திருமண யோகம் தரும் கல்யாண நவகிரகம்
விவாஹம் தொடர்பான தோஷங்கள்
திருமண வயது நெருங்கியதும் அல்லது கடந்தும் பல்வேறு காரணங்களால் பலர் திருமணம் செய்யாமல் பல இன்னல்களை சந்தித்து வருவர். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும். ஆனால், முக்கிய காரணம் கிரக தோஷங்கள்தான். திருமணத் தடை ஏற்படுத்தும் அல்லது திருமண வாழ்வை பாதிக்கும் கிரக தோஷங்கள் மொத்தம் ஏழு ஆகும். இவை, இனிமையான இல்லற வாழ்வுக்கு அதிக இன்னல்கள் தருகின்றன. விவாஹம் தொடர்பான தோஷங்கள் என்னென்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
அவை;
* செவ்வாய் தோஷம்.
* சர்ப்ப தோஷம்.
* கால சர்ப்ப தோஷம்.
* சனி தோஷம்.
* கிரக இணைவுகளால் ஏற்படும் தோஷங்கள்.
* களத்திர தோஷம்.
* புனர்பூ தோஷம்.
- போன்றவையாகும்.
எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும், அவர்களது குடும்பத்திலும் திருமண வயதை தாண்டி, இன்னும் திருமணம் செய்ய முடியாமல் தவிக்கும் ஆண், பெண் பிள்ளைகள் இருக்கத்தான் செய்கின்றனர். இவை, அனைத்திற்கும் மேற்கண்ட திருமணம் தொடர்பான தோஷங்களே காரணம் ஆகும். விவாஹம் தொடர்பான தோஷத்தால் திருமணத் தடை உள்ள ஜாதகர்கள், தங்கள் ஜாதகத்திற்குரிய தோஷங்களை தெரிந்து கொண்டு, அதற்குரிய பரிகார முறைகளை செய்ய வேண்டும். தவிர, திருமண தோஷத்தால் பாதிக்கப்படும் ஜாதகர்களுக்கு திருமணத் தடையை அகற்றும் வரப்பிரசாதமாக, கல்யாண நிவகிரகங்கள் விளங்குகின்றன.
கல்யாண நவகிரகங்கள்
நவகிரகங்கள் தங்களது துணையுடன் இணைந்திருப்பது ‘‘கல்யாண நவகிரகங்கள்’’ என்று அழைக்கப்படும். இதை, ``ஜோடி நவகிரகம்’’ என்றும் கூறுவர். துணைவியருடன் இருக்கும் நவகிரகங்களை வழிபட, உடனே திருமணம் நடைபெறும். இதன் அருமை தெரிந்தவர்கள், கோயிலில் ஜோடியாக இருக்கும் நவகிரகங்களை பிரதிஷ்டை செய்கிறார்கள்.
நவகிரகங்களும் அவர்களின் ஜோடிகளும் - பெயர்கள் பின்வருமாறு
* சூரியன் - உஷாதேவி.
* சந்திரன் - ரோகிணி.
* செவ்வாய் - சக்திதேவி.
* புதன் - ஞானதேவி.
* வியாழன் - தாராதேவி.
* சுக்கிரன் - சுகீர்த்தி.
* சனி - நீலா.
* ராகு - சிம்ஹி.
vகேது - சந்திரலேகா.
இப்படி சகிதமாக உள்ள நவகிரகங்களை வழிபட்டால், திருமணம் விரைவில் கைகூடும்.
