நீ என்ன செய்ய விரும்புகிறாயோ செய்துகொள்
குர்ஆனின் 20-ஆம் அத்தியாயம் “தாஹா” மிகவும் விறுவிறுப்பான அத்தியாயங்களில் ஒன்று. இந்த அத்தியாயத்தில் பரபரப்பான திருப்பங்களுக்கும் படிப்பினைகளுக்கும் பஞ்சமே இல்லை. ‘‘மூஸாவே உன் கையில் இருப்பது என்ன?” என்று இறைவனே கேட்பதாகத் தொடங்கும் வசனத்திலிருந்து நம்மையும் அந்தப் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. இந்த அத்தியாயத்தில் மிகுந்த படிப்பினைக்குரிய நிகழ்வு சூனியக்காரர்களின் மனமாற்றம்… ஒரு மனிதனின் உள்ளத்தில் உண்மையான ஈமான்- இறை நம்பிக்கை நுழைந்துவிட்டால் நொடியில் அவன் வாழ்வே மாறிவிடும் என்பதற்கு அந்தச் சூனியக்காரர்கள் ஓர் எடுத்துக்காட்டு. ஒரு நிமிடம் முன்பு வரை அவர்கள் எகிப்தின் கொடுங்கோல் மன்னன் ஃபிர்அவ்னின் துதிபாடிகள். ஃபிர்அவ்னைப் போல் உலகில் உண்டா என்று வாழ்த்துப்பா இசைத்தவர்கள். அவனுடைய நெருக்கத்திற்காகவும் அரண்மனை சொகுசுகளுக்காகவும் அவன் தரும் பரிசில்களுக்காகவும் ஏங்கியவர்கள். ஆனால், போட்டியின் போது இறைத்தூதர் மூஸா செய்து காட்டிய அற்புதங்களைப் பார்த்ததுமே அவர்களுக்குத் தெரிந்துவிட்டது இது வெறும் கண்கட்டு வித்தை அல்ல என்று.
“மூஸாவின் இறைவன் மீது நம்பிக்கை கொள்கிறோம்” என்று எந்தத் தயக்கமும் இல்லாமல் போட்டி நடந்த மைதானத்திலேயே ஃபிர்அவ்னுக்கு எதிரிலேயே அறிவித்து விட்டனர். தன்னுடைய தண்டனைகள் குறித்து ஃபிர்அவ்ன் அவர்களைக் கடுமையாக எச்சரித்தான். “மாறுகை மாறு கால் வாங்கி விடுவேன்” என்று மிரட்டினான். அப்போது அந்தச் சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னைப் பார்த்துச் சொன்னது இதுதான். “எங்களைப் படைத்த இறைவன் மீது சத்தியமாக, தெளிவான சான்றுகள் எங்கள் கண் எதிரே வந்த பின்னரும் நாங்கள் சத்தியத்தைவிட உனக்கு முன்னுரிமை தர மாட்டோம். நீ என்ன செய்ய விரும்புகிறாயோ செய்து கொள். உன்னால் இவ்வுலகில் மட்டும்தானே தீர்ப்பு வழங்க முடியும்?” (20:72) குறிப்பாக அந்த ஒரு வரி- “நீ என்ன செய்ய விரும்புகிறாயோ செய்துகொள்.”அடடா… என்ன ஓர் இறை நம்பிக்கை… என்ன ஒரு துணிச்சல்.
- சிராஜுல்ஹஸன்
இந்த வார சிந்தனை
‘எவர்கள் நம்பிக்கையாளராய் நற்செயல்கள் புரிந்து வண்ணம் இறைவனின் திருமுன் வருகின்றார்களோ அத்தகைய அனைவருக்கும் உயர்பதவிகள் உள்ளன. நிலையான சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்கள்.’’ (குர்ஆன் 20:75-76)