கற்பத் திருநீறு
கற்பத் திருநீறு
பசுஞ் சாணமானது பசுவிலிருந்து தரையில் விழாதபடி தூய்மையான கலத்தில் ஏற்று ஐந்து வகையான வில்வங்களுடன் சேர்த்து நன்றாகப் புடமிட்டுத் தயாரிப்பது ‘கற்பம்’ என்ற திருநீறு ஆகும். (ஐந்து வகை வில்வங்களாவன:-- வில்வம், விளா, நொச்சி, கிளுவை, மாவிலங்கம்)
அநுகற்பத் திருநீறு
‘அநுகற்பத் திருநீறு’ என்பது, பசுஞ்சாணத்தை, கீழேவிழாதபடி கலத்தில் ஏற்று, ஐந்து வகையான வில்வங்களைச் சேர்க்காமல் தனியாக விளையச் செய்வதாகும்.
உபகற்பகத் திருநீறு
‘உபகற்பத் திருநீறு’ என்பது, நிலத்தில் விழுந்த பசுஞ் சாணத்தைக் கொண்டு, ஐந்து வகையான வில்வங்களுடன் சேர்்க்காமல் விளைவிக்கப்படுவது ஆகும். இந்த மூன்று வகையான திருநீறுகளில் முதலாவதுமான கற்பத் திருநீறே மிகச் சிறந்தது ஆகும்.
அகற்பம்
மேற்சொன்ன கற்பம், அநுகற்பம் மற்றும் உபகற்பம் ஆகிய திருநீறுகள் பஞ்ச காலத்தில் கிடைக்காமல் போனால் ‘‘இடி விழுந்த இடத்தில் உண்டாகிய திருநீறும், மலையின் உச்சியிலும், பூமியிலும் உண்டாகிய திருநீற்றையும் எடுத்து…. சிவ மந்திரம் செபித்து சுத்தி செய்து தரித்துக் கொள்ளவும். இது அகற்பமாகும்’’ என்று வாரியார் சுவாமிகள் குறிப்பிடுகிறார். மேற்கண்ட திருநீறுகள் ‘இருவினையையும் ஒன்றாகவே பார்க்கும் மாந்தர்கள் உரியதாக, சிவாக்கினியில் விளைவிக்கப்பட்டால் இவை, ‘‘சைவ விபூதி’’ என்று வழங்கப்படுகிறது. இவை ஞானத்தையும், முக்தியையும் தரவல்லன. வேள்விச் சாம்பலையும் திருநீறாகப் பயன்படுத்துவதும் உண்டு. வேள்வி நெருப்பில் சாம்பலான திருநீறு ஞானத்தை மட்டுமே நல்கும். இது வைதீக விபூதி என்று சான்றோர் பிரிப்பர்.
விபூதியும் திருமண்ணும்
விபூதி அணிவதன் நோக்கமும் திருமண் (நாமம்) அணிவதன் நோக்கமும் ஒன்றுதான். அதாவது, உலக வாழ்க்கை நிலையானதல்ல என்பதை அடிப்படையாகக் கொண்டது. ‘முடிசார்ந்த மன்னரும் கூட ஒருநாள் பிடி சாம்பலாக மாறுவர்’ என்ற மொழிக்கிணங்க இந்த உடம்பானது ஒரு நாள் நெருப்பில் எரிக்கப்பட்டு இறுதியில் சாம்பலாக மாறிவிடும் என்ற உண்மையை உள்ளத்திற்கு உணர்த்துவதற்காகவே திருநீறு அணிகிறோம். இதேபோல, திருமண் என்பது நிலத்திலிருந்து கிடைக்கக்கூடிய ஒருவகை மண்; உடலிலிருந்து உயிர் பிரிந்தால் மண்ணில் புதைப்பதன்மூலம் நம் உடல் மண்ணாக மாறும் என்பதை உணர்த்தவே திருமண் அணிகிறோம்.
மனித உடம்பு
உடம்பை மண்ணுடன் ஒப்பிட்டுக் கூறுவதற்குக் காரணம் இவ்வுடல் மண்ணால் ஆனது என்பர். பிறந்த குழந்தையைப் பார்த்து ‘‘பச்சை மண்’’ என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுவர். ஒருமுறை ஒருவர் இராமலிங்க அடிகளாரிடம் அடிகளாரின் திருவுருவத்தையே மண் பொம்மையாகச் செய்து கொண்டு வந்து கொடுத்தார். அப்போது அடிகளார், ‘‘ஏற்கனவே இது மண்ணால் செய்யப்பட்ட உடம்புதான் இம்மண்ணுடம்பைப் பொன்னுடம்பாக மாற்ற நான் முயல்கிறேன்’’ என்று கூறி அந்த மண் சிலையை உடைத்துவிட்டார். இதன்மூலம் உடம்பு மண்ணால் ஆனது என்பது புலப்படுகிறது.
பூசம் திசைகள்
திருநீற்றைக் கிழக்கு மற்றும் வடக்குத் திசைகள் நோக்கியவாறு பூச வேண்டும். மற்ற திசைகளில் ஆகா. காலையில் கிழக்கு முகமாகவும் மாலையில் வடக்கு முகமாக அணிய வேண்டுமென ருத்ர கோடி தல மான்மியம் குறிப்பிடுகிறது.
பசுஞ் சாணத்தின் பெருமை பசுஞ்சாணமானது சைவ உணவுகளை மட்டுமே பசு உண்டதால் கிடைக்கும் தூய மலமாகும். இந்தப் பசு மலமே திருநீறாக மாறி, மனிதனின் மலங்களை (ஆணவம், கன்மம், மாயை) அறுக்கவல்லது. சற்றும் கூட துர்நாற்றமில்லாதது. இது மெய்ஞானத்திலும் விஞ்ஞானத்திலும் சிறந்த சாதனமாக விளங்குகிறது. குறிப்பாக, நச்சுக் கிருமிகளை போக்கிச் சுகாதாரத் தன்மையைத் தரவல்லது.