ஏன்? எதற்கு ? எப்படி?
?ஏழரை சனி நடக்கும்போது திருமணம் செய்வது சரியா?
- த.நேரு, வெண்கரும்பூர்.
சரியே. ஏழரை சனிக்கும் திருமணத்தை நடத்துவதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. எந்தவிதமான தயக்கமோ சந்தேகமோ இன்றி தாராளமாக ஏழரை சனி நடக்கும் காலத்தில் திருமணத்தை நடத்தலாம். பயம் தேவையில்லை.
?கோயிலுக்கு சென்றுவிட்டு நேராக வீட்டிற்குத்தான் வரவேண்டும் என்று கூறுவது ஏன்?
- வண்ணை கணேசன், சென்னை.
தெய்வீக சாந்நித்யத்தை கோயிலில் இருந்து பெற்றுக்கொண்ட நாம், நேரடியாக வீட்டிற்கு வரும்போது அந்த தெய்வீக அதிர்வலையானது நமது இல்லத்திலும் பரவும் என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னார்கள். இந்த விதி வெளியூரில் இருக்கும் ஆலயங்களோடு அல்லது புனிதத் தலங்களோடு பொருத்திப் பார்க்கக் கூடாது. உதாரணத்திற்கு சபரிமலைக்கு மாலை அணிந்து செல்பவர்கள், ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வரும்போது நேரடியாக வீட்டிற்கு வராமல் வரும் வழியில் உள்ள பல தலங்களுக்கும் சென்றுவிட்டுத்தான் வருவார்கள். அதே போல, நாமும் தொலைதூரத்தில் உள்ள ஒரு புனிதத்தலத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில், ஏதேனும் உறவினர்கள் இல்லம் இருந்தால், தாராளமாக அங்கு சென்றுவிட்டு வரலாம். அதில் எந்தவிதமான தவறும் இல்லை.
?புரை ஏறினால் யாராவது நினைக்கிறார்கள் என்றும், நாவைக் கடித்துக் கொண்டால் யாராவது திட்டுகிறார்கள் என்றும் சொல்வது ஏன்? இது பற்றி ஆன்மிக தகவல் உண்டா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
இதனை ``நிமித்தக்குறி’’ என்று சொல்வார்கள். ஆன்மிக ரீதியாக எந்தவிதமான பிரமாணமும் இல்லை என்றாலும், இதுபோன்ற நிகழ்வுகள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் இருக்கின்ற உள்ளுணர்வுகள் தொடர்புடையது எனலாம். உதாரணத்திற்கு, அப்பொழுதுதான் யாராவது ஒருவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்போம், திடீரென அந்த நபர் நேரிலேயே வந்துவிடுவார், உடனே அவரைப் பார்த்து ஆயுசு நூறு என்று சொல்வதையும், வழக்கத்தில் கொண்டிருப்போம். நெருங்கிய தொடர்பு ஏதுமில்லாத நபர் ஒருவரைப் பற்றி நினைக்கும் நேரத்தில், அவரிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு வருவதையும் பார்த்திருப்போம். இதுபோன்ற நிகழ்வுகள் அனைத்தும் அந்த இரு நபர்களுக்கு இடையே இருக்கின்ற உள்ளுணர்வைப் பொறுத்துத்தான் அமைகிறது. இந்த கருத்துக்களை மூடநம்பிக்கைகள் என்ற பெயரில் ஒதுக்க இயலாது.
?அஷ்டமி, நவமி நாட்களில் பரிகார பூஜை செய்யலாமா?
- என்.இளங்கோவன், மயிலாடுதுறை.
தாராளமாகச் செய்யலாம். பைரவர் மற்றும் துர்கைக்கான பரிகார பூஜைகளை, அஷ்டமி நாட்களிலும், நீண்டநாள் பிரச்னைக்குத் தீர்வு காண நவமி நாட்களிலும் பரிகார பூஜைகளைச் செய்வார்கள். அஷ்டமி மற்றும் நவமி நாட்கள் என்பது சிறப்பு பரிகாரப் பூஜைகளுக்கு மிகவும் உகந்தது.
