வாழ்வின் உன்னத நிலைக்கு உயர இந்த மந்திரம் சொல்லுங்கள்
ஒரு மகான் இருந்தார். அவரிடத்தில் யார் போய் ஏதாவது ஒரு பிரச்னையைச் சொல்லி பிராயச்சித்தம் கேட்டாலும் அவர் சொல்லும் பிராயச்சித்தம் “கருட மந்திரத்தைச் சொல்லுங்கள்; கருட காயத்ரி சொல்லுங்கள். கருட பகவானை பூஜியுங்கள். முடிந்தால் ஒருமுறை கும்பகோணம் அருகே நாச்சியார் கோயில் சென்று வியாழக்கிழமையன்று கருட பகவானுக்கு மோதகம் படைத்து அர்ச்சனை செய்து வாருங்கள்” என்பார்.என்னுடையஅனுபவத்தில் ஒரு வயதான அம்மையார் இந்தப் பரிகாரத்தை சொல்லி இருக்கிறார். திருமணத் தடை இருப்பவர்கள் நாச்சியார் கோயிலுக்குச் சென்று பெருமாள் பிராட்டியோடு கருடனையும் வணங்கி அர்ச்சனை செய்து, யாராவது ஒரு சுமங்கலிக்கு புடவை ரவிக்கை மங்கலப் பொருள்களைத் தந்து ஆசிர்வாதம் பெற்றால், திருமணத் தடை நீங்கி, நல்ல இடத்தில் திருமணமாகும். சிலருக்கு இந்த பரிகாரம் சொல்லி பலித்து இருக்கிறது. காரணம் ஸ்ரீ கருட பகவான் அத்தனை கருணை மிக்கவர்.
ஒரு அருமையான கதை இருக்கிறது. இந்தக் கதை கருட பகவான் எத்தனை கருணை மிக்கவர் என்பதைக் காட்டும். ஒருமுறை பெருமாளும் பிராட்டியும் வானத்தில் செல்கின்ற பொழுது ஒரு இளவரசிக்கு அழகான ஒரு பையனை மணமகனாகத் தேர்ந்தெடுத்து திருமண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது மகாவிஷ்ணு சொன்னார். “இவர்கள் தங்கள் விருப்பப்படி அழகான பையனை இந்தப் பெண்ணுக்குத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் நடக்கப் போவது வேறு விதமாக இருக்கும் அந்த விதியை மாற்ற முடியாது” என்றார்.. மகாலட்சுமிக்கு என்னமோ போல் ஆகிவிட்டது. ‘‘இவளை யார் மணம் முடிக்கப் போகிறார்கள்?’’ என்று கேட்க, வற்புறுத் தலுக்கு பின் தெருவில் ஓரமாக, கிழிந்த ஆடையுடன் யாசகம் கேட்டுக் கொண்டிருந்த ஒரு இளைஞனைக் காட்டி, ‘‘இவன்தான் இவளுக்கு மணமகனாகப் போகின்றான் அதுதான் விதி’’ என்றார் பெருமாள்.
மகாலட்சுமிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவள் மனம் ஒப்பவில்லை. இது நடக்கக்கூடாது என்றாள். ‘‘விதி இதை நடத்தி வைக்கும்’’ என்றார் பெருமாள். உடனே மகாலட்சுமி, இவன் இந்த ஊரில் இருந்தால்தானே இந்த விஷயம் நடக்கும். இவனை நாடு கடத்தி விட்டால்?....’’ என்று எண்ணி கருட பகவானிடம் சொல்லி, ‘‘இவனை சமுத்திரத்துக்கு அப்பால் உள்ள ஆளில்லாத ஒரு தீவில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்துவிடு” என்று ஆணையிட, கருட பகவானும் அப்படியே ஆளில்லாத ஒரு தீவில் அவனை விட்டுவிட்டு வந்துவிட்டார். ஆனாலும் அவர் மனம் பொறுக்கவில்லை.‘‘ஐயோ அங்கே அவன் பசிக்கு என்ன செய்வான்.? உணவு மட்டும் கொண்டு போய் கொடுத்து விட்டு வந்து விடுவோம்’’ என்று எண்ணி அரண்மனைக்கு வந்தார். அங்கே இளவரசிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. திருமண வீட்டிலே பல்வேறு விதமான உணவுப் பொருள்கள், பழங்கள் கூடைகளில் வைக்கப்பட்டு துணியால் மூடப்பட்டிருந்தன. பட்டு துணியால் மூடப்பட்டிருந்த ஒரு கூடையைத் தூக்கிக் கொண்டு அந்தத் தீவிலே போட்டு “சாப்பிடு” என்றார்.அந்த ஏழை இளைஞன் பசியால் துடித்துக் கொண்டிருந்தான்.
