கொழுமம் தாண்டேஸ்வரர் கோயில்
சிற்பமும் சிறப்பும்
ஆலயம்: தாண்டேஸ்வரர் கோயில், கொழுமம் (உடுமலைப் பேட்டையிலிருந்து 18 கி.மீ.), திருப்பூர் மாவட்டம்.
காலம்: கொங்கு சோழர் கிளையில் வந்த மன்னர் வீர ராஜேந்திர சோழரால் (பொ.ஆ.1207-1256) கட்டப்பட்டது.
பின்னர் இப்பகுதியை ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்கள், பாளையக்காரர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர்.கடையேழு வள்ளல்களுக்கு அடுத்த நிலையில் வைத்து சிறப்பிக்கப்பட்ட வள்ளல் குமண மன்னர் ஆட்சி செய்ததால் குமணன் நகர் எனவும், வணிகக்குழுக்கள் அதிகம் குழுமியிருந்த இடமாகக் காணப்பட்டதால் குழுமூர் எனவும் இவ்வூர் அழைக்கப்பட்டது. அது பின்னர் கொழுமம் என்றானதாகக் கருதப்படுகிறது. சங்கரராமநல்லூர் என்றும் இப்பகுதி அழைக்கப்படுகிறது.
‘கொங்கு சோழர்கள்’ என்றழைக்கப்பட்ட சோழர்களின் கிளை வம்சத்தினர், கொங்கு நாட்டினை ஆட்சி புரிந்தனர். அவர்கள் இப்பகுதியில் ஏராளமான ஆலயங்களைக் கட்டியுள்ளனர். அவற்றில் முக்கியமானது கொழுமம் தாண்டேஸ்வரர் கோயில். இக்கோயில் 13ஆம் நூற்றாண்டில் (பொ.ஆ.1207-1256) கொங்கு சோழ மன்னர் வீர ராஜேந்திர சோழரால் ‘ஆன் பொருநை’ என்னும் அமராவதி ஆற்றங்கரையில் அழகிய சூழலில் அமைக்கப்பட்டது.
சைவம், வைணவத்தை இணைக்கும் விதமாக தாண்டேஸ்வரர் மற்றும் கல்யாண வரத ராஜப் பெருமாள் ஆலயங்களும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் அருகருகே கட்டப்பட்டுள்ளன.
தாண்டேஸ்வரர் கோயிலின் மூலவர்: தாண்டேஸ்வரர் (சோழீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்)
இறைவி : பெரிய நாயகி (பிரஹன் நாயகி) வெளிப் பிராகாரத்தில் விநாயகர், சண்டிகேஸ்வரர், கால பைரவர், நவகிரகங்கள், ஜ்யேஷ்டா தேவி ஆகியோர் உள்ளனர். ஐந்தரை அடி உயர நடராஜர் ஆனந்தத் தாண்டவத்தில் இடது காலை தூக்கிய நிலையில் உள்ளார். பெரும்பாலான சிவாலயங்களில் லிங்கோத்பவர் சிற்பத்தில், சிவ பெருமானின் அடிமுடியைக் காண போட்டியிட்ட பிரம்மா மேலே அன்னப் பறவையாகவும், விஷ்ணு கீழே வராகம் (பன்றி) வடிவத்திலும் சித்தரிக்கப்பட்டிருப்பர்.
இவ்வாலயத்தில் பூத கணங்கள் அமைக்கப்பட்டிருக்கும் பூத வரியில் சிவலிங்கம் நடுவிலிருக்க, ஒரு புறம் பிரம்மா அன்னப் பறவை வடிவிலும், மறுபுறம் விஷ்ணு பன்றி வடிவிலும் லிங்கத்தை வணங்கி நிற்பது போல் வடிக்கப்பட்டுள்ளது சிறப்பு.முன் மண்டபத்தின் மேற்கூரையில் மீன், முதலை வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.13 ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுகள் கருவறைச் சுவர்கள், அதிஷ்டானம், குமுதம் மற்றும் சபா மண்டப சுவர்களில் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிவந்தங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.