புதனும் புத்தியும்
ஜோதிடத்தைக் குறித்து அதிகமான உயர்வு எண்ணங்களும் வேண்டாம். ஜோதிடத்தில் ஒன்றுமே இல்லை என்று ஒரேயடியாக தள்ளவும் வேண்டாம். ஜோதிடம் என்பது ஒரு வழிகாட்டி, குழப்பமான நேரத்தில் நாம் தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்புகளுக்கு வழி காட்டுவது என்ற அளவில் மட்டும் அதனை எடுத்துக் கொண்டால் பிரச்னைகள் வராது.
ஜோதிடம் பலிக்காமல் இருப்பதற்குச் சில காரணங்கள் இருப்பது போலவே, அது 100% பலிப்பதற்கும் சில காரணங்கள் உண்டு. எது எப்படி இருந்தாலும், அது வெறும் கணக்கு வழக்குகள் மட்டுமல்ல. அந்தக் கணக்கு வழக்குகள் நம்முடைய உள் மனதில் என்ன விடையைத் தருகிறது என்பது முக்கியம். அந்த விடை எல்லா ஜோதிடர்களுக்கும் ஒரே மாதிரியாகத் தருவதில்லை.
எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாகத் தருவதில்லை. எனவேதான் புகழ்பெற்ற ஜோதிடர்களாலும்கூட சில நேரங்களில் மிகத் துல்லியமான முடிவு களைத் தர முடிவதில்லை.
இது ஜோதிடத்தின் குறைபாடு அல்ல. ஒரு பிரமாண்டமான பிரபஞ்ச ரகசியத்தை அதிகபட்சம் 90 அல்லது 100 ஆண்டுகள் வாழக்கூடிய மனிதன், எத்தனைதான் அறிவாளியாகவும் அனுபவம் மிக்கவனாக இருந்தாலும், புரிந்து கொள்வது கடினம். ஜோதிடசாஸ்திரம் விரிவானது. எல்லையற்றது.
ஜோதிடரின் அறிவு தலைகீழாக நின்றாலும் ஒரு அளவுக்குள் இருப்பது. ஒரு மூளைக்குள் கோடிக்கணக்கான நியூரான்கள் இருக்கின்றன என்பார்கள். இதில் எது எப்படி வேலை செய்கிறது என்பதை அனுமானிப்பது கடினம். 12 ராசிகள், 9 கிரகங்கள், 27 நட்சத்திரங்கள் என்று ஜோதிடத்தை எளிமையாகத் சொல்லிவிட்டாலும், இவைகளின் சிலந்தி வலைத் தொடர்பினையும், அந்தத் தொடர்பின் பலன்களையும் ஓரளவுக்குத்தான் ஊகிக்க முடியும். நூற்றுக்கு, 80% ஜாதகங்களை இந்த மேலோட்டமான கிரக அமைப்புகளை வைத்துக்கொண்டே சொல்லலாம் என்பது எளிமை. இன்னும் சொல்லப் போனால், ராசிக் கட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டே தீர்மானித்துவிட முடியும் என்பது இதில் உள்ள இன்னும் எளிமையான அமைப்பு.
சில வருடங்களுக்கு முன், ஒரு எளிய கிராம ஜோதிடரைச் சந்தித்தேன். அவர் வெறும் ராசிக் கட்டத்தைப் பார்த்து ஒரு வாடிக்கையாளருக்கு, உங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்று சொல்லி விட்டார். நான் ஆர்வத்தோடு அவரிடம் கேட்டேன், எப்படிச் சொன்னீர்கள் என்று, அவர் ஜாதகத்தைக் காட்டினார். மிதுன லக்னம். இரண்டாம் இடத்தில் குரு உச்சம். ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் 11-ஆம் இடத்திலே (மேஷம்) செவ்வாயோடு சேர்ந்து ஐந்தாம் இடத்தைப் பார்க்கிறார். அவர் சொன்னார்;
‘‘குழந்தைகாரகனான குரு இரண்டாம் இடத்தில் உச்சம் பெற்றிருப்பதால், குடும்பத்தில் ஒரு புதிய வரவு உண்டு. குரு வலிமையாக இருக்கிறார். எனவே இவருக்கு நிச்சயம் குழந்தை உண்டு. ஐந்தாம் இடத்து அதிபதி சுக்கிரன். லாபஸ்தானத்தில் இருக்கிறார். அவர் பெண். கிரகம் என்பதால் முதல் குழந்தை பெண் குழந்தை’’ என்றார். ஆனால், இந்த விதி எல்லா ஜாதகங்களுக்கும் பொருந்து
கிறதா என்றால் பொருந்தாது. இதை நுட்பமாக ஆராய்வதற்குத்தான், பல்வேறு விதிகளை வெவ்வேறு ஜோதிடர்கள் தங்கள் அனுபவத்திலே சொல்லுகின்றார்கள். அந்தந்த விதிகள் அவர்கள் போடும் ஜாதகத்துக்குப் பொருந்துகிறது. ஆனால் 100% பொருந்துகிறதா என்பது கேள்வி. எனவே, எத்தனை முறை (methods) வந்தாலும், எப்படிப் பார்த்தாலும், அதில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். இந்த அடிப்படைச் செய்திகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு, புதனைக் குறித்து பார்ப்போம்.
