நாக்பூரைக் காக்கும் ‘‘டேக்கடி கணேஷ் மந்திரி விநாயகரும், தேலங்கடி அனுமனும்!’’
நாகபுரி நகருக்குள் கடைத்தெரு பகுதியில் அமைந்துள்ள பெரிய கோயில் விநாயகப் பெருமானுடையது. இந்த ஆலயத்தை ‘‘டேக்கடி கணேஷ் மந்திர்’’ எனும் சொல்லுகிறார்கள். இங்குள்ள விநாயகர் சந்நதி அறுபது அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. அங்கே போய் விநாயகரை வழிபட அழகிய படிக்கட்டுகள் உள்ளன. வயதானவர்கள் எளிதாக ஏறிச் செல்லும்படி சரிவுப் பாதையும் அமைத்திருக்கிறார்கள்.
இங்கே அரசமரத்தடியில் சுயம்புவாக விநாயகப் பெருமான் உருவாகி இருக்கிறார். முதலில் உருவம் மட்டும் தெரிந்தாம். பிறகு படிப்படியாகக் கண், காது ஆகியவை வௌிப்பட்டதாகச் சொல்லுகிறார்கள். விநாயகர் உருவத்திற்கு செந்தூர் வர்ணம் பூசி இருக்கிறார்கள். சிவப்புப் பட்டாலும் அணிமணி மாலைகளாலும் அற்புதமாக அலங்கரித்திருக்கிறார்கள். ஆல மரத்தைச் சுற்றிச் சிறு பட்டையாகக் கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. இதைச் சுற்றி வந்து விநாயகரை வணங்குகிறார்கள். பிரசாதமாகக் கற்கண்டும் செந்தூரப்பொடியும் கொடுக்கிறார்கள்.
இதைத் தவிர சந்நதியில் தனியாக மற்றொரு விநாயகர் விக்கிரகமும் இருக்கிறது. வெள்ளி திருவாசி பூட்டியிருக்கிறார்கள். சிவப்பு-பச்சை நிறப்பட்டாடைகள் அலங்கார மாலைகள் ஆகியவற்றால் அழகுபடுத்தியிருக்கிறார்கள். விநாயகருக்குத் தும்பிக்கைகூடத் தெரியாமல், முகம் மட்டும் தெரியும் படி அலங்காரம் செய்து பெரிய அளவில் சந்தனப் பொட்டு வைத்திருக்கிறார்கள்.
இந்த விநாயகர் கோயில் பசுமையான மரங்கள் சூழ குளிர்ச்சியான அமைதியான இடத்தில் இருக்கிறது. மண்டபத்துக்கு வெளியே உட்கார நிறைய இடம் இருக்கிறது. இருக்கைகளும் போட்டிருக்கிறார்கள். மாலை வேளைகளில் தரிசனத்துக்கு வருபவர்கள் இங்கே அமர்ந்து தியானம் செய்கிறார்கள். பலர் குழுவாக அமர்ந்து விநாயகர் பாடல்களைப் பாடிக்
கொண்டிருக்கிறார்கள்.
இந்த டேக்கடிகணேசர் மிகுந்த சக்தி வாய்ந்தவர் நாகபுரி மக்கள் முக்கியமான காரியங்களைத் தொடங்கும் போது, விக்கினம் இல்லாமல் நடக்க இங்கே வந்து வேண்டிக் கொள்கிறார்கள். இத்தலத்தில் நடக்கும் மிகப் பெரிய திருவிழா விநாயகர் சதுர்த்தி விமரிசையாக ஒரு வாரம் கொண்டாடுகிறார்கள். பிராகாரத்தில் விநாயகரைத் தவிர சிவபெருமான் சந்நதியும் இருக்கிறது. நாகாபரணம் தரித்த சிவலிங்கம் வெள்ளி அலங்கார அண்களுடன் பூஜிக்கப்படுகிறார். நான்கு வெள்ளிச் கெம்புகள் தீர்த்தம் ஏந்தி நிற்கின்றன.
