ராசிகளின் ராஜ்யங்கள் தனுசு ராசி
தனுசு ராசி என்பது காலபுருஷனுக்கு ஒன்பதாம் (9ம்) பாவகத்தை குறிக் கிறது. ெநருப்பு ராசியாக உள்ளது. இதன் திரிகோண ராசிகளாக மேஷம், சிம்மம் வருவது தனுசு ராசியின் தனிச்சிறப்பாகும். தெய்வீக ராசி என்றே சொல்ல வேண்டும். இந்த ராசியின் அதிபதியான வியாழன்தான் அனைத்து ராசிகளுக்கும் சுபத்தன்மையை தருகிறான். வியாழன் என்றால் வளர்ச்சி என்று பொருள். தர்மத்தை, நேர்மையை குறிப்பிடும் ராசி தனுசு ராசிதான். தனுசு ராசியில் எந்த கிரகமும் உச்சம் பெறுவதில்லை அதே சமயம் எந்த கிரகமும் நீசம் பெறுவதில்லை. இதன் பொருள் என்னவெனில், எல்லாவற்றையும் நடுநிலைமையோடும் சக்தியோடும் பரிணமிக்க கூடிய தன்மையை தனுசு ராசி செய்கின்றது. தெய்வீகத்தன்மை இந்த ராசிக்கு இருப்பதால் இந்த ராசிக்கு அடிப்படையாகவே இயற்கையின் சக்தியை எளிதாக ஈர்க்கும் அமைப்புடையதாக உள்ளது. ஆனால், நேர்மை தவறினால் உங்களுக்கான பாதகத்தை நீங்களே தேடிக்கொள்கிறீர்கள் என்று பொருள்.
தனுசு ராசியின் சிறப்பு...
லத்தீன் மொழியில் சஜிடேரியஸ் என்றால் வில் அம்பை ஏந்திய மனிதன் என்று பொருள். இந்த பொருளுக்கு பொருத்தமானவர் ராம பிரான்தான். தனுசு ராசிக்கும் ராமனுக்கும் தொடர்பு உண்டு என அனைவரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் தனுசு ராசியின் அதிபதியான வியாழன் கடகத்தில் உச்சம் பெற்று அதுவே ராமரின் ஜாதகத்தில் லக்னமாக அமைகின்றது. எனவே, அவர் ஆறாம் பாவகத்திற்குரிய சின்னமான வில்லைக் கொண்டே எதிரியை வென்றார் என்பது புராணத்தின் வழியே நாம் அறிந்து கொள்ளக்கூடிய ஜோதிடத் தகவல் ஆகும். தனுசு ராசிக்குரிய சிவதனுசை உடைத்தே சீதா தேவியை மணமுடிப்பதற்கான பரீட்சையில் வெற்றியடைந்தார் ராமபிரான்.தனுசு ராசியானது இரட்டைத் தன்மை கொண்ட உபய ராசியாக உள்ளது. உலகில் அத்தனை மனிதர்களையும் பிரித்துப் பார்த்தாலும் சில கோடிபேர் தனுசு ராசியாக இருப்பார். இவர்கள் ஒரு வகையில் பாக்கியம் பெற்றவர்கள். தனுசு ராசியில் சந்திரன் இல்லாவிடிலும் வேறு ஏதேனும் கிரகங்கள் தனுசு ராசியில் இருந்தாலும் அல்லது பார்த்தாலும் அந்த கிரகம் அவர்களுக்கு ஏதோ வகையில் நன்மையை செய்யும் என்பது ஜோதிட சூட்சுமம். மற்ற எந்த ராசிக்கும் இல்லாத இந்த தனிச்சிறப்பு தனுசு ராசிக்கு மட்டுமே உண்டு.இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு பொதுவாக தெய்வ பக்தி நிரம்பியிருக்கும் அல்லது தெய்வ பக்தியுடன் இருப்பவர்களின் தொடர்புகளை அதிகம் பெற்றி ருப்பர். இவர்களுக்குள் இறை தேடுதல் என்பது வித்தியாசமாக அமைந்திருக்கும்.
இந்த ராசிக்குள் சனி, சூரியன், கேது, சுக், செவ்வாய், வியாழன் வந்த பொழுதுதான் கொரோனா என்ற பெரும்தொற்றால் கோயில்கள் எல்லாம் உலகம் முழுவதும் மூடப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உலகம் முழுமைக்கும் இறையாற்றலை வழங்கும் ராசியான தனுசு ராசியாகவே உள்ளது. தனுசு ராசியை சனி கடக்கும் பொழுது பிரச்னையாகவும். அந்த சனி பகவானே மற்றொரு குருவின் வீடான மீனத்தில் அமர்ந்து தனுசு ராசியை பார்வை செய்யும் பொழுது மக்கள் கோயில்களை நோக்கி சாரை சாரையாக செல்லும் அமைப்பாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தனுசில் அமர்ந்த ராகுவைத்தான் கோதண்ட ராகு என ஜோதிட சாஸ்திரம் சிறப்புற வர்ணிக்கிறது.
தனுசு ராசிக்கு ஒன்பதாம் வீடாக சிம்மம் வருகிறது. எனவே, பாக்கியம் என்பது சூரியனாகவே உள்ளதால் அரசு தொடர்பான நபர்கள் இவர்களுக்கு இயற்கையாகவே கிடைக்கும் அமைப்பாகவே இருக்கும்.
