ராசிகளின் ராஜ்யங்கள் சிம்மம்
சிம்மத்தின் சிறப்பு...
லத்தீன் மொழியில் லியோ என்பதற்கு சிங்கம் என்று பொருள். இந்த சிம்மம் சூரியனின் ஆட்சி வீடாக உள்ளது. இந்த வீட்டில் சூரியன் வரும் காலத்தில்தான் இரவு மற்றும் பகல் சம பாகங்களாக ஒளி வெள்ளத்தை தருகின்றது. சூரியன் என்பதை நிர்வாகம் என்றும் நிர்வகிக்க கூடியவன் என்றும் எடுத்துக் கொள்ளலாம். ராஜாவாக வலம் வரும் நபர்கள், உயரிய நிர்வாகத்தை கொண்டவர்கள், நிர்வாகத்தை திறம்பட செய்பவர்கள், தங்களுக்கு கீழ் ஆட்சி, அதிகாரத்தை உடையவர்கள் அனைவரும் சிம்மம் ராசியினை தொடர்பு உடையவர்களாக இருப்பா்.சிம்மத்தின் திரிகோண அதிபதிகளாக செவ்வாயும், வியாழனும் வருகின்றனர். இவர்களே அரசனுக்கு துணைபுரியும் காவல் தளபதிகளாகவும் மந்திரிகளாகவும் உள்ளனர். இவர்களிடம் ஆலோசனைப் பெற்றே சிம்மம் முடிவுகளை மேற்கொள்கிறது.
ஆத்மக்காரகன் என்று சொன்னால் அது சூரியனும், சூரியன் ஆட்சி பெறும் சிம்ம ராசியுமாகும். ஒருவனின் ஆத்மா இன்புற வேண்டுமெனில், சிம்மத்தில் உள்ள கிரகத்துடன் உள்ள நெருக்கத்தை அதனுடன் தொடர்புடைய காரகத்தையும் தொடர்பு கொண்டால் ஆத்ம திருப்தி கொள்வார்கள் என்பது ஜோதிடத்தின் எழுதப்படாத விதி.எல்லாவற்றிலும் தான் முன்னிலை படவேண்டும் என்ற எண்ணம் உண்டாகிக் கொண்டே இருக்கும். அதற்காக எல்லா பிரயத்தனங்களையும் இந்த சிம்மம் முன்னெடுத்துக் கொண்டே இருக்கும். தன்னால் மட்டுமே முடியும் என்ற சிந்தனை நம்பிக்கையையும் சில நேரங்களில் கர்வத்தை தரக்கூடிய அமைப்பாக சிம்மம் உள்ளது.
சிம்மத்தில் அதிக கிரகங்கள் இருந்தால் கர்வம் உண்டாகும். எனவே, ஒரிரு கிரகங்கள் இருந்தால் நன்மை உண்டு. சிம்மம் தன் தவறுகளை மறைத்துக் கொள்ளும், மற்றவர்களின் தவறுகளை கண்காணித்துக் கொண்டே இருக்கும். அடிப்படையிலான சில விதிகளை சிம்மம் தன்னை முன்னெடுக்க பக்கத்தில் ஒரு கோட்டை கிழித்து தன் கோடு மட்டுமே பெரியது என பெயரெடுக்கும் சாமர்த்திய தனத்தை கொண்டிருக்கும்.சிம்மம் பக்தியிலும் அன்பிலும் சிறந்து விளங்கக் கூடிய ராசியாக உள்ளது. எல்லாவற்றையும் பகிர்ந்து அளிக்கக்கூடிய ராசியாகவும் சமூகத்தின் பொதுத்தன்மையை முன்னெடுத்து அதில் தனது சிறப்புகளை செய்யும் ராசியாகவும் உள்ளது.இந்த ராசியானது அந்நியர்களால் அதிக பாதிப்படையும் தன்மையில் உள்ளது. உதாரணத்திற்கு சிம்மத்திற்குள் சனி, ராகு, கேது வரும் பொழுதும் பார்வை செய்யும் பொழுதும் அதிக பாதிப்புகள் உண்டாகின்றன. இந்த ராசி எப்பொழுதும் அரசுடனும் அரசின் நடவடிக்கைகளுடனும் தொடர்பில் இருக்கிறது.
சிம்மத்தின் புராணம்...