ஆலயத்துக்கு அழகான மேற்கூரை இருக்கிறது. மண்டப அமைப்பு கொண்ட இதிலே மேலே அஷ்ட விநாயகர்களின் தோற்றம் வைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள அழகான தூண்களையும் இரட்டை நாக அமைப்பையும் கண்டு ரசிக்கலாம் மாலை நேரங்களில் விநாயகப் பெருமானை தரிசிக்க தினமும் வரும் பக்தர்களின் கூட்டம் காணக்கண் கொள்ளக் காட்சி. மகாராஷ்டிரத்தில் எப்போதும் விநாயக சதுர்த்தி மிகவும் விசேஷம். அதே போன்று இங்கும் சிறப்பாக விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
இந்த ஆலயத்தில் இன்னொரு சிறப்பையும் காணலாம் விநாயகர் ஆலயச் சந்நதியில் அலங்காரம் செய்யப்பட்ட ராதா கிருஷ்ணன் திருவுருவத்தையும் தரிசிக்கலாம். இங்கே ஆஞ்சநேயர் செந்தூர வண்ண வடிவில் இருக்கிறார். மராட்டியர்களுக்கு இது சிறப்பான ஆலயம் என்றாலும், தென்னிந்தியப் பாணியில் அழகான கோலங்களும் போட்டிருக்கிறார்கள். சங்கடஹர சதுர்த்தியன்று சிறப்பான பூஜைகளும் வழிபாடுகளும் அன்னதானமும் நடைபெறுகிறது.
விநாயகர் கோயிலில் காலை மாலை இருவேளைகளிலும் பூஜை நடக்கிறது. மணி அடித்து ஸ்லோகம் பாடுகிறார்கள். பக்தர்கள் விநாயகர் துதிகளைப் பாடுகிறார்கள். நறுமணப் புகை பரவுகிறது முடிவில் ஆரத்தி வழிபாடு முடிந்ததும் பிரசாதம் கொடுக்கிறார்கள்.நாகபுரி மக்கள் இனவேறு பாடின்றி வந்து வழிபடும் மற்றொரு புறம் உள்ள அனுமன் கோயில் மிகவும் புகழ்பெற்ற கோயிலாகும். மக்கள் பலரும் போற்றும் ஆலயமாக இது திகழ்கிறது. பொழுது போக்க மக்கள் கூடும் ஏரிக்கரையில் நிறையக் கடைகள் உள்ள பகுதியில் இந்தக் கோயில் அமைந்திருப்பதால் பெரியவர்களும் சிறுவர்களும் பெரும் அளவில் வந்து அனுமனை வழிபடுகிறார்கள். அதிசயமாகக் குரங்குகளும் இந்தக் கோயிலுக்கு வருவதைக் காணலாம்.
இருபுறமும் பிரசாத சாமான்கள் ஆகியவை உள்ள கடைகள் வரிசையாக அமைந்திருக்க, சுமார் எழுபது படிகள் ஏறிமேல் உள்ள கோயிலை அடைய வேண்டும். இது ஒரு இயற்கையான குன்று போல இன்றி பெரிய கட்டடமாகப் படிக்கட்டுகளுடன் விளங்குகிறது. கோபாலைச் சுற்றிலும் மடங்களும் சாதுக்களின் ஆசிரமும் உள்ளன.இந்த அனுமன் இருக்கும் இடம் ‘தேலங்கடி என அழைக்கப்படுவதால், அனுமானும் ‘தேலங்கடி அனுமன்’ என்றே அழைக்கப்படுகிறார்.
ஏழடி உயரமுள்ள அனுமன் உருவத்துக்கு செந்தூரப் பொடி பூசி அலங்கரித்திருக்கிறார்கள். பக்தர்கள் சுவாமிக்குத் தேங்காய் உடைத்து வழிபடுகிறார்கள். நினைத்த காரியம் கைகூட வேண்டுமானால் தேலங்கடி அனுமனிடம் வேண்டிக்கொண்டால் போதும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் இருக்கிறது. இங்கு இளைஞர்களும், இளம் பெண்களும் தினமும் பெரும் அளவில் வந்து பிரார்த்தித்துக் கொள்கிறார்கள்.
பளிங்குக்கல் தரையும், பளிங்கு மண்டபமும், காற்றோட்டமான பிராகார அமைப்பும் வழிபாட்டை இனிமையாக்குகின்றன. ஒவ்வொரு சந்நதியிலும் ஆலயமணி கட்டி வைத்திருப்பதால் மணியின் முழக்கம் தொடர்ந்து கேட்டவண்ணம் இருக்கிறது. சனிக்கிழமை விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. அனுமனுக்கு எருக்கம் பூ மாலையும் சாமந்திப் பூ மாலையும் அணிவிக்கிறார்கள். இங்கே சாமந்திப் பூ செந்தூரவர்ணத்தில் விளங்குகிறது.
அனுமனைத் தவிர சீதா-ராம-லட்சுமணர், லட்சுமி நாராயணர், ஈஸ்வரன், ராதாகிருஷ்ணர், ராஜராஜேஸ்வரி ஆகிய தெய்வ உருவங்களும் வைக்கப்பட்டுள்ளன. பட்டாடை ஜரிகை வஸ்திர அலங்காரங்களுடன் பளிங்குச்சிலை உருவங்களாக இவை விளங்குகின்றன கருட பகவானுக்கும் தனி சந்நதி உண்டு. ஆலயத்தின் வெளிப் பகுதியில் தல விருட்சம் அமைந்திருக்கிறது. அதன் அடிப்பகுதியில் சுயம்புவாகத் தோன்றிய அனுமனை வைத்து வழிபடுகிறார்கள். மரத்துடன் சேர்த்து வலம் வந்து வணங்குகிறார்கள்.
