தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோழியூர் வெக்காளியம்மன்

சோழர்கள் தலைநகரம் உறையூர். இவ்வூருக்கு பற்பல பெயர்கள் உண்டு. வாணரம், உறந்தை, கோழி, முக்கீஸ்வரம், வாசப்புரி, தேவிபுரம் மற்றும் உறையூர் என்பன ஆகும். உறையூரில் பல கோயில்கள் இருந்தாலும், வெக்காளியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஊருக்குக் கேடு ஏற்படும்பொழுது, தீவினைகள் மிகுந்து நல்வினைகள் கதறும் பொழுது தெய்வம் ருத்ர தாண்டவம் ஆடும். அச்சமயத்தில், நெருப்புமழை பொழிந்து ஊரை அழித்து வதம் செய்யும். சில இடங்களில் நீர், வெள்ளம் சூழ்ந்து ஊரையே மூழ்கடித்து தன் சினத்தைத் தணித்துக் கொள்ளும். அத்தகைய நிலைமை உறையூரில் வாழும் மக்களுக்கு ஏற்பட்ட கதியாகும். வெக்காளி அம்மன் சந்நதிஅதிசயங்கள் நிறைந்திருக்கும் ஆலயம்.

1. வெக்காளி அம்மன் கர்ப்ப கிரகத்தில் மேற்கூரை கிடையாது.

2. சோழர்களின் குலதெய்வமாக விளங்குபவள்.

3. வடக்குத் திசை நோக்கி வித்தியாசமான நிலையில் அமர்ந்திருப்பாள்.

4. பொங்குசனிபகவான், தனித்த நிலையில் அருள் பாலிக்கிறார்.

5. வெக்காளி அம்மனின் கால் பாதங்கள் கருவறையில் பொதிந்து இருக்கிறது.

வன்பராந்தகச் சோழன்

உறையூரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான் சோழ மன்னன் வன்பராந்தகன் என்பவன். இவர் மனைவியின் பெயர் புவனமாதேவி. இவள் பார்வதி தேவியின் மீது தீவிர பக்திகொண்டவள். இறைவன் திருநாமத்தைக் கூறாமல் உணவு உண்ணமாட்டாள். சாரமா முனிவர் சிவபக்தர். சிவத்தொண்டு செய்வதில் பூரண மன திருப்தி அடைபவர். திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலில் உள்ள தாயுமானவரை தன் உயிராக கருதி பூஜித்து வந்தார். அவருக்கு அலங்காரம் செய்ய, நந்தவனம் அமைத்து பற்பல பூச்செடிகளை வளர்த்தார். வாசம் மிகுந்த பூக்களை தொடுத்து சிவனுக்கு அலங்கரிப்பது இவரது வழக்கம். தெய்வத்திற்காக பூக்கும் மலர்கள் என்பதனால், இம்மலர்கள் வாசம் மிகுந்தும் இருக்கும்.

காற்றில் பறக்கும் பொழுது நுகர்வோர் மெய்சிலிர்த்து போவார்கள். பூ வணிகம் செய்பவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் பிராந்தகன். இவன், அரசனிடம் நன்மதிப்பும் வெகுமதியும் பெறலாம் என எண்ணி அபூர்வ மலர்களை முனிவர் அறியாமல் கொய்து மன்னரிடம் விற்பனைக்குக் கொடுப்பது வழக்கம். மன்னரும் பூவின் மணத்தில் கிறு கிறுத்து மகிழ்ந்து தன் பட்டத்து ராணி புவனமாதேவி சூட்டிக் கொள்ள தந்தார். தேவியும் சந்தோஷத்தோடு வைத்துக் கொண்டாள்.

சாரமா முனிவர் வருத்தம்

தாயுமானவருக்காக மலர்களைப் பறிக்கும் பொழுது மாலையாக கட்டுகின்ற சமயத்தில் மலர்கள் குறைவதைக் கண்டார். அழகாக மொட்டுவிட்டு இரவில் காணப்படுவது, விடிந்ததும் மலர்கள் எவ்வாறு காணாமல் போகிறது என்று சிந்தித்தார். ஒரு நாள் உறக்கம் வராமல் நந்தவனத்தில் உலாவிக்கொண்டிருந்தார். நடுநிசி கடக்கும் நேரத்தில் ஓர் உருவம் மெல்ல நகர்ந்து நந்தவனத்தில் உள்ள மலர்களைப் பறிப்பதைக் கண்டார். யார் என்பதையும் அறிந்து கொண்டார்.

