கேட்பவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்
குருவாயூரப்பன் கையில் மோதிரம்
மலையாளக் கவிஞர் பூந்தானம் குருவாயூரப்பன்பால் மிகுந்த பக்தி கொண்டவர். அவர் தினமும் நெடுந்தொலைவு காட்டு வழியே நடந்து வந்து குருவாயூரப்பனைத் தரிசித்து விட்டுத் திரும்பிச் செல்வது வழக்கம். ஒருமுறை அவர் அவ்வாறு குருவாயூரப்பனைத் தரிசித்து விட்டுக் காட்டு வழியில் சென்று கொண்டிருந்தார். அவ்வாறு திரும்பிச் செல்கையில், அவரைத் திருடர்கள் சிலர் வழி மறித்தனர். அப்போது, தம்மைக் காப்பாற்றும்படி தாம் வழிபடும் குருவாயூரப்பனிடத்து, மனமுருகி வேண்டினார். குருவாயூரப்பனிடம் அவர் வேண்டிய சிறிது நேரத்தில் அவ்வழியாக வந்த வழிப்போக்கர் ஒருவர் பூந்தானத்தைத் திருடர்களிடமிருந்து காப்பாற்றினார்.
திருடர்களிடமிருந்து தம்மைக் காத்த வழிப்போக்கருக்குப் பூந்தானம், தம் மோதிரத்தை அளித்தார். மறுநாள் குருவாயூரப்பன் ஆலயம் சென்று அங்குக் குருவாயூரப்பனை நிர்மால்ய தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு வியப்பு ஒன்று ஏற்படடது. தம்மைக் காப்பாற்றிய வழிப்போக்கருக்குத் தாம் அளித்த மோதிரம் குருவாயூரப்பனின் கையில் இருப்பதைக் கண்டார். அப்போதுதான் தம்மை மானிடம் வடிவில் வந்து காப்பாற்றியவன் அந்தக் குருவாயூரப்பனே என்று பூந்தானம் உண்மையை உணர்ந்தார்.
சௌரிராசப் பெருமாள்
திருக்கண்ணபுரம் பெருமாள் கோயிலில் பூசை செய்து வந்த அர்ச்சகர் ஸ்ரீதரன் என்பவர், தாம் காதல் கொண்ட கன்னிக்குச் சூட்டிய மாலையையே பெருமாளுக்கும் சூட்டினார்.
இரவிலே சோழ அரசர் சந்நதிக்கு வந்தார். பெருமாளுக்குச் சூட்டிய மாலையைச் ஸ்ரீதரன் சோழ மன்னருக்கு அளித்தார். தமக்கு அளித்த மாலையில் தலைமுடி ஒன்று இருந்ததை மன்னர் கண்டார். ஸ்ரீதரனை அழைத்து மன்னர் காரணம் கேட்டார். உண்மையைச் சொன்னால் உயிர் போய்விடுமே என்று அஞ்சிப் பெருமாளுக்கு முடி வளர்ந்துள்ளதாகச் ஸ்ரீதரன் ஒரு பொய்யைச் சொன்னார். மன்னரும் அப்போது சென்றுவிட்டுப் பெருமாளுக்குத் தலையில் முடியுள்ளதா? என்று சோதிக்கக் காலையில் வருவதாகச் சொல்லிச் சென்றார். ஸ்ரீதரன், மாட்டிக் கொண்டோமே எனத் தவித்தார்.
மறுநாள் காலையில் மன்னர் வந்து பெருமாளைச் சோதித்து போது, பெருமாள் தலையில் இரண்டு மூன்று கேசங்கள் நீண்டு வளர்ந்து இருப்பதையும் கண்டார். அதன் பிறகாவது மன்னன்விட்டுச் சென்றிருக்க வேண்டும். மன்னவனோ, பெருமாள் சிலைமேலுள்ள கேசத்தை, உண்மையிலேயே வளர்ந்துள்ளதா என்று சோதிக்க ஒருமுடியை இழுத்தபோது, அதனின்றும் தெறித்த குருதித் துளிகள் மன்னரின் முகத்தில் தெளித்தன. தம் தவறு உணர்ந்த மன்னவரும் வருந்தினார். அதுமுதல் சௌரிராசன் என்னும் திருநாமம் கொண்டுத் திருக்கண்ணபுரம் பெருமாளை விளித்தனர். இன்றும் அவர் சௌரிராசனாகவே விளங்குகிறார்.
