தடைகளை தகர்க்கும் மஹாகணேசர்
காமேஸ்வர முகாலோக கல்பித ஸ்ரீ கணேஸ்வரா…
இந்த நாமங்கள் இரண்டும் நமக்கு என்ன காண்பித்துக் கொடுக்கிறது? பண்டாசுர சைன்னியத்தை சக்தி சைன்னியம் அழிக்கும்போது அஞ்ஞான விருத்திகளெல்லாம் சம்ஹரிக்கப்படுகிறது என்று பார்த்தோம். பண்டபுத்திரர்களை பாலா சம்ஹாரம் செய்யும்போது ending of time நடக்கிறது என்று பார்த்தோம். விஷங்கனை மந்த்ரிணி சம்ஹாரம் செய்யும்போது, நமக்குள் இருக்கும் சூட்சுமமாக இருக்கும் விருத்திகள் அழிக்கப்படுகிறது என்று பார்த்தோம். விசுக்ரனை வாராஹி சம்ஹாரம் செய்யும்போது ஸ்தூலமான விருத்திகள் சம்ஹாரம் ஆகின்றது என்று பார்த்தோம்.இப்படியே ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வரும்போது, இப்படி சாதகன் முன்னேறிக் கொண்டே வரும்போது … எப்படி பண்டன் எப்படி விக்னத்தை கொண்டு வந்து வைத்தானோ அதுபோல இந்த சாதகன் அத்யாமமாக முன்னேறும்போது மூல அஞ்ஞானம் இவனது வளர்ச்சியை தடுத்து நிறுத்தும். அநாதி காலமாக கர்ம வாசனையினால் இருக்கும் மூல அஞ்ஞானம் வேலை பார்க்கத் தொடங்கத் தொடங்கும். அப்போதுதான், நம்மையும் அறியாமல் நமக்குள் ஒரு விஷயத்தை மூல அஞ்ஞானம் செய்யத் தொடங்கும். அப்படி மூல அஞ்ஞானம் செய்யக் கூடிய செயலுக்குத்தான் விக்னம் என்று பெயர்.
அந்த விக்னம் எங்கு நடக்குமெனில், நம்முடைய மூலாதாரத்தில் கொண்டு போய் அந்த மூல அஞ்ஞானத்தை வைக்கும். நம்முடைய சக்கரங்களிலேயே முதல் சக்கரங்கள் இருக்கிறதல்லவா… ஆரம்பச் சக்கரம். அந்த மூலாதாரத்தில் கொண்டுபோய் அந்த விக்னத்தை வைக்கிறது. அந்த விக்னத்தை வைத்தவுடன் என்ன ஆகும்? நாம் முன்னேறி முன்னேறி வானத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கும் போது, சட்டென்று மூலாதாரத்தில் அழுத்தி எல்லாவற்றையும் கீழே இழுத்தால் எப்படி இருக்கும். விரிந்து விரிந்து போய்க்கொண்டிருந்தவன் அப்படியே சுருங்கி, மூலாதாரத்தை நோக்கி சுருங்கிப்போய் விடுகிறான். இந்தச் சுருங்கிப் போவதால் என்ன நடக்கிறது? நான் தேகத்தை தவிர வேறெதுவுமே இல்லை. நாம் இந்த மனதைத் தவிர வேறொன்றுமே இல்லை. நான் இந்த தேகம் என்கிற தீவிரமான தேகாபிமானம் வந்து விடும். ஏன் இது மூலாதாரத்தில் நடக்கிறதெனில், இந்த மூலாதாரம்தான் பூ ஸ்பரிசம். பூமியோடு இணைக்கக் கூடியது. மூலாதாரத்தில்தான் நமக்கு தேகாத்ம புத்தி அதிகமாக இருக்கும். ஒவ்வொரு சக்கரங்களாக கடப்பது என்பதை இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு சக்கரங்களாக கடக்கும்போது தேகாத்ம புத்தி குறைகிறது என்று பொருள்.
