தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உந்தன் திருவடி சரணம் கண்ணா!

* என்றைக்கு கிருஷ்ண ஜெயந்தி? எந்த நேரம்?

ஜெயந்தி என்ற சொல்லுக்கு அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாள் என்று பொருள். அந்த நாளில் விரதமிருந்து பகவானை வழிபட்டால் வெற்றியும் புண்ணியத்தையும் தருவான் என்று கூறுவர் அப்படிப்பட்ட ஒரு நாளில் பகவான் அவதரித்ததால் அந்த நாளை ஜெயந்தி நாள் (வெற்றி நாள்) என்று கொண்டாடுகிறோம். பொதுவாக கோயில்களில் நடக்கக்கூடிய விசேஷங்களுக்கு உற்சவம் என்றும், அதை வீட்டிலே நாம் கொண்டாடினால் விரதம் அல்லது பண்டிகை என்றும் அழைக்கின்றோம். கிருஷ்ண ஜெயந்தி விழா என்பது பண்டிகையா விரதமா என்று சொன்னால் கோலாகலமான விரதம், குதூகலமான பண்டிகை என்று சொல்லலாம். குழந்தை கண்ணனின் திருஉருவத்தை மனதில் வரித்து ஆடியும் பாடியும் அமர்க்களமாகக் கொண்டாடும் பண்டிகைதான் கிருஷ்ண ஜெயந்தி.

* எப்படிக் கொண்டாடுவது?

கிருஷ்ண ஜெயந்தி விழா உற்சாகமான விழா. கண்ணன் பிறந்த விழா. நம் வீட்டில் உள்ள ஒவ்வொரு சின்ன குழந்தையும் நமக்கு கண்ணன்தான். கண்ணன் பிறந்த உற்சவ நாளில் நம்முடைய கவலைகள் எல்லாம் பறந்து விடுகிறது அல்லவா! அதனால் தான் ஒரு திரைப்படத்தில்கூட ‘‘கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புதுக் கவிதைகள் பிறந்ததம்மா, மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான், மனக் கவலைகள் மறைந்ததம்மா’’ என்று ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டாடும் பாடலைப் பாடுவார்கள். கிருஷ்ண ஜெயந்தி உற்சவத்திலும் பலருடைய இல்லங்களில் தங்கள் வீட்டுச் சின்ன குழந்தைகளை கண்ணனாக அலங்கரித்து மகிழ்ச்சி அடைகின்றோம். இது வேறு எந்த திருவிழாவுக்கும் இல்லை. தீபாவளி பொங்கல் முதலிய திருவிழாக்களில் குழந்தைகளை நாம் அலங்கரித்துக் கொண்டாடுவதில்லை அதற்கென்று ஏற்பட்ட உற்சாக விழா தான் கிருஷ்ண ஜெயந்தி விழா. கிருஷ்ண ஜெயந்தி நாளில் குழந்தைகளும் மகிழ்கின்றன குழந்தைகளின் பெற்றோர்களும் பெரியவர்களும் மகிழ்கிறார்கள் என்பது சிறப்பு.

* என்ன நிவேதனங்கள் படைக்கலாம்?

மற்ற விரதங்கள் எப்படியோ கிருஷ்ண ஜெயந்தி விரதத்தில் மட்டும் விதவிதமான பலகாரங்களைச் செய்து படைக்கிறோம். அதில் பெரும் பாலான பலகாரங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற பலகாரங்கள். கண்ணன் குழந்தை தானே. கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவுதான் பூஜை செய்ய வேண்டும் எனவே காலையிலிருந்து சாயங்காலம் வரைக்கும் விரதம் இருப்பார்கள். ஒருமுறை பக்தியோடு கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருந்தால் ஒரு வருடத்தின் அத்தனை ஏகாதசி நாள்களிலும் விரதமிருந்த பலன் கிடைத்து விடும் என்பார்கள். கண்ணன் நமது இல்லத்தில் நுழைவது போல் கற்பனை செய்து கொண்டு அவனது சின்னஞ்சிறிய காலடிகளை வாசலில் இருந்து பூஜை அறைவரை வரைவது வழக்கம். அதுவும் நேராக வரைய மாட்டார்கள். குழந்தை எப்பொழுதாவது நேராக நடக்குமா? அது வளைந்து வளைந்து தான் நடக்கும் என்பதால் இந்தப் பாதங்களும் வளைந்து வளைந்து பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

* எப்போது பூஜை செய்வது?

