காசி யாத்திரை
திருமண வைபவத்தில் காசியாத்திரை சடங்கிற்கான ஆதாரம் ஸ்மிருதிகளில் காணப்படுகிறது. எந்த ஒரு மனிதனும் நான்கு நிலைகளில் தமது வாழ்வை நடத்தி நிறைவு செய்ய வேண்டும். அதில் ஒன்று பிரம்மச்சரியம்.
இது கல்விக்கான காலம்
ஒரு குருவிடம் சென்று கல்வி பயில வேண்டிய காலம். ஒரு பொழுதின் காலைப்பொழுது என்று இந்தக் காலத்தைச் சொல்லலாம்.
இக்காலத்தில் செய்ய வேண்டிய முக்கியமான சடங்கு உபநயனம்.
இதை நமது மக்கள் திருமணத்தோடு இணைந்தே செய்கிறார்கள்.
உபநயனமும் காயத்ரி ஜபமும் ஒருவரின் உன்னதமான வாழ்வுக்கு அவசியம். காமம் நுழையு முன்னே காயத்ரி நுழைய வே ண்டும். (கல்வி மட்டுமே கற்க வேண்டிய காலம்). இன்று கல்வி கற்கும்போதே காமமும் நுழைந்து விட்ட அவலத்தைப் பார்க்கிறோம். அதில் என்ன தவறு? என்று வாதிடுபவர்களும் உண்டு.
உபநயனத்தில் ஒரு பூணூல்தான். (பூணும் நூல் - நூல் என்பதற்கு கல்வி/ படிப்பு/ ஞானம் என்றும் பொருள் உண்டு). இதை இப்போது ஒரு சில வகுப்பினரே அணிகிறார்கள். அவர்கள் ஏன் அணிகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டு மல்லவா?
இந்த பூணூலை ஏன் அணிகிறோம்? பூணூல் மந்திரம்
ஸ்ரீ பகவத் ஆஜ்ஞயா - பகவத் கைங்கர்ய ரூபம் - சிரௌதஸ்மார்த்த விஹித நித்ய கர்ம அனுஷ்டான யோ க்யதா ஸித்யர்த்தம் - பிர்ம்ம தேஜோ அபிவிர்த்தியர்த்தம், யஜ்ஞ பதாரணம் கரிஷ்யே என்று மந்திரம்!
இறைவனின் கட்டளைக்காகவும் - தொண்டிற்காகவும் - நித்ய கர்ம அனுஷ்டானங்களைச் செய்யும் தகுதி பெறவும், கல்வி ஞானத்தால் ஒளி (பிரம்மதேஜஸ்) பெறவும் இந்த பூணூலை அணிகிறேன் - என்பது மந்திரப்பொருள்.
கல்வியையும் ஞானத்தையும் பெற அவர்கள் அக்காலத்தில் காசிக்குச் செல்வது வழக்கம். கல்வியைக் கற்க பிரம்மச்சரியம் - அடுத்து அவர்கள் இல்லறத்தில் பிரவேசிக்க வேண்டுமல்லவா!
நல்ல பிரம்மச்சாரியைத் தேடி - அவரை இல்லறத்திற்குத் திருப்புவது அவசியம்! இல்லறம் மிகச் சிறந்த தர்மம். இல்லறம்தான் பிரம்மச்சாரி களையும் - துறவிகளையும் போற்றிக் காக்கிறது. பிரம்மச்சாரியை அடுத்த நிலையான இல்லறத்தில் திருப்ப வேண்டிய அடையாள நிகழ்வுதான் காசியாத்திரை!
பெண்ணைப் பெற்றவரோ - பெண்ணின் சகோ தரரோ பிரம்மச்சாரியைத் தடுத்து - இல்லற தர்மத்தை எடுத்துச் சொல்லி - திருப்ப வேண்டும்.
காசி யாத்திரைக்கு இரண்டு காரணங்கள் பிரம்மசர்யம் இருந்து உள்ளூர் கல்வியை முடித்த மாணவன் உயர் கல்வி கற்பதற்கு காசி மாநகரத்திற்குச் செல்வான். ஏனெனில் காசி நகரத்தில்தான் கற்றறிந்த பண்டிதர்கள் பலரும் வசித்து வந்தார்கள். அங்கே பெரிய சர்வ கலா சாலை உண்டு.
மாணவன் மேல்படிப்பிற்காக காசிக்குச் சென்றால் திரும்பி வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்பதால் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு தம்பதியராக காசிக்குச்செல்ல வேண்டும் என்பதற்காகவும் இந்த காசியாத்திரை சம்பிரதாயமானது நிகழ்த்தப்படுகிறது.