கல்யாண நவகிரகங்கள் உள்ள கோயில்கள்
கல்யாண நவகிரகங்கள் உள்ள கோயில்களை காண்பது, மிக மிக அரிது. தென் திருப்பதிகளுள் ஒன்றாக, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையில் அமைந்துள்ள ``கருங்குளம் பெருமாள்’’ கோயிலில் தான், நவகிரக்கிரகங்கள் தம்பதிகளுடன் இணைந்து காணப்படுகின்றன. அந்த அரிய பெரும் காட்சி, உலகத்திலேயே முதன் முதலாக இங்குதான் பிரதிஷ்டை செய்யப்பட்டது.அதே போல், சிவகங்கை மாவட்டம் கீழ்ச்சிவல்பட்டி அருகில் உள்ள ஆவினிப்பட்டி மற்றும் காரைக்குடி அருகில் உள்ள மானகிரி மற்றும் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருநீலக்குடி ஆகிய ஊர்களில் கல்யாண நவகிரகங்கள் உள்ளன.தவிர, திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் சோழம்பேடு கிராமத்தில் உள்ள அருள்மிகு அனுகூல ராமாஞ்சநேயர் கோயிலில், நவகிரகங்கள் தத்தம் தேவியருடன் காட்சியளிக்கின்றன. மேலும், சென்னை செங்குன்றம் அருகே பாடியநல்லூர் கோயில், கோயம்புத்தூரில் உள்ள கோனியம்மன் கோயில் ஆகியவற்றில் நவகிரகங்கள் தம்பதி சமேதராக அமர்ந்து அருள் பாலிக்கின்றனர். அவரவர், தாங்கள் வசிக்கும் ஊரின் அருகாமையில் இருக்கும் கல்யாண நவகிரக கோயில்கள் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு வழிபடுவது நன்று. கல்யாண நவகிரகங்களை வழிபட முடியாதவர்கள், துணைவியாருடன் சேர்ந்துள்ள நவகிரக படம் வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டு வர, விரைவில் திருமணம் நடைபெறும். தம்பதியர் வாழ்வு சிறக்ககணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு, தாம்பத்திய உறவில் சிக்கல், வாக்கு வாதங்கள் மூலம் மன நிம்மதியில்லாத வாழ்க்கை ஏற்பட்டால், அந்த தம்பதியர்கள் கல்யாண நவகிரகத்தை வழிபட்டால், வருத்தங்கள் அகலும், வாழ்க்கை வளமாகும்.
எப்படி வழிபடுவது?
சுய ஜாதகப்படி, யோக பலம் பெற்ற நாளில் சென்று நவதான்ய தானம் கொடுத்து, நவகிரகங்களுக்கு மலர் சூட்டி, வஸ்திரம் அணிவித்து நிவேதனம் படைத்து, அர்ச்சனை செய்து, முறைப்படி வழிபட்டு வருவதன் மூலம், கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கணவன் - மனைவி கருத்து வேறுபாடு அகன்று, தாம்பத்ய வாழ்வு சிறக்கும்.
நவகிரக தானியங்கள்
சூரியன் - கோதுமை.
சந்திரன் - பச்சரிசி (அல்லது) நெல்.
செவ்வாய் - சிவப்புத் துவரை.
புதன் - பச்சை பயறு.
குரு - கொண்டைக்கடலை.
சுக்கிரன் - வெள்ளை மொச்சை.
சனி - எள்.
ராகு - கறுப்பு உளுந்து.
கேது - சிவப்பு காணம் (கொள்ளு).
நவகிரக மலர்கள்
சூரியன் - செந்தாமரை.
சந்திரன் - வெள்ளரளி.
செவ்வாய் - செண்பகம்.
புதன் - வெண்காந்தல்.
குரு - முல்லை.
சுக்கிரன் - வெண் தாமரை.
சனி - கருங்குவளை.
ராகு - மந்தாரை.
கேது - செவ்வரளி.
நவகிரக வஸ்திரங்கள்
சூரியன் - கனிந்த சிவப்பு.
சந்திரன் - தூய வெண்மை.
செவ்வாய் - சிவப்பு.
புதன் - பச்சை.
குரு - மஞ்சள்.
சுக்கிரன் - பட்டு போன்ற மென்மை.
சனி - கறுப்பு.
ராகு - நீலம்.
கேது - பல வண்ணம்.
நவகிரக நிவேதனங்கள்
சூரியன் - சர்க்கரைப் பொங்கல்
சந்திரன் - பால் சாதம்
செவ்வாய் - வெண் பொங்கல்
புதன் - புளி சாதம்
குரு - தயிர் சாதம்
சுக்கிரன் - நெய் சாதம்
சனி - எள் கலந்த அன்னம்
ராகு - உளுந்து கலந்த அன்னம்
கேது - சித்ரான்னம் (பலவகைஅன்னங்கள்).
இவ்வாறு மேற்கண்ட நவகிரக தானியம், மலர், வஸ்திரம், நிவேதனம் போன்றவற்றை வைத்து, கல்யாண நவகிரகங்களை வழிபடுவதன் மூலம் திருமணப் பலன் உடனடியாக கிட்டும்.