கும்பகோணம் சாரங்கபாணி கோயிலின் கரண சிற்பங்கள்
சிற்பமும் சிறப்பும்
ஆலயம்: சாரங்கபாணி கோயில், கும்பகோணம். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இவ்வாலயம், காவேரி ஆற்றங் கரையில் அமைந்துள்ள `பஞ்ச ரங்க தலங்களில்’ ஒன்றாகும். பெருமாள் சங்கு, சக்கரம் மற்றும் `சாரங்கம்’ என்னும் வில் ஏந்தியவாறு அருள் பாலிக்கிறார். எனவே இவர் `சாரங்கபாணி’ என்று பெயர் பெற்றுள்ளார். ‘குடந்தைக் கிடந்தான்’ என வைணவ ஆழ்வார்களால் போற்றப் பெற்று, ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற பெருமை கொண்ட திருக்கோயில் இதுவாகும்.
காலம்: இடைக்கால சோழர்கள், விஜயநகரப் பேரரசு மற்றும் நாயக்கர்களால் பல்வேறு காலங்களில் கட்டுமானங்கள் மற்றும் புதுப்பித்தல்கள் செய்யப்பட்டன. ராஜகோபுரம் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் (பொ.ஆ.15-16 ஆம் நூற்றாண்டு) கட்டப்பட்டது.
`நாட்டிய கரணம்’ என்பது நாட்டிய சாஸ்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ள `ஹஸ்த முத்திரைகள்’. கை மற்றும் விரல் சைகை உடன் இணைந்து கால், இடுப்பு, உடல் மற்றும் கை அசைவுகளின் ஒருங்கிணைந்த செயலாகும். இது `நிருத்த ஹஸ்தா’ (கைகளின் நடன இயக்கம்), `ஸ்தானா’ (உடலுக்கான நடன ஆசனம்) மற்றும் `சாரி’ (காலின் நடன இயக்கம்) ஆகிய மூன்று கூறுகளின் கலவையாகும். பரத முனிவர் இயற்றிய நாட்டிய சாஸ்திரத்தில், 108 கரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. அந்த கரணங்களைச் சிவபெருமான் அனைவருக்கும் கற்பித்தார் என்று தொன்ம நூல்களில் கூறப்படுகிறது. தஞ்சாவூர், கும்பகோணம்,சிதம்பரம், திருவண்ணாமலை மற்றும் விருத்தாசலம் ஆகிய இடங்களில் உள்ள கோயில்கள், பொ.ஆ.10 முதல் 15 ஆம் நூற்றாண்டு வரையிலான (சோழர் மற்றும் விஜயநகரப் பேரரசுகளின்) கரண சிற்பங்களின் சிறந்த கருவூலமாக விளங்குகின்றன.
தஞ்சைப் பெரிய கோயிலில் மேல்நிலை சாந்தார அறையில் சிவபெருமான் ஆடும் 108 கரணச் சிற்பங்கள் உள்ளன (அவற்றில், 80 கரணச் சிற்பங்களே முழுமை பெற்றுள்ளன).
பதினொரு நிலைகளுடன் 173 அடி உயரம் கொண்ட இந்த சாரங்கபாணி கோயிலின் ராஜகோபுரத்தின் சுவரில் 94 கரணங்கள் சிற்றுருவச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயில் கரணங்களின் தனிச் சிறப்பு என்னவெனில், அவை முற்றிலும் ஆண் நடனக் கலைஞர்கள் ஆடுவதாக வடிக்கப்பட்டுள்ளன. இங்கு நாட்டிய கரணம் காட்டுபவன் முருகப் பெருமான் என்பது ஆய்வாளர்களில் ஒரு சாராரின் கூற்று.
தொகுப்பு: மது ஜெகதீஷ்