நந்தனாருக்கு நந்தி விலகியது போல கருடன் விலகிய பெருமாள் கோயில் உண்டா?
?நந்தனாருக்கு நந்தி விலகியது போல கருடன் விலகிய பெருமாள் கோயில் உண்டா?
- சத்தியநாராயணன், சென்னை.
பதில் ஏன் இல்லாமல்? திருநெல்வேலிக்கு பக்கத்திலே ஆழ்வார் நவ திருப்பதிகளில் ஒன்று தென் திருப்பேரை. நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஆழ்வார் திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் தென்கிழக்கே அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் மகர நெடுங்குழைக்காதன். நிகரில் முகில் வண்ணன். தாயாருக்கு: குழைக்காதுவல்லி, திருப்பேரை நாச்சியார் என்று பெயர். சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம், மகர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உண்டு. ஆழ்வார்களில் நம்மாழ்வார் மட்டும் 11 பாசுரங்களால் மங்களா சாசனம் செய்திருக்கிறார். ‘‘வேத ஒலியும் விழா ஒலியும், பிள்ளைக் குழா விளையாட்டு ஒலியும் அறா திருப்பேரெயில் சேர்வன் நானே!” என்பது ஆழ்வார் பாசுரம். பிள்ளைக் குழாவிளையாட்டொலியுமறா என்றது இத்திருப்பதிக்குச் சிறப்பான தொரு விசேஷணம்.
சிறுபிள்ளைகள் திரண்டு விளையாடுவதென்பது எங்குமுண்டு; இவ்வூரில் அப்பிள்ளைகள் விளையாடுவது கோயில் திருமுன்பே யாயிருக்கும். எம்பெருமான் தானும் அந்த விளையாட்டின் சுவையைக் காண ஆசைப்பட்டானாம்: எதிரே பெரியதிருவடி (கருடன்) சன்னிதியிருந்து இடைச் சுவராயிருந்தபடியாலே அந்த விளையாட்டைக்காண மறைவாயிருக்கிறதேயென்று வருந்தி “கருடா! அப்பால் போ” என்று பெருமாள் உரைத்தாராம். கருடனும் சற்று விலகினானாம். இந்த நிலைமை இன்றும் காணலாம்.
?சில நட்சத்திரங்களுக்கு பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாம் என்று சொல்கிறார்களே?
- சங்கர், திருச்சி.
பொருத்தமே பார்க்காமல் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதை கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் சில நட்சத்திரங்களுக்கு பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் ஒருவருடைய முழுமையான ஜாதகத்தை நட்சத்திரம் மட்டும் தீர்மானம் செய்வதில்லை. லக்னம், ராசி மற்றும் கிரகங்கள் எல்லாம் சேர்ந்துதான் தீர்மானம் செய்கின்றன. திருமண பொருத்தத்தைப் பார்ப்பதாக இருந்தால் ஒரு நல்ல ஜோசியரிடம் முழுமையாக அலசிப் பார்த்து விட வேண்டும். இல்லாவிட்டால் பகவான் விட்ட வழி என்று மனப் பொருத்தத்தை அடிப்படையாக வைத்து திரு மணம் செய்து விட வேண்டும். இரண்டையும் போட்டு குழப்பிக் கொண்டால் வாழ்க்கையும் குழப்பமாகி விடும்.
?பன்மொழிப் புலமையை அடைய எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?
- அபிராமி, சிவகங்கை.
எந்த தெய்வத்தை உறுதியாக வணங்கினாலும் கல்வியும் மொழி ஆற்றலும் கிடைக்கும். ஆயினும் நம்முடைய சான்றோர்கள் கல்விக் கடவுளாக சரஸ்வதியையும் ஹயக்ரீவரையும் தட்சிணா மூர்த்தியையும் சொல்கின்றார்கள். எனவே குறிப்பாக இந்தத் தெய்வங்களை வணங்கி கல்வியையும் பன்மொழிப் புலமையையும் பெறலாம். இதற்கு உதாரணமாக குமரகுருபரர் வாழ்க்கையைச் சொல்லலாம்.. அவர் கலைவாணியின் மீது சகலகலாவல்லி மாலை என்னும் நூலைப் பாடி பன்மொழி ஞானத்தைப் பெற்றார் என்பது வரலாறு. அதைப்போலவே வேதாந்த தேசிகர் ஹயக்ரீவ பெருமாள் உபாசனை செய்து ஞானத்தைப் பெற்றார்.