பூஜையை பெரும்பாலும் சூரிய அஸ்தமனத்திற்கு அதாவது மாலை 6 மணிக்கு மேல் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். வீட்டில் கண்ணனுடைய படம் இருந்தால் அந்தப் படத்தை தூய்மையாக துடைத்து, பூக்களாலும் வஸ்திரத்தாலும் இன்னும் என்னென்னெல்லாம் அலங்கரிக்க முடியுமா அப்படி நமக்கு கற்பனைக்கு ஏற்றவாறு அலங்காரம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து துளசி மாலை போட்டு, ஒரு மனைப் பலகையில் கோலம் போட்டு அதற்கு மேல் எழுந்தருளச் செய்ய வேண்டும். குத்து விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். கண்ணனுக்கு பிடித்தமான வெண்ணெய், தயிர், பால், சீடை, நாகப்பழம், முறுக்கு என என்னென்ன பலகாரங்கள் செய்ய முடியுமோ, அந்தப் பலகாரங்களை எல்லாம் செய்து அவருக்கு நிவேதனமாகப் படைக்க வேண்டும்.

* என்ன ஸ்லோகங்கள்? பாசுரங்கள் பாடலாம்?

கிருஷ்ண ஜெயந்தி அன்று என்னென்ன ஸ்லோகங்களைப் படிப்பது (பாடுவது) என்றெல்லாம் சந்தேகங்கள் வரும் கண்ணனுக்குத் தான் ஏராளமான பாடல்கள் உண்டே, அதில் நமக்கு என்னென்ன பாடல்கள் தெரியுமோ, அந்த பாடல்களை எல்லாம் குதூகலமாகப் பாடலாம். இவை எல்லாவற்றையும் விட ஆழ்வார்கள் கண்ணனைப் பற்றி ஏராளமான பாசுரங்களைப் பாடி இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக பெரியாழ்வார் பிள்ளைத்தமிழ் என்று கண்ணனுக்கு பிரத்தியேகமாக பாடி வைத்திருக்கிறார் அந்தப் பாசுரங்களை எல்லாம் பாடலாம் கிருஷ்ண அஷ்டகம், பகவத்கீதை ஸ்லோகங்கள், விஷ்ணு சகஸ்ரநாமம் என்று ஏராளமான ஸ்லோகங்கள் உண்டு அவற்றில் எது நமக்கு எளிதாகவும் பழக்கமானதாகவும் இருக்கிறதோ அதைப் பாராயணம் செய்யலாம். கிருஷ்ண அஷ்டோத்திர சத நாமாவளியை கையில் வைத்துக்கொண்டு புஷ்பங்களால் துளசியாலும் அட்சதையாலும் அர்ச்சனை செய்யலாம்.

* பெரியாழ்வார் கொண்டாடிய கிருஷ்ண ஜெயந்தி

பொதுவாக நாம் பண்டிகைகளைக் கொண்டாடும் பொழுது அவற்றில் பக்தி பாவம் இழையோட வேண்டும் அதுதான் முக்கியம். ஸ்ரீ ஜெயந்தி கொண்டாடுகிறோம் என்று சொன்னால், நம் வீட்டில் கண்ணன் பிறந்ததாகவே நினைத்துக் கொள்ள வேண்டும். அப்படி நினைத்துக்கொண்டு பிறந்த நாளை எப்படி கொண் டாடுவோமோ அதை பாவித்து ரசனையோடு கொண்டாட வேண்டும். அந்த குதூகலம் இருக்க வேண்டும் இதற்கு பற்பல மகான்கள் வழிகாட்டி இருக்கிறார்கள் மத் பாகவதத்தில் கண்ணனின் அவதார தினம் எப்படிக் கொண்டாடப்பட்டது என்பது விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. தமிழில் பெரியாழ்வார் தன்னை யசோதையாக பாவித்துத் கொண்டு கண்ணனின் அவதார தினத்தை அற்புதமாகக் கொண்டாடுகிறார். அவர் வழியில் இந்த கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடுவோம்.

