பணத்திற்கும் நிம்மதிக்கும் தொடர்பு உண்டா?
?பணத்திற்கும் நிம்மதிக்கும் தொடர்பு உண்டா?
- அருண்குமார், திருச்சி.
நிம்மதியாக வாழ்வதற்கு பணம் நிச்சயம் தேவை என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் பணம் உள்ளவர்கள் எல்லோராலும் நிம்மதியாக இருந்து விட முடிந்தால் பணம் தான் நிம்மதிக்கு காரணம் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். எத்தனையோ பணக்காரர்கள் நிம்மதி இல்லாமல் தான் இருக்கிறார்கள். அவர்கள் வைத்திருக்கக்கூடிய ஏராளமான பணம் நிம்மதியைத் தரவில்லை என்பதையும் பார்க்கிறோம். எனவே நிம்மதிக்கு காரணம் பணம் மட்டுமல்ல. வேண்டுமானால் பணமும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.
?ஒரே வாசகம் இரண்டு விதமான பொருள் தருமா?
- வண்ணை கணேசன், சென்னை.
தரும். ஒரு வாசகம் என்றில்லை. ஒரு சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு எத்தனைப் பொருள் தெரியுமா? அம்பரம் என்ற சொல்லுக்கு ஆடை, வானம், கடல், துயிலிடம், திசை, சித்திரை நாள், மஞ்சள், ஆகாயம் என்று வரிசையாக பொருளைச் சொல்லிக் கொண்டே செல்லலாம். ஆண்டாள் ஆழி என்ற சொல்லையும், அம்பரம் என்ற சொல்லையும் திரும்பத் திரும்ப வந்து, வெவ்வேறு பொருள்களைத் தரும்படி திருப்பாவையில் பாடியிருக்கிறாள்.
இப்பொழுது ஒரு வாசகம் சொல்கிறேன். இரண்டு பொருளில் வரும்.
முதியோர்கள் இல்லத்தில் இருக்கிறார்கள். யோசித்துப் பாருங்கள். இரண்டு பொருள்
1. முதியோர்கள், ‘‘இல்லத்தில்”(வீட்டில்) இருக்கிறார்கள்
2. ‘‘முதியோர்கள் இல்லத்தில்’’இருக்கிறார்கள்.
?‘‘ஷோடச நாமா’’ என்றால் என்ன?
- கே. பிரபாவதி, கன்னியாகுமரி.
இறைவனின் நாமங்களை எண்ணிக்கையில் சொல்லி வழிபடும் மரபு அதாவது அர்ச்சனை செய்யும் மரபு உண்டு. 12 நாமாக்களை துவாதச நாமாக்கள் என்றும், 16 நாமங்களை ஷோடச நாமாக்கள் என்றும் 108 நாமங்களை அஷ்தோத்திர நாமாக்கள் என்றும் 300 நாமங்களை த்ரிசதி நாமாக்கள் என்றும் 1008 நாமங்களை சகஸ்ரநாமாக்கள் என்றும் சொல்கிறார்கள். லட்சம் நாமாக்கள் சொல்லி இறைவனை அர்ச்சனை செய்வதை லட்சார்ச்சனை என்பார்கள். இது ரொம்ப விசேஷமானது.
?பழமொழி என்று சொல்கிறார்களே, பழமொழி என்றால் என்ன?
- இராம. கண்ணன், திருநெல்வேலி.
பழம்போல் இனிமையான மொழி என்று எடுத்துக் கொள்ளலாம். பல காலமாக வாய்மொழியாகச் சொல்லப்பட்டு வருகின்ற சொல் அதாவது பழைய மொழி என்று எடுத்துக் கொள்ளலாம். பெரும்பாலும் பதிவு செய்யப்படாத வாய்மொழி வழக்காகவும், நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகவும் அமைகின்றன. தமிழ் இலக்கிய வரலாற்றில் பழமொழிக்கு என்றே ஒரு தனி நூலாக பழமொழி நானூறு உள்ளது. சில பழமொழிகளை கவனித்துப் பாருங்கள். அப்படியே வாழ்வியலை வெளிச்சம் போட்டு காட்டிவிடும்.
1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.
2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.
3. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
4. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.
5. கறந்தப் பால் காம்பில் ஏறாது.
6. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.
7. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
8. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
9. அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.
(அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்).
ஒவ்வொரு வரிக்கும் ஒரு கட்டுரை எழுதலாம். ஒவ்வொரு பழமொழியையும் கண்ணை மூடிக்கொண்டு சிந்தித்தால் அதுவே பல சம்பவங்களைச் சொல்லும். சில பிரச்னைகளுக்கு தீர்வையும் சொல்லும்.
?யோசனை, மனக் குழப்பம் வேறுபாடு என்ன?
- விஷ்ணுபிரியா, மதுரை.
