கனிவோடு வரம் தரும் காஞ்சி வரதராஜர்
வடமொழியில் காளிதாசன் இயற்றிய ஒரு சுலோகம். பொருள் இதுதான். மலர்களிலே ஜாதி மல்லி சிறந்த மலர். புருஷர்களின் புருஷோத்தமனான மன் நாராயணனே சிறந்தவன். பெண்களிலே அழகு வாய்ந்தவள் ரம்பை. நகரங்களில் சிறந்து விளங்குவது கச்சி மாநகரம்.
புஷ்பேஷு ஜாதி
புருசேஷு விஷ்ணு
நாரீஷு ரம்பா
நகரேஷு காஞ்சி
- என்பது அந்த ஸ்லோகம்.
முக்தி தலங்கள் ஏழு என்று சொல்வார்கள். அயோத்தியா, மதுரா, மாயா எனப்படும் ஹரித்துவார், காஞ்சி, காசி, அவந்திகா எனப்படும்உஜ்ஜயினி, துவாரகை. இதில் காஞ்சிபுரம் காசியை விட சிறப்பானது.
காஞ்சியில் இருக்கக்கூடிய பல வைணவ தலங்களுக்குத் தலைமைத் தலமாக விளங்குவது காஞ்சி வரதராஜர் கோயில். இத்தலம் பற்றிய குறிப்புகள் பாத்ம புராணம், கூர்ம புராணம் முதலிய நூல்களில் கிடைக்கின்றன. எம்பெருமான் உந்திக் கமலத்தில் உதித்த நான்முகன், அவருடைய திருக்காட்சியைக் காண்பதற்காகக் கடுமையான தவம் செய்தார். அதன் விளைவாக புஷ்கரம் என்கின்ற திருத்தலத்திலே தீர்த்த வடிவில் பெருமாள் காட்சி தந்தார். திருப்தியில்லாத நான் முகன் மறுபடியும் எம்பெருமான் திருக்காட்சிக்குத் தவமிருந்தார். இப்பொழுது வனங்களின் ரூபமாக நைமிசாரண்யத்தில் பெருமாள் காட்சி தந்தார். மறுபடியும் எம்பெருமானுடைய காட்சியைக் காண வேண்டும் என்று நினைத்த பிரம்மா தவமிருக்க. அப்பொழுது ஒரு அசரீரி கேட்டது. ஆயிரம் அசுவமேத யாகம் செய்தால் எம்பெருமான் திருக்காட்சியைக் காணலாம். ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்வது எப்படி சாத்தியம் என்று திகைத்தார் பிரம்மா. எம்பெருமானையே வேண்டினார். மறுபடியும் அசரீரி ஒலித்தது. “நீ சத்தியவிரத திருத்தலமான காஞ்சிபுரத்தில் சென்று ஒரே ஒரு அஸ்வ மேத யாகம் செய்தால் அது ஆயிரம் அஸ்வமேத யாகத்திற்குச் சமமான பலனைத்தரும்” என்று சொல்ல, நான்முகனும் எம்பெருமானைக் குறித்து யாகம் செய்யத் தொடங்கினர். வசிஷ்டர் யாகத்தில் அமர்ந்தார். அப் பொழுது நான்முகனுக்கும் கலைமகளுக்கும் ஒரு பிரச்சனை இருந்தது. எனவே, இந்த யாகத்தை அவள் நடத்தவிடாமல் வேகவதி என்கின்ற ஆறாக வந்து தடுத்தாள். ஆயினும் எம்பெருமான் அருளால் அந்தத் தடை நீங்கி நான்முகனுக்கு வரம் அருளும் வரதராஜன் ஆக இத்தலத்தில் பெருமாள் காட்சி தந்தார். சித்ரா பௌர்ணமியன்று ஒவ்வொரு ஆண்டும் இரவு நேரத்தில் பிரம்மனே இங்கே எம்பெருமானை வழிபடுவதாகத் தலபுராணம் சொல்கிறது. அந்தத் தினத்தில் எம்பெருமானுக்கு நிவேதனம் படைத்து விட்டு வெளியே வந்துவிடுவார்கள். ஒரு நாழிகை நேரம் கழித்துப் பார்த்தால் அதில் அற்புதமான நறுமணம் கமழும். இக்காட்சி இங்கு ஆண்டுதோறும் வைபவமாக நடைபெறும். இத்தலத்தை, க்ருத யுகத்தில் பிரம்மனும், திரேதாயுகத்தில் கஜேந்திரனாகிய