தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வாழ்வில் தத்தளிக்கும் ஜனங்களுக்கு ஜல நாராயணப் பெருமாள்

தினகரன் ஆன்மிக மலரில் ``வியக்கவைக்கும் வியாசராஜரின் அனுமன்’’ என்னும் பகுதி வெளியாகி வருகிறது. அதில், சில வாரங்களுக்கு முன்னால் திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் உள்ள வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ``சஞ்சீவி ராயரை’’ பற்றி பதிவு செய்யப் பட்டிருந்தது. அந்த சஞ்சீவி ராயர் கோயிலில் இருந்து சுமார் இரண்டே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ``சிவ - விஷ்ணு’’ ஆலயத்தில், சிவனும் - விஷ்ணுவும் ஒரே தலத்தில் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.

அதுவும், இங்குள்ள விஷ்ணு, ரெங்கநாதரை போல், சயனக் கோலத்தில் காட்சியளிக்கிறார். ஒரு சிறிய குளத்தில், தண்ணீரின் மீது பள்ளி கொண்டு அருள்பாலிக்கிறார். ஆகையால், இவரை ``ஜல நாராயணப் பெருமாள்’’ என்றும் அழைக்கிறார்கள். இன்னும் விரிவாக இந்த கோயிலைப் பற்றி தெரிந்து கொள்வோமா!

அனைத்து சந்நதிகளும் ஒரே இடத்தில் இக்கோயிலை, ``சிவா - விஷ்ணு’’ கோயில் என்று கூறுகிறார்கள். காரணம், ஒரே திருக்கோயிலில் சிவபெருமான் சந்நதியும், விஷ்ணு பெருமாள் சந்நதியும் இருக்கிறது. மேலும், இவ்விருவரும் கோயில் கொண்டிருக்கும் கோயிலை பெரும்பாலும், சிவா - விஷ்ணு கோயில் என்றே அழைப்பார்கள். தமிழ்நாட்டில் எண்ணற்ற பல சிவா - விஷ்ணு ஆலயம் இருந்தாலும், இங்கு என்ன சிறப்பம்சம் என்று சொன்னால், எல்லா ஸ்வாமிகளின் சந்நதிகளும் ஒருமித்தே காட்சியளிக்கின்றன. பொதுவாக நாம் திங்கட்கிழமை ஒரு கோயில், செவ்வாய் முருகன் கோயில், புதன் ஒரு கோயில், வியாழன் மகான்களின் கோயில், வெள்ளி அம்பாள் கோயில், சனி அன்று பெருமாள் கோயில் என ஒவ்வொரு கிழமைக்கும் ஏற்றாற்போல் ஒரு கோயிலுக்கு செல்வோம்.

ஆனால், இந்த கோயிலில் எல்லா தெய்வங்களும் இருப்பதால் எல்லா நாட்களிலும் இந்த கோயிலுக்கு சென்றாலே போதும் போலும். இதோ... எல்லா தெய்வங்களை பற்றியும் பட்டியலிடுகிறோம்.

விநாயகர் முதல் பாபா வரை

கோயிலின் உள்ளே நுழைந்ததும், முதலில் செல்வ விநாயகரை தரிசிக்கலாம். இவரை ``செல்வ வரமருளும்’’ கணபதியாக பக்தர்கள் கருதுகிறார்கள். அவரை சுற்றி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஜகஜோதியாக ஜொலிக்கிறார், செல்வ விநாயகர். அவரை சேவித்துவிட்டு பிராகாரத்தை பிரதட்சணமாக வந்தோமேயானால், அங்கும் ஒரு விநாயகரின் சந்நதி உள்ளது, அவர் பெயர் கன்னி மூலகணபதி. அதன் பின் ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ சீதா லட்சுமண அனுமன் சமேத ஸ்ரீ கோதண்டராமர் சந்நிதானம் ஆகியவை மிக அழகாக உள்ளது. அதே போல், பாமா ருக்மணி சமேத கிருஷ்ணரை தரிசித்துவிட்டு அப்படியே வலம்வந்தால், ஸ்ரீனிவாச பெருமாளும் பத்மாவதி தாயாரும் தனித் தனி சந்நதிகளைக் கொண்டு பக்தர்களை அருள்கிறார்கள்.

