வெற்றியை பறைசாற்றும் காஹல யோகம்!
ஒருவன் வாழ்வில் எப்பொழுதும் வெற்றியை நோக்கி பயணிப்பது என்பது சாத்தியமா? என்ற சந்தேகம் நமக்கு எழும். ஆனால், நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்களில் சிலர் கீழ் நிலையில் இருந்து மேல் நிலையை நோக்கி வளர்வதை காணும் பொழுது ஆச்சர்யப்பட வைக்கும். இது கிரகங்களின் இருப்பும், கிரகங்களின் இயக்கமும்தான் இந்தப் பணியைச் செய்கிறது. அவர்கள் இருந்த இடமும், வளர்ச்சிக்குப்பின் அவர்கள் இருக்கும் இடத்திற்கும் எந்த தொடர்பும் இருக்காது. ஆனால், வெற்றி தொடர்ந்து கொண்டே இருக்கும். தொடர்ச்சியான வெற்றி என்பது பலருக்கு சாத்தியம் இல்லை. ஆனால், சிலருக்கு மட்டும் சாத்தியமாகிறது. அப்படிப்பட்ட தொடர் வெற்றியை பற்றிய யோகம்தான் காஹல யோகம் என ஜோதிட சாஸ்திரங்கள் புகழ்கின்றன. பல புகழ் பெற்ற நபர்கள் மற்றும் சாதித்தவர்களும் இந்த யோகத்தில் பிறந்துள்ளனர்.
காஹல யோகம் என்பது என்ன?
ஜனன ஜாதகத்தில் நான்காம் (4ம்) அதிபதியும், ஒன்பதாம் (9ம்) அதிபதியும் ஒன்றுக் கொன்று கேந்திரக் கோணங்களில் இருப்பதும், நான்காம் (4ம்), ஒன்பதாம் (9ம்) அதிபதிகள் இணைந்து கேந்திரங்களில் அமர்ந்து லக்னாதிபதியும் வலிமை பெற்று இருப்பது காஹல யோகம் ஆகும். காஹல என்ற சொல் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. இந்த சொல் ஒரு இசைக் கருவியை குறிக்கிறது. இதனை வெற்றிக்கான இசைக் கருவியாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இதில், ஏதேனும் ஒரு கிரகம் ஆட்சி, உச்சம் பெற்று அமைவது சிறப்பான அமைப்பாகும். மூன்று கிரகங்களும் ஆட்சி, உச்சம் பெற்று அமையுமாயின் அந்த ஜாதகர் ராஜனைப் போல வாழ்வாங்கு வாழ்வார் என்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
காஹல யோகத்தின் சிறப்பியல்புகள் என்ன?
கேந்திரங்களில் உள்ள கிரகங்கள் சில சமயம் நீசம் அடைந்தாலும், கேந்திரம் ஸ்தானங்களில் அது குறிப்பிட்ட வலிமையை பெறுகிறது என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. நீச பங்கம் ஏற்பட்டாலும் கிரகங்கள் நல்ல வலிமை பெற்றுள்ளது என்று பொருள்.
* லக்னத்தின் நான்காம் (4ம்) பாவகம் ஒருவரின் கல்வியையும் சுகத்தையும் ஒழுக்கம் மற்றும் தாயை குறிக்கின்ற அமைப்பாகும். இந்த அமைப்பின் அடிப்படையில் ஒருவருடைய கல்வி சிறப்பானதாகவும் நல்ல சுகமான வாழ்வை பெற்றவராகவும் தாயின் அன்பை நிரம்பப் பெற்றவராகவும் அல்லது தாயின் மீது அதீத அன்புள்ளம் கொண்டவராகவும் இருப்பது சிறப்பாகும். இதில், ஒரு மனிதனின் ஒழுக்கம் என்பது அவனுடைய நீண்ட வெற்றிக்கு உறுதுணையாக உள்ளது. இதை தொடர்ந்து அந்த ஜாதகர் அதிகாரம் மற்றும் நில புலன்கள் கொண்ட நல்ல சௌபாக்கியத்தை பெறுபவராக உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
* லக்னத்தின் ஒன்பதாம் (9ம்) பாவகம் ஒருவரின் தந்தையையும் கிடைக்கின்ற பாக்கியங்களையும் அவருடைய கடவுள் பக்தியையும் பற்றிச் சொல்லுகின்ற பாவகமாக உள்ளது. அதன் அடிப்படையில் தந்தை, மகனிற்கு இடையே உள்ள அன்பு மற்றும் அவன் கிடைக்கப் பெறுகின்ற பலன்களை சொல்கிறது.
* பொதுவாக லக்னாதிபதி வலிமை பெற்று இருந்தால், ஜாதகர் எந்தப் பிரச்னையையும் எதிர் கொள்ளும் திறனும், தனக்கு வரும் சங்கடங்களை தாங்கும் திறனும் பெற்றிருப்பார். எனவே, லக்னாதிபதி வலிமை பெறுவது மனோதைரியத்தையும் குறிப்பதாக உள்ளது.
காஹல யோகத்தின் பலன்கள்
* எந்த செயலையும் வெற்றி பெற வைக்கும் எண்ணத்தையும் சிந்தனையையும் ஜாதகர் கொண்டிருப்பார். நாளை என்பதை பற்றி கவலை கொள்ளாமல் இன்று எப்படி கடமையைச் செய்வது என்ற சிந்தனையில் இருப்பார்.
* தாய் மற்றும் தந்தையின் அன்பிற்கு பாத்திரமானவராக இருப்பார். தாய் - தந்தையை நினைத்து மனதிற்குள் சந்தோஷத்தை ஏற்படுத்திக் கொள்வார்.
* எப்பேர்பட்ட நிலையில் இருந்தாலும், வெற்றியை எளிதாக கைவரப் பெறும் அமைப்பு உடையவராக இருப்பார். அதற்கு ஏற்றாற் போல் நண்பர்களும் சுற்றங்களும் சூழ்நிலைகளும் அமைந்த வண்ணம் இவருக்கு இருக்கும்.
* கடவுள் நம்பிக்கை அதீதமாக இவர்களுக்கு உண்டு. கோயில்கள் கட்டுவதிலும் அவற்றை பராமரிப்பதற்கும் உதவி செய்வதிலும் விரும்பம் கொண்டவராக இருப்பார்.
* சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவராகவும் பல உயர் பதவிகளை எளிதில் பெற்று அதற்கு பெருமை சேர்ப்பவராகவும் இருப்பார்.
* புதிய யுக்திகளை கையாள்வதில் கைதேர்ந்தவராக இருப்பார். எந்த வெற்றியையும் பழமையில் இருந்து மாற்றி புதிதாகச் செய்து வெற்றியை தொடர்வார்.
* இவருக்கும் வாகனம், நிலபுலன்கள், பரிசுப் பொருட்கள் என ஏராளமாக வந்து கொண்டே இருக்கும்.
* எல்லா விஷயங்களும் இருந்தாலும் தனது குறை மற்றும் நிறைகளை தெளிவாக அறிந்து வைத்திருப்பார். ஆகவே, அதற்கு தகுந்தார் போல் தம்மை பாதுகாத்துக் கொள்வார்.
* அரசாங்க விஷயங்களில் அதிகம் பங்கு கொள்ளும் திறன் உண்டு.
* எந்த எதிரியையும் நேருக்கு நேராக சந்திக்கும் திறனை பெற்றிருப்பார். அச்சம் என்பதை வெளிகாட்டிக் கொள்ள மாட்டார்.
* தனக்கென ஒரு புதிய பாதையை இவரே உருவாக்குவதில் வல்லவராக இருப்பார்.