புத்திக்கு உரியவன் புதன். புதனுக்குரிய வீடுகள் மிதுனமும் கன்னியும். இளமையான துடிப்புக்கும், காதல் சிந்தனைக்கும், கல்வியின் வலிமைக்கும், நுட்பமான யோசனைகளுக்கு, துடிப்பான செயல்களுக்கும், தகவல் தொடர்புகளுக்கும், நரம்புகளுக்கும், புதன் காரகனாகிறார். ஜோதிடத்தில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறன், பகுத்தறிவு, வணிகம், கணினி, எழுத்து, துணிச்சல், மற்றும் இளைய சகோதரர், தாய்வழி மாமா போன்ற உறவுகளைக் குறிக்கிறது. மேலும், கை, கழுத்து, தோல் மற்றும் நரம்பு மண்டலத்தின் உடல் பாகங்களையும், பச்சை நிறம், நரி, குதிரை போன்ற வாகனங்கள் மற்றும் பலவிதமான தொழில்களையும் புதன் பகவான் காரகத்துவம் வகிக்கிறார். இலக்கியம், ஜோதிடம், கணிதம், கணினி மற்றும் விஞ்ஞானம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், புதன் காரகத்துவம் பெற்றவர்கள் ஆவர்.
சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் புதனால் குறிக்கப்படுகிறார்கள். வணிகம், வர்த்தகம், பத்திரிகைத் துறை, இன்சூரன்ஸ், கணக்காளர், ஆசிரியர், எழுத்தாளர், நிருபர் போன்ற தொழில்களை புதன் காரகத்துவம் வகிக்கிறார். வாதம், தும்மல் போன்ற நோய்களைக் குறிப்பதிலும் புதன் பங்கு வகிக்கிறார். பச்சை நிறம் குறிக்கும் கிரகம், புதன்.
புதன், ராசி சக்கரத்தில் நகர்ந்து செல்லும்போது சூரியனுக்கு முன்னும் பின்னும் 28 பாகைகளுக்கு மேல் விலகிச் செல்லாது. இதனால் இந்த கிரகத்திற்கு அடிக்கடி வக்கிர கதி மற்றும் அஸ்தங்க கதி ஏற்படுகிறது. புதன் எப்பொழுதும் சூரியனை ஒட்டியே சஞ்சரிப்பதால், இதை துணை தேடும் கிரகம் என்கிறார்கள். மனிதர்களில் இரண்டு பேர் சேர்ந்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் நண்பர்களாக இருப்பார்கள் அல்லது காதலர்களாக இருப்பார்கள். எனவே புதனை நட்புக் கிரகம், காதல் கிரகம் என அழைக்கிறார்கள். கல்வி என்பது வெளிச்சம்.
சூரியனுக்கு மிக அருகாமையில் இருந்து சூரிய வெளிச்சத்தை அதிகளவில் நேரடியாக பெறும் கிரகம் புதனாகும். எனவே புதனை கல்விக்காரகன் என்கிறார்கள். அது மட்டுமல்ல. சூரியனோடு பெரும்பாலும் இணைந்தே பயணிப்பதாலும், வித்தைகளின் அடிப்படைக் கிரகமான சூரியனைச் சார்ந்து இருப்பதாலும் இவருக்கு வித்யாகாரகன் என்ற பெயர்.
சூரியனும் புதனும் இணைந்து தரும் யோகத்தை, ``புத ஆதித்ய யோகம்’’ என்று சொல்லி வைத்தார்கள். நாம் பெரும் பாலும் புதனை மட்டும் வித்யாகாரகன் என்று பார்க்கிறோம்.
ஒரு ஜாதகத்தில் சூரியன் பலமாக இருந்துவிட்டாலும், அற்புதமான வித்தை வந்துவிடும். மிகப் பெரிய படிப்பைப் படித்திருப்பார்கள்.சூரிய ஒளியை முதலில் பெறும் கிரகம் புதனாகும். மனித உடம்பில் சூரிய ஒளி தோல் மீது நேரடியாகப் படுகிறது. எனவே புதன் தோலுக்கு அதிபதியாகும். பள்ளிக்கூடம், கல்லூரி, விளையாட்டு மைதானம், திருமண மண்டபம், பூங்கா, நூலகம் போன்ற அறிவு தேடும் மனிதர்கள் கூடும் இடங்கள் அனைத்தும் புதனின் ஆதிக்கத்தில் வரும். தகவல் தொடர்பு சார்ந்த பொருட்கள் அனைத்தும் புதனின் ஆதிக்கம்.
புத்தகம், பத்திரிகை, பிற ஊடகங்கள், எழுது பொருட்கள், கணினி, இணையம், தபால், தந்தி, தொலைபேசி, அலைபேசி, தொலைக்காட்சி, வானொலி போன்றவை புதனின் ஆதிக்கத்தில் இருப்பவையாகும். சரி, இப்படிப்பட்ட புதன் கெட்டுவிட்டால் படிப்பு வராதா? புதன் நன்றாக இருந்துவிட்டால், படிப்பு அபாரமாக வந்து விடுமா? விளக்கத்தைப் பார்ப்போம்.