தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மலர்களிலே பல நிறம் கண்டேன்

இந்த இடங்களுக்குச் செல்லும் பொழுது வெறுங்கையோடு செல்லக் கூடாது என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். ஏதாவது கைப்பொருளைக் கொண்டுதான் செல்ல வேண்டும்.ஒரு வீட்டில் குழந்தையைப் பார்க்கச் செல்லுகிறோம். ஏதேனும் ஒரு பொருளோடுதான் செல்ல வேண்டும். கண்ணன் பிறந்த பொழுது, அவனைப் பார்ப்பதற்காக தேவர்கள் வந்தார்களாம். அவர்கள் சும்மா வரவில்லை. ஆளுக்கு ஒரு பொருளோடு வந்தார்களாம்.

Advertisement

“மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி

ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்

பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்’’

- என்று மாணிக்கத்தொட்டிலோடு

பிரமன் பார்க்க வந்தராம்.

அடுத்தது,

“உடையார் கனமணியோடு ஒண்

மாதுளம்பூ

இடை விரவிக் கோத்த எழிற்

தெழ்கினோடும்

விடை ஏறு காபாலி ஈசன் விடுதந்தான்”

- என்று சிவன் ஒரு ஆபரணத்தை எடுத்து வந்தாராம்.

“சங்கின் வலம்புரியும் சேவடிக்

கிண்கிணியும்

அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்

அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்”

- என்று தேவர்கள் ஆளுக்கு ஒரு பரிசுப்பொருளை எடுத்து வந்தார் களாம்.

யார் யார் என்னென்ன பொருள்களைக் கொண்டு வந்தார்கள் என்பதை ஒரு பதிகமாகவே பாடியிருக்கிறார் பெரியாழ்வார். ஆக, குழந்தையைச் பார்க்கச் செல்லும் பொழுது அந்தக் குழந்தைக்கு ஆடையோ அணிகலனோ தின்பண்டங்களோ வாங்கிச் செல்ல வேண்டும். ஒரு ஆசாரியரை (குருவை) பார்க்கச் செல்லுகின்ற பொழுது, ஏதேனும் ஒரு உபச்சாரத்தோடுதான் செல்ல வேண்டும். ஒரு நோயாளியை விசாரிக்கப் போகும் பொழுது, கையிலே ஏதாவது பழமோ அல்லது அவருக்கேற்ற சாப்பிடக்கூடிய பொருளோ எடுத்துச் செல்ல வேண்டும். அதைப் போலவே கோயிலுக்குச் செல்லுகின்ற பொழுது ஒரு பூவோ, பழமோ கையிலே எடுத்துச் செல்ல வேண்டும்.

``பத்ரம் புஷ்பம் பலம் தோயம்’’

- பகவான் கீதையில் சொல்லுகின்றான்.

எனக்குப் பெரிதாக ஒன்றும் தேவையில்லை. ஒரு புஷ்பம், ஒரு பழம், ஒரு உத்தரணி தீர்த்தம், போதும். நான் திருப்தி அடைந்து விடுவேன் என்கிறான்.

``பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி

ததஹம் பக்த்யுபஹ்ரிதம் அஷ்ணாமி ப்ரயதாத்மந:’’

இதில் “பக்த்யா ப்ரயச்சதி” என்ற விஷயம் முக்கியம். ஒரு பழம் கொடுங்கள்; ஒரு இலை கொடுங்கள்; ஒரு உத்தரணி தீர்த்தம் கொடுங்கள். ஆனால் பக்தியோடு கொடுங்கள்.

கீதை சொன்ன அதே செய்தியைத்தான் கோதையும் (ஆண்டாள்) வேறுவிதமாகச் சொல்கிறாள்.

‘‘தூயோமாய் வந்து நாம் தூ மலர்

தூவித் தொழுது வாயினால் பாடி

மனத்தினால் சிந்திக்க போய

பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பு’’

எதை வேண்டுமானாலும் எடுத்து வாருங்கள். பக்தியோடு தூய மனத்தினராக வாருங்கள். ஆக பக்தி என்றால் தூய்மை. தூய்மை என்றால் பக்தி. அகத் தூய்மையின் வெளிப்பாடுதான் பக்தி என்பதை ஆணித்தரமாகச் சொல்கிறாள் ஆண்டாள். அதற்கு எளிய வழிபாடு போதும். அதில் ஒன்றுதான் மலர் வழிபாடு. இதையே கபிலர் பாடுகிறார்

“நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

புல் இலை எருக்கம் ஆயினும்,

உடையவை

கடவுள் பேணேம் என்னா” (புறம்-106)