* கண்ணன் யார் தெரியுமா?

கண்ணன் தேவாதி தேவன் என்பதை முதலில் உணர்ந்தவள் யசோதைப் பிராட்டி அவள் எப்படி உணர்ந்தாள்? குழந்தையைக் குளிப்பாட்ட எடுத்துச் சென்று கால்களில் கிடத்தி, அவனுடைய திருக்கைகளையும் திருவடிகளையும் நிமிர்த்து, ஒரு பெரிய அண்டாவில் (கடாரம்) விளாவி வைத்த நறுமணம் மிக்க தீர்த்தத்தினால் நீராட்டினாள். அப்பொழுது நாக்கை மஞ்சள் கொண்டு வழித்து எடுத்தாள். கண்ணன் அவ்வளவு சீக்கிரம் வாயை திறப்பானா என்ன? ‘‘கண்ணா, வாயைத் திற’’ என்று மன்றாடி கேட்டவுடன் அவன் வாயை ‘‘ஆ’’ என்று திறந்தானாம். அப்பொழுது கையை விட்டு வாய்க்குள் இருக்கக்கூடிய கோழையை வெளியே எடுக்க முயன்ற யசோதை, அவன் திருவாயில் சகல உலகங்களும் காட்சி அளிப்பதைக் கண்டு வியந்து போனாள். அர்ஜுனனுக்கு திவ்யமான கண்களைத் தந்து தன்னுடைய விஸ்வரூபத்தை காட்டிய கண்ணன் அதற்கு முன்னால் தன்னுடைய தாயாகிய யசோதைக்கு தன்னுடைய விஸ்வரூபத்தைக் காட்டினான். அதைப் பார்த்தவுடன் தன்னுடைய தோழிகளை எல்லாம் அழைத்த யசோதை, ஏடி! எல்லோரும் வாருங்கள். என் கண்ணனைப் பாருங்கள், இவன் ஏதோ ஆயர் குலப்பிள்ளை என்று சாதாரணமாக நினைக்காதீர்கள். இவன் சாட்சாத் அந்த எம்பெருமான் தான்! ‘‘ஆயர் புத்திரன் அல்ல அரும் தெய்வம், மாயன் என்று மகிழ்ந்தனர்’’ என்பது பெரியாழ்வார் வாக்கு

* உத்தான விழா

கண்ணன் பிறந்து 12 நாட்கள் ஆகிவிட்டது குழந்தை பிறந்தால் 12 ஆம் நாள் அந்த குழந்தைக்குப் பெயர் சூட்டு விழா நடத்த வேண்டும் நாமகரண தினத்தில் எல்லா திசைகளிலும் தோரண கம்பங்களை அலங்கரித்து நாட்டி வைத்தார்களாம். எல்லோரும் மகிழ்ச்சியாககூடி அவனுக்கு நாமகரணம் செய்து கொண்டாடினார்களாம். அவர்கள் ஒவ்வொருவராக வந்து, இந்த உலகத்தை எல்லாம் தாங்கக்கூடிய கண்ணனை தங்கள் கைகளில் தாங்கி மகிழ்ந்தார்களாம். பெயர் சூட்டு விழாவில் உறவினர்களும் மற்றவர்களும் குழந்தையை சற்று நேரம் தூக்கி வைத்துக் கொள்வதை ‘‘உத்தானம் செய்தல்’’ என்பார்கள்.

* தொட்டிலில் கண்ணன் என்ன செய்தான்?

