டிகிரி வாங்குவதற்கு புதன் அவசியமா?
புதன் வித்தைக்கு அதிபதி. பொதுவாக, காரகங்களை மட்டும் அறிந்து கொண்டு பலன் சொன்னால் போதும். துல்லியமாகப் பலன் சொல்லப் போகிறேன் என்று, ``நீ இந்தப் படிப்புதான் படிப்பாய்” என்றெல்லாம் தேடிக் கண்டுபிடிப்பது சரியாக இருக்காது. காரணம், படிப்பின் பெயர்கள் மாறிக்கொண்டே போகின்றன. மருத்துவத்தையும் இயந்திரவியலையும் இணைத்து படிப்புகள் இருக்கின்றன. விண்வெளியையும் வேறு சில பொறியியலையும் இணைத்து படிப்புகள் இருக்கின்றன. இவைகளை ஓரளவுக்குத்தான் ஊகித்துச் சொல்லமுடியுமே தவிர, பளிச்சென்று சொல்லிவிட முடியாது. அப்படிச் சொல்லாதது ஒன்றும் தவறில்லை. சிலர் சொல்லுகின்றார்கள் என்றால், அது அவர்களுக்கான தனித்திறமை என்று எடுத்துக் கொள்ளலாம். காரணம், எதையும் தர்க்கரீதியாகப் பார்க்க வேண்டும். புதன் என்பது புத்திக்கு அதிபதி. கல்வி என்பது அறிவை பிரகாசப்படுத்துவது.
அறிவை உண்டாக்குவது என்றுகூடச் சொல்லக்கூடாது. அறிவு வெளிப்படாத தன்மையை கல்வியற்ற தன்மை என்றும், பிரகாசமாக வெளிப்படுவதை கற்ற தன்மை என்றும் சொல்லலாம். அதைப் போலவே, புதனை மட்டும் வைத்துக் கொண்டு படிப்பைச் சொல்லிவிட முடியாது.
வித்தை தெரிந்தவன் என்று சொன்னால், வித்தைக்கான அத்தனை கிரகங்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். வேத கல்வியா? குருவைப் பார். தொழில் கல்வியா? சனியைப் பார். மருத்துவக் கல்வியா? சூரியனையும் செவ்வாயையும் பார். இதிலும்கூட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை எடுக்கிறார்கள். சூரியனை பிரதானமாக சிலர் எடுக்கிறார்கள். செவ்வாயை பிரதானமாக சிலர் எடுக்கிறார்கள். குருவை இணைத்துக் கொண்டு சிலர் முடிவெடுக்கிறார்கள். மருந்துக்காரகன் கேது என்று கேதுவின் பலத்தையும் கருதிக்கொள்கின்றார்கள். இப்படிப் பலவிதமான கிரக இணைப்புக்கள் இருப்பதால், துல்லிய பலன் என்பது ஒருசிலருக்கே சாத்தியப்படலாம்.
ஆனால், பெரும்பாலோருக்கு அது தோராயமாகத்தான் இருக்கும். கணக்குகள் மட்டும் ஜோதிடம் அல்ல. கணக்குகளுக்கான விடையை குறித்த முடிவுக்கு வருவதுதான் ஜோதிடம். கணக்குகளை யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் முடிவெடுக்கும் திறன் என்பது பயிற்சியினாலும் தெய்வபலத்தாலும் மட்டுமே கிடைக்கும்.
புதன் வித்தைக்குக் காரகன். புதன் வலுவாக இருந்தால் அவன் கல்லூரிக்குச் சென்று இரண்டு மூன்று டிகிரிகள் வாங்கி யிருப்பான் என்று முடிவுக்கு வந்துவிட முடியாது. ஆனால், புத்தி உள்ளவனா, இல்லாதவனா, நுட்பமான அறிவு உள்ளவனா, இல்லாதவனா, முடிவெடுக்கும் திறன் உள்ளவனா இல்லாதவனா, எதையும் ஆராய்ச்சி செய்யும் மனப்பான்மை உடையவனா, இல்லாதவனா என்பதை மட்டும் புதனின் அமைப்பை வைத்துச் சொல்லிவிட முடியும். புதன் கெட்டு விட்டால் அவனுக்கு புத்தி இல்லை என்பது கிடையாது.
