நிறைவேறாத ஆசையால்தான் ஏக்கம் வளருகிறது. ஆனால், ஆசை நிறைவேறிவிட்டால் அது குறையும்தானே?
?நிறைவேறாத ஆசையால்தான் ஏக்கம் வளருகிறது. ஆனால், ஆசை நிறைவேறிவிட்டால் அது குறையும்தானே?
- எம்.எஸ்.விஜய், சென்னை.
ஆசை அடங்காது. ஒருமுறை அனுபவித்துவிட்டால் அதைத் தொடர்ந்து அனுபவிக்கச் சொல்லும் விசித்திர நோய் அது. ஒரு சிறு குழந்தை தன் கையால் ஒரு மாம்பழத்தை பற்றிக் கொள்ளும். இரண்டு கைகளாலும் இரண்டு மாம்பழங்களை ஏந்திக்கொள்ள முடியும். மூன்றாவதாகவும் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டுமானால், கையிலிருக்கும் இரண்டு பழங்களும் கீழே விழ நேரிடும். ஆகவே ஆசைக்கு எல்லை வகுத்துக் கொள்வது நல்லது. ‘போதும்’ என்ற உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். சீனப் பழமொழி இது: ‘இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமே என்று நினைக்கிறாயா, அப்போது சாப்பிடுவதை நிறுத்திவிடு. உன் உடல்நலத்தில் எந்தக் குறையும் ஏற்படாதவாறு காக்கும் தந்திரம் இதுதான்’.
?வீட்டு விசேஷங்கள், திருவிழாக்களில் மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?
- தயா, பூம்புகார்.
மனிதர்கள் வெளியிடும் கரியமில வாயுவை அதிக அளவில் ஈர்க்கும் சக்தி மாவிலைக்கு உண்டு. மேலும், தொற்று நோய்க் கிருமிகளையும் ஈர்க்கும் சக்தி அதற்கு உள்ளது. எனவேதான் மனிதர்கள் அதிகம் கூடும் இடங்களில் மாவிலைத் தோரணம் கட்டுகின்றனர்.
?நீண்ட சிகைக்கும் ஆன்மிக பலத்திற்கும் சம்பந்தம் உண்டா? முனிவர்கள் பலர் ஜடாமுடி, தாடியோடு இருக்கக் காரணம் என்ன?
- தமிழரசி, கோலார்.
சிகை வைத்துக் கொள்வது என்பது நம் நாட்டின் கலாசாரம். சிகை வளர்த்துக் கொள்வதால் உடம்பில் ஏற்படும் உஷ்ணம் தணியும். கேசங்களை அழகாக வைத்துக் கொள்வதும், சவரம் செய்து கொள்வதும் சாஸ்திர விஷயமாக இருந்தாலும், அது ஒருவருக்கு அழகைக் கொடுக்கும். அத்தகைய சரீர அழகை புறக்கணிப்பதால் முனிவர்கள் நீண்ட தாடி ஜடா முடியுடன் இருக்கிறார்கள். எனினும் அதுவே அவர்களுக்கு ஓர் அழகாகிவிடுகின்றது. யோகிகளின் சிரசில் கத்தியை உபயோகித்து கேசத்தை எடுக்கக் கூடாது என்பதும் விதி.
?விவாகத்தின் தாத்பர்யம் என்ன?
- ஸ்மிதா, புதுவண்ணை.
விவாகம் மனிதனின் இரண்டாவது நிலையின் தொடக்கமாக உள்ளது. இது தர்மத்தைக் கடைப் பிடிப்பதற்கும். அதன்மூலம் வாழ்க்கை நல்வழியில் செல்வதற்கும் உதவும் சடங்காகும். வேதங்களில் கூறியுள்ளபடி தர்மமான வாழ்க்கையை நடத்தி பொருள், இன்பங்களை தர்மத்திற்குட்பட்டு அனுபவிப்பதே இல்லற வாழ்க்கை. ஒரு முப்புரி பூணூலை அணிந்து கொண்டிருந்த பிரம்மச்சாரி, கிருஹஸ்தனாகும் போது, அவனுடைய வாழ்க்கைத் துணைவிக்காகவும் சேர்த்து இரண்டு முப்புரி பூணூலை அணிந்துகொள்கிறான். விவாகம் ஒருவனுக்கு வைதீகச் சடங்குகளைச் செய்யக்கூடிய தகுதியை அளிக்கின்றது. இச்சடங்கில் முக்கிய அம்சங்கள் கன்யா தானம், மாங்கல்ய தாரணம் பாணிக்ரஹணம், ஸப்தபதி, லாஜஹோமம், கிரஹப்பிரவேசம், துருவா அருந்ததி தரிசனம் போன்றவையாகும்.
?அன்பே வடிவானவள் தாய். அன்னையாகிய காளி கோரரூபம் கொண்டிருப்பது ஏன்? கையில் ஆயுதம் ஏந்தித் தண்டிக்கும் நிலையில் இருப்பது ஏன்?
- கார்த்திக் குணாளன், கூடுவாஞ்சேரி.
குழந்தையை வளர்க்கும் அன்னை, அன்புடன் கொஞ்சிச் சீராட்டவும் செய்வாள்; தவறான வழியில் செல்லும்போது திட்டியும் அடித்தும் திருத்தவும் முற்படுவாள். ஆனால் இரண்டும் குழந்தையின் நன்மைக்காகச் செய்யப்படுபவைதான். பாலும் தேனும் கொடுப்பது போல நோயைத் தடுக்கவும் விலக்கவும் மருந்தும் தேனும் அவசியம். இறைவனைத் திருமாலின் வடிவில் காக்கும் கடவுளாக வேதங்கள் குறிப்பிடுகின்றன. கோபம் வந்து நெற்றிக்கண்ணைத் திறந்து எரிக்கும் சிவபெருமானாகவும் குறிப்பிடுகின்றன. ஒன்று அறக்கருணை; மற்றது மறக்கருணை. இரண்டுமே நமது நன்மைக்குத்தான். அதுபோல் அன்பே வடிவமாய் அம்பிகை இருந்தாலும் நம்மிடையே உள்ள தீயதை அழிக்க, கோரரூபம் கொண்டுள்ளாள்.
?காளை சிவனுக்குரிய வாகனம். ஆனால், பசு எந்த கடவுளுக்கும் வாகனமாகவில்லையே, ஏன்?
- மல்லிகா அன்பழகன், சென்னை.
காளை மாத்திரமல்ல, சிங்கம், மயில், யானை, கருடன் என இறை மூர்த்தங்களின் அனைத்து வாகனங்களும் ஆண்பால் சார்ந்தவையே. பெண்பால் உயிரினத்தை வாகனமாகக் கொள்வது நமது பக்தி கலாசாரத்தில் இல்லை. மேலும் இந்து மதத்தினைப் பொறுத்தவரை பசு மிகவும் புனிதமானது. சரஸ்வதி தேவியே கோமாதாவிற்கு பூஜை செய்வதை திரைப்படங்களில் பார்த்திருப்போம். பசுவிற்குள் முப்பத்து முக்கோடி தேவர்களும் அடக்கம் என்பதால் எந்த கடவுளுக்கும் பசு வாகனமாக
அமையவில்லை.
?பிரகலாதனின் வாழ்க்கை உலகிற்கு வழங்கிய செய்தி என்ன?
- ஹரி, அகோபிலம்.
பாலைவனத்தில் சந்தனமரம் தோன்றியதுபோல், அசுரர் கூட்டத்தில் பிரகலாதன் தோன்றினான். இறைத்தத்துவம் அண்ட சராசரத்திலுள்ள ஒவ்வொரு அணுவிலும் நிறைந்திருக்கிறது. இறைவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் என்பதை பிரகலாதனின் சரிதம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. பக்தர்களில் முதன்மையானவராக வைணவம் பிரகலாதனைக் குறிப்பிடுகிறது.