பிரேதாத்மாவிற்கும் அருளும் அனுமன்!
கர்நாடக மாநிலம், தும்கூர் என்னும் இடத்தில் எண்ணற்ற பல அனுமன்களை தரிசித்து வருகிறோம். அந்த வகையில், கூளூர் இடத்தில் ``சூலத’’ என்னும் திருநாமத்தில் வீற்றிருக்கிறார். இக்கோயிலுக்கு, சூலத கோயில் என்றே பெயர். இந்த கோயிலுக்கு சென்றவுடன் சீதா, லட்சுமணன், அனுமன் ஆகியோருடன் ராமர் இருக்கும் அழகிய ஆர்ச் நம்மை
வரவேற்கிறது.
அமைதியான கோயில்
அந்த ஆர்ச்சில் இருந்து சுமார் அரை கி.மீ., தூரம் வரை உள்ளே சென்றால்தான் சூலத அனுமனை நாம் தரிசிக்க முடியும். கோயில் தோற்றமே மிக அருமையாக இருக்கிறது. மரங்களும், செடிகளும் நிறைந்து காணப்படுவதால், மிகவும் அமைதியான சூழல் நிலவுகிறது கோயிலில். கூட்டங்கள் நிரம்பி வழிகின்றன. பார்க்கிங்கிற்கு இடமில்லாது வண்டிகள் திணறுகின்றன. இருந்தபோதிலும், துளிகூட பரபரப்பு இல்லாது கோயில் காணப்படுகின்றது. சந்நதி முன்பாக கொடிமரம் உள்ளது. அங்கு நெய் விளக்கேற்றி வழிபாடு செய்த பின்னர் சூலத அனுமனை தரிசிக்கிறார்கள், பக்தர்கள்.
மிக பெரிய திருமண் வைத்தும், முகத்தில் செந்தூரம் பூசியும், பல மலர்களினால் அலங்காரங்கள் செய்தும், சூலத அனுமன் காணப்படுகிறார். மனப்பதற்றம், அச்சம் ஆகிய மனரீதியான பிரச்னைகளுக்கு இந்த அனுமன் நிவர்த்தி செய்கிறார். அதே போல், சூலத அனுமனின் பாதத்தில் மஞ்சள் நிற தாயத்தினை வைத்து பூஜிக்கப்படுகிறது.
சுற்றித்திரியும் பிரேதாத்மா
இந்த தாயத்தினை, பூஜை முடிந்தவுடன் பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. மேலும், இத்திருக்கோயிலில் திருமணம், வளைகாப்பு, உபநயனம், போன்ற சுபகாரியங்களும் நடைபெறுகின்றன. அதுயென்ன சூலத அனுமன்? என்று கேள்வி எழலாம். முன்னொரு காலத்தில், ராஜாக்கள் தங்களின் எதிரிகளை கொன்று புதைக்கப்படும் இடமாக கூளூர் இருந்திருக்கிறது. அதாவது, இன்னும் விளக்கமாக சொல்லவேண்டும் என்று சொன்னால், அந்த காலத்தில், ராஜாக்களின் உத்தரவின் பெயரால் எதிரிகளை குறிபார்த்து கழுத்தை துண்டிப்பார்களாம். தலை தனியாக உடல் தனியாக கிடப்பதில், தலையை மட்டும் எடுத்துக்கொண்டு ராஜாவின் காலடியில் வைப்பார்களாம்.
அதன் பின்னர், தலையையும் உடலையும் தனித் தனியாக புதைத்துவிடுவார்களாம். அவைகளெல்லாம், பூத பிசாசுகளாக அங்கேயே உலாவியும், மக்களை தொந்தரவு செய்தும் வந்திருக்கிறது.
அந்த சமயத்தில்தான், மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர், சூலத அனுமனை பிரதிஷ்டை செய்து, மக்களை காப்பாற்றியுள்ளார். ``சூலத’’ என்னும் கன்னட சொல்லின் தமிழ் அர்த்தம், ``கழுத்து’’ என்பதாகும். ஆகையால், கழுத்து அறுபட்டு சுற்றித்திரியும் பிரேதாத்மாவுக்கு அனுக்கிரகம் செய்து, அடுத்த பிறவிக்கு வழிவகை செய்கிறார்.
இரவு வரை
எப்போதும் போல், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன்களின் அடையாளமாக அனுமனின் தலைப்பகுதியில் வால் சென்றும், அதில் சிறிய மணி ஒன்று காணப்படும். இவருக்கும் அந்த அடையாளங்கள் காணப்படுகின்றன.
அனுமன் ஜெயந்தி அன்று, கூளூரே திருவிழா கோலம் கொண்டிருக்கும். அன்றைய தினம் மக்கள் திரளானோர் வந்திருந்து, சூலத அனுமனை தரிசித்துவிட்டு, அங்கு வழங்கும் அன்னதானத்தை உண்டு, மாலை வேளைகளில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கு கொண்டு, இரவில்தான் தங்களின் வீட்டிற்கு செல்கிறார்கள், பக்தர்கள். அத்தகைய கோலாகலமாக நடைபெறும், அனுமன் ஜெயந்தி.
*திறந்திருக்கும் நேரம்: காலை: 9.45 முதல் 12.30 மணி வரை மட்டுமே கோயில் திறந்திருக்கும். சனிக் கிழமைகளில் காலை 6.30 முதல் மாலை 6.30 வரை திறந்திருக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 7.30 முதல் 3.00 வரை மட்டுமே திறந்திருக்கும்.
*எப்படி செல்வது: தும்கூரில் இருந்து 9.கி.மீ., பயணித்தால், இக்கோயிலை அடைந்துவிடலாம். தொடர்புக்கு: 09880457667.