அனுமன் ஆலயத்துக்கு எதிரில் சோலைகள் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது மகாதேவர் கோயில். இந்த ஆலயத்தின் வெண்ணிறக் கோபுரம் ஒரினா ஆலயங்களைப் போன்ற அமைப்புடன் விளங்குகிறது. அமைதியான இந்த இடத்தில் நிம்மதியாக பிரார்த்தனை செய்யலாம். இக்கோயிலில் ஏராளமான குரங்குகள் இருப்பது அதிசயம்.மூலவராக ‘கல்யாணேஸ்வர் மகா தேவர்’ என்பது திருநாமம் கொண்டு அருள்கிறார். சந்நதியில் பளிங்குக்கல்லால் செய்யப்பட்ட சிவலிங்கம் வணங்கப்படுகிறது.
நாமே மலர்தூவி பிரார்த்தனை செய்து கொள்ளலாம் மேலே துளைகள் போட்ட தாராபாத்திரம் உள்ளது. மணியை அடித்து அசைத்தால் அபிஷேகமாக நீர்த்தாரை சிவலிங்கத்தின் மீது பொழிகிறது. சந்நதியில் எதிரே நந்தி பகவான் இருப்பது ஒரு சிறப்பு அம்சம். வட இந்தியக் கோயில்களில் இப்படி அமைந்திருப்பது அபூர்வம். ஆலயத்தில் பூஜை செய்யும் பண்டா இருக்கிறார். காணிக்கை போட்டு, அவர் கையினால் நெற்றியில் பிரசாதம் இட்டுக் கொள்ளலாம் விபூதி பிரசாதம் இல்லை. செந்தூரவர்ணப் பொடியே அளிக்கப்படுகிறது.
நாகபுரியில் உள்ள டேக்கடி விநாயகர் கோயிலிலும், தேலங்கடி அனுமன் கோயிலிலும் பஜனை, கதாகாலட்சேபம், ஆன்மிக சொற்பொழிவுகள் போன்ற நிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெறுகின்றன. முக்கியமாக நாகபுரியில் வசிக்கும் தென்னிந்தியர்கள் நிறையப் பங்கு கொள்கிறார்கள். பக்தி அடிப்படையில் அவர்களிடையே கலாசார மணமும், ஒற்றுமையும் ஓங்கி இருக்கின்றன. மத, இன, மொழி பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் ஆலயங்களில் வழிபடுகிறார்கள்.தேலங்கடி அனுமன் கோயிலில் தபால்கார்டு வடிவில் ‘ஏகசுலோகி சுந்தர காண்டம்’ என்று ஸ்லோகத்தை அச்சிட்டு வழங்குகிறார்கள்.
அச்சுலோகம் இது-
‘‘யஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹத்
பலாத் தீர்ணாம் புதிர் லீலயா
ல ங்காம் பிராப்ய நிசாம்ய ராம தயிதாம்
பங்க்த்வா வனம் ராக்ஷஸான்
அக்ஷாதீன் விநிஹத்ய வீஷ்ய தசகம்
தக்த்வா புரீம் தாம்புன:
தீர்ணாபதி: கபிபிர்யுத யம்ய நமத்
தம் ராமசந்திரம் பஜே!’’
பொருள்: ‘‘எவருடைய அனுக்கிரக பலத்தால், ஹனுமான் விளையாட்டாகக் கடலைக் கடந்து, இலங்கையை அடைந்து, ராமனுடைய அன்புடையாளைக் கண்டு, ராக்ஷசர்களின் காடுகளை அழித்து, அசுரர்களைக் கொன்று, ராவணனைக் கண்டு, இலங்கையை எரித்து, மறுபடி கடலைக் கடந்து, மற்ற வானரங்களுடன் யாரை வணங்கி நின்றாரோ அப்படிப்பட்ட ஹனுமானை வணங்குகிறேன்!’’இச்சுலோகம் மந்திராலய மகான் ஸ்ரீராகவேந்திரர் அருளியது. இவ்வாறு டேக்கடி விநாயகரும் தேலங்கடி அனுமன் நாக்பூர் மக்களைக் காத்து வருகிறார்கள் என்ற நம்பிக்கை மக்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது.
ஆர். சந்திரிகா