வேறெங்கும் தனி சந்நதியில்லை

பச்சை நிற புடவையை உடுத்திக் கொண்டும், கழுத்தில் பல ஆபரணங்களை தரித்துக் கொண்டும், பலவகை புஷ்பங்களை சாற்றிக் கொண்டும் நம்கண்களே பட்டுவிடும் அளவிற்கு பத்மாவதி அம்மவாரு காட்சி யளித்தார். அம்பாளுக்கு சற்றும் குறையாத ஸ்ரீனிவாசப் பெருமாளும், சிறியதாக இருந்தாலும் அழகு குறையாது காணப்பட்டார். அதே போல், மிக முக்கியமாக இங்கு சிவன், ``புஷ்பவனேஸ்வரர் என்னும் திருநாமத்திலும், அம்பாள், ``பூங்குழலி’’ என்னும் திருநாமத்திலும் காட்சி தருகிறார்கள்.

புஷ்பவனேஸ்வரரின் மீது ஐந்து தலைகொண்ட சேஷன் படையெடுத்து காட்சிதரும் அழகை வர்ணிக்க வார்த்தையில்லை. அருகில் வள்ளி - தெய்வானை சமேத முருகன் சந்நதி ஆகியவை நம்மை பரவசத்தில் ஆழ்த்துகிறது. இக்கோயிலின் இன்னொரு சிறப்பம்சம், ``ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன்’’, தனி சந்நதி கொண்டு அருள்கிறார். கன்னிகா பரமேஸ்வரிக் கென்று இத்தகைய தனிச்சந்நதி வேறு எங்கும் காணமுடியாது.

அறிக்கையாக பெருமானுக்கு சமர்ப்பணம்

கல்விக்கு அதிபதி (God Of Education For Children) என்று சொல்லக் கூடிய லட்சுமி ஹயக்ரீவர், இங்கு பிரதான மூலவர் சந்நதியாக இருந்து அருள்பாலித்து வருகிறார். மேலும், சிவன் கோயில் என்று சொன்னாலே பைரவர் கண்டிப்பாக இருப்பார். இங்கும் பைரவர் சந்நதி உள்ளது. தினமும் கோயிலுக்கு எத்தனை பக்தர்கள் வருகை புரிகிறார்கள்! அவர்களின் கோரிக்கைகள் என்னென்ன என்பதனை அறிந்து, பெருமானுக்கு அறிக்கையாக கொடுத்துவரும் சண்டிகேஸ்வரர், இங்கு அருள்பாலித்து வருகிறார். அது மட்டுமா..! ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, ஆதிசங்கரர், ராமானுஜர், வேதாந்த தேசிகர், ராமலிங்க ஸ்வாமிகள், அகஸ்தியர், கருடாழ்வார், 63 நாயன்மார்களில் பத்து நாயன்மார்கள், பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்கள்.

முருகப் பெருமானின் சிறந்த பக்தராக விளங்கிய கிருபானந்த வாரியாரின் நினைவாக, அவரின் திருவுருவ சிலை அப்படியே தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு, இங்கு தனி சந்நதியை கொண்டு பூஜிக்கப்பட்டு வருவது கூடுதல் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.அதே போல், பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இக்கோயிலில் சீரடி பாபாவும் தனி சந்நதியில் இருக்கிறார். ஆக, இங்கில்லாத தெய்வங்களே இல்லை என்று நம்மை ஆச்சரியப்படுத்துகிறது இக்கோயில்.

மேலும், இக்கோயிலில் சுயம்பு மூர்த்திகள் எதுவுமே கிடையாது. ஆகையால், அனைத்து தெய்வமூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டவை. அதன் காரணமாக, இக்கோயிலுக் கென்று தனி வரலாறுகள் எதுவும் கிடையாது. அதேபோல், இங்குள்ள அனைத்து மூலவரின் சிலா ரூபங்களை மகாபலிபுரத்தில் செய்திருக்கிறார்கள். உற்சவர்களை கும்பக்கோணம் அருகே உள்ள சுவாமி மலையில் செய்திருக்கிறார்கள். இங்கிருக்கும் அத்தனை மூலவருக்கும் உற்சவர்கள் உண்டு.

நர்த்தனமாடும் ஜலநாராயணப் பெருமாள்

மேலும், இக்கோயிலுக்கு வலுசேர்க்கும் விதமாக, பதினொன்று தலைக் கொண்ட ஆதிசேஷனோடு ``ஜல நாராயணப் பெருமாள்’’ கோயில் கொண்டு அனைவரையும் காத்து வருகிறார். வைகுண்டத்தில் எப்படி பெருமாள், பாற்கடலில் இருக்கிறாரோ.. அது போல, பூலோகத்தில் பெருமாள் சிறிய அளவிலான குளத்தில் சதாசர்வ காலமும் தண்ணீரிலேயே இருந்து, நர்த்தன கோலத்தில் அனந்த சயனம் கொண்டு பக்தர்களுக்கு அருள் செய்கிறார். நர்த்தன கோலம் என்பது, ஜலநாராயணனின் இரண்டு பாதங்களும் நர்த்தனம் ஆடுவது போல் காணப்படும்.