யானையும், துவாபரயுகத்தில் குருவாகிய பிரகஸ்பதியும், கலியுகத்தில் ஆதிசேஷனான அனந்தனும் வணங்கி பேறு பெற்றனர். பிருகு முனிவர் ஒரு முறை திருமாலிடம் அபசாரப்பட்டார். அதனால் பெரும் வருத்தம் அடைந்தார். இதனை நீக்கிக் கொள்வதற்காக அவர் இத் தலத்திற்கு வந்து, தாயார் மகாலட்சுமியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அதன் விளைவாக மகாலட்சுமி தாயார் பிருகு முனிவரின் புதல்வியாக அவதரித்தார். பெருந் தேவித் தாயார் என்கிற பெயரோடு வளர்ந்த புதல்வியை பிருகுமுனிவர் வரதராஜ பெருமாளுக்கு பங்குனி உத்திரத் திருநாளில் மணம் செய்து கொடுத்தார். தம்பதி சமேதராக தரணி வாழ புண்ணியகோடி விமானத்தின் கீழே இருவரும் காட்சி தருகின்றார்கள். சிருங்கிபேரர் என்றொரு முனிவர் இருந்தார். அவருக்கு இரண்டு குமாரர்கள். ஏமன் சுக்கிரன் என்று அவர்களுக்குப் பெயர். இருவரும் கௌதம முனிவரிடம் கல்வி கற்றார்கள். இவர்கள் தினமும் திருமால் பூஜைக்கு பல்வேறு பூஜைப் பொருட்களை முனிவருக்குச் சேகரித்துத் தரும் தொண்டினைச் செய்து வந்தார்கள். ஒரு நாள் இவர்கள் பூஜைக்கு வைத்திருந்த தீர்த்தத்தில் ஒரு பல்லி விழுந்து விட்டது. அதைக் கவனிக்காமல் அப்படியே கொண்டு வந்து குருவிடம் கொடுக்க, தீர்த்தத்தில் இருந்து பல்லி தாவி ஓடியது. கோபம் கொண்ட கௌதம முனிவர் அக்கறையில்லாமல் அலட்சியத்தோடு பல்லி விழுந்த தீர்த்தத்தை பூஜைக்கு கொண்டுவந்த அவர்களை பல்லிகள் ஆகும்படி சபித்துவிட்டார். தவறை உணர்ந்த சீடர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டனர். பிராயச்சித்தம் வேண்டினர். அப்போது முனிவர் சொன்னார். “அத்திகிரி எனும் காஞ்சி தலத்தில் பெருமாளை சேவிக்க இந்திரன் ஒரு யானை வடிவம் கொண்டு வருவான். அப்போது உங்கள் சாபம் அகன்றுவிடும்” என்று தெரிவிக்க, அவன் வருகைக்காகக் காத்திருந்தனர். இத்தலத்து பிரகாரத்தில் அவர்கள் பல்லிகளாக வந்து அமர்ந்தனர். இந்திரன் வருகையால் அவர்கள் சாப விமோசனம் பெற்றனர். இந்நினைவை குறிக்கும் வண்ணம் இப்பொழுதும் வரதராஜ பெருமாளை தரிசிக்க செல்லும் மாடிப்படியில் 24 வது படிக்கும் எதிரில் தங்கத்திலும் வெள்ளியிலும் இரண்டு பல்லிகள் அமைக்கப்பட்டுள்ளன இவற்றை பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர். நோயினால் அவதிப்படுபவர்கள் இப் பல்லிகளை தரிசித்துவிட்டு வரதனை தரிசிக்க நோய் தீரும். ஜீவாத்மா தத்துவத்தை தவிர்த்த அசித் தத்துவங்கள் 24 என்பதைக் குறிக்கும் வண்ணம் அத்திகிரி மலையின் மீது 24 படிகள் உண்டு. ஜீவாத்மாவாகிய 25 ஆவது தத்துவம். இந்த 24 அடிகளாகிய அசித் தத்துவத்தை கடந்தால் 26வது தத்துவமான ஈஸ்வர தரிசனத்தைப் பெறலாம்.