பொருள் செல்வமும் அருள் செல்வமும்...
மனிதப் பிறவியின் நோக்கம் மறுபடியும் இந்த உலகத்தில் பிறப்பதல்ல, பிறவாப் பேரின்ப நிலை பெறுவதே என்பது சான்றோர்கள் கொள்கை. பிறவாத நிலை அடைவதற்காகவே இந்தப் பிறப்பு நிலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது ஆன் மிகத்தின் அடிப்படை.
அனேகமாக எல்லாச் சமயக் கொள்கைகளும் இதைச் சார்ந்து தான் இருக்கின்றன. இறைவனை பிறவாநிலை தரும் பெம்மான் என்றே போற்றுகின்றனர். தொண்டரடிப்பொடியாழ்வார் “ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே” என்று பாடுகிறார்.
இந்த ஆதலால் என்பதற்குக் பல காரணங்களை, பிறவியின் துன்பங்களாகப் பட்டியலிடுகின்றார்.
வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு
பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே.
வேத சாஸ்திரத்தின்படி ஒரு மனிதனின் ஆயுள் நூறு வருடங்கள் என்றாலும், அதில் பாதி உறக்கத்திலேயே கழிந்து விடும், மீதமுள்ள காலத்தில் பசி, பிணி, மூப்பு, துன்பம் போன்றவை இருக்கும், மேலும் பத்து வயது வரை பேதை, பாலகனாகவே இருப்பான். இதனால் பிறவி வேண்டேன் என்பது இதன் உட்கருத்து.
பிறவா நிலை அடைவதற்கு இந்தப் பிறவி நிலையைக் குறித்த புரிதல் வேண்டும். லோகாயத (உலக) வாழ்வை ரசித்து வாழ்பவர்களால் பிறவா நிலை குறித்துச் சிந்திக்க முடியாது. அதனால்தான் அருளாளர்கள் இந்த வாழ்வில் வரும் துன்பங்களை வைராக்கியம் வருவதற்கான வரமாகக் கருதினார்கள்.
இல்லாவிட்டால் மன்னருக்கே தேவையான பணத்தைத் தரும் திருவெண்காடர் (பட்டினத்தார்) ஒரு நொடிக்குள் அத்தனையும் தூக்கிப் போட்டுவிட்டு, “காதற்ற ஊசியும் வாராது தான் கடைவழிக்கு” என்ற நிலைக்கு எப்படி வரமுடியும்?.
இவரோடு சேர்ந்து பத்திரகிரியாரும் அல்லவா வந்து விட்டார்.
கூரம் என்ற தேசத்தின் சிற்றரசனாக இருந்த மிகப்பெரிய செல்வந்தர் கூரேசன் ஒரு நொடிக்குள் அத்தனைச் செல்வங்களையும் திரும்பிப் பார்க்காமல் போட்டுவிட்டு ஸ்ரீரங்கம் வந்து உஞ்சவிருத்தி செய்து வாழ்ந்தார்.
செல்வத்தைத் துறந்து, தினம் உணவை யாசித்துப் பெறும் நிலையில் இருந்தாலும் ஜீவித காலம் முழுக்க சந்தோஷமாகவே இருந்ததாக அவருடைய வரலாறு சொல்லுகின்றது.
நம்மாழ்வார் நான்காம் பத்து 9ஆம் திருவாய்மொழியில் எம்பெருமானை அடைவதற்கு இந்த உலக வாழ்க்கை தடையாக இருப்பதாகக் கருதி, அதன் கஷ்டங்களை பட்டியலிட்டு, வெறுத்துப் பாடிய பாசுரத்தில் ஒன்றை பாராயணம் செய்துகொண்டிருந்தேன்.
அந்தப் பாசுரம் இது .
கொள்ளென்று கிளர்ந்து எழுந்த
பெரும் செல்வம் நெருப்பாக
கொள்ளென்று தமமூடும்
இவை என்ன உலகியற்கை?
வள்ளலே, மணிவண்ணா,
உனகழற்கே வரும் பரிசு,
வள்ளல் செய்து அடியேனை
உனதருளால் வாங்காயே
இந்தப் பாசுரத்தின் பொருள்.
“ஏன் இன்னும் இந்த நிலவுலகத்தில் என்னைச் சிரமப்பட வைக்கிறாய்? பல்வேறு பொருள்களின் மீது ஆசைப்பட வைக்கிறாய்? குறிப்பாக செல்வத்தைத் தேடி ஓட வைக்கிறாய்? அந்தச் செல்வம் என்னை அழித்துவிடும் நெருப்பாக அல்லவா இருக்கிறது. பெருமானே, நிலையற்ற இதெல்லாம் எனக்கு வேண்டாம். நிலையான உன் திருவடியைத் தந்தருள வேண்டும்.”