?உறவினர் மகன் விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டு, சுயநினைவின்றி மருத்துவமனையில் இருக்கிறான். அவன் பூரண குணமடைய வணங்க வேண்டிய தெய்வம், சொல்ல வேண்டிய மந்திரம் தந்து குடும்பத்தாருக்கு உதவுங்கள்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
கும்பகோணத்தை அடுத்த குடவாசலை ஒட்டியுள்ள ``சேங்காலிபுரம்’’ கிராமத்திற்குச் சென்று, அங்குள்ள ஆலயத்தில் அமைந்திருக்கும் `` கார்த்யவீர்யார்ஜூன’’ ஸ்வாமியை தரிசித்து வணங்கி, பிரார்த்தனை செய்து கொள்ளச் சொல்லுங்கள். பெற்றோர் கீழ்க்கண்ட மந்திரத்தை தினந்தோறும் 108 முறை சொல்லி, கார்த்யவீர்யார்ஜூன ஸ்வாமியை வணங்கி வர, விரைவில் குணமடைவார்.``ஓம் ஹ்ராம் கார்த்யவீர்யார்ஜூனானாம் ராஜா பாஹூ ஸஹஸ்ரவான்யஸ்ய ஸ்மரண மாத்ரேன கதம் நஷ்டயஞ்ச லப்யதே’’ மற்றும் ``ஓம் கார்த்யவீர்யார்ஜூனாய நம:’’ என்றும் சொல்லி வாருங்கள்.
?சூரிய பகவானை காலையில் மட்டும்தான் வழிபட வேண்டுமா?
- பொன்விழி, அன்னூர்.
கண்ணிற்குத் தெரிந்த கடவுள் ஆகிய சூரியனை பகல் பொழுதில் எப்பொழுது வேண்டுமானாலும் வணங்கலாம். சூரியனை வணங்குவதை முன்னிறுத்தித்தான் ``த்ரிகால சந்தியாவந்தனம்’’ என்பதை வேத பண்டிதர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். காலை, மாலை இருவேளை மாத்திரம் அல்லாது மாத்யாஹ்னிகம் எனப்படுகின்ற சூரியன் உச்சிக்கு வரும் மதிய வேளையிலும் சூரிய வழிபாடு என்பது உண்டு. சூரிய உதயம், சூரியன் உச்சிக்கு வருகின்ற நேரம், சூரிய அஸ்தமன காலம் என பகல் பொழுதில் எல்லா நேரத்திலும் சூரிய வழிபாடு செய்யலாம்.
?அணில் முதுகில் உள்ள மூன்று கோடுகள், ராமபிரான் வரைந்தவை என்கிறார்களே.. அதற்கு ஏதேனும் பிரத்யேகமாக கதை உள்ளதா?
- பி.கனகராஜ், மதுரை.
இலங்கைக்கு செல்வதற்காக தனுஷ்கோடியில் இருந்து இலங்கை வரை பாலம் அமைக்கும் பணி நடைபெறும் காலத்தே, வானரப் படைகளோடு இணைந்து இந்த அணிலும் தன்னால் இயன்ற சிறுசிறு கற்களை உருட்டிக் கொண்டு போய் உதவி செய்ததாம். அதனைக் கண்ட ராமபிரான், அந்த அணில் தன் மீது கொண்ட பக்திக்கு மெச்சி, பாசத்தோடு அதனைத் தடவிக் கொடுத்ததாகச் சொல்வார்கள். அப்படி ராமரின் திருக்கரங்கள் பட்டதால் அந்தக் கோடுகள் உருவானதாகவும், அணில் ராமர் மீது கொண்ட பக்தியின் சாட்சியாக இன்றளவும் இந்திய அணில்களின் முதுகில் இந்த மூன்று கோடுகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது.
?திருமால், யாரிடமிருந்து சங்கு சக்கரங்களைப் பெற்றார்? இரு கருவிகளும் எதைக் குறிக்கிறது?- கே.ஏ.நாராயணன், மருங்கூர்.
சிவபூஜை செய்து, பரமேஸ்வரனிடமிருந்து திருமால் சங்கு சக்கரங்களைப் பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. ``திருச்சங்கமங்கை’’ என்ற தலத்தில், சங்கினையும், ``திருவீழிமிழலை’’ என்ற தலத்தில், சக்கரத்தையும் பெற்றதாக அந்தந்த ஸ்தல புராணம் தெரிவிக்கிறது. இந்த உலகம் என்பது எப்பொழுதும் இயங்கிக் கொண்டே அதாவது சுழன்றுகொண்டே இருக்கும். அந்த சுழற்சியாது, திருமாலின் கட்டுப்பாட்டிற்குள் உட்பட்டது என்பதன் அடையாளமாக சக்கரமும், உலகத்தில் எப்பொழுதும் ஓம்கார நாதம் என்பது ஒலி வடிவில் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்றும் அதன் மூலம் தெய்வீக சக்தியின் அதிர்வலைகள் இந்த உலகம் முழுக்க பரவியிருக்கும் என்றும் அதன் அடையாளமே அந்த நாதத்தினை எழுப்பும் சங்கு, திருமாலின் கையில் இருப்பது என்றும் பெரியவர்கள் சொல்வார்கள்.