மன்னரிடம் முறையிடல்

சாரமா முனிவர் மன்னரிடம் சென்று மலர்களைப் பறித்து தங்களிடம் விற்பனை செய்யும் பூ வணிகனை கண்டிக்குமாறு முறையிட்டார். சிவனுக்காக மலரும் அற்புத மலர்கள் களவாடி தங்களிடம் விற்பது தர்மம் ஆகாது.இம்மலர்களை மானிடர் சூட்டி சிற்றின்பம் அடைவது பாவச் செயலாகும். அவ்வாறு செய்ய வேண்டாம் என அரசரிடம் மன்றாடினார்.

மன்னர், முனிவரின் பேச்சைக் காதில் கேளாமல், “மலர்கள் தானே ராணி சூடிக்கொள்ள கொண்டு வந்து தருகிறான். இதில் தவறு ஒன்றும் இல்லை” என்கிறார்.

“மன்னவா சிந்தித்துப் பாருங்கள் இதை விற்பனைக்குரிய மலர் அல்ல, தாயுமானவர் மட்டும் சூட்டி மகிழ்வது. அவருக்காகவே மலர்ந்த மலர்களாகும். இறைவனுக்குரிய படைப்பு மானிடர் சூட்டிக்கொள்வது தவறு” என எடுத்துரைத்தும், மன்னரின் காதுகள் கேளாதாயின. புத்தி இழந்த மன்னன் செயல் விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதை உணந்தார்.

செவிடன் காதில் சங்கு ஊதுவது போல என எண்ணி அவ்விடம் விட்டு திரும்பினார்.

தாயுமானவரிடம் முனிவர் கதறுதல்

“சிவபெருமானே! தங்களுக்காக நந்தவனம் அமைத்து மலர்களை தொடுத்து ஆசை தீர தங்களுக்கு சூட்டி மகிழ்ந்தேன். ஆனால், மன்னர் என் வார்த்தையைக் கேட்காது தவறு செய்துவிட்டார்.

``நான் என் செய்வேன்” என்று கதறினார்.

“அவருக்கு புத்தி புகட்ட மாட்டாயா?” என்று துடிதுடித்தார். பக்தன் சிந்திய கண்ணீரைக் கண்ட சிவபெருமான், என்ன

செய்தார் தெரியுமா?

மண்மாரி பொழிதல்

பக்தன் வடித்த கண்ணீர் கண்டு மனம் நெகிழ்ந்த தாயுமானவர். உறையூர் இருக்கும் மேற்குத் திசை நோக்கி நெற்றிக் கண்ணைத் திறந்தார். அடுத்த கணம் மண் மாரிப் பொழிந்தது.  பராந்தக மன்னனின் அரண்மனையை அழித்தார். மக்கள் மண் காற்று மழை தாங்காமல் தடுமாறினர். வீடுகள் தகர்ந்து ஆட்டம் ஆடி மண்ணுக்குள் புதைந்தன மக்கள் வீடுகளை இழந்து துடித்தனர். மன்னர், தான் செய்த தவறை உணர்ந்தார். கர்ப்பமுற்றிருந்த ராணி புவனமாதேவி மண் மாரியைப் பொறுக்க முடியாமல் காவிரியில் குதித்தார். அவளை ஓர் அந்தணர் காப்பாற்றினார்.

ராணி புவனமாதேவி

சோழ மன்னரும் இணைந்து எல்லை தெய்வமாக வீற்றிருக்கும், வெக்காளியம்மன் சந்நதிக்கு மக்களோடு தானும் சேர்ந்து அவளிடம் முறையிட்டனர். தன்