பொதுவாக ஒரு பாசுரமோ ஒரு பாடலோ, அது திரைப்படப் பாடலாக இருந்தாலும் சரி அல்லது உரையாடல் களில் ஏதேனும் ஒரே ஒரு சொல்லாக இருந்தாலும் சரி, அந்தச் சொல் எந்தப் பின்னணியில் சொல்லப்பட்டாலும், நமக்கு அந்தச் சொல் புதிய சிந்தனையைத் தரும். தர வேண்டும்.
அந்தச் சிந்தனை அந்தப் பாடலின் மையக் கருத்திற்கு விலகிக் கூட இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் அந்த ஒரு சொல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிந்தனையைத் தரலாம். வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் செல்லலாம்.
அதை அந்தப் பாசுரத்தின் கருத்துக்கு முரணாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.
அந்தப் பாசுரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சொல் தந்த சிந்தனையாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தப் பாசுரத்தில் “செல்வமே பெரு நெருப்பாய்” என்கின்ற வார்த்தையைச் சுற்றியே என் சிந்தனை சுழன்றது.
முதலில் செல்வம் என்கின்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம்.
செல்வம் என்பதை ஆன்றோர்கள் இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர்.
ஒன்று நீங்குகின்ற செல்வம்.
இரண்டு நீங்காத செல்வம்.
இந்த உலகத்தில் நாம் நம்முடையது என்று நினைத்து அனுபவிக்கக் கூடிய அத்தனைச் செல்வங்களும் நீங்குகின்ற செல்வங்கள்.
அவை நம்மோடு வந்த தல்ல. நாம் கொண்டு செல்லப் போவதும் அல்ல. நம் உயிர் நீங்குகின்ற பொழுது நம் செல்வங்களும் நம் உடம்போடு இந்த உலகத்தில் நீங்கி விடும். வந்த உயிர் வாடாமல் வதங்காமல் தான்பட்ட கஷ்டங்களுக்கும் நஷ்டங்களுக்கும் சந்தோஷங்களுக்கும் சாட்சியாய் இருந்து விட்டுப் பிரியும். எனவே, உலகச் செல்வங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்குகின்ற செல்வங்கள் தான். இதில் நாம் என்பது நம் உடம்பல்ல நம் உயிர். அதே சமயத்தில் நீங்காத செல்வம் என்கின்ற ஒரு வார்த் தையைச் சொல்கிறார்களே, அது என்ன வென்றால் அருள் செல்வம். நம்மோடு கூட வருபவை.
இந்த இரண்டு செல்வங்களும் ஒன்றுக்கொன்று எப்படிப் பொருந்துகின்றன என்பதைப் பார்க்க வேண்டும்.
நீக்குகின்ற செல்வத்தை வைத்துக் கொண்டு நீங்காத செல்வத்தைப் பெறலாம். பொருள் செல்வத்தை வைத்துக்கொண்டு அதைத் தக்கவாறு பயன்படுத்தி அருள் செல்வத்தைப் பெறலாம். பொருள் செல்வம் என்பது உயிரோடு இருக்கும் வரைதான் பயன்படும்.
அருள் செல்வம் என்பது எந்த உலகத்திலும் செலாவணி ஆகும். இறப்பிற்குப் பின்னும் நம்மோடு வரும் நீங்காத செல்வம் அருள் செல்வம். பொருள் செல்வத்தை அருள்செல்வமாக மாற்றிக் கொள்வதற்காகவே இந்த வாழ்க்கை, மனிதப் பிறவி எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அது சரி.. ஆனால், ஆழ்வார் “செல்வமே பெரு நெருப்பாய்” என்று செல்வத்தை நெருப்புக்கு இணையாகச் சொல்வதற்கு என்ன காரணம் என்றும் பார்க்க வேண்டும்.
அதற்கு முன்னால் செல்வத்தைக் குறித்த வேறு சில சிந்தனைகளையும் நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இவ்வுலகத்தில் செல்வத்தை இப்படி பலவிதமாகப் பிரிக்கலாம். ஈட்டலும் காத்தலும் வகுத்தலும் தன்னுடைய உயிர் கொள்கையாக கொள்ள வேண்டும்.
ஒருவர் ஈட்டிய செல்வம் அப்படியே கல்விச்செல்வமாக மாறி இன்றளவும் பல இடங்களில் கல்விச் சாலைகளாக, பல்கலைக்கழகங்களாக உயர்ந்து நிற்பதை பார்க்கலாம். இதுதான் பொருள் செல்வத்தை அருள் செல்வமாக மாற்றும் முறை.
அப்படி பொருள் செல்வம் அருள் செல்வமாக மாறாதபோது அதனுடைய நிலை பெரு நெருப்பாய் மாறும்.
அதை இன்னும் விளக்கமாகப் பார்ப்போம்.