தேவர்களின் குரு பிரகஸ்பதி. அவர் ஒரு முறை சாபம் பெற்றார். அதனால் அவர் நர்மதை நதிக்கரையில் வறுமை மிகுந்த அனாச்சாரம் மிக்க ஒரு அந்தணருக்கு மகனாகப் பிறந்தார். இளமையிலேயே தாய் தந்தையை இழந்து அனாதையான அவரை, ஒரு பெண்மணி வளர்த்தார். பலப்பல கொடும் துன்பத்துக்கு ஆளான பிரகஸ்பதி, தன்னுடைய சாபத்தைப் போக்கிக் கொள்ள கங்கைக் கரையில் தவம் செய்து கொண்டிருந்த பரத்வாஜ மகரிஷியை அடைந்தார். அவருடைய யோசனையின் பேரில், சத்தியவிரதத் தலமான காஞ்சிபுரத்திற்குச் சென்று, அனந்த சரஸ் புஷ்கரணியில் நீராடி வரதனைத் தரிசித்தால், பழைய நிலையையும், பதவியையும் பெறலாம் என்று கூற, அதன்படியே பிரகஸ்பதி, இத்தலத்திற்கு வந்து சேவை பெற்றார். அவர் சேவித்த நன்னாள் புரட்டாசி திருவோணம். தன்னுடைய சாபம் நீங்கி, தேவர்களின் குரு என்கிற பழைய பதவியை அடைந்தார்.தேவலோகத்தில் உள்ள ஐராவதம் என்கிற யானை ஒரு மலை வடிவில் வரதனைத் தாங்கி நிற்பதால், இதற்கு அத்திகிரி என்று பெயர். ஐராவதம் வெள்ளையானை என்பதால் வெள்ளை மலை “சுவேதகிரி” என்றும் பெயர். இத்தலத்திற்கு எத்தனையோ அழகுகள் இருந்தாலும், வரதன் உற்சவங்களில் பிடித்து வரப்படும் குடை அழகு அபாரம். பிரம்மாவுக்கு வைகுந்தப் பெருமாளாக வரதராஜன் நேர் காட்சி தந்ததால் இங்கு வைகுந்த வாசல் தனியாக இல்லை. ரவிவர்மன் குலசேகரன் என்கின்ற சேர நாட்டு அரசனின் மகள், வரதராஜ பெருமாள் மீது ஆண்டாளைப் போலவும் மீராவை போலவும் எல்லையற்ற அன்பு கொண்டிருந்தாள். அடைந்தால் வரதராஜனை கணவராக அடைய வேண்டும் என்கின்ற அளவுக்கு உறுதி கொண்டிருந்தாள். அவளுடைய வைராக்கியத்தை வரதராஜ பெருமாள் நிறைவேற்றி வைத்தார். மலையாள நாச்சியார் என்கின்ற திருநாமத்தோடு பங்குனி உத்திரத் திருநாளில் தேவராஜனைத் திருமணம் செய்துகொண்டார்.க என்றால் பிரம்மன். அஞ்சுரம் என்றால் பூஜித்தல். பிரம்மன் பூஜித்ததால் இது கஞ்சிவரம் என்றாகி, காலப்போக்கில் காஞ்சிபுரம் ஆயிற்று. அத்திகிரி, வேதகிரி, சுவேதகிரி என்றெல்லாம் பல பெயர்களோடு இத்தலம் விளங் குகிறது. சுவாமி இராமானுஜர் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த திருத்தலம் இது. இத்தலத்தில்தான் வரதராஜ பெருமாளோடு ஏகாந்தத்தில் உரையாடுகின்ற பெருமை பெற்றார் திருக்கச்சி நம்பிகள்.இங்குள்ள புஷ்கரணிகள் பல. அனந்த சரஸ், பிரம்ம சரஸ், ஸ்வர்ண பத்மசரஸ், அக்னீ சரஸ், வராக தீர்த்தம், எனப் பல தீர்த்தங்கள் உண்டு. இராமானுஜருக்கு ஆறு வார்த்தைகளை தேவராஜனிடமிருந்து பெற்றுத் தந்தார். அந்த வார்த்தைகளை ராமானுஜரின் வாழ்க்கைப் பாதையை தீர்மானித்தன. வைணவ தத்துவத்தை வரையறுக்கச் செய்தன. ராமானுஜர் யாதவப் பிரகாசரிடம் கல்வி பயின்ற பொழுது, அவருடைய கொள்கை வேறுபாடுகள் விவாதங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதற்காக சில