மறைந்து இருக்கிறது என்று பொருள். புதன் வலிமையோடு பளிச்சென்று இருந்தால், சாதுரியமான அறிவோடு இருக்கிறான் என்று பொருள். நாம் திரும்பத் திரும்ப சொல்வது 12 கட்டங்கள், 9 கிரகங்கள். ஆதிகாலத்தில் இருந்து இப்படித்தான் இருக்கின்றன. புதனும் சூரியனும் பெரும்பாலும் பல ஜாதகங்களில் வலிமையாக இருக்கும். புதன், மாதக்கோள் என்பதால் பெரும்பாலோர்க்கு வலுவாகத்தான் இருக்கும். 50 வருடங்களுக்கு முன் கல்லூரிக்குச் சென்று படிக்க முடியாத காலத்தில், புதன் எத்தனை வலுவாக இருந்தாலும் அவர்களால் ஒரு பட்டம் வாங்கி இருக்க முடியாது. இப்பொழுது என்னென்ன கிரக இணைப்புகள் இருக்கிறதோ இவைகளெல்லாம் காலாகாலத்துக்கும் இருந்து வரும் இணைப்புகள்தான்.
இணைப்புக்கான ஊகம்தான் காலதேசத்துக்குத் தகுந்த மாதிரியும், இடத்துக்கு தகுந்த மாதிரியும் மாறுகிறது. எனவேதான் திரும்பத் திரும்ப இதை ``அனுமானித்தல் கலை’’ என்று சொல்லுகின்றோம்.
அனுமானித்தல் என்பதால் விஞ்ஞானத்திற்கு விரோதமானது என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. பல நேரத்தில் விஞ்ஞானமும் அனுமானத்தின் மேல்தான் கட்டப்பட்டது. சில ஜாதகங்களைச் சொல்லுகிறேன்.
என்னுடைய நண்பர் ஒருவரின் ஜாதகம். அவருக்கு பத்தாம் இடத்தில் சூரியன் புதன் இணைந்திருக்கிறார்கள். ரிஷப லக்னம் என்பதால் சூரியன் சிம்ம ராசியைப் பார்க்கிறார்.
ஆனால் பள்ளிக்கூட படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். அதன் பிறகு மேலே படிக்கவும் இல்லை. சிம்மம் வலுவாக இருப்பதாலும் சூரியன் பார்ப்பதாலும் அரசாங்க வேலை கிடைத்திருக்க வேண்டும். கிடைக்கவில்லை. எந்த வேலையும் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு விதத்தில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.
இன்னொரு ஜாதகம். சூரியன் நீச்சம். புதன் இணைவு. ஆனால் 12-ஆம் இடத்தில். நன்கு படித்து வங்கியில் வேலை புரிந்து ஓய்வு பெற்றிருக்கிறார். இன்னொரு ஜாதகம். பஞ்சம ஸ்தானத்தில் புதன் அமர்ந்திருக்கிறார். சுக்கிர சாரம் வாங்கி இருக்கிறார். ஆயினும் பள்ளிப் படிப்போடு நிறுத்திவிட்டார். தொழிலில் கெட்டிக்காரத்தனமாக இருக்கிறார். பொதுவாக 12-ஆம் இடம் என்பது விரயஸ்தானம் என்று சொல்லுவோம். அந்த இடத்தில் புதன் இருக்கும் அமைப்பைப் பெற்றவர்கள் மிகச் சிறந்த கல்வியாளர்களாக இருக்கிறார்கள். எனது நண்பர் ஒருவரின் ஜாதகத்தில் சூரியனும் புதனும் 12-ஆம் இடத்தில் இருக்க. அற்புதமான அமைப்பு. மிகச் சிறந்த கல்வியாளர்.
அதனால், புதன் என்பது புத்திக்குக் காரகன் என்று மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அதிலிருந்து டிகிரிகள் யூகிப்பது என்பது பல நேரங்களில் தவறாக முடியும். புதன் பழுதடைந்து விட்டாலும், ஆதிபத்திய வீடுகள் 2, 4, 5, 9 ஏதோ ஒரு விதத்தில் பலம் பெற்று விட்டாலும் கல்வி கிடைத்துவிடும். இரண்டாம் வீடு என்பது ஆரம்பக் கல்வி.
நான்காம் வீடு என்பது உயர்நிலைப் பள்ளிக் கல்வி. ஐந்தாம் வீடு என்பது கல்லூரிக் கல்வி. ஒன்பதாம் வீடு என்பது ஆராய்ச்சிக் கல்வி. இந்த இடங்களோடு புத்திக்காரன் புதன் சம்பந்தப்பட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆதிபத்திய வீடுகள் சிறப்பின்றி புதன் மட்டும் சிறப்பாக இருந்தால், டிகிரி இல்லாவிட்டாலும் கட்டாயம் அறிவு இருக்கும்.