பொருள்: நல்லதோ, கெட்டதோ எருக்கம் பூவை உள்ளன்போடு கொடுத்தாலும் கடவுள் வேண்டாம் என்று சொல்லமாட்டார். இதிலேகூட ஒரு சிலருக்குக் கருத்து வேறுபாடு வரலாம். அப்படியானால் எல்லா மலர்களும் கோயிலில் ஏற்றுக் கொள்கிறார்களா? எல்லாப் பூக்களையும் பெருமாளுக்குச் சமர்ப்பிக்கலாமா? இதற்கு ஒரு அருமையான விளக்கமும் பெரியவர் களால் கொடுக்கப்பட்டிருக்கிறது. எல்லா மலர்களும் உகந்தவையா? பராசர பட்டர் என்கிற மகான் ஒருமுறை சொன்னார்:

“பகவான் எத்தனை எளிமையானவன் தெரியுமா? அவனுக்கு வாசனை சாம்பிராணிகூட வேண்டாம். அதைக் காசு கொடுத்து வாங்க முடியாத பக்தர்கள் இருப்பார்கள். ஒரு கூளத்தையிட்டு புகைத்தாலும் பகவான் அதனை ஏற்றுக் கொள்கிறான். ஏதோ ஒரு மலரிட்டு வணங்கினாலும் ஏற்றுக் கொள்கிறான்”. இப்படி பராசர பட்டர் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவர் சீடர்  நஞ்சீயர் இடையில் கேள்வி கேட்டார்.

“சாத்திரங்கள் கண்டகாலிகா பூக்களை இறைவனுக்குச் சமர்ப்பிக்க வேண்டாம் என்று சொல்கிறதே” சில மலர்கள் இறைவனுக்கு உகந்தவை அல்ல என்று இந்து மதத்தில் சில மரபுகள் உள்ளன. கண்டகாலிகா புஷ்பம் அத்தகைய மலர்களில் ஒன்றாகும்.“கண்டகாலிகா மலரைச் சமர்ப்பிக்கக் கூடாது என்பதுதான் சாத்திர வசனம். ஏற்றுக் கொள்வதில்லை என்று பொருள் அல்ல.” என்றார் பராசரர்.

“இதென்ன முரண்பாடு?” என்று கேட்டார் சீடர்.

“முரண்பாடல்ல. தெளிவு. கண்டகாலிகா புஷ்பம் எப்படியிருக்கும்?”

“முள்ளோடு சூழ்ந்த மலராக இருக்கும்”

“அந்த மலரைப் பறிக்கும்போது

பறிப்பவர்க்கு என்ன நடக்கும்?”

“முள் குத்தி ரத்தம் வந்து வேதனை கொடுக்கும்”

“இரக்கமே உருவான இறைவன் தன் பொருட்டு ஓர் மலர் பறிக்கும் போதுகூட பக்தனுக்கு முட்கள் குத்தி வேதனைப்படுவதை ஏற்க மாட்டான் என்பதற்காகத்தான் சில புஷ்பங்களை பெரியவர்கள் ஒதுக்கியிருக்கிறார்களே தவிர, அது பகவானுக்கு ஆகாது என்பதற்காக அல்ல” என்று பதில் சொன்னார் பராசரர். சீடன் மனம் தெளிந்தார்.

ஆழ்வார்களின் மலர் வழிபாடு

பெரியாழ்வார் வெவ்வேறு விதமான மலர்களைக் கொண்டு மாலை கட்டி இறைவனுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நினைத்தார்.

``செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இரு வாட்சி,

எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்டவா என்று,

மண் பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்துரை செய்த இம் மாலை,

பண்பகர் வில்லி புத்தூர்க் கோன் பட்டர் பிரான் சொன்ன பத்தே.’’

ஆழ்வார்களில் பாமாலை பாடியதோடு பூமாலை கைங்கரியம் செய்தவர்கள் அதிகம். பெரியாழ்வாரும் ஆண்டாளும் ஒவ்வொரு நாளும் தங்கள் கைகளாலே மலர்களைப் பறித்து மாலையாக்கி இறைவனுக்குச் சமர்ப்பித்தவர்கள். தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருவரங்கத்தில் ஒரு நந்தவனம் அமைத்து. அதில் அழகான புஷ்பங்களைப் பயிரிட்டு, எம்பெருமானுக்குச் சமர்ப்பித்தார். நஞ்சீயர் என்கின்ற வேதாந்தி, சன்னியாசம் கொள்ளும் பொழுது, தம்முடைய செல்வத்தை மூன்றாகப் பிரித்து, தம்முடைய இரண்டு மனைவிகளுக்கு இரண்டு பங்கு அளித்துவிட்டு, மூன்றாவது பங்கை தன்னுடைய ஆச்சாரியரான பட்டரின் திருவடிகளில் சமர்ப்பித்தார். பட்டர் அதை ஏறெடுத்தும் பார்க்காமல் ‘‘இது என்ன?’’ என்றார்.