தனுசு ராசியின் புராணங்கள்...
கிரேக்கப் புராணங்களின்படி உள்ள உயிரினமாகும். இந்த உயிரினத்திற்கு சென்டௌர் என்று அழைக்கப்படுகிறது. இந்த சென்டௌர் பாதி மனித உடலையும் பாதி குதிரை உடலையும் கொண்டதாகவும் கையில் வில் அம்பு ஏந்திய தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது.சென்டௌர் என்றும் ஞானத்தை வழங்குபவராகவும், நீதி, போதனை மற்றும் மருத்துவத்தை அறிந்த ஒரு குருவாக இருக்கிறார். இவரே ஹெர்குலஸ் போன்ற வீரர்களுக்கு குருவாக இருந்துள்ளார். ஒரு சமயம் ஹெர்குலஸின் விஷம் தோய்ந்த அம்பால் இறப்பிற்கு செல்கிறார். இவரின் நற்குணம் மற்றும் பேராற்றல்களால் இவரின் பெருமைகளுக்காக ஜீயஸ் இவரை வானில் சஜிடேரியஸ் என்ற வடிவமாக அதாவது தனுசு ராசியாக வடிவமைக்கப்படுகிறார். இந்தியப் புராணத்தின் படி, தனுசு ராசியான தெய்வீகத்துடன் தொடர்புடையது என்பதால் சிவதனுசுவை உடைத்த ராமபிரான் இந்த ராசியின் தேவதைகளின் ஒருவராக இருக்கிறார். அவரின் ஆயுதமாக வில் உள்ளது என்பதே உதாரணம்.
தனுசு ராசியுடன் தொடர்புடைய இடங்களும் பெயர்களும்
தனுஷ், சந்திரசேகர், ராமசாமி, கோதண்டம், நித்ய செல்வி, ஜெயராமன், ஆதித்ய ராஜன், செல்வகுமாரன், கலைச்செல்வி, தீபக்குமார், தீபிகா, சரஸ்வதி, விஜயகுமாரி, ஹர்சத்மேத்தா, சுந்தரேஸ்வரர், சொக்கநாதர், மீனாட்சி போன்ற நாமங்கள் தனுசு ராசியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. அனைத்து மதக்கோயில்களும் இந்த ராசியுடன் தொடர்பை கொண்டுள்ளன. ஆன்மிகம் தொடர்பான எண்ணங்களை உருவாக்கக் கூடிய சிறப்பான ராசி என்பது தனுசு ராசிதான். அரசு தொடர்பான தெய்வீக காரியங்களுக்கும் இந்த ராசியே காரணமாக அமைகிறது. இந்த ராசியை வியாழன், சுக்ரன் பார்வை செய்யும் பொழுது தெய்வீக திருமணங்கள் அதிகம் நடைபெறும். மேலும், மக்களும் கோயிலில் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இந்த ராசியிலேேய அதிகம் உள்ளது.
தனுசு ராசிக்கான பரிகாரங்கள்...
இந்த ராசியைப் பொறுத்தவரையில் தெய்வீகப் பரிகாரங்களே சிறப்பாக அமையும். குறிப்பாக எந்த கிரகத்தால் பாதிப்புகள் ஏற்படுகின்றனவோ அந்த கிரகத்திற்குரிய ஹோமங்களை செய்வதே சிறப்பான பரிகாரமாக அமையும். ஏனெனில், இது ஒரு நெருப்பு ராசியாக உள்ளது. நெருப்பிற்கும் இறைவனுக்குமான தொடர்பு நெருங்கியதாக உள்ளது. இறைவனை ஹோமங்கள் மூலம் ஆவாஹனம் செய்து வழிபடுவது சிறந்த பரிகாரம் என்று சொல்ல வேண்டும். ஹோமங்கள் செய்ய இயலாதவர்கள் அதற்குரிய தானியங்களைக் கொண்டு விளக்கேற்றுதல் சிறப்பாக அமையும். குறிபிட்ட கிரகங்கள் உள்ள கோயில்களுக்குச் சென்று விளக்கேற்றுதல் சிறப்பாக அமையும்.
*சூரியன் எனில், கோதுமையை கிழே வைத்து ஞாயிற்றுக் கிழமை அன்று சிவஸ்தலத்தில் ஒன்பது விளக்குகள் ஏற்றலாம்.
*சந்திரன் எனில் பச்சரிசி அல்லது நெல் ஆகியவற்றை கிழே வைத்து அதன்மீது விளக்கேற்றலாம்.
*செவ்வாய் எனில் துவரை வைத்து விளக்கேற்றலாம்.
*புதன் எனில், பச்சைப்பயிறு வைத்து விளக்கேற்றலாம்.
*வியாழன் எனில், கொண்டைக்கடலை வைத்தோ மஞ்சள் வைத்து நெய் தீப விளக்கேற்றலாம்.
*சுக்ரன் எனில், மொச்சை வைத்து விளக்ேகற்றலாம்.
*சனி எனில் எள் வைத்து நல்லெண்ணெயில் விளக்கேற்றலாம்.
கலாவதி