திருக்கண்ணங்குடியில் கண்ணன்
வடபுலத்தில் கோகுலத்தில் கோபாலனாய்க் குடி கொண்ட கண்ணன், தென்புலத்தில் திருக்கண்ணங்குடி என்று தெய்வீகத் திருத்தலம் அமைத்துக் கொண்ட வரலாறு இது.
வசிட்ட முனிவர் கண்ணன் பக்தியில் திளைத்து வாழ்ந்தவர். தினமும் வெண்ணெய் வைத்துக் கண்ணபிரானை வழிபட்டு நிற்பது வழக்கம். பெருமாள் ஒருநாள் சிறுகுழந்தையாக வடிவெடுத்து வந்து ஆராதனை செய்து கொண்டிருந்த வெண்ணெயை எடுத்து விழுங்கிவிட்டு ஓட்டம் பிடித்தார். கண்ணன் என்று தெரியாமல் ஓடிய சிறுவனைத் துரத்திக் கொண்டு சென்றார் வசிட்டர்.
அப்போது அப்பகுதியில் எண்ணற்ற இருடிகள் தவஞ்செய்து கொண்டிருந்தனர். அப்பகுதி நோக்கிக் கண்ணன் ஓடி வருவதைத் தங்கள் ஞானப் பார்வையால் உணர்ந்த அவர்கள் தங்கள் பக்தியென்னும் பாசக்கயிற்றால் கட்டுண்டு அவரை நிற்கச் செய்தனர். அவர்கள் பக்திக்கு இணங்கி நின்ற கண்ணனை ஒரு நிமிட நேரத்தில் ஓடிவந்த வசிட்டன் அவனுடைய திருப்பாதங்களைப் பற்றிக் கொண்டார். அன்பு வலையில் அகப்பட்டு அசைய முடியாதவனாய் கண்ணன் நின்று விட்டான் உடனே அங்கே விமானங்களும், கோபுரங்களும் உண்டாகிவிட்டன. பிரம்மனும் தேவர்களும் அங்கே வந்து பிரம்மோற்சவம் நடத்தினர். கண்ணன் கட்டுண்டு நின்றபடியால் அவ்வூர், திருக்கண்ணன் குடியாயிற்று. பின்னர் நாளடைவில் திருக்கண்ணங்குடி என மருவியது.
காயாத மகிழமரம்
திருமங்கை திருக்கண்ணங்குடியில் ஊறாக்கிணறு என்று சபித்துவிட்டு அங்கிருந்து பசி மயக்கத்துடன் புறப்பட்டார். வழியில் அருகிலிருந்த மகிழ மரத்தடியில் ஒய்வு எடுக்க அமர்ந்தார். மகிழ மரத்தின் நிழல், அது தந்த குளுமை ஆழ்வாரை மகிழ்வூட்டியது. பசித்துயர் மறந்தார். தம் அடியார் கோபத்தையும் களைப்பால் மயங்கியதையும் பார்த்தார் பெருமாள். அவர் கோபத்தை மட்டும் தீரத்திட எண்ணாது, பசியையும் தீர்த்திட எண்ணித் தம் தீர்த்தப் பிரசாதத்துடன், வழிப்போக்கன் வடிவில் பசிக்கு உணவும் அளித்தார்.
ஆழ்வார்க்குக் களைப்பும், தாகமும், பசியும் நீங்கியது. உணவும், தீர்த்தப் பிரசாதமும் அளித்திட வந்த பெருமாள் வழிப்போக்கன் வடிவத்திலே வந்தார். வந்தவர் தாம் வணங்கி வழிபடும் திருமாலே என்பதை ஆழ்வார் உணரவில்லை. வந்த வரும் தம்மை வழிப்போக்கன் என்றே கூறி அடையாளமும் காட்டவில்லை.