‘‘தங்களுக்குக் காணிக்கை. இதை ஏற்றுக் கொள்ள வேண்டும்?’’ பராசர பட்டர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அதை வைத்துக் கொண்டு ஒரு நந்தவனம் அமைத்து பெருமாளுக்குப் புஷ்ப கைங்கரியம் செய்யும்படியாகப் பணித்தார். ஒரே வண்ணத்தில் உள்ள மாலைகளைக் காட்டிலும் பலவிதமான வண்ண மலர்களால் கட்டிய மாலை அற்புதமாக இருக்கும். திருவரங்கத்தில் நம்பெருமாளுக்குச் சாற்றப்படும் மாலைகள் தனித்துவமானவை. அந்த வண்ணம் அத்தனை அழகாக இருக்கும்.

சிந்து பூ திருவேங்கடம்

அதைப் போலவே திருமலையில் உள்ள மலர்கள் அனைத்தும் பெருமாளுக்குச் சொந்தமானவை. மூலவருக்கும் உற்சவரான மலையப்ப சுவாமிக்கும் அணிவிக்கப்படும் மலர் மாலைகளை நீங்கள் கூர்ந்து கவனித்தால் தனித்துவமாக இருக்கும். அந்த மாலையின் நீளம், கனம், அது மேலேயிருந்து மெலிந்து வருவது, வண்ண மலர்களின் சேர்க்கை, என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். 1000 வருடங்களுக்கு முன் காட்டுப் பகுதியாக, கொடுமையான வனவிலங்குகள் நடமாடும் பகுதியாக திருமலை இருந்தது. அங்கே செல்வதற்கு அஞ்சிய காலம் ஒன்று உண்டு. ராமானுஜர், ஒருமுறை கோஷ்டியில் நம்மாழ்வார் அருளிய திருவேங்கடப்பாசுர விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.

``எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்

முந்தை, வானவர் வானவர் கோனொடும்,

சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து,

அந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே’’

- என்ற பாசுரம் வந்தது.

அதில் சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து, அந்தமில் புகழ்க்காரெழில் அண்ணலே என்ற வரியில் அப்படியே திகைத்து நிற்கிறார். ஸ்ரீஸேனாபதியாழ்வான் தொடக்கமான நித்தியஸூரிகள் திருவேங்கடமுடையானை சேவிக்க விரும்பி திவ்யமான புஷ்பங்களை எடுத்துக் கொண்டு இங்கே வருகிறார்கள். அப்புஷ்பங்களைத் திருமலையப்பனுடைய பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்க கையில் வைத்திருக்கும் போது, பெருமாளின் சீலகுணத்திலே உருகி நிற்கிறார்களாம். அதனால் அவர்களது கைகளிலிருந்து புஷ்பங்கள் அவசரமாகவே சிந்துகின்றனவாம். அப்படிச் சிந்தின புஷ்பங்கள் செவ்வி குன்றாமல் விகாஸமும் பரிமளவும் மல்கி விளங்குகின்றனவாம். திருமலையில் இத்தனை மலர்கள் கொட்டி(சிந்தி) வீணாகப் போகிறதே. இவற்றையெல்லாம் மாலையாகக் கட்டி பெருமாளுக்கு சமர்ப்பிக்கக் கூடியவர்கள் இல்லையா? என்று நினைக்கிறார்.

தம் சீடர்களைப் பார்த்து ‘‘யார் திருமலைக்குச் சென்று இந்த தொண்டில் ஈடுபடப் போகிறீர்கள்?’’ என்று கேட்கிறார்.யாருமே பதில் சொல்லவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அந்த மலையிலும் குளிரும் யார் போய் இருப்பது? அது மட்டும் காரணம் அல்ல. ராமானுஜரைப் பிரிந்து எப்படி இருப்பது? ஆனால் அப்பொழுது அனந்தன் என்கின்ற சீடர் எழுந்து, ‘‘தேவரீர் கட்டளை அதுவானால் இப்பொழுதே அங்கே போகிறேன். தங்கள் எண்ணத்தை நிறைவேற்றுகின்றேன்’’ என்று புறப்படுகின்றார். இந்த கோஷ்டியில் நீர் ஆண் பிள்ளை என்று அவருக்குப் பட்டம் சூட்டுகின்றார், ராமானுஜர். அன்று முதல் அவர் அனந்தாண் பிள்ளை என்ற திருநாமத்தோடு திருமலைக்குச் சென்று, ஒரு ஏரி வெட்டி, மிகப் பெரிய நந்தவனத்தை அமைத்து, பெருமாளுக்கு புஷ்ப கைங்கரியம் செய்கின்றார்.