இந்த உபகாரமாவது கருடன் செய்தாரே என்று உணவுக் கூடையை பிரிக்க, அதில் மாலையோடு இருந்த இளவரசி இவனுக்கு மாலையிட்டு ‘‘இனி நீதான் என்னுடைய கணவன்’’ என்று கூறினாள். அந்த ஊர் திருமண மரபுப்படி இளவரசியை ஒரு கூடையில் வைத்து மூடி மணவறைக்கு அழைத்து வந்து முகூர்த்த நேரத்தில் திறக்க அப்பொழுது முதன் முதலாக மணமகனைப் பார்த்து மாலை சூடும் வழக்கம் உண்டு. அதனால் இளவரசியை அலங்காரம் செய்து ஒரு கூடையில் விட்டுச் சென்றிருந்தார்கள் ஆனால் விதிப்படி மற்ற கூடைகளை விட்டுவிட்டு இளவரசி அமர்ந்த அந்த கூடையை கருட பகவான் கொண்டு சென்றார். பட்டினியால் இறந்து விடுவானே என்கிற கருணை மனம் அந்த ஏழை இளைஞனுக்கு மிகப்பெரிய வாழ்வைத் தந்தது. பிறகென்ன? இளவரசியை மணந்தவன் இளவரசன் ஆகிவிட்டான். அது சரி, கல்யாணத்திற்கு மந்திரம் வேண்டாமா? புரோகிதர் வேண்டாமா? வேதங்கள் முழங்க வேண்டாமா? சாட்சிகள் வேண்டாமா? என்று கேட்கலாம். அதுதான் வேதமே வடிவான கருடபகவான் அருகில் புரோகித ராகவும் சாட்சியாகவும் நின்று கொண்டிருக்கிறாரே, பிறகு என்ன?
மகாலட்சுமி வந்தவுடன் தரித்திர லட்சுமி போய்விட்டாள். ஒளி வந்தவுடன் இருள் போய்விட்டது. செல்வம் வந்தவுடன் வறுமை போய்விட்டது. இவற்றை எல்லாம் நொடியில் செய்யக் கூடியவர் கருட பகவான்.பெரும்பாலும் விவாகத் தடைகளில் முக்கியமான ராகு கேது முதலிய சர்ப்ப தோஷத் தடைகள் கருட பகவானைத் துதிக்க நொடியில் விலகி விடும். அந்தக் காலத்தில் விஷக்கடிக்கு, கருட மந்திரத்தைச் சொல்லி மந்திரித்து, அந்தத் தீர்த்தத்தைத் தருவார்கள்.ஸ்ரீ கருட பகவான் மந்திரம்: ஒருவர் தொடர்ந்து ஆறு மாதம் கருட மந்திரத்தை உச்சரித்து வந்தால், அவருக்கு தன் சக்தியின் ஒரு துளியை கருடன் தருகிறார் என்பது ஐதீகம். அந்த கருட மந்திரம்...‘‘ஓம் தத்புருஷாய வித்மஹே|ஸ்வர்ண பக்ஷாய தீமஹி| தன்னோ கருட ப்ரசோதயாத் ||’’கருடன் பகவான் ஸ்ரீ மன் நாராயணனின் வாகனமாவார். பெரிய திருவடி என்றும் சுபர்ணன் என்றும் அழைக்கப்படுகிறார்.அமிர்த கலசத்தை தன் கையில் ஏந்திய இவரின் பெருமையை யாராலும் விவரிக்க முடியாது. இவரின் இறக்கை அண்டங்களை எல்லாம் நடுநடுங்கச் செய்யும்.
பெருமாள் கோயில்களில் நடக்கும் கருட சேவை மிக விசேஷமானது. அந்தக் கருட சேவையைப் பார்த்து விட்டாலே நம்முடைய பாவங்கள் விலகிவிடும். கருடனை செல்வத்தின் சின்னமாக கருதுகின்றனர். அது கூர்மையான பார்வை கொண்டவர். எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் கீழே உலவும் மற்ற வஸ்துக்கள் அவர் பார்வைக்குத் தெரியும். தொலைநோக்குப் பார்வை கொண்டவர். மனிதன் தன் வாழ்வை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்களை வைத்திருக்க வேண்டும். என்பதை மறைமுகமாக உணர்த்துபவர் கருடன். இன்றைக்கும் வானத்தில் கருட தரிசனத்தைப் பார்ப்பதற்கென்றே பக்தர்கள் கூட்டம் இருக்கிறது. அவர்கள் வாழ்க்கையின் சிக்கல்கள் இந்த கருட தரிசனத்தால் விலகுகின்றன. கருடனை தியானம் செய்யுங்கள். கருட மந்திரத்தைச் சொல்லுங்கள். வாழ்வில் சோம்பலை உதறித் தள்ளச் செய்து, உற்சாகத்தையும் வேகத்தையும் கூட்டி உங்களை உன்னத நிலைக்கு உயர்த்துவார்.