கோளாறு நீக்கும் இடுக்குப் பிள்ளையார்
திருமுறை காட்டிய விநாயகர்
சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் பெரிய பிராகாரத்தில் வலம் வந்து மேலை வாயில் வழியாக உட்செல்லும்போது இங்கே சில படிகள் இறங்கியே உள்பிராகாரத்தை அடைகிறோம். இந்த வாயிலுக்கு நேராக தாயுமானவர் சந்நதி உள்ளது. இவருக்குப் பக்கத்தில் திருமுறை காட்டிய விநாயகரும் நேர் மேலே சிறிய அழகிய உச்சிப் பிள்ளையாரும் எழுந்தருளியுள்ளார். இவருக்கு அருகிலுள்ள அறையில்தான் திருமுறைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
கோபுரவாசல் எதிர்கொள் கணபதி
சில தலங்களில் சுவாமிக்கு நேராக ராஜகோபுரம் அமையாது. சுவாமி கிழக்கு நோக்கி இருப்பார். ராஜகோபுரம் தென்புறம் தெற்கு நோக்கி இருக்கும். அந்தக் கோபுர வழியாக உட்செல்பவர்கள் முதலில் கண்டு வணங்கும் வகையில் உள்மதில் ஓரமாகத் தெற்கு நோக்கியவாறு சிறிய விநாயகர் சந்நதியை அமைத்திருப்பர். இவர் மிகுந்த சக்தி வாய்ந்தவராகப் போற்றப்படுகிறார். இத்தகைய சந்நதிகளில் சிதறுகாய் உடைத்தால் துன்பம் விரைவில் தொலையும். மயிலாப்பூர் கபாலீசுவரர் ஆலயத்தில் உள்ள நடன விநாயகர், திருமழிசை ஒத்தாண்டேசுவரர் ஆலய தேவராஜகணபதி, திருமறைக்காடு வேதாரண்யேசுவரர் ஆலய வீரஹத்தி விநாயகர் முதலிய விநாயகர்கள் இவ்வாறு அமைந்த பக்த
அனுக்கிரக விநாயகர்கள் ஆவர்.
திருக்கயிலாசப் பிள்ளையார்
அப்பரடிகள் திருவாய்மூர் சென்றபோது சிவபெருமான் தனது திருவோலக்கக் காட்சியைக் காட்டினார். அதில் அவருடன் தேவியும் விநாயகரும் வீற்றிருப்பதை அடிகளார் கண்டார். அதை மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன் என்று பாடிப் பரவினார். சிவபெருமானுக்கும் அம்பிக்கைக்கும் இடையில் விநாயகர் வீற்றிருக்கும் கோலம் கஜமுகானுக்கிரகமூர்த்தி என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிற்பம் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் உள்ளது.
கோளாறு நீக்கும் இடுக்குப் பிள்ளையார்
திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது குபேரலிங்கத்தை அடுத்து வருவது இடுக்குப் பிள்ளையார் சந்நதி. இங்கே இடைக்காட்டுச் சித்தர் மூன்று யந்திரங்களை பிரதிஷ்டை செய்துள்ளார். இந்த சந்நதியில் படுத்த நிலையில் உடலைக் குறுக்கிக்கொண்டே ஊர்ந்து சென்று தரிசிக்க வேண்டும். அப்போது யந்திரங்களின் ஆகர்ஷண சக்தி உடலில் பரவி, நரம்புத் தளர்ச்சி மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள் முதலானவை சரியாகிவிடும் என்பது ஐதீகம்.
தொந்தியில்லாத பிள்ளையார்
பிள்ளையார் என்றதும் நமக்கு உடனே நினைவுக்கு வருவது அவருடைய தும்பிக்கையும், ‘தொந்தி’யும் தான். ‘திருநாரையூர்’ என்ற ஊரின் கோயிலில் பிள்ளையாருக்கு பருத்த தொந்தியில்லை. இவர் ‘பொல்லாப் பிள்ளையார்,’ என்றழைக்கப்படும் ‘வலம்புரி விநாயகர்.’ கல்லில் தோன்றிய ‘சுயம்பு விநாயகர். சிற்பியில் உளியால் ‘பொள்ளாத’ (ெசதுக்காத) பிள்ளையார்’ என்றழைக்கப்படுகிறார்.