காசி யாத்திரை செல்கின்றபோது வரனின் வலது தோளில் மஞ்சளில் நனைத்த ஓர் துண்டில் அரிசி மூட்டையை கட்டி மாட்டி விடவேண்டும். அதற்குமுன் சுமங்கலிப்பெண் ஒருவரைக் கொண்டு, கண் மை தீட்டி, சந்தனம் கொடுத்து கையில் பஞ்சாங்கம், விசிறி, குடை கொடுத்து பிக்ஷை ஏற்கும் பாவனையாக வரனை யாத்திரை அனுப்ப வேண்டும்.
இதில் இன்னொரு முக்கிய விஷயமும் உண்டு.
பிரம்மச்சாரி கல்வி கற்கும்போது தனது உணவைத் தானே தேடிக் கொள்ள வேண்டும். பெற்றோர்களை எதிர்பார்க்கக் கூடாது. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே. அதே சமயம், கல்வியில் ஈடுபட்ட ஓர் மாணவனுக்கு உணவளிக்க வேண்டிய கடமை இல்லறத்தில் எல்லோருக்கும் உண்டு. வாசலில் பிக்ஷாந்தேகி என்று உணவு கேட்டு நிற்கும் பிரம்மச்சாரிக்கு ஓர் பிடி அளிக்காவிட்டால் அது பெரும்பாவமாகும்.
இப்படிப்பட்ட பிரம்மச்சாரி, தன்னை ஆதரித்த சமூகத்துக்கு தான் கற்ற கல்வி மூலம் எதிர்க்கடன் ஆற்ற வேண்டும். தன்னையும் காத்துக் கொள்ள வேண்டும். எப்பேர்ப்பட்ட ஏற்பாடு பாருங்கள். இன்று எல்லாமே வணிகமயமாகி விட்டது. அதே நேரத்தில் அற்புதமான அர்த்தமுள்ள சடங்குகளை இன்று கேலிக்கூத்தாக்கி விட்டார்கள்.
திருமணம்செய்து கொள்வதற்கு, அந்தக் காலத்தில் இப்போது உள்ளது போல் மாப்பிள்ளைக்கு பணம் தர மாட்டார்கள். மாறாக பெண்ணின் பெற்றோர்க்கு பணம் தந்து பெண்ணைக் கேட்க வேண்டும். மாப்பிள்ளை பையனுக்கு பணம் தேவை. படித்த வித்தையைக் காட்ட வேண்டும். எனவே, காசிக்குச் சென்று அரசனிடம் தான் கற்ற வித்தையினைக் காண்பித்து பொன்னும், பொருளும் பெற்று வருவதற்காக காசிக்குச் செல்கிறான்.
அந்த நேரத்தில் பெண்ணின் தகப்பனார் அல்லது மைத்துனர் வழிமறித்து தங்களுக்கு பொன், பொருள் எதுவும் வேண்டாம் என்றும், தனது மகளை அல்லது சகோதரியை கன்னிகாதானம் செய்து தருவதாகவும், வாக்களித்து உபசாரங்கள் செய்து மாப்பிள்ளை அழைத்து வருவார்கள். (தானத்தில் சிறந்த தானம் கன்னிகாதானம்)
இதெல்லாம் ஒரு பாவனைதான்
இக்காலத்தில் யாரும் காசிக்கோ ஸ்ரீ ரங்கத்துக்கோ போவதில்லை. அவர்களை வற்புறுத்தி பெண் கொடுக்கிறேன், வந்து கல்யாணம் செய்து கொள் என்று யாரும் கெஞ்சுவதில்லை.
காசி யாத்திரை/ஸ்ரீ ரங்க யாத்திரை என்பதில் பையன் மண்டபத்தை விட்டு கிளம்பி சற்று தூரம் செல்ல வேண்டும். மணப்பெண்ணின் தந்தை/ சகோதரர் தடுத்து அழைத்து வரவேண்டும்.
இதற்கு தேவை.... செல்லும் போது கூஜா போன்ற சில பொருட்கள்.
திரும்ப வரும்போது குடைபிடித்து, புது காலணிகளைத் தந்து அழைத்து வந்து பாதபூஜை செய்ய வேண்டும்.
மணமகன் சாட்சாத் மகாவிஷ்ணுவின் அம்சமாக அந்த இரண்டு மூன்று மணி நேரம் இருக்கிறார்.
திண்ணார் வெண்சங்குடையாய்!
திருநாள் திருவோணமின் றேழுநாள் முன்
பண்ணோர் மொழியாரைக் கூவி
முளையட்டிப் பல்லாண்டு கூறுவித்தேன்
கண்ணாலம் செய்யக் கறியும்
கலத்தரிசியும் ஆக்கி வைத்தேன்
கண்ணா! நீ நாளைத்தொட்டுக்
கன்றின்பின் போகேல்
கோலம் செய்திங்கேயிரு
என்ற பாசுரத்தை இந்த நிகழ்ச்சியின் போது வைணவர்கள் சேவிப்பார்கள்.