நீங்கள் எந்த ராசியாக இருந்தாலும் ராகு - கேது தோஷம் நீங்க வேண்டுமா?
இந்த ஆண்டு திருக்கணிதப்படிமே 18,2025 ராகு கிரகப் பெயர்ச்சி நடக்க உள்ளது. வாக்கியப்படி ஏப்ரல் 26,2025 ராகு கிரகப் பெயர்ச்சி ஆகிவிட்டது. சனி பகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசியில் ராகுவும், சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்மத்தில் கேதுவும் நுழைகிறார்கள். ராகு, சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் 3,6,11 ஆகிய மூன்று இடங்கள் தவிர மற்ற இடங்களுக்கு நன்மையைச் செய்வதில்லை. அந்த அடிப்படையில், இந்த ராகு பெயர்ச்சி, தனுசு ராசிக்கும், கன்னி ராசிக்கும், மேஷ ராசிக்கும் நன்மையைச் செய்யும் என்பது பொதுவான கருத்து. இதை வைத்துக்கொண்டு பலன் எழுதுகின்றார்கள்.
இந்த ராசிக்காரர்களுக்கு அமோகம், கோடிகோடியாக பணம் கொட்டும் என்றெல்லாம் ராசி பலன்கள் எழுதுகின்றார்கள். அவைகள் எல்லாம் உண்மை அல்ல. அவரவர்கள் ஜன்ம ஜாதக பலனும், நடைபெறுகின்ற தசாபுத்திகளும்தான் கை கொடுக்கும். எனவே ராகு - கேது பெயர்ச்சியைக் குறித்து, அதிகமாக சந்தோஷப்பட வேண்டியதில்லை. பயமும் பட வேண்டியது இல்லை. அது இயல்பாக நடக்கக்கூடிய ஒரு பெயர்ச்சி. ஜோதிட சாஸ்திரத்தில் ராகு - கேது பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றால், இவைகள் இரண்டும் வக்கிரக கிரகங்கள். எதிர்ப்புறமாகச் சுற்றும் கிரகங்கள். அதோடு இவற்றிற்கு மற்ற 7 கிரகங்களும் பகை கிரகங்கள். அதோடு இவைகள் நிழல் கிரகங்கள். சொந்த வீடு இல்லாத கிரகங்கள். குறிப்பிட்ட காலத்திற்கு கிரகங்கள் வக்கிரமாகி அதோடு ராகு - கேது சேரும் பொழுது சில எதிர்பாராத நன்மைகளைச் செய்யும் என்பது ஜோதிட சாஸ்திரம். எனவே, எந்த ராசியில் இருக்கின்றதோ, அந்த ராசிக்குரிய பலனை ஆகர்ஷணம் செய்து கொடுக்கும்.
அதைப் போலவே எந்த கிரகத்தோடு சேர்ந்து இருக்கிறதோ, அந்தக் கிரகத்தின் பலனை, தான் வாங்கிக் கொடுக்கும் என்பதால், இவைகள் சக்தி வாய்ந்த கிரகங்களாக சொல்லப் படுகின்றன. இன்னொரு விஷயம், ராகு - கேது மட்டும் ஒரு ஜாதகத்தில் பலன் தருவது கிடையாது. ஒரு மாதத்திற்கு ஒருமுறை சூரியன் ராசியில் நகர்ந்து கொண்டே இருக்கிறார். ஒரு சில ராசிகள் தவிர, பெரும்பாலான ராசிகளில் சூரியன் பயணம் செய்யும் பொழுது, எதிர்மறைப் பலன்களைத் தான் தரும். செவ்வாயும் அப்படியே. இன்னும் சுக்கிரனும் புதனும் இருக்கிறார்கள். இவர்கள் ராகுவின் சுப பலன்களைத் தடுக்கவே செய்வார்கள். அதைப் போலவே, இந்த கிரகங்கள் சாதகமான ராசியில் செல்லும் பொழுது ராகுவின் தீய பலன்களையும் குறைக்கவே செய்வார்கள். எனவே, கலந்த படிதான் பலன் நடக்கும். மற்ற கிரகங்கள் அமைப்பினால் கோள்சார பலன், எதிர்பார்த்தபடி பெரிய நன்மையையும் செய்யாது. மிகப் பெரிய தீமையையும் செய்யாது. இதனால் இந்த கிரகப் பெயர்ச்சி குறித்து மிகுந்த அளவு மகிழ்ச்சி அடைவதற்கோ வருத்தப்படுவதற்கோ ஒன்றும் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு காலத்தில் ஆலயங்களில்கூட ந்தக் கிரகப் பெயர்ச்சிகள் குறித்து பெரிய விசேஷமான பூஜைகள் நடக்காது. ஜோதிடர்களைத் தவிர மற்றவர்களுக்கு இந்தக் கிரக பெயர்ச்சி குறித்த பெரிய செய்திகள் இருக்காது. காரணம், இது இயல்பான விஷயம் என்று நினைத்தார்கள். இப்பொழுது பெரிய பந்தல் போட்டு கோயில்களிலே விசேஷமான பூஜைகளும் யாகங்களும் நடத்துகின்றார்கள். இன்னும் சொல்லப்போனால் சில கோயில்களில் தோஷ நிவாரண பூஜைகள், பிரதான பூஜைகளைவிட அதிகமாக நடக்கின்றன. ஒரு விஷயத்தை நன்கு தெரிந்துகொள்ளுங்கள். நம்மைப் படைத்து, நவகிரகங்களையும் படைத்த, எல்லோருக்கும் மேலான அந்த இறைவனின் அனுமதி இல்லாமல், தனிப்பட்ட முறையில், கிரகங்கள் நன்மையையோ தீமையையோ செய்ய முடியாது.