அனந்தசயன கோலம் என்பது, பெருமாளின் திருமுகம் ஆகாயத்தை பார்த்தும், ஸ்வாமியின் வலதுகையில் அட்சய பாத்திரம் கொண்டு பக்தர்களின் கல்வி, வேலை, தொழில், திருமணம், குழந்தைப் பேறு முதலிய வேண்டுதல்களை நிறைவேற்றி தருகிறார், ஜல நாராயணப் பெருமாள். மேலும், ஜலநாராயணப் பெருமாளின் இடதுபக்கத்தில், ``ஜலநாராயணி’’ தாயாரும் இருக்கிறாள்.

இந்தியாவிலேயே முதன் முதலில்இத்தகைய ஜலநாராயணப் பெருமாள், இந்தியாவிலேயே முதன் முதலாக இந்த கோயிலில் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவை தவிர்த்து பார்த்தோமேயானால், நேபாளத்தில் உள்ள ``காத்மாண்டு’’ (kathmandu nepal city) என்னும் பகுதியில் ஜலநாராயணர் இருக்கிறார்.

ஆனால், இங்கு தாயார் கிடையாது. இக்கோயிலில் ஜலநாராயணர் அருகில் ஜலநாராயணி என்னும் தாயார் இருக்கிறார். இங்கு முறைப்படி அஷ்டபந்தனம் செய்து, ஆகம விதிப்படி செய்திருக்கிறோம்.மாதத்தில் வருகின்ற இரண்டு ஏகாதசி தினங்களில், ஜலநாராயணருக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர், திரவியப்பொடி, பால் ஆகியவைகளைக் கொண்டு விசேஷ

அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். அன்றைய தினம், பரிகார பூஜையும் நடைபெறும்.

நினைத்ததை நிறைவேற்றித் தரும் பரிகாரப்பூஜை

பரிகார பூஜை என்பது என்ன என்று கேட்டால், பக்தர்களின் கைகளில் வலம்புரி சங்கு ஒன்றை கொடுத்து, அதில் பன்னீரும், அதன் மீது புஷ்பமும் அதனுள் ஒரு நெல்லிக் கனியையும் கொடுத்து, (நெல்லிக்கனி மகாலட்சுமியின் அம்சம்) பக்தர்களின் வேண்டுதலை மனதில் நினைத்துக் கொண்டு, ஜலநாராயணரை மூன்று முறை வலம் வந்தபின்னர், மூன்றாவது முறை ஸ்வாமியின் பாதத்தில் விழும்படியாக கைகளில் இருக்கும் பன்னீரை அபிஷேகம் செய்யவேண்டும்.

இது போல், இந்த பரிகார பூஜையை மூன்று ஏகாதசியில் செய்யவேண்டும். இந்த பரிகார பூஜையில் மேற்கொள்ளும் முந்தைய (Prefix) பிந்தைய (Suffix) நாட்களில், அசைவ உணவை தவிர்க்க வேண்டும். அதுயென்ன முந்தைய பிந்தைய? என்று கேட்டால், உதாரணத்திற்கு; வியாழக்கிழமையில் ஏகாதசி வருகிறது என்று வைத்துக் கொள்வோம். செவ்வாய் மற்றும் புதன்கிழமையில் அசைவம் சாப்பிடக் கூடாது.

வியாழக்கிழமையில் வெறும் வயிற்றில், அதாவது எதையும் சாப்பிடாமல், பரிகார பூஜை செய்ய வேண்டும். பூஜை முடித்த பின்னர் கோயில்களிலேயே வழங்கப்படும், அன்னதானம் உட்கொள்ளலாம்.வீட்டிற்கு சென்றவுடன், நெல்லிக் கனியை வீட்டினுள்ள சாமிபடங்களுக்கு முன்பு வைத்துவிட்டு, மறுநாள் காலையில் குளித்துவிட்டு எதையும் உண்ணாமல், வேண்டும் காரியத்தை மனதில் நினைத்துக் கொண்டு, நெல்லிக் கனியை உண்ண வேண்டும். அதன் பின்னர், வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் அசைவம் சாப்பிடக் கூடாது. இதுவே பரிகார பூஜையை மேற்கொள்வதன் வழிமுறைகள்.

சிலருக்கு இரண்டு ஏகாதசியில்கூட காரிய சித்தியாகியிருக்கிறது. இன்னும் சிலருக்கோ.. ஒரே ஏகாதசியில்கூட மனதில் நினைத்த காரியங்கள் ஜெயம் ஆகியிருக்கிறது.