ஏற்பாடுகள் நடந்தன. காசி யாத்திரை என்கின்ற பெயரில் அவரை அழைத்துச் சென்று கங்கையில் முடித்துவிடலாம் என்று அவர் நினைத்த நினைப்பு பொய்யாகியது. எம்பெருமான் அருளால் விந்திய மலைக் காடுகளில் யாதவ பிரகாசரின் திட்டம் அறிந்து தப்பித்த இராமானுஜர், ஒரு வேடுவர் தம்பதியின் வழிகாட்டலில் காஞ்சிபுரம் வந்தடைந்தார். அப்பொழுது இது என்ன ஊர் என்று சிலரை விசாரிக்க, அவர்கள் காஞ்சியின் பிரசித்தி பெற்ற பொன் மயமான புண்ணியகோடி விமானத்தைக் காட்டி காஞ்சிபுரம் என்று சொன்னார்கள். காஞ்சியை அடையாளம் காட்டியது வரதராஜ பெருமாளின் புண்ணியகோடி விமானம். ஒரே ஒரு முறை இந்த விமானத்தைத் தரிசித்தாலே கோடி புண்ணியம் தேடி வந்து சேரும். கம்பீரமாகக் காட்சி தரும் தேவாதி தேவனாகிய வரதராஜ பெருமாளையும், தனிக்கோயிலில் மகாதேவி என்ற திருநாமத்துடன் காட்சிதரும் பெருந்தேவித் தாயாரையும் தரிசிப்பது பிறவிப் பேறு, இத்தலம் கிரி என்கின்ற பெயரோடு விளங்குகிறது. வாரணகிரி, அத்திகிரி என்று இரண்டு சிறிய மாடி போன்ற குன்றுகள் இத்தலத்தில் உண்டு. முதல் தளத்தில் நரசிம்மருடைய சந்நதி உண்டு. அழகியசிங்கர் என்ற திருநாமத்தோடு அமர்ந்த கோலத்தில் நரசிம்மர் காட்சி தருகிறார். ஹரித்ரா தேவி பிராட்டியாக அருட்காட்சி தருகிறார். இரண்டாவது மாடியில் தான் வரதராஜ பெருமாள் சந்நதி உள்ளது. இத்தலத்தின் மிக முக்கியமான சிறப்பு 40 வருடங்களுக்கு ஒரு முறை காட்சிதரும் அத்திவரதர். அத்தி மரத்தால் ஆன காஞ்சி பெருமாளின் திருவுருவம் 40 வருடங்களுக்கு ஒரு முறை திருக்குளத்தில் இருந்து வெளியே எழுந்தருளச் செய்யப்படும் மிக அழகான திருத்தலம். முத லாழ்வார்கள், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களா சாசனம் செய்திருக்கின்றனர். வைணவர்களுக்கு 108 திவ்ய தேசங்களும் மற்றும் பல புராண ஆச்சாரிய அபிமான திருத்தலங்கள் இருந்தாலும், நான்கு திருத்தலங்கள் முக்கிய மானவை. ரங்கம், திருமலை, காஞ்சிபுரம், மேல்கோட்டை(திருநாராயணபுரம்). கோயில் என்றால் அது திருவரங்கத்தைக் குறிக்கும். பெருமாள் கோயில் என்றால் அது காஞ்சிபுரம் வரதராஜரைக் குறிக்கும். கூரத்தாழ்வான் ராமானுஜருடைய பிரதான சீடர். சோழ அரசனால் அவர் கண்களை இழந்தார். வைணவ தரிசனத்திற்காக தரிசனத்தை (கண்களை) தந்த இவருடைய நிலையைக் கண்டு இராமானுஜர் வருந்தினார். அவர் மீண்டும் பார்வையைப் பெற ஒரு உபாயம் சொன்னார். கூரத்தாழ்வானை வேறு திருத் தலங்களுக்குச் செல்லுமாறு சொல்லாமல், காஞ்சி வரதராஜ பெருமாளிடம் சென்று பார்வையைப் பெற ஆணையிட்டார். பெருமாள் மீது “வரதராஜ ஸ்தவம்” என்கின்ற அற்புதமான ஸ்தோத்திரங்களை வரதராஜன் மனம் மகிழும் வண்ணம் பாடினார் கூரத்தாழ்வான். அபாரமான ஸ்தோத் திரங்களில் மயங்கிய வரதராஜன், உனக்கு என்ன