தீராத நோய் தீர்க்கும் மருதமலை முருகன்
மருத மரங்கள் நிறைந்து காணப்படுவதால் இப்பகுதிக்கு மருதமலை என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். அதே நேரம் மலை முழுவதும் நோய் தீர்க்கும் அபூர்வ மூலிகை மரங்களும், செடிகளும் நிறைந்து காணப்படுவதால் ‘மருந்து மலை’ என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வருவோர் மீது மூலிகை காற்று படுவதால் உடல் நோய், மனநோய் தீர்ந்து நிம்மதி கிடைக்கிறது. கோயில் இரு மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு தேவஸ்தான பஸ், கார் அல்லது டூவீலர் மூலமும் செல்லலாம். ஆனால் 837 படிகள் கொண்ட மலைப்பாதையில் நடந்து சென்று முருகனை தரிசிப்பது, தனி இன்பம்தான். வயது முதிர்ந்தோரும், குழந்தைகளும்கூட பக்தி உற்சாகத்துடன் மலை ஏறி செல்வதைப் பார்க்கும்போது கண்கள் பனிக்கின்றன. படியேறி வரும் பக்தர்கள் இளைப்பாற ஆங்காங்கே எழில்மிகு மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மலை அடிவாரத்தில் சிறு முன்மண்டபம். அதனருகில் சற்று உயரத்தில், படிக்கட்டு தொடங்கும் இடத்தில், தான்தோன்றி விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த சுயம்பு விநாயகர் யானை முகத்துடன், உடலற்ற நிலையில் தும்பிக்கையை மலைமேல் உள்ள முருகன் ஆலயத்தை சுட்டிக் காட்டிய வண்ணம் வீற்றிருக்கிறார். மருதமலை முருகனை தரிசிக்கச் செல்வோர் இந்த சுயம்பு விநாயகரை தரிசித்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். மலைப் பாதையில் வாகனத்தில் செல்வோரும் முதலில் இவரை தரிசித்த பிறகே செல்கிறார்கள்.
மலையின் நடுவே இடும்பன் கோயில் உள்ளது. வட்டமான பெரிய பாறையின் முன்பு காவடியை தூக்கிய நிலையில் இடும்பன் 2 அடி உயரத்தில் காட்சி அளிக்கிறார். குழந்தை இல்லாத தம்பதிகள் இங்குவந்து சிறு துணியில் தூளி (தொட்டில்) கட்டி இங்குள்ள பூசமரத்திலும், கோடாரி முறி மரத்திலும் தொங்கவிட்டு இடும்பனை மனமுருகி வழிபட்டு செல்கிறார்கள்; பயனடைகிறார்கள்.
இன்னும் மேலே சென்றால், குதிரையின் கால்தடம் படியின் ஒரு கல்லில் பதிந்து இருப்பதை காணமுடிகிறது. அதன் மேல் அழகான மண்டபம் கட்டி உள்ளனர். கோயில் நகைகளை திருடிச் சென்ற திருடர்களை குதிரையில் முருகப் பெருமான் விரட்டி வந்தபோது அந்த குதிரையின் கால்தடம் பதிந்ததாகக் கூறுகிறார்கள்.
மேலும் படியேறிச் சென்றால் வெட்டவெளியில் இரு மலைகளுக்கு நடுவில் இதயம் போல அமைந்துள்ள கோயிலை கண்டதும் நம் இதயம் குளிரும். படிகள் முடியும் இடத்தில் ஆதி மூலஸ்தானம் உள்ளது. இங்குள்ள சந்நதியில் முருகன், வள்ளி - தெய்வானையுடன் லிங்கவடிவில் காட்சி அளிக்கிறான். இங்கு பூஜை நடந்த பிறகுதான் கோயில் மூலவருக்கு பூஜை நடக்கும்.
ஆதி கோயிலுக்கு அருகே மருதமலை மூலஸ்தானம் உள்ளது. மூலவர் சிலை பாம்பாட்டி சித்தரால் வடிக்கப்பட்ட அற்புத உருவம் ஆகும். பழனி முருகனைப் போல வலது திருக்கரத்தில் ஞானத்தண்டம் ஏந்தி, இடது கையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார் முருகன். தினமும் இரவில் அர்த்தஜாம பூஜையின்போது முருகப்பெருமானை தண்டபாணி கோலத்தில் தரிசிக்கலாம். வேட்டி மட்டும் அணிந்திருப்பார். சந்தனக் காப்பு, விபூதிக் காப்புடன் சின்னஞ்சிறு குழந்தை போல மந்தகாசப் புன்னகையுடன் காட்சி அளிக்கும் மருதமலையானை விட்டு நம் கண்கள் அகல மறுக்கும். ராஜ அலங்காரத்தில் கம்பீரமாக அருளும் முருகனை தரிசித்தால் நம் பிறவிப்பயனை அடைந்த திருப்தி ஏற்படும்.
