தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூழ்காது காட்சியளிக்கும் மொதலகட்டி அனுமன்

இது வரையில்... ``சென்னை பார்த்தசாரதி கோயினுள் இருக்கும் அனுமன்’’, ``திருவல்லிக்கேணி மேயர் சிட்டிபாபு தெருவில் இருக்கும் அனுமன்’’, ``மாங்குளம், கிண்டியில் இருக்கும் அனுமன்’’, ``போரூர் அனுமன்’’, ``ஆந்திராவில் உள்ள கடப்பா அனுமன்’’, ``பெங்களூரில் உள்ள காலி அனுமன்’’, ``அதோனி அனுமன் - ஆந்திரா’’, ``வரதாஞ்சநேயர் - பெங்களூர்’’, ``மின்டோ ஆஞ்சநேயர் - பெங்களூர்’’, பத்தாவது அனுமனாக ``கோட்டே அனுமன் - பெங்களூர்’’, ``பீச்சுபள்ளி அனுமன் - ஆந்திரா’’, ``ஹோலே அனுமன் - மைசூர்’’, ``ஜீவாஞ்சநேயர் - பெல்லாரி’’, ``கஜகிரி அனுமன் - புதுப்பாக்கம் சென்னை’’, பதினைந்தாவது அனுமனாக ரங்கத்தில் உள்ள ``திருவரங்கத்தின் எல்லை அனுமன்’’, ``வியாசராஜ மடம் அனுமன் - ரங்கம்’’, ``பெத்த சிந்தரேவுல ஆஞ்சநேயர் - தெலுங்கானா’’, ``சஞ்சீவிராயர் - காக்களூர், திருவள்ளூர் மாவட்டம்’’, ``வீர மங்கள ஆஞ்சநேயர் - நல்லாட்டூர், திருத்தணி மாவட்டம்’’, ``கால அனுமன் - ஹைதராபாத்’’, ``பயலு ஆஞ்சநேயர் - தும்கூர்’’, ``யெல்குரீஷா அனுமன் - ஹூப்ளி’’, ``பால ஆஞ்சநேயர் - முசிறி’’, ``குரு நரசிம்மர் கோயில் அனுமன் - உடுப்பி’’ ஆகிய, மத்வ மகான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த 24 அனுமனை தரிசித்துள்ளோம் என்பதனை இந்த இதழின் மூலமாக மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

Advertisement

தற்போது காண இருக்கும் அனுமன், 25வது அனுமன். 25 என்று எழுதியவுடன், என் உடல் முழுவதும் பூரித்துப் போகிறது. மனமானது நிறைந்து காணப்படுகிறது. ஒவ்வொரு அனுமன் கோயிலுக்குச் செல்லும் போதும், ஒவ்வொரு புதிய அனுபவம் கிடைத்திருக்கிறது. அதுவும், திருத்தணியில் உள்ள நல்லாட்டூர் என்னும் இடத்தில் ``வீர மங்கள ஆஞ்சநேயர்’’, முசிறியில் உள்ள ``பால ஆஞ்சநேயர்’’, ஹூப்ளியில் உள்ள ``யெல்குரீஷா அனுமன்’’ ஆகிய அனுமன்கள் எனது மனதிற்கு மிகவும் பிடித்தவை.

வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன்களை தேடித் தேடி அந்தந்த கோயில்களுக்கு சென்று அனுமனை பற்றி எழுதும்போது அதில் ஒரு அலாதி ஆனந்தம் ஏற்படுகிறது. படிக்கும் உங்களுக்கும் அது ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைக்கின்றேன். எழுதும் எனக்கும், படிக்கும் உங்களுக்கும் பேரானந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்த வாயுபுத்திரன், அஞ்சனை மைந்தன், முக்ய பிராணன் அந்த அனுமனுக்கும், மகான் வியாசராஜ தீர்த்தருக்கும் நெடுஞ்சாண்கிடையாக நமஸ்கரித்து வணங்கி நாம் அடுத்த அனுமனைத் தரிசிக்க செல்வோம்!