வேண்டும் கேள்? என்று கேட்க, தனக்கு கண் பார்வை வேண்டும் என்று கேட்காமல், “நான் பெற்ற பேறு நாலூரானும் பெறவேண்டும்” என்று, தான் கண் இழப்பதற்குக் காரணமான, நாலூரானின் நல்வாழ்வை வரதனிடம் விரும்பினார். வைணவத் திருத்தலங்களில் கருடசேவை உயர்வானது. திருவரங்க கருட சேவை, திருநாங்கூர் கருட சேவை, ஆழ்வார்திருநகரி கருடசேவை போன்ற பிரசித்தி பெற்ற கருட சேவை இருந்தாலும், கருடசேவை என்ற சொல்லுக்கு காஞ்சி கருட சேவை தான் முதல் பொருளாக நினைவுக்கு வரும். அவ்வளவு பிரசித்தி பெற்றது காஞ்சி கருட சேவை. கஜேந்திரன் என்ற யானை வரதராஜப்பெருமாள் அருளைப் பெற்றது. ஆடி மாசம் சுக்லபட்ச துவாதசியில் மிக அற்புதமான கஜேந்திர மோட்ச கருடசேவை இத்தலத்தில் நடக்கும். காணக்கண் கோடி வேண்டும். திருக்கச்சி நம்பிகள் இத்தலத்து எம்பிரான் மீது தேவராஜ அஷ்டகம் பாடினார். அவருக்கு கஜேந்திர தாசர் என்று திருநாமம். மணவாள மாமுனிகள் வரதராஜன் மீது தேவராஜ மங்களம் என்கின்ற துதி நூலை இயற்றினார். தொட்டாச்சாரியார் என்கின்ற சுவாமி தேவராஜ பஞ்சகம் என்கின்ற நூலை இயற்றினார். தூப்புல் தேசிகன் பற்பல நூல்களை இப்பெருமான் மீது இயற்றியுள்ளார். அவற்றில் சில. திருச்சின்னமாலை, அடைக்கலப்பத்து, நியாஸ தசகம், மெய் விரத மான்மியம், அத்திகிரி மகாத்மியம், வரதராஜ பஞ்சாசத். ஒரு ஏழை பிராமணனுக்குத் திருமணத்திற்கு பொருளுதவி புரிய இங்குள்ள தாயார் மீது ஸ்துதி என்கின்ற நூலை இயற்றினார். அதன்மூலம் கிடைத்த பொற்காசுகளை அந்த பிராமணனுக்கு அளித்தார். பல்லவ மன்னர்களும், விஜயநகர மன்னர்களும், இத்தலத்திற்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. இத்திருக்கோயிலின் கிழக்குக் கோபுரம் கிருஷ்ண தேவ ராயரால் கட்டப்பட்டது. இத்தலத்தில் பல்லவர் காலத்தின் கண்ணுக் கினிய கலைச் சிற்பங்கள் பல மண்டபங்களில் காணலாம். குறிப்பாக நூற்றுக்கால் மண்டபம் மிக அற்புதமானது. ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களின் தலைநகரமாக இது விளங்குகிறது. சோழ மன்னர்களும் பல திருப்பணிகளைச் செய்துள்ளனர். நாயக்க மன்னர்களின் திருமலை நாயக்கர் பல விலை உயர்ந்த ஆபரணங் களை இந்த பெருமாளுக்கு அளித்துள்ளார். ஆங்கிலேயர்களில் ராபர்ட் கிளைவ் பெருமாளிடம் கொண்ட ஈடுபாட்டால் அழகான மகரகண்டி ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார். காஞ்சி வரதராஜன் எல்லா தேவதைகளுக்கும் உட்பொருளாய் நின்று அருள் புரியும் தேவாதி தேவன் என்பதை ஒரு அருமையான பாசுரத்தால், இரண்டாம் திருவந்தாதியில் பூதத்தாழ்வார் விளக்குகின்றார்.
அத்தியூரான் புள்ளை ஊர்வான் அணிமணி
துத்திசெய் நாகத்தின் மேல் துயில்வான்- முத்தீ
மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான்.