கும்பாபிஷேகம் நடத்த முடிவுபொதுவாக சிவ - விஷ்ணு ஆலயங்களில், அந்தந்த சந்நதியின் முகப்பில்தான் கொடி மரம் இருக்கும். ஆனால் இக்கோயிலில், பர்மா தேக்குகளால் ஆன இரண்டு கொடிமரங்கள் அருகருகில் காணப்படுகின்றன.

ஒருவர் தானமாக இக்கோயிலின் இடத்தை சிவானந்த முதலியார் என்பவருக்கு தருகிறார். இந்த இடத்தில்தான் அவர் இத்தகைய பிரம்மாண்ட கோயிலை எழுப்பியுள்ளார். இத்திருக்கோயிலானது, 1988 - 89 ஆம் ஆண்டுகளில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஸ்வாமிகள் அனைத்தும் பிரதிஷ்டை செய்யப்பட்டவுடன், 1991 - ஆம் ஆண்டில் முதல் முறையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் இக்கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்கின்ற பிரயத்தனம் இருந்தது. அதன்படி, பக்தர்கள் ஒன்று சேர்ந்து கோபுரம் கட்ட தீர்மானித்தனர். கோபுரத்தில் இருக்கும் ஐந்து ராஜ நிலைகளையும், பட்டீஸ்வரத்தில் இருந்து ``அர்ஜுன சபதி’’ என்னும் சபதியை அழைத்து கட்டப்பட்டுள்ளது.

2002 - ஆம் ஆண்டில், ராஜகோபுரம் அமைக்கப்பட்டு, அப்போது இரண்டாவது முறையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிறகு, ஜலநாராயணர் பிரதிஷ்டை செய்யப்பட்டதற்கு பின், 2012 - ஆம் ஆண்டில் மூன்றாவதாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆக, இதுவரையில் மூன்று கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன. இப்படி இருக்க, வெளியூர்களில் இருந்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஏதுவாக, தங்கி சாமி தரிசனம் செய்வதற்கு, கோயிலின் அருகிலேயே மண்டபம் ஒன்றைக் கட்ட திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பக்தர்கள் தங்களால் ஆன கைங்கரியம் செய்யலாம். இந்த பணிகள் நிறைவு பெற்றதும், இக்கோயிலுக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்புக்கு: வெங்கட்ராமன் - 9940894148.

விழாக்கள்

பொதுவாக பங்குனி உத்திரத்தில் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கும், சிவன் கோயிலில் சிவனுக்கும் திருக் கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். ஆனால், இக்கோயிலில் இருவரும் இருப்பதால், சிவனுக்கும் - விஷ்ணுவிற்கும் ஒரே சமயத்தில் உற்சவர்களுக்கு திருக் கல்யாணம் நடைபெறும். இந்த வைபவம் மிகவும் சிறப்பான ஒன்றாக இக்கோயிலில் பார்க்கப்படுகிறது. இது தவிர பெரிய விழாக்கள் என்று எடுத்துக் கொண்டால், ``வைகுண்ட ஏகாதசி’’ பெருவிழா மிக விமர்சையாக நடைபெறும். தனியாக சொர்க்கவாசலுக்கென்று நுழைவாயில் இங்கு உள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று அவை திறக்கப்பட்டு, ஸ்வாமியின் புறப்பாடு நடைபெறும். அதன் பின், பக்தர்களுக்காக திறந்துவிடப்படும்.

கந்தர்சஷ்டி பெருவிழா இங்கு ஆறுநாட்கள் நடைபெற்று, ஏழாவது நாளில் ஸ்வாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். மற்ற முருகன் கோயில்களில் நடைபெறுவதுபோல், இந்த கோயிலில் சூரசம்ஹார விழா நடைபெறாது. காரணம், முருகப் பெருமான், அசுரனை வதம் செய்த பின்னர், திருத்தணி மலைக்கு வந்தடைந்து, சாந்தமடைந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, திருத்தணியில் சூரசம்ஹார பெருவிழா நடைபெறுவதில்லை. ஆகையால், திருத்தணி அருகே உள்ள இக்கோயிலிலும், சூரசம்ஹார விழா கொண்டாடுவதில்லை.