மூலாதாரத்தில் தீவிரமான தேகாத்ம புத்தி இருக்கும். சுவாதிஷ்டானத்திற்கு வரும்போது கொஞ்சம் குறையும். மணிப்பூரகத்திற்கு வரும்போது இன்னும் கொஞ்சம் குறையும். அநாகதம், விசுக்திக்கு வரும்போது பாதிக்குப்பாதி குறையும். ஆக்ஞா, சகஸ்ராரத்திற்கு வரும்போது நூறு சதவீதம் குறையும். துவாத சாந்தத்திற்கு வரும்போது தேகாத்ம புத்தி சுத்தமாக இருக்காது. தேகத்தை கடந்து விடுகிறான். இப்போது தேகாத்ம புத்தி மூலாதாரத்தில் அதிகமாக இருக்கிறது. அதனால், மூலாதாரத்தில் இந்த விக்னத்தை வைத்தால்தான் இந்த ஜீவனை பிடித்து வைக்க முடியும். இப்போது ஜீவனுக்கு என்ன நடக்குமெனில், அந்த சக்தி சைன்னியங்களுக்கு நடந்தது அது எல்லாமுமே இவனுக்கும் நடக்கும். மனசும் உடம்பும் சோர்வாகி விடும். மனசுக்கும் உடம்புக்கும் வலிமை இருக்காது. ஒரு விஷயத்தை செய்ய வேண்டுமென்று நினைத்தால் செய்ய முடியாது. ஆர்வம் இருக்காது. தாழ்வு மனப்பான்மை வந்துவிடும். கூனி உட்கார்ந்து விடுவோம். சோம்பல் வரும். இங்கு விஷயம் என்னவெனில், இவ்வளவும் வெளிப்படையாக தெரிந்து நடந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை.
ஒஹோ… இதுதான் பிரச்னையா என்று கடப்பதற்கு முயற்சிப்போம். ஆனால், எதுவுமே தெரியாமல் நடக்கும். அதுதான் இங்கு விஷயம். நமக்கு என்ன நடக்கிறது என்றே நமக்குத் தெரியாது. பகவத் கீதையில் முதலில் எடுத்தவுடனே அர்ஜுன விஷாத யோகம் என்று வரும். பகவான் கிருஷ்ணனிடம் அர்ஜுனன் விண்ணப்பம் செய்வான். அது என்னவெனில், ‘‘பகவானே… நான் குழப்பத்தில் இருக்கிறேன். என்னைக் காப்பாற்று’’ என்பான். இது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? அவன் குழப்பத்தில் இருக்கிறான் என்பது தெரிகிறது. பெரிய விஷயம். குழப்பத்தில் இருக்கிறோம் என்பதே தெரியவில்லையெனில் அது ரொம்பவும் கஷ்டமாகும். நான் குழப்பத்தில் இருக்கிறேன் என்பதில் குழப்பமில்லாமல் இருக்கிறான். இது மிகவும் தெளிவான நிலையாகும். அதனால்தான், கிருஷ்ணன் குரு உபதேசம் கொடுத்து காப்பாற்ற முடிந்தது. இங்கு முக்கியமான விஷயம் என்னவெனில், குழப்பத்தில் இருக்கிறோமா இல்லையா என்பதெல்லாம் பிரச்னை இல்லை. குழப்பத்தில் இருக்கிறோம் என்பதுதான் நல்ல நிலை. இதைப் புரிந்து கொண்டால் போதும்.
