தடைகளை தகர்க்கும் விநாயகர்
சமீபத்தில் broken window theory என்றொரு விஷயத்தைப் படித்தேன். ஒரு கண்ணாடிக் கதவோ அல்லது ஒரு சாதாரண ஜன்னலோ விரிசல் கண்டு விடுகிறது. நீங்கள் அதை அப்படியே விட்டு விடுகிறீர்கள். மெல்ல மெல்ல அந்த விரிசல் பெரிதாகின்றது. கண்ணாடியின் விரிசல் கதவுகளுக்குள்ளும் ஊடுருவுகின்றது. எப்படியெனில், அந்தச் சிறு விரிசலின் வழியே காற்று உள்ளே போகிறது.
அது கண்ணாடியின் விரிசலை அதிகமாக்குகிறது. பல வருடங்களுக்கு விட்டுவிட்டால் அந்தக் கட்டிடத்திலுள்ள எல்லா கண்ணாடிக் கதவுகளும் விரிசலுற்றிருப்பதை பார்க்கலாம். இதை கவனித்த மேலை நாட்டவர்கள், மனிதனுக்குள் இருக்கும் சோம்பல் இப்படித்தான் அவனை பாதிக்கின்றன. இதையே broken window, உடைந்த கதவுகள் என்று கோட்பாடாகவே மாற்றியிருக்கிறார்கள்.
உதாரணமாக... நீங்கள் இன்றே செய்தேயாக வேண்டிய சிறு வேலையை தள்ளிப் போடுகிறீர்கள். உடலில் கொஞ்ச நாட்களாகவே வலியிருக்கிறது. அதை அப்படியே அலட்சியப்
படுத்துகிறீர்கள். படித்தேயாக வேண்டிய விஷயத்தை புத்தகத்தை அப்படியே வெகுநாட்களாக வைத்திருக்கிறீர்கள். சிறிய கடனாக இருக்கும்போதே அலட்சியமாக அதை அடைக்காமல் இருந்து விடுகிறீர்கள்.
உங்கள் பிள்ளைகளை பார்த்து நீங்கள் உண்மையில் என்ன படிக்கிறீர்கள்? என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்காமலேயே இருந்து விடுகிறீர்கள். எப்படியாவது பணம் வந்து விடும் என்று கடன் கேட்டவரிடம் பணத்தை கொடுத்து விட்டு அப்படியே விட்டு விடுகிறீர்கள். தவறான நபர் என்று தெரிந்தும் குருட்டு தைரியத்தில் பழகுகிறீர்கள். வெகு நாட்களாக போனில் பேச வேண்டுமென்று நினைத்த நபரிடம் நாளை பேசலாம். நாளை பேசலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறீர்கள். வீட்டில் சிறு ஒட்டடையை பிறகு அடித்து விடலாம். அகற்றி விடலாம் என்று நினைத்திருப்பீர்கள்.
மேலேயுள்ள எதையுமே நீங்கள் செய்யாமல் விட்டுவிட்டால் மெல்ல அந்த பிரச்னை பெரிதாகிக் கொண்டே செல்லும். சிறிய விஷயம் பிரமாண்டமாகி விடும். ஒருநாள் அது மிகப் பெரியதாக மாறி அச்சுறுத்தலாக மாறிவிடும். அப்போது நீங்கள், ‘‘முன்னரே இதை சரி செய்திருக்கலாமே...’’ என்று நினைப்பீர்கள். அதனால், தொடக்கத்திலேயே ஒரு விஷயத்தை சரி செய்து விட வேண்டும். இல்லையெனில், அது உங்களின் வாழ்க்கைப் போக்கையே மாற்றி விடும்.
இதற்கு யோகப் பூர்வமாக என்ன காரணம் என்று நமது மதம் ஆராய்ந்திருக்கிறது. உங்களின் மூலாதாரம் என்கிற யோகச் சக்கரம் விழிக்கவில்லை. அதனாலேயே, தொடக்கத்தை சரியாக கையாளத் தெரியவில்லை. எதைத் தொடங்கினாலும், அதில் தடை இருந்தால் அதை பார்க்கத் தெரியாது. இவ்வளவுதானே என்று அலட்சியமாக சென்று விடுகிறீர்கள். இதற்கெல்லாம் மூலாதாரம் என்கிற யோக சக்தி விழிக்காது இருக்கும். அப்படி எதிலும் எந்தத் தடையும் வரக்கூடாது என்பதற்காகவே விநாயகரை வழிபடுகின்றோம்.
இந்த வழிபாடு தொடக்கத்தில் சாதாரணமாகத் தெரிந்தாலும், உங்களின் பிராணனை சரிசெய்து மிகப் பெரிய சாதனைகளை செய்யச் செய்யும். அதனாலேயே விக்னங்களை அதாவது தடைகளை தகர்க்கும் விநாயகர் என்று சொல்கிறோம். எனவே, விநாயகரை தொழுது விட்டு தொடங்குங்கள். வெற்றியைப் பற்றிய கவலையை விட்டுவிடுங்கள்.
கிருஷ்ணா( பொறுப்பாசிரியர்)