நாமகரணம் செய்த உடனே தொட்டில் கட்டி, தொட்டிலில் குழந்தையைக் கிடத்துவார்கள் இப்படியும் சில குடும்பங்களில் செய்வது உண்டு. நாமகரண நிகழ்ச்சியையும் தொட்டில் போடும் நிகழ்ச்சியையும் ஒன்றாக இணைத்து நடத்துவதையும் பார்க்கலாம். தொட்டிலில் போட்டவுடன் கண்ணன் என்ன செய்தான்? தன்னுடைய கை கால்களால் ஓங்கி ஓங்கி உதைத்தானாம். எங்கே தொட்டில் உடைபட்டு கீழே விழுந்து விடுவானோ என்று அஞ்சிய யசோதை கண்ணனை தூக்கி இடுப்பில் வைத்துக் கொள்ள முயல, தூக்க முடியவில்லையாம். சர்வ லோக ரட்சகனான எம்பெருமானை சாதாரண யசோதை எப்படித் தூக்க முடியும்? அவள் இடுப்பு முறிந்தது போல் ஆகிவிட்டதாம். சரி என்று மார்பில் அணைத்து கொண்டால் வயிற்றில் உதைக்கிறானாம்.

* கண்ணனின் பாதங்கள், விரல்கள்

பகவானை அனுபவிக்கும் போது திருவடி முதல் திருமுடி வரை அனுபவிப்பது என்று ஒரு வகை உண்டு இதனை பாதாதி கேச அனுபவம் என்பார்கள் அப்படித்தான் அனுபவிக்க வேண்டும் கோயிலில் அதனால் தான் கற்பூர ஆரத்தியையோ நெய் தீபமோ காட்டுகிற பொழுது திருவடி தரிசனம் தொடங்கி திருமுடிவரை சேவிக்கச் சொல்வார்கள். இதனை லாவண்ய சமுதாய சேவை என்பார்கள். அதாவது ஒவ்வொரு அங்கமாக ரசிப்பது, மொத்தமாக சேர்ந்து பகவானை ரசிப்பது என்று பொருள். இங்கே கண்ணனைப் பார்க்கும் பொழுது அவனுடைய கமலம் போன்ற பாதங்கள் முதலில் கண்ணில் படுகின்றது. அதிலும் கண்ணன் தன்னுடைய கால் விரல்களை எடுத்து வாயில் வைத்துக் கொள்ளும் அந்த அழகு தெரிகிறதாம். இந்தத் திருப்பாதங்களை ‘‘தேனே மலரும் திருப் பாதங்கள்’’ என்று ஆழ்வார் பாடுகின்றார்.

* திருவடியை ஏன் வாயில் வைத்தான்?

கிருஷ்ண அவதாரத்துக்கே காரணம் இந்த கால்கட்டை விரலின் சுவைதான் என்று அந்தாதித் கவிஞர் ஆர் வீ சுவாமி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். யாரோ பெரியவர்களிடம் ரஸோக்தியாகக் (சுவையாக)கேட்டதை அவர் எழுதியிருக்கிறார். அந்தக் கதை இது. ஒரு நாள் வைகுந்தத்தில் எம்பெருமான் பிராட்டியிடம், ‘‘அது என்ன நித்யர்கள், முக்தர்கள், ஆழ்வார்கள், ஆசார்யர்கள், தவசீலர்கள், அடியார்கள் என எல்லோரும் எனது திருவடியே அவர்களுக்கு உகப்பென்றும், அதன் சுவை அமுதத்தை விஞ்சியதென்றும், புகழ்ந்து, போற்றிப் பிதற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அப்படியென்ன எனது திருமேனியின் மற்ற அவயவங்களுக்கு இல்லாத பொல்லாச்சுவை எனதுதிருவடிகளுக்கு மட்டும் என்று தெரிய வில்லையே! எனவே அவற்றை நானும் சுவைத்துப் பார்த்து அவர்கள் சொல்வது எந்த அளவுக்கு உண்மை என அறிந்து கொள்ள வேண்டும்’’ என்று கூறினான்.

* இது என்ன விபரீத ஆசை?