எனவே கிரகப் பெயர்ச்சி அன்று நீங்கள் உங்கள் குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வணங்குங்கள். தினசரி வழிபடுகின்ற பொழுது, நாகதோஷம் அணுகாமல் இருப்பதற்காக அஷ்ட நாகங்களில் பெயரையும் (எட்டு நாகங்கள்: வாசுகி, ஆதிசேஷன், கார்க்கோடகன், அனந்தன், குளிகன், தட்சகன், சங்கபாலன், பதுமன் என அழைக்கப்படுகிறார்கள்) சொல்வது நன்மையைத் தரும்.
கோயில்களில் கங்கண தாரணம் செய்கின்ற பொழுது, இந்த மந்திரங்களை சொல்லித்தான் கங்கணதாரணம் செய்வார்கள். அதோடு ஆதிசேஷனுக்கு உரிய காயத்ரி மந்திரத்தையும் சொல்லலாம்.
``ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்’’
இந்து மதத்தில் உள்ள எல்லா கடவுள்களுக்கும் நாகத்தோடு தொடர்பு இருக்கிறது. சிவபெருமான் கழுத்தில் பாம்பை ஆபரணமாக அணிந்துகொண்டிருக்கிறார். மகாவிஷ்ணு பாம்பு படுக்கையில்தான் சயனத் திருக்கிறார். ஆதிபராசக்தி நாகம் குடைபிடிக்க சர்ப்ப ஆசனத்தில்தான் அமர்ந்திருக்கிறாள். முருகப் பெருமான் விநாயகர் இவர்களும் நாகத்தோடுதான் இருக்கின்றார்கள்.சதுர்த்தி திதி, பஞ்சமி திதி இவை இரண்டும் நாகத்தோடு தொடர்பு கொண்டு நாகசதுர்த்தியாகவும், நாகபஞ்சமியாகவும் வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் உங்கள் இஷ்ட தெய்வமாக சிவபெருமானையும், மகாவிஷ்ணுவையும், முருகனையும், விநாயகரையும், ஆதிபராசக்தியையும் முறையாக வணங்குவதன் மூலமாக சர்ப்ப தோஷங்களில் இருந்து விடுபடலாம். ராகு - கேது எனும் இரண்டு கிரகங்களும் (ஒரே கிரகத்தின் இரண்டு பகுதிகள்) நிழல் கிரகங்கள்என்பதை கவனத்தில் கொள்ளவும். இதில் என்ன ரகசியம் என்று சொன்னால், ஒரு மனிதனின் நிழல் அவனை விட்டுப் பிரியாது. (சில நேரங்களில் அது மறைந்து இருக்குமே தவிர இல்லாமல் இருக்காது)நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும், நல்ல செயலோ, கெட்ட செயலோ, நிழல் போல பதிவு செய்து, அதற்கானநன்மையையோ தீமையையோ ராகு-கேது கிரகங்கள் தராமல் போகாது.எனவே, யாருக்கும் தெரியாது என்று எண்ணி எந்தத் தவறையும் செய்ய வேண்டாம். நன்மை செய்யும்பொழுதுமற்றவருக்குத் தெரிந்தால் தானே நமக்கு கௌரவம் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் செய்கின்ற எந்த நன்மைக்கும் ராகு கேதுக்கள் பலன் தருவார்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நச்சு வார்த்தைகளை பேசாதீர்கள். யாரிடமும் சீற்றம் கொள்ளாதீர்கள். வியாழக்கிழமை அன்று கருட தரிசனம் செய்யுங்கள். மாலையில் விளக்கேற்றி வைத்து கருட காயத்ரி சொல்லுங்கள்.
``ஓம் தத்புருஷாய வித்மஹே ஸூவர்ண பட்சாய தீமஹி
தன்னோ கருட ப்ரசோதயாத்’’
ராகு - கேது கிரகங்களினால் நாம் பாதிக்காமல் இருக்க ஒருமுறை சிறுபுலியூர் சென்று வரவேண்டும். இயன்றால் ஸ்ரீ பெரும்புதூர் சென்று அங்கே பெருமாளை வணங்குவதோடு ஆதிசேஷ அவதாரமான ஸ்ரீ ராமானுஜரையும் வணங்கி வரவேண்டும். தினசரி பூஜை அறையில் கீழ்க்காணும் பாசுரத்தைச் சொல்லுங்கள்.
``காரேய் கருணை இராமானுச, இக்
கடலிடத்தில்ஆரே அறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான்வந்து நீஎன்னை உய்த்தபின் உன்
சீரே உயிர்க்குயிராய், அடியேற்கு இன்று தித்திக்குமே’’
பராசரன்