மேலும், ஸ்ரீ ராமநவமி அன்று ராமருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். கிருஷ்ணருக்கு, கிருஷ்ண ஜெயந்தி அன்று சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெறும். சீரடி சாய் பாபாவிற்கு வியாழன் தோறும் அபிஷேகம் நடைபெறும். ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் அபிஷேகம் நடைபெறும். இது தவிர, புரட்டாசி சனிக் கிழமைகளில் ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.மாதாமாதம் வரக்கூடிய இரண்டு பிரதோஷ தினங்கள், ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று நடைபெறுகின்ற அன்னாபிஷேகம், அதே போல், மாசி மாதம் அமாவாசை அன்று வரக்கூடிய மகாசிவராத்திரி.

ஆகியவை சிவனுக்கு விசேஷமாக நடைபெறுகின்ற விழாக்களாகும். முருகனுக்கு பிரதிமாதம் வருகின்ற கிருத்திகை அன்று அபிஷேகம் நடைபெறும். கன்னிகா பரமேஸ்வரிக்கு, புனர்பூசத்தில் அபிஷேகம் நடைபெறும். சிவனுக்கு திருவாதிரை நட்சத்திரத்தில் அபிஷேகம் நடைபெறும். அம்பாளுக்கு பௌர்ணமி அன்று அபிஷேகம் நடைபெறும். ஜலநாராயணருக்கு ஏகாதசியில் அபிஷேகம் நடைபெறும். தாயாருக்கு உத்திரம் அன்று விசேஷ அபிஷேகம் நடைபெறுகின்றன.

இங்குள்ள லட்சுமி ஹயக்கிரீவருக்கு, திருவோணம் அன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். அன்றைய தினம், கல்வியில் மேன்மையடைய மாணாக்களின் பெற்றோர்கள் சிறப்பு வழிபாடு செய்வார்கள். பைரவருக்கு வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி அன்று பூஜை நடைபெறும். ஆஞ்சநேயரின் ஜென்ம நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில், அவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

பிரசாதம்

தினமும் காலையில் ஏதேனும் கலவை சாதம் இங்கு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

பக்தரின் அனுபவம்

எப்படி காஞ்சிபுரத்தில் கோயில்கள் நிறைந்து காணப்படுகின்றதோ, அதே போல், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கோயில்கள் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக, பழங்காலத்து கோயில்கள் அதிகளவில் இருக்கின்றன. அதில் மிக முக்கியமான கோயில், ``வைத்திய வீரராகவப் பெருமாள்’’ கோயிலாகும். அதே போல், ஈக்காடு என்னும் இடத்தில் ``கல்யாண வீரராகவப் பெருமாள்’’ கோயிலும் பழங்காலத்து கோயிலாகும். இங்குதான் ``கனகவல்லி தாயார்’’ பிறந்ததாக ஒரு வரலாறும் உண்டு. சமீபத்தில்தான் இத்திருத்தலத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இத்தகைய சிறப்புவாய்ந்த இந்த மாநகரிலே, இந்த ``சிவ - விஷ்ணு’’ ஆலயம் அமைந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் கடந்த ``வைகுண்ட ஏகாதசி’’ அன்று ஜலநாராயணரை தரிசிக்க வந்தேன்.

நாராயணப் பெருமாள் அலங்காரப் பிரியன் அல்லவா... ஆகையால், கழுத்தில் எண்ணற்ற பல வண்ணங்களால் ஆன மாலைகளும், துளசி மாலையையும் சாற்றிக் கொண்டு, பன்னீர் வாசனைகளோடு ஜலத்தில் பள்ளி கொண்டிருந்தார். அதனைக் கண்டு தரிசித்து ஆனந்தமடைந்தேன். அன்று முதல் இக்கோயில் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எப்போதெல்லாம் எனக்கு தோன்றுகின்றதோ, அப்போதெல்லாம் எனது வயதையும் பொருட்படுத்தாது இந்த ஆலயத்திற்கு வந்துவிடுவேன். இந்த வயதில்... இத்தகைய கொடுப்பினையை கொடுத்த இறைவனுக்கு நன்றி.

எப்படி செல்வது

ரயில் மார்க்கமாக வருவோர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து (காக்களூர் வீர ஆஞ்சநேயரையும் தரிசிக்க வேண்டும் என்று நினைத்தால்) புட்லூரில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் ஏறி, வழியில் காக்களூரில் உள்ள அனுமனை தரிசித்துவிட்டு, ஜலநாராயணப் பெருமாள் கோயிலுக்கு செல்லலாம். இல்லை என்றால், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் ஏறி, கோயிலை அடைந்துவிடலாம். பேருந்து மார்க்கமாக வர விரும்புவோர், திருவள்ளூர் தேரடி நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து அதே போல், ஷேர் ஆட்டோவில் பயணிக்கலாம்.

ரா.ரெங்கராஜன்

Related News