கோயில் மூலவரான முருகனுக்கு வலப்புறம் சிவபெருமான் பட்டீசுவரராக கோயில் கொண்டு அமர்ந்துள்ளார். இடப்புறம் பார்வதி மரகதாம்பிகையாக சந்நதி கொண்டு அருள்பாலிக்கிறார். அதனால் இது சோமாஸ்கந்த தலம் என அழைக்கப்படுகிறது. இயற்கையாகவே மருதமலையை முருகன் உருவமாகவும், கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலையை சிவன் உருவமாகவும், நீலி மலையை பார்வதி அன்னை உருவமாகவும், இந்த மூன்று மலைகளும் சேர்ந்து சோமாஸ்கந்த மூர்த்தமாக அமைந்து அருள்பாலிப்பதாக பேரூர் புராணம் கூறுகிறது.
மருதமலையில் மருததீர்த்தம், கன்னிதீர்த்தம், கந்த தீர்த்தம் என 3 தீர்த்தங்கள் உள்ளன. மழை இல்லாத காலத்தில் ஊற்று நீராக கசிந்து வரும் இந்த தீர்த்தங்கள் நோய் தீர்க்கும் மருந்தாகவும் திகழ்கின்றன.
மருதமலை மூலவர் கோயில் முன்னுள்ளது பழமையான பஞ்சவிருட்சம். கொரக்கட்டை, இச்சி, ஆலமரம், வக்கனை, அரசமரம் என 5 மரங்கள் ஒன்றாக பிணைந்து காட்சியளிக்கின்றன. மரத்தடியில் அருள்பாலிக்கும் விநாயகர், மற்றும் வேல் முருகனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் பில்லி சூனிய தீவினைகள் தீரும், ஏழ்மை அகலும், தொழில் விருத்தியடையும் என நம்பப்படுகிறது. கோயிலின் தல விருட்சம், மருதமரம்.
பதினெண் சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர் விஷப் பாம்புகளை பிடித்து ஆட்டுவித்து வந்தார். அவற்றின் விஷத்தை எடுத்து மருந்தாக்குவார். பாம்புகடி பட்டவர்களுக்கு சிகிச்சையும் அளித்து வந்தார். அவர், 5 தலை நாகம் ஒன்று மருத மலையில் இருப்பதாக கேள்விப்பட்டு இங்கே வந்தார். ஒருநாள் பாம்பு புற்றுக்குள் கைவிட அங்கு சட்டை முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதை பார்த்து திடுக்கிட்டார். முனிவர் அறிவுரைப்படி, அன்றிலிருந்து சித்தர் பாம்புகளை பிடிக்கவில்லை. மலைமேலுள்ள ஆதி முருகனை தினமும் வழிபட்டு, வலப்பக்கம் கீழே உள்ள குகையில் அமர்ந்து தவம் செய்து, அட்டமா சித்திகளையும் அடைந்தார் என்கிறது கோயில் தலவரலாறு. அவர்தான் மருதமலையானின் மூலவர் சிலையையும் வடிவமைத்தார்.
இவருடைய குகை, இன்று பக்தர்களின் தோஷம் நீக்கும் சந்நதியாக விளங்குகிறது. கோயிலின் வலப்பக்கம் உள்ள மலைப்பாதை வழியாக இறங்கி இந்த குகையை அடையலாம். வலது கையில் மகுடி, இடது கையில் தடியுடன் சித்தர் அருள்பாலிக்கிறார். அருகில் சிவலிங்கம், நாகர் திருவுருவங்கள் உள்ளன. இவர் சந்நதியில் ஒரு பாறையில் 5 தலை நாக வடிவம் உள்ளது. இந்த வடிவிலேயே முருகப் பெருமான் சித்தருக்கு தரிசனம் தந்ததாக கூறப்படுகிறது. இந்த நாகத்தை முருகனாக வழிபடுகிறார்கள். அதற்கு பின்னால் சிவன், விநாயகர், அம்மன் மூவரும் ஒன்றாக அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள்.
முருகனுக்கு பூஜை முடிந்ததும் சித்தருக்கு பூஜை நடத்தப்படுகிறது. இவருக்கு தினமும் விபூதி அலங்காரம் செய்கிறார்கள். இந்த விபூதியை பிரசாதமாகவும் தருகிறார்கள். நாகதோஷம் உள்ளவர்களும், விஷக் கடியால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த விபூதியை நீரில் கரைத்துக் குடித்தால் நோய் குணமாவதாகவும், சரும நோய் உள்ளவர்கள் இந்த விபூதியைப் பூசிக்கொண்டால் நோய் தீரும் என்பதும் நம்பிக்கை.
கோவை ரயில் நிலையத்தில் இருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது இக்கோயில். காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து பஸ் வசதி உள்ளது.