பிராட்டிக்கு பகவானின் ஆசை விபரீதமாகத் தோன்றியது. உடனே அவள், ‘‘பிரபு! இது வைகுந்தம்! நில உலகல்ல! இங்குள்ள நித்யர்கள், முக்தர்கள் அறியாது நீங்கள் எந்தச் செயலையும் செய்ய இயலாது!’’ என்று தெரிந்தும் தேவரீரின் திருவடியைத் தேவரீரே சுவைத்துப் பார்க்கும் இந்த விபரீத ஆசை தேவரீருக்கு ஏன் வந்தது? இத்துடன் அந்த ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வேறு வேலையைப் பாருங்கள்! என்றாள். ஆனால் எம்பெருமானால் அப்படி இருக்க இயலவில்லை. ‘‘என்னசெய்யலாம்’’ என யோசித்தான். சிந்தையில் உந்திவந்த ஒரு யோசனையால் குதூகலித்தான்!

* நொடியில் எடுத்தான் கிருஷ்ண அவதாரம்

அப்போது திருவாராதனம் நடந்துகொண்டு இருந்தது. தூபக் கைங்கர்யம் வெகு விமர்சையாக நடந்துகொண்டிருக்க, வைகுந்தமெங்கும் நறு மணத்தோடு கூடிய தூபப்புகை மண்டலம் உருவாகியது. திருமாமணி மண்டபத்தில் ஒருவரை ஒருவர் பார்க்க இயலவில்லை! பார்த்தான் பரந்தாமன்! ‘‘ஆகா! இது என்ன அற்புதமான வாய்ப்பு!’’ என்று அந்தத் தூபப்புகை குறைவதற்கு முன்னர் திருவடமதுரையிலே வசுதேவர்-தேவகி தம்பதியர்களுக்கு திருமகனாய் அவதரித்து, திருவாய்ப்பாடியிலே நந்த கோபர்-யசோதை திருமகனாய் வளர்ந்து பால லீலைகள் பல புரிந்து, அவனது அளவற்ற ஆசையான தனது திருவடியைத் தானே சுவைத்துப் பார்க்கும் போராசையை நிறைவேற்றி மகிழ்ந்தான்! ஆம்! தனது திருவடியின் பெருவிரலைத் தனது திருப்பவள வாய்க்குள் வைத்து ஆசைதீரச் சுவைத்து மகிழ்ந்து, ‘‘எனதடியார்கள் வார்த்தை சத்தியம்! சத்தியம்!’’ என உகந்தான்.

* கிருஷ்ணாவதாரத்தின் மற்றொரு சிறப்பு

ஒரே நேரத்தில் திருவடியும், பவள வாயும் இந்த அவதாரத்தில் மட்டுமே காணலாம். தனது திருவடியில் உள்ள தேனைப் பருகுவதற்காகவும் தனது திருவயிற்றில் பிரளய காலத்தில் லயப்பட்ட உலகங்களை எல்லாம் உஜ்ஜீவனம் அடையச் செய்ய வேண்டும் என்பதற்காகவும் தன் திருவடிகளில் ஒன்றை எடுத்து வாயில் வைக்கும் அழகை காட்டுகின்ற போது பாத தரிசனத்தைத் தான் காட்டுவார்கள். ஆனால் இங்கே கண்ணன் குழந்தையாக இருப்பதால் தன் திருவடி விரலை எடுத்து திருவாயில் வைத்திருப்பதால் தாமரை போன்ற திருவடியும் தெரிகிறது அந்த திருவடியைக் சுவைக்கின்ற பவள வாயும் தெரிகின்றது.

இதோ அந்தப்பாசுரம்

சீதக் கடல்உள்ளமுதன்ன தேவகி

கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த

பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்

பாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர்வந்து காணீரே.

* தவழும் கண்ணன்

உலகம் உண்ட கண்ணனுக்கு பாலும் தயிரும் போதுமா? போதாது. அவன் யசோதை வீட்டில் வைத்திருந்த அத்தனை பாலையும் தயிரையும் பருகி விட்டு அங்கும் இங்கும் விளையாடுகிறான். தனக்கு வைக்காமல் சாப்பிடுகிறானே என்பதல்ல யசோதையின் பிரச்னை. இத்தனை சாப்பிட்டால் வயிற்றுக்கு என்ன ஆகும்? என்ற அச்சம் தான் பிரச்னை. அவனை பிடித்து அடிக்க வேண்டும் என்று பழைய தாம்பு கயிற்றை எடுத்துக் கொண்டு ஓட, கண்ணனும் தப்பித்து முழங்காலால் தவழ்ந்து ஓடுகின்றான். ‘‘பழந்தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான் முழந்தாள் இருந்தவா காணீரே’’ என்று இந்த அழகைக் காட்டுகின்றார் பெரியாழ்வார். குழந்தை தவழ்ந்து செல்லுகின்ற அழகுக் கண்ணனை நினைக்க வேண்டும் என்று பெரும்பாலான பஜனை மடங்களில் அந்தப் படத்தை வைத்திருக்கிறார்கள்.