தம்மை மகிழ்வித்துக் களைப்பைப் போக்கிய மகிழ மரத்தின்பால் ஆழ்வாருக்கு மன மகிழ்ச்சியே ஏற்பட்டது. மகிழ மரத்தை வாழ்த்தவேண்டும் என்று எண்ணினார். மகிழ மரத்தை வாழ்த்துவது எப்படி? என்று யோசித்தார். மகிழமரத்தை என்றும் பசுமையாக காய்ந்து பட்டுப்போகாது இருக்கவேண்டும் என்னும் கருத்தில் ‘காயா மகிழ மரமாக இருக்க’ வாழ்த்தினார். அம்மகிழ மரம் இன்றும் இருக்கக் காண்கிறோம்.
பால பார்த்தசாரதி
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதியைப் போல மீசையுடன் இல்லாமல் பச்சிளம் பாலகனாகப் பார்த்தசாரதிப் பெருமான் குருவாயூருக்கு வடகிழக்கில் ஒரு கல் தொலைவில் திருக்கோயில் கொண்டிருக்கிறார். பார்த்தசாரதி இப்படிப் பச்சிளம் பாலகன் ஆனது எப்படி? குருச்சேத்திரப் போர்க்களத்தில் கண்ணபிரான் அருச்சுனனுக்கு விசுவரூபம் காட்டியதை அறிந்த நாரதர் அந்த வடிவத்தைத் தாமும் காண விழைவதாகக் கண்ணனிடம் வேண்டினார். குருவாயூருக்குச் சென்று, இப்போது பார்த்தசாரதி கோயில் இருக்குமிடத்தில் அமர்ந்து தவமியற்றினால் காணலாம் என்று கண்ணன் கூற, நாரதரும் அவ்வாறு செய்ய நாரதருக்குப் பார்த்தசாரதியாகத் தரிசனம் அளித்தார். அங்கு விக்கிரகப் பிரதிட்டை செய்ய நாரதர் விழைந்தார். இதற்குரிய வேளை பல்லாண்டு கழித்து ஏற்பட்டது.
குருவாயூரில் ஏகாதசியன்று ஆதிசங்கரருடன் வான் வெளியில் சென்றுகொண்டிருந்த போது குருவாயூரப்பன் ஆலய சீவேலி நடைபெற்றதால் நாரதர் உடனே கீழே இறங்கி வழிபட வந்தார். ஆதிசங்கரர் வராமலே பின் தங்கிவிட்டவர், சீவேலி ஊர்வலத்தின் முன் மயக்க நிலையில் விழ வாத்திய முழக்கங்களும் சீவேலியும் நின்றன.
ஆலயத்தில் எழுந்தருளியுள்ள பகவதி, நாரதருக்கு முன்பு பார்த்தசாரதி தரிசனம் கொடுத்த தலத்திற்கு ஆதிசங்கரரை அழைத்துச் செல்லும் படி கூறினார். அங்குப் பார்த்த சாரதியின் தரிசனத்தைச் சங்கரரும் பெற்றார். பின்னர் நாரதர் கட்டளைப்படி சங்கரர், கங்கை சென்று பார்த்தசாரதிப் பெருமாள் உருவத்தைப் பிரதிட்டை செய்து ஆலயம் எழுப்பி பூசை முறைகளை வகுத்தார்.
அன்னபூரணி ஆசைப்பட்ட கிருஷ்ணன்
திருச்சம்பரம் என்றும் ஊர் கேரள மாநிலத்தில் உள்ளது. திருச்சம்பரம் கிருஷ்ணனையும், செருகுன்னு என்னுமிடத்து அன்னபூரணி ஆலயத்தையும் தொடர்புபடுத்தி ஒரு வேடிக்கையான கதை உள்ளது. செருகுன்று அன்னபூரணி கிருஷ்ண பகவான் மீது ஆசை கொண்டுவிட்டாளாம். அதனால் அன்னபூரணியின் வேண்டுகோளுக்கிணங்கி கிருஷ்ணன், தமது சொத்துக்களையெல்லாம் ஒவ்வொன்றாக இழந்தாராம். நெல் வயல், தோப்புகள் செருகுன்று ஆலயத்திற்குச் சொந்த மாயினவாம்.