?தெய்வ நம்பிக்கை அவசியமா?
- ப்ரியா, டெல்லி.
நம்பிக்கை என்பதால் அவசியம் தான் தெய்வம் தான் துணை ; இந்தக் காரியத்தை நிறைவேற்றித் தருவார் என்று நம்பு கிறோம்.அது நடக்கிறது இது ஒரு உளவியல் உண்மையும் கூட. உதாரணமாக மனிதனுக்கு இல்லாத நோயை இருப்பதாக நம்ப வைத்து விட்டால் அவனுடைய உடலே அந்த நோயை உருவாக்கி விடும் என்று அறிவியலாளர்கள் சொல்லுகின்றார்கள்.இதை மனதிற்குப் பொருத்திப் பாருங்கள். மனது தெய்வம். என்பதை நம்புகிறது. நம் கஷ்டத்தை அவர் தீர்ப்பார் என்று அவரிடம் பிரார்த்தனை செய்கிறது. அந்தப் பிரார்த்தனை பலிக்கும் என்று மனது உறுதியாக நம்புகிறது. அந்த நடக்கிறது. பிரார்த்தனைக்கு பலனும் கிடைக்கிறது. பெரியவர்கள் மனம் நிறையச் சொல்லும் வாழ்த்துக்கும் இதே பலன் தான் கிடைக்கிறது. காரணம் அவர்கள் நம்பிச் சொல்லுகின்றார்கள். நாமும் நம்பி ஏற்றுக் கொள்கின்றோம். இந்த விஷயங்களை புரிந்து கொண்டால் தான் தெய்வ நம்பிக்கை அவசியம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
?கலி காலம் என்று சொல்லுகின்றார்கள் உண்மையில் கலி காலம் என்றால் என்ன பொருள்?
- சரண்யா, திண்டுக்கல்.
கலிகாலத்தில் இருந்து கொண்டே கலி காலத்தைப் பற்றிக் கேட்கிறீர்கள். சதுர் யுகங்களில் நான்காவது யுகம் கலியுகம். இந்த யுகத்திலே அறம் குறையும். அதர்மம் அதிகரிக்கும். பிறர் நலம் நாடு வார் குறைவர். தன் நலம் வேண்டுவார் அதிகரிப்பார்கள். இதுகுறித்து விஷ்ணு புராணம் முதலிய நூல்களில் நிறைய விளக்கம் சொல்லப்பட்டு இருக்கிறது. கலி என்றாலே வலிமையானது, இருட்டானது என்று பொருள். கலி முற்றும் போது பிரளயம் தோன்றி புது உலகம் பிறக்கும். கலி எங்கெல்லாம் இருக்கும் என்று மத் பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கலி வசிக்கும் இடங்களாக சில இடங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. சூதாடும் இடம், மது பருகும் இடம், பெண்கள் அவமானப்படுத்தப்படும் இடம், பிராணி களை வதை செய்யும் இடம், பொய் சொல்லும் இடம், ஆணவம் நிறைந்த இடம், பேராசை நிறைந்த இடம், கோபம் உள்ள இடம், பகை உள்ள இடம் என்று வரிசையாக கலிபுருஷன் இருக்கும் இடங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. பொதுவாக ஒரு இடத்தில் இருட்டு இருந்தால் நாம் அந்த இடத்திலே செல்ல மாட்டோம்.
அதைப்போல கலிபுருஷன் இருக்கக்கூடிய மேற்கண்ட இடங்களிலே செல்லக்கூடாது.
?புத்தகங்கள் படிப்பதால் என்ன நன்மை?
- அருண்பிரகாஷ், திருவண்ணாமலை.
ஒரு நன்மையா? இரண்டு நன்மையா? புத்தகம் நம்மை புத்தாக்கம்(Refresh) செய்கிறது. சிந்திக்கச் செய்கிறது. புதிய பாதையைக் காட்டுகிறது. முடிவு எடுக்கும் யுக்திகளைக் கற்றுத் தருகிறது. புத்தகங்களை நாம் குனிந்து படிக்கிறோம். அது நம்மை நிமிர வைக்கிறது. இதைவிட வேற என்ன நன்மை வேண்டும்? வள்ளுவர் கற்க கசடற என்கிறார். நல்ல விஷயங்களைக் கற்க வேண்டும். அது நம்முடைய மனதின் மாசுகளை அழிக்கும்.