* தொடை

கிருஷ்ணனைப் பெற்றவள் தேவகி. கம்சனின் தங்கை. தன்னைக் கொல்வதற்காக, தேவகி வயிற்றில் கண்ணன் பிறந்திருக்கிறான் என்பதை நாரதர் சொல்லக் கேட்டு, அக்குழந்தையை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்துக் கொன்று விட வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளைச் செய்கின்றான். அதில் ஒரு முயற்சி தான் பூதனை என்னும் ராட்சசியை அனுப்பியது அவள் அழகான தாய்மை உணர்வுடைய பெண்ணைப்போல வேடம் கொண்டு ஆயர்பாடிக்கு வந்து, தூங்கிக் கொண்டிருந்த குழந்தையாகிய கண்ணனை எடுத்து, விஷம் தோய்ந்த பாலைக் கொடுக்க முயல்கிறாள். கண்ணனோ விளையாட்டாக பாலோடு அவள் உயிரையும் உறிஞ்சி விடுகின்றான். ஓடி வந்து யசோதை பார்க்கும் பொழுது மலை போல பூதனை கிடக்கிறாள். ஒன்றுமே தெரியாதவன் போல்படுத்திருக்கும் கண்ணனின் அழகிய தொடைகளைப் பார்க்கிறாள் யசோதை. இந்தத் தொடையின் மீது அமர வைத்துத் தானே அழிக்க முடியாத இரணியனை ஒரு காலத்தில் நரசிம்ம அவதாரம் எடுத்து அழித்தான் என்கின்ற செய்தியையும் இணைத்து இந்த இடத்தில் பெரியாழ்வார் பாடுகின்றார்.

* இடுப்பும் உந்தியும்

தொடை இத்தனை அழகு என்று சொன்னால், அந்த தொடைக்கு மேல் உள்ள இடுப்பு (மருங்குல்)அடடா. அங்கேதானே அந்த மேகலை என்னும் ஆபரணம், பீதாம்பரமாகிய வஸ்திரம், அரை நாண், முத்துவடம், இவற்றையெல்லாம் பார்க்கின்ற பொழுது, வேறு எந்த ஒரு அங்கத்தையும் பார்க்கத் தோன்றவில்லையே! எத்தனை அழகான இடுப்பு! அழகான நெற்றியையுடைய ஆயர்பாடி பெண்களே, என்னுடைய கண்ணனின் இந்த இடுப்பை வந்து பாருங்கள். பிற்காலத்தில் இவன்தான் கம்சன் அனுப்பிய குவலயா பீடம் என்கின்ற யானையை பாகனோடு தொலைத்து கட்டப் போகின்றான் அதன் பிறகு இந்த யானையையும் மல்லர்களையும் அனுப்பிய கம்சனையும் அழிப்பதற்காக அவனை நோக்கி செல்லப் போகின்றான்.

* ஏன் கட்டினாள்? எப்படிக் கட்டினாள்?

