மதிப்பை தக்கவைத்து கொள்
ஒரு மேடைப் பேச்சாளர் தன்னுடைய சட்டைபையிலிருந்து ஒரு 500 ரூபாய் தாளை எடுத்து இது என்ன என பார்வையாளர்களை பார்த்து கேட்டார். அனைவரும் இது ஒரு 500 ரூபாய் தாள் என கூறினார்கள். பின்னர், அதனை தரையில் கசக்கி வீசி எறிந்தபின் அது என்ன என கேட்டார். அப்போதும் அனைவரும் இது ஒரு 500 ரூபாய் தாள் என கூறினார்கள். பிறகு அதன்மீது ஒரு முத்திரையை குத்தி இப்போது இது என்னவென கேட்டார். இப்போதும் அனைவரும் இது ஒரு 500 ரூபாய் தாள் தான் என கூறினார்கள்.
உடனே, அம்மேடை பேச்சாளர் பார்த்தீர்களா ஒரு 500 ரூபாய்தாளானது நாம் என்ன செய்தாலும் அது தன்னுடைய மதிப்பை மாற்றி கொள்ளாமல் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அவ்வாறே நாம் அனைவரும் நம்முடைய குணத்தை திறனை எந்த இக்கட்டு வந்தாலும் எந்த சூழலிலும் மாற்றிக் கொள்ளாமல் நம்முடைய அவரவர்களின் தனித்தன்மையை பராமரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பின்னர், இந்த 500 ரூபாய் யாருக்கு வேண்டும் என கேட்டார். உடன் அனைவரும் எனக்கு... எனக்கு... என தத்தமது கைகளை உயர்த்தினார். ஆயினும் ஒரு இளம் வாலிபன் தடதடவென மேடைக்கு ஓடிவந்து அந்த 500 ரூபாய் தாள் தனக்கு வேண்டுமென தன்னுடைய கையை நீட்டி பறித்து கொண்டான்.
உடனே அந்த மேடை பேச்சாளர் பார்த்தீர்களா... நாம் அனைவருமே அந்த 500 ரூபாய் தாளை விரும்புகின்றோம், ஆனால், இந்த இவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒரே ஒருவர் மட்டும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார். ஆம் நம்மைச் சுற்றி ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அவைகளை ஒரு சிலர் மட்டுமே பயன்படுத்திக் கொண்டு தம்முடைய வாழ்வை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்கின்றனர்.
மற்றவர்கள் அந்த வாய்ப்பு நம் கையில் தானாக வந்த விழும். அதன்பின் நாம் பயன்படுத்தி கொள்வோம் என சோம்பேறியாக இருக்கின்றனர் என்று அந்த மேடை பேச்சாளர் தமது உரையை முடித்துக் கொண்டார். ஜனங்கள் மிகுந்த ஆரவாரத்தோடு கைகளை தட்டி அவர் சொன்ன கருத்தை வரவேற்றனர்.
இறைமக்களே, இந்த உலகத்தில் மனிதனை தவிர மற்ற அனைத்தும் தங்களது மதிப்பை தற்காத்துக் கொள்கின்றன. ஏனெனில், மற்ற அனைத்தும் தன்மானம் நிறைந்தவை. மனிதனும் ஒரு காலத்தில் தன் மானம் காத்து நடந்தான். அன்றைய காலகட்டத்தில் தன் மதிப்பிற்கு ஏதாகிலும் பங்கம் வரும் பட்சத்தில் தங்களை ஜீவனையே துச்சமாக எண்ணி உயிர் நீத்தனர். ஆனால், இன்றோ தன்மானம் என்ற ஒன்றை அநேகரிடத்தில் காண்பதே அரிதாயிருக்கிறது.
இதற்கான காரணம்தான் என்ன? என்று ஆராய்ந்து பார்த்தால்... அதற்கு கிடைக்கும் பதில் இதுதான். அன்று வாழ்ந்த மனிதன் இந்த உலகத்தை தனக்கு கீழ்ப்படுத்தி ஆண்டான். இன்றோ அதற்கு மாறாக இந்த உலகம் மனிதனை கீழ்ப்படுத்தி ஆண்டு கொண்டிருக்கிறது. தன் மதிப்பை இந்த உலகத்திடம் கொடுத்து விட்டபடியால் இந்த உலகம் அவனுடைய மதிப்பை தவிடு பொடியாக்கி விட்டது. இறைவேதத்தில், தன் விலையேறப்பட்ட மதிப்பாகிய சேஷ்ட புத்திர பாக்கியத்தை விற்றுப்போட்ட ஏசா, அதற்கான மதிப்பை அறிந்தபோது அவனால் அதை திரும்ப பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் யோசேப்போ, தன் ஜீவனுக்கே நஷ்டம் ஏற்படும் தருவாயிலும்கூட தன்னுடைய மதிப்பை காத்துக் கொண்டான், அதனால் தான் அவன் எதிர்ப்பார்த்த உயரிய பதவியை அடைந்தான்.
ஆம் அன்பானவர்களே, நம்முடைய மதிப்பை காத்துக் கொள்வது நம்மிடம் தான் உள்ளது. அதை உபயோகிப்பதும், உதாசீனப்படுத்துவதும் நம் கையில்தான் உள்ளது. வேதம் சொல்கிறது, ‘‘குறித்த காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது. முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது. அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு. அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை’’ (ஆபகூக் 2:3).
- அருள்முனைவர். பெ. பெவிஸ்டன்