அன்னபூரணி, கண்ணன் இவ்வாறு செய்யலாமா, உறவு விட்டுவிடச் செய்யலாமா என மனம் வருத்திக் கேட்டதால், விஷுப்பண்டிகையின் போது செருகுன்று ஆலயத்திற்கு வெகுமதிகள், சிறப்புக்கள் அனுப்பிவைப்பதாக வாக்களித்தாராம். அதனால் இன்றைக்கும் செருகுன்று ஆலயத்திற்கு, இரண்டாம் நாள் விழாவின் போது திருச்சம்பரம் ஆலய யானைகளும் வெகுமதிகளும் அனுப்பிடப் பெறுகிறதாம்.
மீன் குளத்துக் கண்ணன்
கேரள மாநிலத்துப் பையனூர் அருகில் 24 கிலோ மீட்டர் தொலைவில், பிலாத்ரர் என்னுமிடத்துக்கு அருகில் உள்ள குளம் மீது கண்ணன் கோயில் எழில் மிக்க இருகைகளிலும் வெண்ணெய் உருண்டைகளை ஏந்தியுள்ள அழகிய தோற்றம் உடையவர் இக்கண்ணன். இந்தக் கண்ணன் எப்படி வந்தார்? வில்வமங்கல் சுவாமியார் யமுனைக் கரையில் தியானம் செய்யும் போது, அவர் தியானத்தில் ஒளிமயமான நவநீத கிருஷ்ணன் தோன்றக் கண்டார். ஆனால், அந்தப் பேரருளாளர் உரு மறைந்துவிட்டது. கண்களைத் திறந்த போது அலைகளின் மீது கண்ணைப் பறிக்கும் போது ஒளியொன்று படர்ந்திருந்தது.
அதனால் உருவாக்கப்படும் நதியில் மூழ்கி எழுந்த வரின் கைகளில் அழகான கண்ணனின் மூன்று உருவச்சிலை கிடைத்தன. கண்ணனின் எழில் வடிவில் மயங்கினார். கற்சிலையாக அதனைக் கருதாது கிருஷ்ண பகவானே என எண்ணி மகிழ்ந்தார்.பரசுராமத் தலத்திற்குத் தம்மைக் கொண்டு செல்ல அச்சிலைகள் வேண்டின. அவற்றை எடுத்து அவ்வாறே பையனூர் சுப்பிரமணிய தலத்திற்குச் சுமார் பத்துக் கல் வடகிழக்கில் ஓரிடத்தில் இயற்கையகைதியில் திளைத்த இடத்தில் கிருஷ்ணனைப் பிரதிட்டை செய்தார். அந்தக் கிருஷ்ணனே மீன் குளத்துக் கிருஷ்ணன் ஆவார்.
ஜன்னல் வழியே கண்ணன்
உடுப்பியில் உள்ள பாலகிருஷ்ணனை நேரில் தரிசித்து வழிபட முடியாது. ஒன்பது துவாரங்கள் கொண்ட ``கனகனகிண்டி’’ எனப்படும் ஜன்னல் வழியாகவே தரிசிக்க வேண்டும். இன்றும் மாறாப்புதுமை இது. ஸ்ரீமத்வாச்சாரியார் எப்படிப் பாலகிருஷ்ணனைப் பூஜிக்க வேண்டும், என்ன என்ன அலங்காரம் செய்ய வேண்டும், என்ன என்ன நிவேதனம் செய்ய வேண்டும் என்பன எல்லாம் தாமே முறை வகுத்துள்ளார். ஒவ்வொரு நாளும் பாலகிருஷ்ணனைப் பூஜிக்கும் சந்நியாசிகள், ஒன்பது முறை குளித்து வழிபாடுகளைச் செய்கிறார்.
தொகுப்பு: நாகலட்சுமி