மக்கள் வீடு மனைகள் இழந்து துடிப்பதைக் கண்டாள். குற்றம் புரிந்தவர் மனம் வருந்தி திருந்தினால், அவர்களை வருத்துவது முறையாகாது. தம் மக்களுக்காக சிவபெருமானிடம் சென்றாள். எவ்வாறு எனில், முழு நிலவாக சிவன் முன்தோன்றினாள். உக்கிரதோடு இருந்த சிவன், வெக்காளி அம்மன் கருணையால் சினம் தணிந்தது. கருணைப் பார்வையுடன் கண் மலர்ந்தார். வீடு இழந்த மக்களுக்கு மீண்டும் வீடுகளை அமைத்துக் கொடுத்தார் என்ற புராணச் செய்தி உண்டு. தம்மை நாடிய மக்கள் வீடுகள் இழந்து துடித்ததை மறக்காமல் தானும் மேற்கூரை இல்லாமல் கருவறையில் வீற்றிருப்பவளே வெக்காளி அம்மனாவாள். வானமே விமானமாக நட்சத்திரங்களை வண்ண மலர் களாக கொண்டு எழுந்தருளி இருப்பவள். எங்குமே இல்லாத அதிசயம்.

இக்கோயிலில் சுற்றுச்சூழல் மற்ற இடங்கள் எல்லாம் எழில் ஓவியமாக இருக்கிறது. தன் கருவறை மேற்கூரை இல்லாமல் மழை, வெயில் என்று பாராமல் வானமே

எல்லையாக வாழ்ந்து வருபவள்.

ஒரு சாரரது கருத்து

தன் கணவன் கள்வன் அல்ல. என் சிலம்பில் மாணிக்கப் பரல்கள் உள்ளன என பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டுச் சென்ற கண்ணகி, சாபம் தணிய நெடுங்கிள்ளியின் மகனான பெரு நற்கிள்ளி கட்டிய பத்தினிக் கோட்டம் என்றும் சொல்லப்படுகிறது, வெக்காளி அம்மன் கண்ணகியே என்பர்.

பத்மாசனம் கோலம்

எங்குமே பார்வதிதேவி இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்டு அசுரன் தலைமீது பாதம் வைத்து இருப்பது வழக்கம். இக்கோயிலில் வெக்காளியம்மன் வலது காலை மடித்து இடது காலை அசுரன் தலைமீது வைத்திருப்பது வித்தியாசமான அற்புதமான காட்சி ஆகும்.

வடக்குத் திசையின் மேன்மை

வெக்காளியம்மன் வடக்குத் திசையாக அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பைத் தரும். சோழர்கள் பகைவரை வெல்லப் போருக்கு புறப்படும் பொழுது இவளை வணங்கிவிட்டுத் தான் செல்வர். வீரம் வெற்றிக்கு உரிய திசை வடக்கு. பக்தர்கள் எண்ணியது சிறப்பாக நல்லபடி நடக்க அருள் பாலிக்க கூடியவள்.

கேள்விக்குப் பதில்

எங்கும் இல்லாத வழக்கத்தை தன் பக்தர்களுக்காகச் செய்து காட்டக் கூடியவள். இக்கோயிலில் மஞ்சள் நிற, தாள் ஒன்று பத்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அத்தாளில் நம் குறைகளை, நமக்கு என்ன வேண்டும் என்ற விண்ணப்பத்தை எழுதி சுருட்டி அவள் திருவடியில் வைத்து வணங்கி, அதன் பின்பு எதிரே உள்ள சூலாயுதத்தில் கட்டிவிட வேண்டும். அது மலையாக குவிந்துள்ளது. கேட்ட கேள்விக்குப் பதில் தந்து குறை தீர்க்கும் தேவியவள். அவள் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளமானதாகும்.

(ஒரு திரைப்படத்தில் தாம் நினைத்ததை சீட்டுகளில் எழுதி கட்டி தொங்கவிட்டு பதில் பெறுவதாக அமைத்த காட்சிகள் இக்கோயிலின் வழக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும்)

எது கிடையாது? அனைத்துக் கோயில்களிலும் தல விருட்சம் உண்டு. அதன் மேன்மைகளை நாம் அறிவோம். இங்கு தலவிருட்சமும் தீர்த்தமும் கிடையாது. கிராமத் தேவதையாக மக்களைக் காக்கும் அன்னையாக அருள் பாலிக்கின்றாள்.

