மனக் குழப்பத்திற்கு மாமருந்து!!
என்றென்றும் அன்புடன் 7
மனசு சரி இல்லை. மனசு ஒரே குழப்பமா இருக்கு. அவங்க என்ன பேசினது என் மனசை ரொம்ப பாதிக்குது.எதிலிருந்து தப்பிக்க முடிந்தாலும் அவரவர் மனதில் இருந்து தப்பவே முடியாது. எங்கு சென்றாலும் கூடவே வரும் ஒரு வஸ்து நம் மனம்.உடம்பு உபாதைகளைவிட நாம் அனைவரும் அவதிப்படுவது மனதினால்தான். வேதாந்தமாக பார்த்தோமானால் இந்த மனசே நம் துக்கத்கிற்கு காரணம். மனதில் இருந்து வரும் எண்ணங்கள் (thoughts) நம்மை சத்தியத்தை நோக்கி நகர விடாமல் இந்த உலக வாழ்க்கையில் செலுத்துகிறது.
ஞானிகள் பலரும் மனதை பற்றியும், இந்த மனதும், உடம்பும் நீ இல்லை, உன்னுள் பெரும் சக்தி குடி உள்ளது என்பதை பல விதமாக போதித்து இருக்கின்றனர். அந்த உயர்ந்த நிலைக்குச் செல்வதற்கு பெரும் அருளும் குருவின் வழி காட்டுதலும் வேண்டும். அன்றாட வாழ்வில் நம் மனது நம்மை ஆட்டி வைக்கும். நாம் எல்லோரும் அதன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறோம்.
ஒருநாள் முழுவதும் நாம் நினைத்ததெல்லாம், நல்ல படியாக நடந்தாலும்... ஒரு சொல், ஒரு பார்வை, ஒரு சம்பவம்... நாம் நினைக்காத படி நடந்து விட்டால், பாலில் ஒரு துளி விஷம் கலந்தது போல் மனம் கலங்கி விடும். பெரும்பாலானவர்க்கு அவஸ்தை இருக்கும். சிலருக்கு அதே மனம் உள்ளுக்குள் புழுங்காமல் எதிர்மறையான எண்ணங்களை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும்.
NLP (Neuro linguistic Programming) ஒரு விஷயம் சொல்வார்கள், Anchoring என்கிற ஒரு கான்செப்ட்.
அதாவது நம் மனம் ஒரு யானையை போன்றது ,அதை ஒரு சிறு கயிறை வைத்து கட்டி போடுவது போல் ,நம் மனதை ஒரு விஷயத்தில் கட்டி வைத்து கொண்டால் நம் மனதை பெரும் துக்கத்தில் அல்லது அலைக்கழிப்பில் இருந்து காப்பாற்ற முடியும். அதிலும் எதனுடன் மனதை கட்டி வைக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
தன் முன்னே கைநீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி.இந்தக் கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணீர் துடைத்தவை. இந்தக் கைகள் தானே எனக்கு வாள்வீசக் கற்றுத் தந்தவை. இந்த விரல்களை என் கைகளாலேயே வெட்ட வேண்டிய நிலை வந்ததே, துக்கப்பட்டான்.குறுவாளால் ஒவ்வொரு விரலாய் வெட்டினான், சகுனி. அவன் தந்தையோ வலி தாளாமல் உதடு கடித்து கடித்து சத்தம் வராமல் வாய் மூடி கண்கள் தெறிக்க அமர்ந்து இருந்தார். கண் திறந்தான் சுபலன். எதிரே கண்ணீரோடு அமர்ந்திருக்கும் மகனைப் பார்த்தான்.
‘‘மகனே சகுனி. எவ்வளவு அழகான குடும்பம் நமது. காந்தாரி என்ற அழகு மகள். வீரத்திற்கு இலக்கணமாக மூன்று புதல்வர்கள். அதில் இளையவனாய் நீ. இன்றோ அனைவரையும் இழந்து அநாதைகளாய் நிற்கிறோம். இதோ. இன்னும் சிறிது நேரத்தில் நானும் இறந்து விடுவேன். நீ இருக்க வேண்டும். நம் குலத்தையே அழித்த பீஷ்மரின் குலத்தை ஒட்டுமொத்தமாய் வேரறுக்க நீ இருக்க வேண்டும் என்பதாலேயே... எங்கள் அனைவருக்கும் இந்த சிறையில் அளிக்கப்பட்ட ஒரு பிடி உணவை உனக்கே தந்து ஒவ்வொருவராய் இறந்து கொண்டிருக்கிறோம்”.