கண்ணன் குறும்புகள் செய்கின்றானே என்று ஆயர்பாடியில் உள்ள பெண்கள் எல்லாம் யசோதையிடம் புகார் சொல்ல, ஒரு பழம் தாம்புக் கயிற்றை எடுத்து உரலோடு இடுப்பில் கட்டி, ‘‘இனி எங்கேயும் போகக்கூடாது, இங்கேயே இரு’’ என்று சொன்னாள் யசோதை. பகவான் அவள் வாக்குக்கு கட்டுப்பட்டான். தன்னை கட்டுவித்துக் கொண்டான். அதன் அடையாளமாக கயிறு கட்டிய அடையாளத்தையும். தாமோதரன் என்கிற பெயரையும் தனக்கு உரியதாக மாற்றிக் கொண்டான். நாகை மாவட்டத்தில் திருக்கண்ணங்குடி என்கிற திவ்ய தேச பெருமாளுக்கு தாமோதரன் என்று பெயர். இன்றைக்கும் ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யும் பொழுது இடுப்பு துணியை தளர்த்த மாட்டார்களாம். காரணம், எப்பொழுதோ யசோதை கட்டிய அந்த அடையாளத்தை (தழும்பு) எல்லோரும் பார்த்து விடுவார்களாம் எத்தனை ரசனை? எத்தனை கிருஷ்ண பக்தி பாருங்கள்?

* திருமார்பு

அடுத்து அவனுடைய உந்தி இந்த உந்தியில் தான் எல்லா உலகங்களையும் படைத்த நான்முகனைப் படைத்தான். அதனால் பற்பநாபன் என்ற பெயரையும் பெற்றான். இப்பொழுதும் பள்ளிகொண்ட பெருமாளைப் பார்த்தால் அவருடைய உந்தியிலிருந்து ஒரு தாமரையும், தாமரை மேல் நான்முகனையும் பார்க்கலாம். அடுத்து நம் கண்கள் அந்த அழகான மார்பகத்தை நோக்கிச் செல்லுகின்றன. அகன்ற மார்பு. அதில் எப்பொழுதும் அகலகில்லேன் என்று நித்யவாஸம் செய்யும் பிராட்டி. அந்த மார்பில் எப்பொழுதும் இருக்கக்கூடிய மணி பூண் என்று சொல்லக் கூடிய கௌஸ்துப மாலை.  வத்சன் என்று பெருமாளுக்கு பெயர். இதைப் பார்க்க ஆயிரம் கண்கள் அல்லவா வேண்டும்! அந்த மார்பினை பார்த்தால் பிராட்டியின் அருளுமல்லவா சேர்ந்து கிடைத்துவிடும்!

* அசுரரை அழித்த திருத்தோள்கள்

மார்பைப் பார்த்துவிட்டு கண்கள் சற்று மேலே தூக்கினால் அவனுடைய அகன்ற தோளைப் பார்க்கலாம். பெரியாழ்வார் இந்தத் தோளின் அழகை திருப்பல்லாண்டு பாசுரத்தில் ‘‘மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா” என்று வாழ்த்துகின்றார். எத்தனை எத்தனை அசுரர்களை அழித்த வீரத் தோள்கள்? கம்பன் கூட இந்தத் தோள் அழகை, ‘‘தோள் கண்டார் தோளே கண்டார்’’ என்றல்லவா பாடுகிறார். எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று பெருமானின் தோள் அழகுக்கு மங்களா சாசனம்(போற்றி) செய்ய வேண்டும்

* உலகங்களை விழுங்கிய கழுத்து

அடுத்து கண்டம் என்னும் கழுத்தின் அழகு. இந்த திருக்கழுத்தின் அழகு சாதாரணமானதா என்ன? உலகம் லயப்படுகின்ற பிரளய காலத்திலே அத்தனை பொருட்களையும் வாரி விழுங்கிய கழுத்தல்லவா. இந்த கழுத்தின் அழகை குறித்து திருப்பாணாழ்வாரும் ‘‘அண்ட ரண்டபகி ரண்டத்தொரு மாநிலம் எழுமால்வரை முற்றும்உண்ட கண்டங் கண்டீர் அடியேனை உய்யக்கொண்டதே!’’ என்று பாடுகின்றார் கிருஷ்ண ஜெயந்தி யன்று இந்த பாசுரங்களைப் பாடி கண்ணனின் அழகை அனுபவிக்க வேண்டும். அந்த அனுபவம் பண்டிகையில் படைக்கப்படும் சீடை, முறுக்கு வெண்ணெய் சுண்டல் நம் வயிற்றை நிரப்புவது போல் நம் மனதை நிரப்பும்.

Related News