இப்போது இந்த விக்ன யந்த்ரம் என்ன செய்கிறதெனில், குழப்பத்தை உண்டு பண்ணுவது மட்டுமல்ல. அந்த குழப்பத்தில் நாம் இருக்கிறோம் என்பதே தெரியாமல் ஒரு மேக மூட்டம்போல் கொண்டு சென்று விடுகிறது. ஒரு புகை மூட்டத்தை உண்டாக்கி விடுகின்றது. எதனால் இது என்று தெரியாமல் அப்படியே நின்று விடுவோம். இதற்குப் பெயர்தான் விக்னம். இதற்குப் பெயர்தான் obstacles, hindrance ஆகும். இப்போது இந்த இடத்தில் அம்பிகை என்ன செய்வாள் எனில், ரொம்பவும் முக்கியமான விஷயத்தை செய்வாள். இப்போது ஜீவனுக்கு ஒரு உபதேசம் செய்ய வேண்டுமென்றால் கூட நேரடியாக உபதேசம் செய்ய முடியாது. அர்ஜுனனுக்கு இருந்த தெளிவு கூட இங்கு இல்லை. ஆனாலும், காப்பாற்ற வேண்டும். எப்படிக் காப்பாற்றுகிறாள் எனில், அம்பாள் யோக சக்தி மூலமாக வந்து காப்பாற்றுகிறாள். இந்த இடத்தில்தான் யோகத்தின் முக்கியத்துவம் நமக்கு தெரியும். ஒருசில நாமங்களில் ஞானத்தினுடைய முக்கியத்துவத்தை பார்ப்போம். ஒருசில நாமத்தில் பக்தியினுடைய முக்கியத்துவத்தை பார்ப்போம். ஒருசில நாமத்தில் கர்மாவினுடைய முக்கியத்துவத்தை பார்ப்போம். தர்மத்தினுடைய முக்கியத்துவத்தை பார்ப்போம். உபாசனையினுடைய முக்கியத்துவத்தை பார்ப்போம்.
இந்த நாமாவில் நாம் எதைப் பார்க்கிறோமெனில், யோகத்தினுடைய முக்கியத்துவத்தை பார்க்கிறோம். யோகத்தினுடைய முக்கியத்துவம் என்னவெனில், யோகத்தினுடைய முக்கியத்துவத்தை காண்பிக்க யார் அங்கு வரவேண்டுமெனில், சாட்சாத் யோக மூர்த்தியாக இருக்கக் கூடிய, யோக சொரூபியாக இருக்கக் கூடிய மகா கணபதி அங்கு வரவேண்டும். அவர்தான் யோக மூர்த்தி. யோக சொரூபி. அவர் அங்கு வரவேண்டும். அவருடைய ஸ்தானம் எதுவெனில், மூலாதாரம். நாம் எந்த இடத்தில் இந்த விக்னம் தொடங்குகிறது என்று நினைக்கிறோமோ… எந்த இடமானது நம்முடைய தேகாத்ம புத்தியினுடைய தொடக்க புள்ளியோ... எந்த இடமானது நம்மை அப்படியே சுருக்கி குறுக்கி கூன வைக்கிறது என்று நினைக்கிறோமோ அந்த இடத்தில் விநாயகப் பெருமான் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார் எனில், அவர் மூலாதாரத்தில் இருப்பதால்தான் எந்தவொரு விஷயத்தை நாம் தொடங்கினாலும், முதலில் அவரை வணங்கி விட்டு தொடங்குகிறோம். ஏன் எந்த விஷயத்தை தொடங்கினாலும் விநாயகப் பெருமானிடமிருந்து தொடங்குகிறோமெனில், இதுதான் காரணம். எந்த விஷயமாக இருந்தாலும் அது மூலாதாரத்திலிருந்து தொடங்கும்.
அப்படித் தொடங்கும்போதே, அந்த விஷயத்திற்கான விக்னமும் அங்கு இருக்கும். அப்போது தொடக்கத்திலேயே விநாயகரை சென்று பிடித்து விட்டால், தொடக்கத்திலேயே அந்த விக்னத்தை அவர் தூள் தூளாக்கி விடுவார். பிறகு, அந்த விஷயம் நல்ல படியாக நடக்கும். இப்போது மூலாதாரத்தில்தான் இந்த தேகாத்ம புத்தியினுடைய தொடக்கப் புள்ளி இருக்கிறது. இந்த மூலாதாரம்தான் மகா கணபதியினுடைய ஸ்தானம். அந்த மகா கணபதி எப்படியிருக்கிறார் எனில், யோக மூர்த்தியாக இருக்கிறார். யோக சொரூபியாக இருக்கிறார். இப்போது அம்பிகை என்ன செய்கிறாள் எனில், தன்னுடைய ஆனந்தத்தையும், மகா காமேஸ்வரருடைய ஆனந்தத்தையும் சேர்த்து யோகானந்த மூர்த்தியான மகாகணபதி அங்கு ஆவிர்பவிக்கிறார். மூலாதாரத்திலுள்ள விக்னத்தை நீக்குகிறார். சுத்தமாக அழித்துப் போடுகிறார். உடல், மனம், புத்தி என்று எல்லா பக்கமும் புத்துணர்ச்சி வருகிறது. இதற்கு முன்னர் சொல்லப்பட்ட inferiority complex, insecuriry எல்லாமுமே போய் விடுகின்றது. சோம்பல், சோர்வெல்லாம் போய் விடுகின்றது. இந்த புத்துணர்ச்சியை விநாயகர் அருள்கிறார். விநாயகர் மூலமாக அம்பிகை அருள்கிறாள். ஆனால், இதை எப்படிக் கொடுக்கிறாள் என்று பார்ப்போம்.