கண்ணதாசன் கட்டிய மாலைகவியரசு கண்ணதாசன், திருமால் பெருமை என்கிற படத்தில் ஒரு அற்புதமான பாடலை எழுதி இருக்கிறார். ஒவ்வொரு பூக்களின் நிறத்திலும் அவர் பகவானின் பல்வேறு நிறங்களையும் குணங்களையும் கண்டதாகப் பாடி இருக்கிறார்.

``மலர்களிலே பல நிறம் கண்டேன்

திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்

மலர்களிலே பல மணம் கண்டேன்

அதில் மாதவன் கருணை மனம்

கண்டேன்’’

``பச்சை நிறம் அவன் திருமேனி

பவள நிறம் அவன் செவ்விதழை

மஞ்சள் நிறம் அவன் தேவி முகம்

வெண்மை நிறம் அவன் திருவுள்ளம்’’

வைணவத்தில் மட்டுமல்ல, சைவத்திலும் இந்த மலர் வழிபாடு முக்கியம், இதை திருநாவுக்கரசர் பாடிய ஒரு தேவாரப் பாடலால் நாம் தெரிந்து கொள்ளலாம்.

``சலம் பூவோடு தூபம் மறந்து அறியேன்

தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன்

நலந் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன்

உன்நாமம் என் நாவில் மறந்து அறியேன்

உலர்ந்தார் தலையில் பலிகொண்டு

உழல்வாய் உடலுள் உறு சூழை தவிர்த்து

அருளாய் அலைந்தேன் அடியேன்

அதிகைக் கெடில வீரட்டானத் துறை அம்மானே’’

அனேகமாக எல்லா சமயத்திலும், எல்லா வழிபாட்டு முறைகளிலும், மலர் வழிபாடு மிக முக்கியமானதாக இருக்கிறது. பாண்டிச்சேரி அன்னை, மலர் வழிபாட்டின் முக்கியத்துவத்தை குறித்து அற்புதமான விளக்கங்களை அருளியிருக்கிறார். அவர் எண்ணூறுக்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டு வழிபடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி அன்னை சாதகர்களிடம் விளக்கியுள்ளார்.

“ஒவ்வொரு மலரும் தனித்தனி குணாதிசயங்களைக் கொண்டவை; ஒவ்வொரு மனிதனும் மலர்களைப் போலத் தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்” என்று அன்னை சாதகர்களிடம் வலியுறுத்தினார். ஒரு மலர் தனக்கு என்று எதுவும் இல்லாமல், யாரையும் பாகுபடுத்திப் பார்க்காமல், எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லாருக்கும் பொதுவாக இருக்கிறது. அன்பு, இனிமை, மென்மை என அனைத்தையும் நமக்கே தருகிறது. ரோஜா தன்னிச்சையாகவே மலர்கிறது.

தன் அழகையும் மணத்தையும் பரப்புவதில் அதற்கு ஓர் எல்லையில்லா மகிழ்ச்சி. அது யாரிடமிருந்தும் எந்த லாபத்தையும், பிரதி பயனையும் எதிர்பார்ப்பதில்லை. இவ்வாறு எவன் ஒருவன் மலரின் உண்மைப் பண்புகளைப் பெறுகிறானோ, அவனே மிகவும் மகிழ்ச்சியானவன். இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவன்.” என்கிறார். அரவிந்தரும் அன்னையின் மலர் வழிபாட்டை ஆதரித்தார்.

யாகங்களில் மிக அற்புதமான யாகம் புஷ்ப யாகம். பிரம்மோற்சவத்தின் பின் புஷ்ப யாகத்தை நடத்தி நிறைவு செய்வார்கள். அதிலே கூடை கூடையாக மலர்களைப் பரப்பி அர்ச்சனை செய்வது விசேஷமாக இருக்கும்.வழிபாடுகளில் மலர் வழிபாடு மிக முக்கியமானது. சூட்சுமமானது. மகிழ்ச்சியானது. பகவானுக்கு எல்லையற்ற சந்தோஷத்தைத் தரக்கூடியது. எனவே நாம் மலர் வழிபாடு செய்வோம்.

முனைவர் ஸ்ரீராம்

Advertisement