடுங்கி சுடர்போல் சுருங்கி நிற்கிறது. அதே போலவே சிவபெருமானின் கையானது அபிராமியை தீண்டும் போது அவளின் கோப தீ சுருங்கியது.
உமையம்மையின் கோப தீயானது ஊழி தீயைவிட பண்மடங்கு பெரிதாக இருப்பதனால் சூரிய ஒளியின் முன் விண்மீனின் ஒளி குன்றி மறைந்தது போல சிவபெருமான் கையில் உள்ள தீயானது மறைந்து போனது என்கிறார் பட்டர். உமையம்மையின் திருவடித் தாமரையானது மிகுந்த குளிர்ச்சியுடையது. கருணை அருள் என்னும் நீரில் தோன்றியது. நீரும் நெருப்பும் நித்திய பகை, ஒன்றை ஒன்று அழித்துவிட முயல்வது, ஒன்றில் ஒன்று மறைந்து போவது, அந்த வகையில் சிவபெருமான் கையில் உள்ள தீயானது மிகுந்த வெப்பம் வாய்ந்தது, மிகுந்த குளிர்ச்சி வாய்ந்தது உமையம்மை திருவடித் தாமரை மிகுந்த சூடு பொருந்திய சிவபெருமானின் கையும் அபிராமியின் திருவடியும் இணையும்போது நீரிலே நெருப்பு அழிந்தது போல் சிவபெருமானின் கையில் உள்ள தீ மறைந்து போயிற்று. `தண்ணளிக்கு’ (15) `அருட்கடலே’ (95) என்பதையே ``கைவந்த தீயும்’’ என்கிறார்.
``தலை வந்த ஆறும்’’ “ஆறும்” என்பதால் ஆற்றையும் “தலை” என்பதால் சிவபெருமானின் தலையையும் “வந்த” என்பதால் சிவபெருமான் தலையில் உள்ள கங்கையை குறிப்பிடுகிறார். அந்த
கங்கையானவள் பிற ஆறுகளைப் போல் அல்ல என்கிறார். அந்த கங்கையை பற்றி அறிந்து கொள்ளுதல் இச்சொல்லின் பொருளை உணர்வதற்கு உதவும். கங்கை சூரிய ஒளியில் பிறந்தவள். இது சொர்க்கம் என்னும் விண் உலகில் ஆன்மாக்களை தூய்மைப்படுத்தும், மகிழ்ச்சி ஊட்டும், முக்தியையும் அளிக்கும், பேராற்றல் உடையது ஆகும். இந்த கங்கை நதியை பூ உலகத்திற்கு அழைத்து வரும் போது நிகழ்ந்த சம்பவத்தை விளக்கி கூறுவதால் “தலை வந்த” என்ற சொல்லை புரிந்து கொள்ளலாம்.
குதிரையை வைத்து செய்யப்படும் யாகம் அஸ்வமேத யாகம். இது இந்திர பதவியை அடைவிக்கும். அதை அடைய முயன்ற அரசன் ஒருவனுக்கு இடையூறு செய்து தன் பதவியை காத்துக் கொள்ள அஸ்வமேத யாகத்திற்கு வேண்டிய முக்கிய குதிரையை இந்திரன் யாருக்கும் தெரியாமல் கவர்ந்து கபில முனிவருடைய பாதாள லோகத்தில் உள்ள ஆசிரமத்தில் அவருக்கும் தெரியாமலேயே கட்டி விட்டுதான் மறைந்தான்.
அஸ்வமேத யாகத்தை முடிக்க குதிரையை தேடிய அரசர்கள் அவ்வாசரமத்தில் இருப்பதை கண்டு கபில முனிவரை கோபித்தனர். கபில முனிவரோ தன் தவ வலிமையால் அரசர்கள் அனைவரையும் தவத்தின் அக்னியினால் எரித்து சாம்பல் ஆக்கினார். அவர்களது அஸ்தியானது பாதாளலோகத்திலேயே இருந்தது. அப்படி இருந்ததால் அடுத்து வந்த அரசர்களுள் ஒருவனுக்கு [பகீரதனுக்கு] வாரிசின்றி துன்பப்பட்டார்.
அதைப் போக்கிக் கொள்ள தனது குருவிடம் கேட்டபோது உன் மூதாதையின் அஸ்தியானது பாதாள லோகத்தில் இருக்கும் வரை உனக்கு வாரிசு தோன்றாது, அந்த இறந்த ஆன்மாக்களின் எலும்பை கங்கையில் கரைப்பதால் மட்டுமே பித்ரு தோஷம் நீங்கி குழந்தை பிறக்கும் எனக் கூற, அதைக்கேட்ட அரசன் அந்த ஆன்மாக்களுக்கு மோட்சத்தை அளிக்க பிரம்மாவை வேண்டி தவம் செய்தான்.
அவன் தவத்தில் மகிழ்ந்த பிரம்மா பகீரதனை குறித்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு பகீரதன் சொர்க்கத்தில் இருக்கும் கங்கையை பாதாள லோகத்திற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள என்னுடைய முன்னோரின் எலும்புகளை தூய்மை செய்து, அவர்களுக்கு முக்தியை அளிக்க வேண்டினான். அதைக் கேட்ட பிரம்மா, கங்கை விண்ணில் இருந்து பாதாள லோகத்திற்கு வருவாள் என்று வரம் அளித்தார்.
மேலும், கங்கை “வந்த” வேகத்தில் பாதாள உலகமே அழிந்து போய்விடும் என்பதால், கங்கையின் வேகத்தை குறைக்க சிவபெருமான் ஒருவனால்தான் முடியும் என்று, அவரை நோக்கி தவம் செய்து அவர் அருளைப் பெற முயல்வாயாக என்றுகூறி மறைந்தார் பிரம்மா. அதன்பிறகு அந்த அரசன் சிவனைக் குறித்து அருந்தவம் செய்தான். அதற்கு மகிழ்ந்த சிவபெருமான் அவ்வரசன் முன் தோன்றி யாது வேண்டும் என வினவ, அந்த அரசன் விண்ணுலகில் இருந்து பாதாளலோகத்திற்கு கங்கையானவள் வரும் போது அவளது வேகத்தால் பாதாள லோகம் அழியாமல் காத்தருளி முன்னோர்களுக்கு அருள்செய்ய சிவபெருமானை வேண்டினான்.
அவ்வண்ணமே ஆகுக என்று சிவபெருமான் மறைய முன்பு பிரம்மாவிடம் பெற்ற வரத்தின்படி கங்கையை வேண்ட, அவள் வேகமாக வர, அந்த வேகத்தை தடுக்க சிவபெருமான் தான் அளித்த வரத்தின் படி தலையிலே தாங்கி கங்கையின் வேகத்தை குறைக்க தன் கற்றை ஜடையில் தாங்கி கங்கையின் வேகத்தை ஒடுக்கினார். அதனால், வேகம் குறைந்தாள் கங்கை. அதன் பிறகு அவ்வரசன் சிவனை வேண்ட கற்றை ஜடையில் இருந்து ஒற்றை ஜடையை உருவி அதன் வழியே கங்கையை வேகம் குறைத்தவளாய் வெளிப்படுத்தினார்.
முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்