கிரேக்கத்தில் நீமியா என்ற இடத்தில் சிங்கம் ஒன்று இருந்தது. அவ்விடத்தில் வரும் மக்களை அந்த சிங்கம் கொன்று அச்சுறுத்தி கொண்டு இருந்தது. அதனால் மன்னன், ஹெராக்கிள்ஸிடம் அந்த சிங்கத்தை கொல்வதற்கு ஆணையிட்டான். அதன்படி, ஹெராக்கிள்ஸ் முதலில் அம்புகளை பயன்படுத்தி சிங்கத்தை தாக்கினார். ஆனால், சிங்கத்தின் தோல் கனமாக இருந்ததால் அம்புகள் உடலில் எய்தவில்லை. பின்பு, சிங்கத்தின் கழுத்தை நெறித்து கொன்று அதன் தோலை தனக்கு கவசமாக அணிந்து கொண்டார் ஹெராக்கிஸ் என்கிறது புராணம். இந்த சிங்கத்தின் நினைவாக ஜீயஸ் சிங்கத்தை வானில் நட்சத்திர கூட்டமாக வைத்துள்ளார்கள் என்கிறது சிம்மம் புராணம்.நமது கலாச்சாரத்தின்படி, சிம்மத்துடன் தொடர்புடைய புராணம் என்பது தனியாக இல்லை. ஆனால், நரசிம்மஅவதாரமும், சரபேஸ்வரரின் அவதாரமும் சிம்மத்துடன் தொடர்புடையதாக உள்ளது. அதேபோன்று, யாழி என்ற பழங்காலத்தில் புராணங்களில் சொல்லப்பட்ட விலங்கும் சிம்ம ராசியுடன் தொடர்புடையதாக உள்ளது. இந்த யாழி என்னும் விலங்கானது யானை, சிங்கம் ஆகியவற்றை ஒருங்கிணைந்து பெரிய மிருகமாக வாழ்ந்துள்ளது. இதன் அளவு மிகப் பெரியதாக புராணங்கள் வர்ணிக்கின்றன.
சிம்மத்துடன் தொடர்புடைய இடங்களும் பெயர்களும்
சிம்மம் என்பது அரசு நிர்வாகம் செய்யும் அலுவலகங்கள், அரசு பள்ளிகள், மருத்துவ மனைகள், மருந்து கூடங்கள், மருந்து உற்பத்தி செய்யும் இடங்கள், சிவன் கோயில்கள், சூரியக் கோயில் என்று சொல்லக்கூடிய கோனார்க், அரச மரங்கள் சூழ்ந்த பகுதிகள், நாட்டின் தலைநகரங்களின் முக்கியமான பகுதிகள், ஒவ்வொரு இடத்திலும் தலைமைத் தாங்கும் இடங்கள், உறவு முறைகளில் தந்தை, தந்தை இணையான பாதுகாப்பாலர்கள், கிராமங்களில் பஞ்சாயத்து அலுவலகங்கள், கிராம சபைகள், வல்லரசு நாடுகள் இணைந்து உருவாக்கும் அமைப்புகளின் தலைமையகங்கள்...சிம்ம ராசி மற்றும் சூரியன் உற்பத்தி செய்யும் நாமங்கள்... ஆதித்தன், ஆதி, பானு, சூரிய, பிரகாஷ், அருணன், சிவா, சங்கர, ஆதவன், பாஸ்கரன், பகலவன், ஞாயிறு, ரவி, சத்யன், சுருளி, பிரபு, உஷா, கதிர், ராஜா,
அப்பன்...
சிம்ம ராசிக்கான பரிகாரம்...
நெருப்பு ராசியாக இருப்பதால் சரபேஸ்வரருக்கு ஹோமம் செய்வது சிறந்த பரிகாரமாகும். இந்த ஹோமத்தை ஞாயிற்றுக் கிழமைகளில் செய்வது சிறப்பாகும்.சிவபெருமானுக்கு ஹோமம் செய்யலாம் ஞாயிற்றுக்கிழமை செய்து அந்த ஹோமத்தில் கிடைத்த பிரசாதமான விபூதியை தினமும் நாம் வைத்துக் கொள்வதால் பல நன்மைகள் உண்டாகும்.சிம்மத்திற்கு எப்பொழுதெல்லாம் அசுப கிரங்கள் வரும் பொழுதும், அந்த ராசியை அசுப கிரகங்கள் பார்வை செய்யும் பொழுதும் அதற்குரிய பரிகாரங்கள் செய்தால் தீமைகள் குறைபடும் என்பது ஜோதிட சாஸ்திரமாகும்.