நாம் இந்த தேகத்தையும், மனதையும், இந்த இந்திரியங்களையும், இந்த அந்தக்கரணத்தையும் நாம் என்று நினைத்துக் கொண்டு நம்மை நாமே தேகாத்ம புத்திக்குள் சுருக்கிக் கொண்டோம் அல்லவா? அப்படி சுருக்கினது மட்டுமல்லாமல்… கூனிக் குறுகி உட்கார்ந்து கொண்டோம் அல்லவா? அப்படி உட்கார்ந்ததற்கான காரணம் என்னவென்று பார்த்தால், இந்த தேகம், இந்த மனசு இதெல்லாம் கர்ம வயப்பட்டது. இந்த பிரபஞ்ச சிருஷ்டிக்கு உட்பட்டது. இதெல்லாம் கர்மா. நம்முடைய கர்மாவினால் வந்த விஷயம் என்று தாழ்வாக இந்த தேகத்தை, மனதை நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், மகாகணபதி உள்ளே வந்தாரெனில், கீழ்மையாக நினைக்கக் கூடிய அந்த எண்ண விருத்திதான் அந்த விக்ன யந்த்ரமே என்பதை அறிந்து அதை தூள்தூளாக்குகிறார். இங்கு உடைக்கும்போது என்ன காண்பித்துக் கொடுக்கிறாரெனில், ‘‘என்னுடைய அம்மா உனக்குள் ஆத்ம சொரூபமாக இருப்பதனால்… நீ எதையெல்லாம் கீழ்மையாக நினைத்துக் கொண்டிருந்தாயோ... அதெல்லாம் கீழ்மை அல்ல. எல்லாமே அம்மாதான் என்று காண்பித்துக் கொடுப்பாள். அதாவது, இந்த தேகம், மனம், புத்தி, சித்தம், அந்தக்கரணம் என்று எல்லாமே தெய்வீக அன்னையின் சொரூபம் என்று உனக்கு காண்பித்துக் கொடுப்பாள். உன் தேகமும் தெய்வீகமானது. உன் மனதும் தெய்வீகமானது.
உன் அந்தக்கரணமும் தெய்வீகமானது. இந்திரியங்கள் தெய்வீகமானது என்று காண்பித்துக் கொடுக்கும்போதுதான் அந்த புத்துணர்ச்சி வரும். அதுவரைக்கும் நாம் இவையெல்லாம் கார்மீகம் என்று நினைத்துக் கொண்டிருப்போம். அதாவது, result of karma என்று நினைத்துக் கொண்டிருப்போம். மேலே சொன்ன தேகம், மனது எல்லாம்தான் நமக்கு ஜென்மாவை கொடுத்தது என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், விநாயகர் என்ன செய்வாரெனில், இல்லை … இல்லை… இந்த தேகம், மனசு மூலமாகத்தான் ஆத்ம சொரூபத்தை உணரப் போகிறாய். இவை அனைத்துமே என்னுடைய அம்மா கொடுத்த பிரசாதம் என்று சொல்கிறார். அதுமட்டுமில்லை… உன்னுடைய சரீரத்தையே ஸ்ரீ சக்ரமாக வைத்து அம்மா ஆத்ம சொரூபமாக உட்கார்ந்திருக்கிறாள். இங்கு சரீரமே ஸ்ரீ சக்ரம் என்று பாவனோ உபநிஷத் சொல்கிறது. அப்போது ஸ்ரீ சக்ரம் சொரூபமாக இருக்கக் கூடிய சரீரம் எப்படி கீழானதாக இருக்க முடியும். So this is not something cheap. It is divine என்று காண்பித்துக் கொடுக்கிறாள். இந்த தெய்வீக நிலையை யோகத்தினால்தான் ஒருவன் அடைய முடியும். யோகம் என்றால் குண்டலீனியை எழுப்ப வேண்டுமா? அல்லது யோகா செய்ய வேண்டுமா என்றால் இல்லை.