‘‘எங்கள் ஒவ்வொருவர் இறப்பையும் நேரில் கண்ட உன் கண்கள் நாளை பீஷ்மரின் குலத்தில் ஒவ்வொருவரின் இறப்பையும் கண்டு மகிழ வேண்டும். அதற்கும் காரணமாக நீயே இருக்க வேண்டும்”. என்றான்.‘‘அவ்வளவு பலம் என்னிடம் இல்லையே தந்தையே.? கேட்டான் சகுனி.‘‘மகனே. உன் பலம் உடல் வலிமை சார்ந்ததல்ல. மன வலிமை சார்ந்தது. அதை உன் புத்தியின் வழியே பிரயோகப்படுத்து. திட்டங்களால் எதிரிகளை தகர்க்க முயற்சி செய், எவரையுமே நேரடியாக எதிர்க்காதே. வேறு எவரையாவது தூண்டிவிட்டு நீ நினைப்பவரை அழி. சந்தர்ப்பத்திற்கு காத்திரு. குழப்பங்களை உண்டாக்கு. நிர்மூலமாக்கு உன் எதிரிகளை.”
‘‘வெட்டிய என் விரல்களை தாயக் கட்டைகளாக செய்து வைத்துக் கொள். நீ எந்த எண்ணை நினைத்து உருட்டினாலும். அந்த எண்ணாக நான் வந்து விழுவேன். தகுந்த நேரத்தில் இதைப் பயன்படுத்துவதுதான் உன் திறமை. எந்தக் குலத்தின் பெருமை நம்மால் கெட்டுவிடும் என எண்ணி நம்மை சிறையில் அடைத்து பீஷ்மர் அழித்தாரோ. அந்தக் குலத்தையே நாசம் செய்வதுதான் உன் வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க வேண்டும்” என்றான், சுபலன்.
சகுனி பலவீனமாக இருந்தான்.‘‘உன்னை உயிர்ப்பித்தது நம் குலத்தை வளர்க்க அல்ல. பீஷ்மரின் குலத்தை அழிக்க. எனவே, அன்பு பாசம் கருணை நன்றி நேசம் என எதையுமே நெஞ்சில் கொள்ளாமல், வெறுப்பு பழி, வெஞ்சினம், இகழ்ச்சி என இவைகளை மட்டுமே மனதில் கொள்” என்றான் சுபலன்.இதைக் கூறும்போதே சுபலனின் கண்கள் இருண்டன. தன் உயிர் தன்னை விட்டுப் பிரியப்போவதை அறிந்தான். தன் ஒட்டுமொத்த உயிர்ச் சக்தியையும்... தன் இன்னொரு கையில் கொண்டு வந்தான் சுபலன்.தன் வாளினை எடுத்தான். சகுனியின் கணுக்காலை வாளின் பின்புறத்தால் அடித்து உடைத்தான். வலி தாளாமல் அலறினான் சகுனி.
தந்தையே. என்ன இது? ஏன் இப்படி ஒரு காரியம் செய்தீர்கள்.? வாழ்நாள் முழுதும் என்னை ஊனமாக்கி விட்டீர்களே. கால் தாங்கி தாங்கி நான் நடப்பதைப் பார்த்து என்னை அனைவரும் ஏளனம் செய்வார்களே? ஒரு தந்தை மகனுக்கு செய்யக்கூடிய காரியமா இது? என்று கோபத்துடன் கேட்டான் சகுனி.‘‘மகனே, என்னை மன்னித்து விடு. இனி உன்னைப் பார்க்கும் எவரும் ஏளனமாகவே பார்க்க வேண்டும். அது உன் நெஞ்சில் கேவலமாகப் பதியும். கோபத்தையும் வெறுப்பையும் அவர்கள் மேல் உண்டாக்கும். அது எரிதழலாய் உன் மனதில் பரவும். அதனாலேயே எவரிடத்தும் உன்னால் அன்புகொள்ள முடியாது.மனம் பழி வாங்குதலையே நினைத்தபடி இருக்கும்.
சகுனியின் மனது கால் வலியிலும், பழிவாங்குதலிலும், தந்தையின் எலும்பில் செய்யப்பட்ட தாயக் கட்டையிலும் பிணைத்துக் கொண்டது. அதுவே அவன் வாழ்க்கையாகிப் போனது.
ராமாயணத்தில் ராமன் காட்டுக்கு அனுப்பப் பட்டான் என்கிற செய்தி கேட்டு பரதன் துடி துடித்துப் போனான். அவனை திரும்பவும் அழைத்து வருவதற்காக வனத்தை நோக்கி விரைந்தான். ராமனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அயோத்திக்கு வரும்படி வேண்டினான்.
ராமன் தீர்மானமாக மறுத்தவுடன், ‘‘அண்ணா... நாம் தந்தையை இழந்து நிற்கிறோம். நீங்களும் ராஜ்யத்தை விட்டுப் போனால் நான் என்ன செய்வேன்? ராஜ்யத்தை ஆளவோ, இந்தப் பழியை ஏற்கவோ எனக்கு மனதில் வலு இல்லை. நான் உங்களையே சரணடைகிறேன். எனக்கு வழி காட்ட வேண்டும்.” பரதன் கதறினான்.
ராமர் தந்தை இறந்த செய்தி கேட்டு தவித்தாலும் பரதன் அழுவது அவருக்கு வருத்தமாக இருந்தது. ‘‘பரதா எதற்கு கவலைப்படுகிறாய் நம் தந்தை நமக்கு அனைத்தும் சொல்லி கொடுத்து இருக்கிறார். குலகுரு இருக்கிறார். நம் கௌசல்யா மாதா, கைகேயி மாதா, சுமித்திரை மாதா இருக்கிறார்கள். உன்னை வழிநடத்துவார்கள் கவலைப்படாதே.”ராமரின் வார்த்தைகள் பரதனை சமாதானப் படுத்தவில்லை. அவர் காலைப் பற்றினான்.அவர் பாதுகை அவன் நெற்றியில் பட்டது.
‘‘அண்ணா எனக்கு ஒரு உபகாரம் பண்ணுவீர்களா? கேட்டான் பரதன்.‘‘ஊருக்கு திரும்புவதை தவிர எது வேண்டுமானாலும் கேளப்பா.”‘‘எனக்கு உங்கள் பாதுகையை தாருங்கள். இதை வைத்துக் கொண்டு ஊரின் எல்லையில் தங்கி இந்தப் பாதுகையை சிம்ஹசனத்தில் அமர்த்தி ,உங்கள் வழியில் ராஜ்ய பரிபாலனம் செய்கிறேன். இந்தப் பாதுகா தேவியே ஆட்சி செய்வாள். நீங்கள் திரும்பும் வரை...’’ பரதன் உறுதியாகக் கேட்டான்.
பரதன் தன் மனதை பாதுகையோடு கட்டி வைத்தான். வெகு சிறப்பாக அயோத்தியை ஆண்டான். ராமர் திரும்பும் வரை. கோபிகைகள் தங்கள் மனதை கிருஷ்ணனின் வேணு கானத்துடன் கட்டி வைத்தனர். அவர்களுக்கு ராஸலீலை சாத்தியமாயிற்று.
நம் மனதை எதோடு கட்டி வைக்கிறோமோ அதன் பாதிப்பு மனதில் பரவும். நம்மைச் சுற்றி மேலான விஷயங்களும் இருக்கும். கீழான விஷயமும் இருக்கும். நம் மனதை உயர்ந்த விஷயங்களில் கட்டி வைக்கும் பொழுது, மனம் மேலே பறக்க ஆரம்பிக்கும். சில தடுமாற்றங்கள் வந்தாலும் பட்டம்போல் அலைபாய்ந்து... கொஞ்சம் கொஞ்சமாக மேலே பறக்க ஆரம்பித்து விடும். சில இடங்களில் பட்டம் அறுபட்டு படுகுழியில் விழும். திரும்பவும் மேல் நோக்கியே பறக்க விட வேண்டும்.
நம் சுற்றத்தவர்கள் நம்மைக் கீழே இழுத்தாலும், கீழே விழும் குதிரை சட்டென்று எழுவதுபோல் எழ வேண்டும்.உயர்ந்த விஷயத்தில் நம் மனதை கட்டி வைத்தால் மேலே மேலே பறக்கும். யார் எதை வாரி இறைத்தாலும் எதுவும் நம் மேல் படாது. மேலே பறந்து... பறந்து... காணாமல் போகும்.
(தொடரும்)
ரம்யா வாசுதேவன்