ஒரு முறையோ இரண்டு முறையோ செய்தால் அதற்கு யோசனை என்று பெயர். அதே வேலையாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தால் மனக் குழப்பம் என்று பெயர். யோசனை செய்தால் செயல் வடிவம் பெறும். மனக் குழப்பம் வந்தால் கடைசி வரை செயல் நடக்காது.
?வயதானவர்கள் அமைதியாக வாழ என்ன வழி?
- அமுல்ராஜ், திருக்கோவிலூர்.
பொதுவாக வயது என்பது ஒருவரை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தளர வைத்து விடும். வயது ஆக ஆக வாழ்வில் விரக்தி ஏற்படவே செய்யும். அவர்கள் சந்திக்கும் பல பிரச்னைகள், இழப்புக்கள், அவர்களை நிலை குலையச்செய்யும். இதற்கு ஒரே மாற்று ஆன்மிகம்தான். கூட்டு வழிபாடு, சத்சங்கம், பிடித்த கோயிலுக்கு சென்று வழிபடுவது போன்ற செயல்களே இதற்கு மருந்து.
?‘‘ஹரி வாசரம்’’ ஏகாதசியில் வருகிறது அதற்கு என்ன பொருள்?
- சு. பாலசுப்பிரமணியன், இராமேஸ்வரம்.
ஏகாதசியின் கடைசி கால் பகுதிக்கும் துவாதசியின் முதல் கால் பகுதிக்கும் ஹரி வாசரம் என்பார்கள். சில பேர் துவாதசியின் முதல் கால் பகுதியை ஹரி வாசரம் என்று சொல்வதும் உண்டு இந்த ஹரி வாசரத்தில் தண்ணீர்கூட குடிக்காமல் உபவாசம் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் ஏகாதசியின் முழுமையான பலன் கிடைக்கும் என்பார்கள். துவாதசி பாரணை என்பது சூரிய உதயம் ஆரம்பித்து ஆறு நாழிகை நேரத்திற்குள் செய்ய வேண்டும் என்கிற விதி இருக்கிறது. இந்த நேரத்தில் ஹரி வாசரம் வந்துவிட்டால் பாரணை செய்ய முடியாது. அதனால்தான் ஏகாதசி விரதம் துவாதசியில் சில நேரங்களில் வருகிறது. இதனை வைஷ்ணவ ஏகாதசி என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் கடைபிடிக்கிறார்கள்.
?ஒவ்வொரு பண்டிகையின் போதும் ஒவ்வொரு கடவுளுக்கும் விசேஷமாக தனித்தனி நைவேத்யம் செய்வதேன்?
- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
நிவேதனங்கள் அனைத்தும் அந்தந்த பருவத்திற்கு ஏற்ற வகையில் தட்பவெப்பநிலையையும் நம்முடைய உடல் ஆரோக்யத்தையும் கருத்தில் கொண்டு உண்டாக்கப்பட்டவை. உதாரணத்திற்கு கோகுலாஷ்டமி நாளில் சீடை, முறுக்கு, அப்பம் போன்ற நைவேத்யங்களும் விநாயகர் சதுர்த்தி நாளில் கொழுக்கட்டையும் நவராத்திரி நாட்களில் சுண்டல் வகை நைவேத்யமும் முக்கியத்துவம் பெறுகிறது. இவை அனைத்தும் அந்த பருவ காலத்திற்கு ஏற்ற வகையில் நம்முடைய உடல் ஆரோக்யம் கருதியே வைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
?மாணவர்களின் கல்வித் திறனுக்கும் ஜாதக அமைப்பிற்கும் தொடர்பு உள்ளதா?
- ஜெ.மணிகண்டன், வேலூர்.
நிச்சயமாக தொடர்பு உண்டு. ஒருவருடைய ஜாதக அமைப்பே அவரது கல்வித்திறனை தீர்மானிக்கிறது. லக்ன பாவகம் என்பது வலிமையாக இருந்தால் புரிந்து கொள்ளும் திறன் கூடும். இரண்டாம் பாவகம் வலுப்பெற்றால் பொது அறிவினில் நாட்டம் என்பது இருக்கும். மூன்றாம் பாவகம் வலிமை கொண்டால் எழுதும் திறன் கூடும். பொதுவாக நான்காம் பாவகம் என்பது வித்யா ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாவகம் அடிப்படைக் கல்வி அறிவினை தீர்மானிக்கிறது. இதனைக் கொண்டு அவர் எந்தத்துறை சார்ந்த படிப்பினில் சிறந்து விளங்குவார் என்பதைத் தீர்மானிக்கலாம். ஐந்தாம் பாவகம் என்பது சிந்தனைத் திறனைக் குறிக்கும். ஒன்பதாம் பாவகம் என்பது உயர்கல்வி அமைப்பினையும் பதினொன்றாம் பாவகம் என்பது ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட படிப்பினைப் பற்றியும் சொல்லும். மாணவர்களின் கல்வித்திறனுக்கும் அவர்களின் ஜாதக அமைப்பிற்கும் நிச்சயமாகத் தொடர்பு என்பது உண்டு.