முதலில் மகா கணபதியை பிடித்துக் கொள்ள வேண்டும். மகா கணபதியை பிடித்துக் கொண்டால் நம்மை எப்படி யோகத்திற்கு கொண்டு போக வேண்டுமோ அப்படி கொண்டு போவார். கண்ணை மூடி ஒரு கணம் உட்கார்ந்து மனமானது ஆத்ம சொரூபத்தில் லயித்தாலே அதுவே யோகம். குண்டலீனியா, அஷ்டாங்க யோகமா என்றெல்லாம் பிறகுதான். அந்த ஒரு கணம் லயம் இருக்கிறதல்லவா… அதை யார் கொடுப்பார் எனில், மகா கணபதிதான் கொடுப்பார். இந்த சாதகனை அம்பாள் என்ன செய்கிறாள் எனில், மகா கணபதி மூலமாக இந்த சரீரத்தை இந்த மனதை இந்த சாதகனுக்கு divinity ஆக காண்பித்துக் கொடுக்கிறாள். அப்படி divinity ஆக காண்பித்துக் கொடுக்கும்போது அங்கு விக்ன யந்த்ரம் எப்படி இருக்க முடியும். விக்ன யந்த்ரம் பொடிப்பொடி ஆகிவிடும். எல்லாமுமே இதற்குப் பிறகு தெய்வீகம்தான். அதனால், நம்முடைய யோகம் எங்கிருந்து தொடங்குமெனில், நம்முடைய உடலில் இருந்துதான் தொடங்கும். பிறகு மனசுக்குப் போகும். பிறகு ஆத்மாவைச் சென்று அடையும். இதை அஷ்டாங்க யோகத்தினுடைய ஒவ்வொரு படிநிலையிலும் சென்று பார்க்கலாம். யமம், நியமம் என்று சொல்கிறோம் அல்லவா…
யமமும் நியமும் எதைக் குறிக்கிறது. முழுக்க முழுக்க உடம்பைத்தான் குறிக்கிறது. யமமும் நியமும் இந்த சரீரத்திற்கு உட்பட்டதுதானே… யமம் …நியமம்…என்பது எதைச் செய்ய வேண்டும். எதைச் செய்யக்கூடாது என்பதுதானே. அதற்குப்பிறகு ஆசனம். சரீரத்திற்குரிய ஸ்திரத் தன்மை. அதற்குப்பிறகு பிராணாயாமம். பிராணனுக்குச் செல்கிறது. பிறகு பிரத்யாகாரம். இதில்தான் மனம் தொடப்படுகிறது. பிறகு தாரணை. பிறகு தியானம். சமாதி. தாரணையில் மனம் ஒருநிலைப்படுகிறது. தியானத்தில் மனம் நின்று போகின்றது. சமாதியில் ஆத்மாவை தொடுகின்றோம். நாம் sprit is divine என்று சொல்கிறோம். இது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். ஆனா, இங்கு மகா கணபதி நமக்கு பெரிய revelation ஒன்றை காண்பித்துக் கொடுக்கிறார். அதாவது, Not only the sprit, body mind everything connected which is also divine. Sprit is divine என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்த sprit. இருப்பதால்தானே பேச முடிகிறது. Sprit இருப்பதால்தானே சிந்திக்க முடிகிறது. ஆகவே இங்கு எல்லாமே divineதான். கங்கை புனிதமானது போல கங்கையோடு சம்மந்தப்பட்ட எல்லாமுமே புனிதமானதுதான்.(சுழலும்)
ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா