தெளிவு பெறுவோம்!
- பாபு கணபதி, துறையூர்.
தேவ குருவுக்குக்கூடத் தெரியாத சஞ்ஜீவினி மந்திரம் தெரிந்தவர்; அதன் மூலம், இறந்தவர்களைப் பிழைக்கச் செய்பவர்; தவம், கல்வி ஆகியவற்றில் தலைசிறந்தவர். சிவபக்தி மிகுந்தவர்; தான் இழந்திருந்த கண் பார்வையைக் கடும்தவம் செய்து, சிவபெருமானிடம் இருந்து பெற்றவர் எனப் பல்வேறு விதங்களில் புகழ்பெற்றவர் சுக்கிராசார்யார். ‘தாரா’ என்ற சொல், நட்சத்திரங்களில் இரண்டை மட்டும் குறிக்கும் என்பார்கள். சுக்கிரன், செவ்வாய் என்பவையே அவை. அடுத்தது, இந்த அண்டத்தையே அம்பிகையின் திருவடிவாகக் கொண்டால், அந்த அம்பிகை அணியும் இரு மூக்குத்திகள் வெள்ளியும் செவ்வாயும். வெள்ளைக்கல் மூக்குத்தி, வெள்ளி. சிவப்புக்கல் மூக்குத்தி, செவ்வாய். இதன் காரணமாகவே செவ்வாய், வெள்ளி அம்பாளைப் பூஜை செய் என்றார்கள். அதிலும் குறிப்பாக வெள்ளிக்கு ஏற்றம் கொடுத்து, வெள்ளிக்கிழமை அம்பாள் வழிபாடு என்றே சொல்லி வைத்தார்கள். சுக்கிரதசை அடிக்கட்டும்! சுபீட்சங்கள் வளரட்டும்!
அஷ்டலட்சுமிகள் என்று எட்டு விதமாகத் திருமகளை சொல்வது போல, சரஸ்வதி தேவிக்கு உண்டா?
- கமலா, சென்னை.
உண்டு. அம்பிகைக்கு ஸ்ரீ சக்கரம் என்று சொல்கிறோம் அல்லவா? அதில் ஒன்பது சுற்றுக்கள் உள்ளன. அவற்றை ஆவரணங்கள் என்பார்கள். அவைகளின் உள் சுற்றின் நடுவில், பிந்து மண்டலத்தில் அம்பிகை வீற்றிருக்கிறார். மற்ற எட்டு சுற்றுகளிலும் வாக்குத் தேவதைகள் எனப்படும் எட்டு விதமான சரஸ்வதிகள் எழுந்தருளி இருக்கிறார்கள். அந்த எட்டு சரஸ்வதிகளின் திருநாமங்கள்: வசினி, காமேசுவரி, மோதினி, விமலா, அருணா, ஜயினி, சர்வேஸ்வரி, கௌலினி என்பவை.வெளியில் சுற்றிவிட்டு
வீட்டிற்குள் வந்ததும், உடனே குடிநீர் குடிக்கக் கூடாது என்கிறார்கள் ஏன்?
- ராமசுப்பு, வேளச்சேரி.
வெளியில் உள்ள வெப்பம், காற்றழுத்தம் ஆகியவை அதிகமாக இருக்கும். அதில் இருந்து மீண்டு வீட்டிற்குள் நுழைந் ததும்,வீட்டிற்குள் இருக்கும் குறைந்த காற்றழுத்தமும் குறைந்த வெப்பமும் பழக்கப் படச் சற்று நேரமாகும். அதாவது வீட்டிற்குள் இருக்கும் வெப்ப - தட்ப நிலையை நம் உடம்பு ஏற்க, சற்று நேரம் ஆகும். அதன் பின்பே குடிநீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் உடம்பு பாதிப்படையாது. அதை விடுத்து, வெளியில் இருந்து வீட்டிற்குள் வந்ததும் குடிநீர் குடிப்பது, அதுவும் குளிர் சாதனப் பெட்டியில் இருந்து நீர் எடுத்து அருந்துவது, உடல் பாதிப்படையச் செய்யும். அதிலிருந்து நம்மைக் காப்பாற்றவே, வெளியிலிருந்து வீட்டிற்குள் வந்தால் உடனே தண்ணீர் குடிக்காதே என்றார்கள். விஞ்ஞான பூர்வமான உண்மை இது.
கல்யாண வீடுகள், கோயில் விசேஷங்கள் முதலான இடங்களில், வாழை மரங்களை நிறுத்தி, கட்டி வைப்பது ஏன்?
- ஸ்ரீ வித்யா, முசிறி.