சௌந்தர்ய ரூபம்

அன்னை அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்கள் உடையவளாக உறையூரை ஆட்சி செய்கிறாள். மேற்கரங்கள் இரண்டில் ஏந்திய ஆயுதங்கள், வலப் புறக்கரத்தில் உடுக்கையும் இடப்புறக் கரத்தில் பாசமும் வைத்திருக்கிறாள்.

கீழிரண்டு கரங்கள்

வலக்கரம் திரிசூலம் பிடித்திருக்கும் பாங்கும், இடக்கரத்தில் அட்சய பாத்திரம் வைத்துக் கொண்டு மக்கள் பஞ்சம் இல்லாத வாழ்க்கை வாழ அருள்கிறாள்.

நவகிரகத் தலம்

கோயிலில் மற்றொரு அற்புதம், நவகிரகம் பீடம் இருந்தாலும் சனி பகவானுக்கு தனி சந்நதி உண்டு. இவரை “பொங்கு சனி” என்ற பெயரில் அழைக்கின்றனர். சனிதோஷம் உள்ளவர்கள், சனி பிரீத்தி செய்ய விரும்புவோர், சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடுகின்றனர்.

வெள்ளி ரதம்

பக்தர்கள் எண்ணிய கோரிக்கை நிறைவேறியதும், நேர்த்திக் கடன் செலுத்த வெள்ளி ரதத்தில் அன்னை வெக்காளியம்மனின் உற்சவ மூர்த்தியை அமர்த்தி ஊர்வலமாக கோயிலுக்கு உள்ளேயே மூலவர் வெக்காளி அம்மனின் கருவறையைச் சுற்றி வலம் வருகின்றாள். இக்காட்சி கண்கொள்ளாப் பேரின்பம் தருவதாகும்.

திருவிழாக்கள்

இக்கோயிலில் 12 மாதங்களும் திருவிழாக் கோலம் கொண்டு இருக்கும்.

சித்திரைத் திங்கள் - சித்திரைப் பெருவிழா.

வைகாசி திங்கள் - மாம்பழ அபிஷேகம். (கடைசிவெள்ளி)

ஆனித் திங்கள் - காய்கனி அலங்காரம்.

ஆடித் திங்கள் - சிறப்பு அபிஷேகம் வெள்ளிதோறும்.

ஆவணித் திங்கள் - சதசண்டி பெருவேள்வி.

புரட்டாசித் திங்கள் - நவராத்திரி திருவிழா.

ஐப்பசி திங்கள் - அம்பு போடுதல் திருவிழா.

கார்த்திகைத் திங்கள் - வண்ணதீபங்கள்திருவிழா.

மார்கழித் திங்கள் - திருப்பள்ளி எழுச்சிவழிபாடு.

தைத் திங்கள் - தைப்பூசத் திருநாள் பெருவிழா.

மாசித் திங்கள் - லட்சார்ச்சனை.

பங்குனி - பூச்சொரிதல் திருவிழா.

ஒவ்வொரு பௌர்ணமி நாளன்று அபிஷேக வழிபாடு சிறப்பாக வெக்காளியம்மனுக்கு நடைபெறும். மேலும், ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு பொருட்களும் இங்கு சிறப்பு பெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மரிக் கொழுந்து, மருவு, சந்தனம், குங்குமம், பச்சைக் கற்பூரம், பன்னீர், முக்கனி, பால், நாட்டுச் சர்க்கரை, அப்பம், பசுந்நெய், தேன், போன்றவை அபிஷேகப் பொருட்கள் ஆகும்.

கோயிலுக்குச் செல்லும் வழி

திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உறையூர் உள்ளது. சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து எண்ணற்ற பல பேருந்துகள் உறையூர் வெக்காளியம்மன் கோயிலுக்குச் செல்கின்றன. அதே போல் திருச்சி பேருந்து நிலையத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

நடைதிறப்பு

அம்மனுக்கு ஐந்துகால பூஜை நடைபெறுகிறது. அதிகாலை 5 .15மணி முதல் இரவு 9.00 மணி வரை கோவில் திறந்திருக்கும் மதியம் நடை சாத்துவது இல்லை. முடிந்தவர்கள் இக்கோவிலுக்கு சென்று தங்களின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் வெக்காளிஅம்மன் அருள்பாலிப்பாள்.

பொன்முகரியன்

Related News