ஆடி மாதம் வளர்பிறையில் தசமி அன்றும் தேய்பிறை ஏகாதசி அன்றும் ஆதிசேஷன் இப்பெருமாளை வந்து வணங்கிய நாள் என்பதால் ஆதி சேஷனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. சுவாமி தேசிகன் அவதாரத் தலம் இது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் பிராட்டிக்கு பிராகாரப் புறப்பாடு உண்டு. ஒவ்வொரு ஏகாதசி அன்றும் பெருமாளுக்கும் புறப்பாடு உண்டு. ஏகாதசியும் வெள்ளிக்கிழமையின் சேர்த்துவந்தால் இருவருக்கும் சேர்ந்து புறப்பாடு நடக்கும். இக்கோயிலின் முதல் பிராகாரத்திற்கு சேனையர் முற்றம் என்றும், மூன்றாவது பிராகாரத்திற்கு ஆளவந்தார் பிராகாரம் என்றும், நான்காவது பிராகாரத்திற்கு ஆழ்வார் திருவீதி என்றும், ஐந்தாவது பிராகாரத்திற்கு மாடவீதி என்றும் பெயர். நம்மாழ்வார் தமது திருமொழியின் முதல் பாசுரமாகிய உயர்வர உயர்நலம் பாசுரத்தில், அயர்வறும் அமரர்கள் அதிபதி என்று தேவாதிராஜனைக் குறிப்பிடுவதாக சொல்வர். அதில் கடைசி வரியில், ‘‘துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே” என்று மனதிற்குச் சொல்வது போல, பாசுரத்தை முடித்திருப்பார். பொதுவாக எல்லாத் திருக்கோவில்களிலும் ஞான முத்திரையோடு காட்சிதரும் நம்மாழ்வார், இங்கே முதல் பாசுரத்தின் நான்காவது அடியை அனுஷ்டிப்பது போல தன் நெஞ்சில் கைவைத்து அருள்கிறார். பல வரலாற்றுச் சம்பவங்களோடு இத்திருத்தலம் தொடர்புடையது. அந்நியப் படையெடுப்பு நடந்த பொழுது இங்குள்ள உற்சவரை திருச்சி உடை யார் பாளையத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். 32 வருடங்கள் கழித்து 1710ல், ஆத்தான் ஜீயர் என்கின்ற வைணவ ஆச்சாரியர், தம் சீடர் ராஜா தோடர்மால் உதவியுடன், பெருமாளை காஞ்சிபுரத்திற்கு கொண்டுவந்தார். இதை விவரிக்கும் கல்வெட்டு ஒன்று தாயார் சந்நதி முகப்பில் உள்ளது. ராஜா தோடர்மால் சிலையும் உண்டு. இப்பெருமானை மீட்டுக்கொண்டு வந்த பங்குனி மாதம் உத்திரட்டாதி தினம் உடையார்பாளையம் உற்சவமாக இன்றும் நடைபெறுகின்றது.
வைணவ ஆச்சாரியர்கள் மிகவும் புகழ்பெற்ற வைணவ மாமேதை பிரதிவாதி பயங்கரம் அண்ணாங் கராச்சாரியார் சுவாமிகள் இத்தலத்தில் ஆற்றிய தொண்டுகள் பலப்பல. இங்கு ராமானுஜர் பல ஆண்டுகள் தீர்த்த கைங்கர்யம் செய்தார். அவருடைய திருமாளிகை கிழக்கு வாசலுக்கு எதிரில் செல்லும் வீதியில் உள்ளது. உடையவர் திருமாளிகை என்று பெயர். வரதராஜ பெருமாள் திருவீதி வலம் வருகின்ற பொழுது, திருமாளிகைக்கு எழுந்தருளி மண்டகப்படி உற்சவத்தை ஏற்றுக்கொள்கிறார். இத்தலத்தைக் குறித்து 108 திருப்பதி அந்தாதி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் பாடுகின்றார்.
பொருளாசை மண்ணாசை பூங்குழலார் போகத்து
இருள் ஆசை சிந்தித்திராதே - அருளாளன்
கச்சித் திருப்பதியாம் அத்தியூர்க் கண்ணன்தாள்
இச்சித் திருப்பதியாம் என்று.