வருடப் பிறப்பும், வேப்பம்பூ பச்சடியும்
வருடத்தின் ஆரம்ப நாள் ஆறு ருதுக்களும், நவகிரங்களின் முறையும் மாறி நமக்குத் தருகின்ற நன்மை, தீமையாகிய பயன்களை நாம் இறைவனின் செயல் ஆகவே எண்ணி இன்பமாக அனுபவிக்க வேண்டும். கசப்புக்கு இருப்பிடம் வேம்பு, இனிப்புக்கு இருப்பிடம் கரும்பு. வேப்பம்பூவுடன் வெல்லம் சேர்த்து பச்சடியாக்கி உலக வாழ்க்கை என்னும் வேம்பை அன்பெனும் பாகினால் சமப்படுத்தி, நன்மை, தீமை ஆகிய இரண்டையும் சமநிலையில் அனுபவிக்க வேண்டும் என்னும் உணர்வைப் பெறவே இந்நாளில் வேப்பம்பூ பச்சடி செய்து சாப்பிடும் வழக்கத்தை நம் முன்னோர்கள் நமக்குத் தந்தனர்.
சூரிய பூஜை
திருநெல்வேலிக்கு அருகில் உள்ள சங்கரன் கோயில் திருத்தலத்தில் சங்கரநாராயணர், கோமதி அம்மன் திருக்கோயில் இருக்கிறது. இக்கோயிலின் மூலஸ்தானத்தில் உள்ள சங்கரலிங்கம் மார்ச், செப்டம்பர் மாதங்களில் 21ம் தேதியிலிருந்து மூன்று நாட்கள் சூரிய ஒளி விழுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடன் தீர்க்கும் சிவன்
கிரகங்களில் ஒருவரான அங்காரகன் கடன் தொல்லையால் சிரமப்பட்டார். கடன் தொல்லை தீர வழிகாட்டும்படி பார்வதியின் உதவியை நாடினார். அம்பிகை செவ்வாயிடம், பூலோகம் சென்று பவுர்ணமி நாளில் பரம் பொருளாகிய ருணஹரேஸ்வரரை வழிபட்டு வில்வார்ச்சனை செய்தால் கடன் சுமை தீரும் என்று அருள்புரிந்தாள். அதன்படி அங்காரகன் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி சிவனை வழிபட்டார். செவ்வாய்க்கு மங்களன் என்ற பெயர் உண்டு. அதனால் இத்தீர்த்தம் மங்கள தீர்த்தம் என்றானது. செவ்வாயின் துன்பம் போக்கியதால் அம்பிகை மங்களாம்பிகை எனப்படுகிறாள். இங்குள்ள லிங்கத்துக்கும், அம்பாளுக்கும் ஞாயிறு, திங்கள், செவ்வாயன்று நெய் தீபமேற்றி வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும். கடன் தொல்லை நீங்க, ருணஹரேஸ்வரரை வணங்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டம், பெரணம்பாக்கம் ருணஹரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வரலாம்.
மிளகு நிவேத்தியம்
கோவை மாவட்டம் சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது திருவேங்கடநாதப் பெருமாள் கோயில். கருவறையில் தேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் மூலவர் திருவேங்கட நாதப் பெருமாள் அருள்புரிகிறார். அவரது திருமேனியின் பின்புறம் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார். இது ஓர் அபூர்வ தரிசனம் என்பர். பெருமாளுக்கு எதிரே கருடாழ்வார் சேவை சாதிக்கிறார். இங்கு மூலவர் திருவேங்கடநாதப் பெருமாளைத் தரிசித்தபின், துளசி தீர்த்தம் அளிப்பதுடன், மிளகு நிவேத்தியப் பிரசாதமாக வழங்கப்படுவது தனிச் சிறப்பாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரசாதம் விஷ ஜுரம் வராமல் தடுக்கும் சக்தி கொண்டது என்று சொல்லப்படுகிறது.
யானைக் கரும்பு!
பார்த்திபனூர் அருகேயுள்ள மேலம்பெருங்கரை சிவபெருமான் ஆலயத்தில் எட்டு யானைத் தலை சிலைகள் உள்ளன. ஆண்டுதோறும் தைப்பொங்கல் அன்று இந்த சிலைகளுக்கு முன் கரும்புகளை வைத்து பொங்கலிட்டு வணங்குகிறார்கள்.
சங்கராந்தியன்று சொர்க்கவாசல்!
பொதுவாக வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும். ஆனால், கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில் மகரசங்கராந்தி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
மாங்கல்ய சரடு உற்சவம்
சென்னை நங்கநல்லூர் லட்சுமி நரசிம்மர் கோயிலில், தை மாதம் மூன்றாம் வெள்ளிக் கிழமை நடைபெறும் ‘திருக்கல்யாண மாங்கல்யச் சரடு உற்சவம்’ மிகவும் பிரசித்தம். பல சடங்குகள் நடத்தப்பட்டு சந்நதியில் மாங்கல்ய தாரணம் நடைபெறும். அதன்பிறகு 10,000க்கும் மேற்பட்ட திருமாங்கல்யச் சரடு களைச் சார்த்தி விசேஷ பூஜைகள் நடத்தி அட்சதை, மஞ்சள் குங்குமத்துடன் தருவர். இதை வாங்கி பூஜை அறையில் வைத்து பூஜை செய்யும் கன்னிப் பெண்களுக்கு அந்த வருடமே திருமணம் நடக்கும். சுமங்கலிப் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும்.
தொகுப்பு: ஜெயசெல்வி