மரம் - செடிகள் எல்லாம் கரியமில வாயுவை வாங்கிக் கொண்டு, பிராணவாயுவைக் கொடுக்கும். பலர் கூடும் இடங்களில் வெளிப்படும் கரியமில வாயுவால் சுற்றுப்புற சூழ்நிலை கெட்டு, ஆரோக்கியம் கெடும். அதை நீக்கவே நாம் வெளியிடும் கரியமில வாயுவை ஏற்றுக்கொண்டு, நமக்குத் தேவையான பிராண வாயுவை அதிக அளவில் வெளியிடும் வாழை மரங்களை நிறுத்திக் கட்டி வைத்தார்கள். வாழை என்பதற்கு மற்றொரு சிறப்பும் உண்டு. வாழை இலை, வாழை சருகு, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம், வாழைத் தண்டு, வாழைப்பட்டை, வாழை(அடிக்)கிழங்கு என அனைத்தும் உபயோகப்படுவது வாழையில் மட்டுமே! புதுமணத் தம்பதிகள் அவ்வாறு வாழ வேண்டும் என ஆசி கூறும் விதமாகவே வாழை மரங்களை தார்-பூ ஆகியவற்றுடன், நிறுத்திக்கட்டி வைத்தார்கள். மற்றொரு காரணம்: பலர் கூடும் இடங்களில் எதிர்பாரா விதமாகப் பாம்பு முதலானவைகளால் தீங்கு விளையலாம். அப்படிப்பட்ட நேரத்தில், வாழைப்பட்டையைப் பிழிந்து அதன் சாற்றைக் குடிக்கச் செய்தால், விஷ உபாதை நீங்கும். ஒரு வேளை அதற்குள் பற்கள் கிட்டிப் போய் விட்டால், பாதிக்கப்பட்டவரை வாழைப் பட்டைகளில் கிடத்தினால், கிட்டிப்போன பற்கள் தாமாகவே விலகும். வாழைப்பட்டைச் சாற்றைக் குடிக்கச் செய்யலாம். வாழையின் மருத்துவ குணங்களுக்காகவும் அவை, பொது மக்கள் கூடும் இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. முன்னோர்கள் நிபுணர்கள்.
ஆலயங்களில் நடக்கும் முக்கியமான உற்சவங்களை, நிகழ்வுகளை, நேரலை என்ற பெயரில் தொலைக் காட்சிகளில் காண்பிக்கிறார்கள். இவற்றைப் பார்ப்பதால், நேரே சென்று தரிசித்த பலன் கிடைக்குமா?
- வி.ரவீந்திரன், கன்னியாகுமரி.
தாராளமாகக் கிடைக்கும். சொல்லப் போனால், இதன் மூலம் விளையும் பயன் அதிகமாகவே இருக்கிறது. கோயில் களில் முக்கிய நிகழ்வுகள் நடக்கும் போது, நம்மால் அருகில் சென்று தரிசிக்க முடியாது. யாரேனும் முக்கியஸ்தர்கள் வந்து விட்டால், கேட்கவே வேண்டாம். தொலைக் காட்சி நேர்முக ஒலி பரப்பிலோ, கும்பலில் சிக்காமல் வீட்டில் இருந்தபடியே தெய்வத்தை மிக அருகில் தெளிவாகத் தரிசிக்கலாம். அடுத்து, என்ன உற்சவம் நடக்கிறது? என்ன செய்கிறார்கள்? ஏன் செய்கிறார்கள்? என்பவற்றை எல்லாம் அறியும் ஆர்வம் இருந்தாலும், யாரைப் போய்க் கேட்பது? உற்சவத்தில் ஈடுபட்டவர்கள் அதைக் கவனிப்பார்களா? நமக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பார்களா? தொலைக்காட்சி நேர்முக வர்ணனையில் ஒவ்வொரு நிகழ்வாகக் காண்பிக்கும் போது, அதை ஏன் செய்கிறார்கள்? இந்தக் கோயிலில் அதைச் செய்ய வேண்டிய காரணம் என்ன?எனும் தகவல்களுடன் குறிப்பிட்ட அந்த ஆலய வரலாறும், நேர்முக வர்ணனையாளர்களால் விவரிக்கப்படும். நேரில் போய்த் தரிசித்தால் கூடக் காணக்கிடைக்காத தெய்வக் காட்சிகளைப் பலவிதமான கோணங்களில், நேர்முக ஒலிபரப்பில் தரிசிக்கலாம். திருவிழாக் காலங்களில் அந்தக்கூட்ட நெரிசலில் சிக்கி, திருவிழாவைக் காணும் சுகம் ஒருமாதிரி; அந்தக்கூட்டத்தில் சிக்கி நசுங்காமல் வீட்டிலிருந்த படியே, அந்த ஆலய வரலாறு உட்படப் பலவிதமான அடிப்படை உண்மைகளை அறியச்செய்து, கண் முன்னே மிக அருகில் தெய்வ தரிசனம் செய்து வைக்கும், நேர்முக ஒலிபரப்பு ஒருமாதிரி; உயர்ந்ததுதான்.