முதலில் கண்ட இடம்

தற்போது நாம் காணவிருக்கும் அனுமனின் பெயர் ``மொதலகட்டி ஆஞ்சநேயர்’’. இவர் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹூவினா ஹடகலி என்னும் இடத்தில் கோயில் கொண்டிருக்கிறார். அதுவும் கர்நாடக மாநிலத்தின் பிரபலமான துங்கபத்ரா நதியின் அருகிலேயே கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். இதே இந்த திருத்தலத்தில்தான், ராமாயண காலத்தில் ராமர், அனுமனை முதன் முதலில் கண்ட இடமாம். இங்குள்ள அனுமன் மிக பெரிய மீசையை வைத்துள்ளார். அந்த மீசை அழகாக கன்னப் பகுதியில் சுருட்டிக் கொண்டு காட்சியளிக்கிறது. முதன் முதலில் அனுமனை ராமபிரான் கண்டதால் இந்த இடத்திற்கு, உத்திர கன்னட மொழியான முதலபேட்டி (முதல் சந்திப்பு) என்கின்ற பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் அதுவே மருவி, முதலபெட்டி என்றும் பின்னர், மொதலகட்டி என்றும் ஆனது.

நதியில் விசர்ஜனம் ஆன அனுமன்

ராமரும் - அனுமரும் முதல் முதலில் சந்தித்த இடமானதால், அதனை நினைவுகூரும் விதத்தில், பல வருடங்களுக்கு முன்னர், பாண்டவரின் வம்சத்தில் வந்த ஒரு மகாராஜா, மொதலகட்டி ஆஞ்சநேயஸ்வாமியை பிரதிஷ்டை செய்தார். ஆண்டுகள் கடந்த நிலையில், ஒரு நாள் துங்கபத்ரா நதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதில், மொதலகட்டி ஆஞ்சநேயர் விசர்ஜனம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு, சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர், குறிப்பிட்ட இடத்தை சுட்டிக் காட்டி, ``நான் இந்த துங்கபத்ரா நதிதீரத்தின் அடியில் இருக்கிறேன். என்னை மீட்டெடுத்து மீண்டும் என்னை பிரதிஷ்டை செய்’’ என்று மகான் வியாசராஜரின் கனவில் மொதலகட்டி ஆஞ்சநேயர் தெரிவித்துள்ளார். அதன்படி, வியாசராஜர் மொதலகட்டி ஆஞ்சநேயரை மீட்டெடுத்து மீண்டும் பிரதிஷ்டை செய்திருக்கிறார்.

அதன் பிறகு விசர்ஜனம் ஆகவில்லை

மொதலகட்டி ஆஞ்சநேயர் சுவாமி, சுமார் 6 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட அனுமன். இங்கு வரும் பக்தர்களுக்கு அபயஹஸ்தத்தை அளித்து, கேட்கும் வரத்தை தந்தருள்கிறார், அனுமன். சனிக் கிழமைகளில், பெல்லாரி பகுதிகளில் இருந்து சாரைசாரையாக பக்தர்கள் வந்து செல்வதால், இக்கோயில் அன்று மட்டும் மக்களின் வெள்ளத்தால் சூழ்ந்து காணப்படும்.

இந்த அனுமன் கோயிலின் இன்னொரு விசேஷம் என்னவென்றால், ஆண்டிற்கு மூன்று முதல் நான்கு முறை துங்கபத்ரா நதியில் வெள்ளம் ஏற்படுவது வாடிக்கை. அந்த சமயத்தில், மொதலகட்டி ஆஞ்சநேயர் ஸ்வாமியின் முன்புவரை தண்ணீரானது வந்து செல்கின்றது. அனுமன் கோயில் கொண்டுள்ள சுற்று வட்டாரப் பகுதி முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளித்தாலும், இக்கோயில் மட்டும் மூழ்காது காட்சியளிக்கும். அத்தகைய சாந்நித்யம் இந்த மொதலகட்டி ஆஞ்சநேயருக்கு உண்டு. சமீபத்தில்கூட துங்கபத்ரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், மொதலகட்டி ஆஞ்சநேயர் கோயிலானது மூழ்கவில்லை. அப்போது பக்தர்கள் அனுமனை தரிசித்துவிட்டு சென்றார்கள். இதனை அந்த மாநில செய்தி சேனல் ஒன்று வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளது.

விழாக்கள்

ஆண்டு தோறும் வருகின்ற `` ராம நவமி’’, ``அனுமன் ஜெயந்தி’’ ஆகிய விழாக்கள் இக்கோயிலில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

*கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை: 7.00 முதல் 11.30 வரை, மாலை: 4.00 முதல் 7.30 வரை.

எப்படி போவது: பெல்லாரியில் இருந்து 140 கி,மீ., பயணித்தால் இக்கோயிலை அடைந்துவிடலாம். அதே போல், ஹம்பியில் இருந்து 91 கி,மீ., பயணித்தாலும் இக்கோயிலை அடைந்துவிடலாம்.

துங்கபத்ரா நதிக்கரை ஓரத்தில் கோயில்

Advertisement