பெண்கள் வழிபடாத முருகன்
திருப்பூருக்கு அருகேயுள்ள வீரகுமாரசாமி தலத்தில் அமைந்துள்ள கோயிலில் எழுந்தருளியுள்ள முருகன் வித்தியாசமானவர். இவர் கால்களில் பாதக்குறடு அணிந்து உடலில் கவசம் பூண்டுள்ளார். இடுப்பில் கச்சை, உடைவாள், குத்துவாள், கையில் சூலாயுதம், காலச்சக்கரம் தரித்துள்ளார். வீரத்தோற்றத்தில் அவர் கன்னி குமாரனாகக் காட்சி தருவதால் பெண்கள் இவரை வழிபடுவதில்லை. இங்கு வரும் பெண் பக்தர்கள் மூலவரான இவரை தரிசிக்காமல் சப்த கன்னியரை மட்டும் வழிபட்டுச் செல்வது வழக்கம்.
தியான கோலத்தில் முருகன்
நாகை மாவட்டம் அருகில் உள்ள திருமங்கலம் திருத்தலத்தில் அமைந்துள்ள சிவாலயத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள முருகன் சிற்பத்தைக் காணலாம். 4 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட இந்த முருகன், வலதுகாலை மடித்தும், இடதுகாலை தொங்கவிட்டும், தியானகோலத்தில் காணப்படுகிறார். கிரீட மகுடம், கழுத்தணி, சூலம் போன்ற தொங்கலணியுடனும், அபய கரத்துடனும் காட்சி தருகிறார். இது ஓர் அற்புதமான தரிசனம் என்பர்.
முருகன் கோயிலில் சடாரி
பஞ்சவேல் முருகன் கோயில் பல்லடம் மலைப்பாளையம் அருகில் உள்ளது. நடுவில் ஒரு வேலும் அதைச்சுற்றி நான்கு வேல்களும் நடப்பட்டிருக்கின்றன. நடுவிலிருக்கும் வேலை தரையிலிருந்து பெயர்த்து எடுக்க முடியாது. இந்த ஐந்து வேல்களுக்கும் தினமும் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐந்து வேல்கள் இருப்பதால் இக்கோயிலை பஞ்ச வேல்முருகன் கோயில் என்று போற்றுகிறார்கள்.
தாமரை மீது முருகன்
விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கத்தில் பசுபதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள ‘வெற்றி முருகன் சந்நதி’ வித்தியாசமானது. இங்கு அருள்புரியும் முருகப்பெருமான், தாமரை மலர்மீது அமர்ந்து ஒரு கரத்தில் வஜ்ரம் கொண்டுள்ளார். வஜ்ராயுதம் இருப்பதால் சக்தியின் அம்சமும், தாமரை மலர்மீது அமர்ந்துள்ளதால் கலைமகள் அம்சமும் கொண்டு திகழ்கிறார். இவரை வழிபட வீரத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கலாம் என்பர்.
சடாரி சாத்தப்படும் முருகன் கோயில்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுக்காவில் அமைந்துள்ளது குன்னத்தூர். இங்கு முருகனை வழிபட நூறு படிகள் ஏறிச் செல்லவேண்டும். சிரித்த முகத்துடன், கையில் தண்டம் ஏந்த பக்தர்களுக்கு தண்டபாணியாக அருளாசி வழங்குகிறார். இங்கு பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கியதும், திருவிழா காலங்களில் பெருமாள் கோயில்களைப் போல தலையில் சடாரி சாத்தி வாழ்த்துகிறார்கள். திருவண்ணாமலை மற்றும் ஆரணியிலிருந்து போளூர் செல்லும் பேருந்துகளில் சென்று ஆர்.குன்னத்தூரில் இறங்கி அரை கி.மீ. நடந்தால் கோயிலை அடையலாம்.
பெண் அலங்காரத்தில் முருகன்
கோவை மாவட்டத்தில் உள்ளது சீரவை. இங்கு கோயில் கொண்டு அருள்புரியும் முருகப் பெருமான் திருத்தண்டு ஊன்றிய கோலத்தில் காட்சி தருகிறார். விசேஷ நாட்களில் முருகப்பெருமானை வேடன், ராஜர் மற்றும் பெண் போன்ற கோலங்களில் அலங்காரம் செய்வர். இவற்றில் பெண் கோலத்தில் முருகப்பெருமான் மிக அழகாகக் காட்சி தருவார். இந்தக் கோலத்தில் வழிபட, திருமணத்தடை நீங்கி கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது
யோக நிலையில் முருகன்
முருகப் பெருமான் யோக நிலையில் ஓர் தலத்தில் எழுந்தருளியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே குமாரவடி அழகேஸ்வர பெருமான் கோயிலில் யோகநிலையில் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ளார். இத்தலம் வந்து வழிபடுவோருக்கு ஞானம்
சித்திக்கும் என்பர்.
ஜெயசெல்வி