செவ்வாய் யோகமா? தோஷமா?
ஜாதகத்தின் மிக முக்கியமான ஒரு ரகசியம், ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக நிலைகளில் மட்டும் இல்லை. பல ஜாதகங்களில் மோசமான கிரக நிலைகள் இருந்தாலும், அவர்கள் நன்றாகவே வாழ்ந்து விட்டுச் சென்று விடுகிறார்கள். காரணம், இரண்டு மூன்று பெரிய கிரக தசைகள் அடுத்தடுத்து (ராகு, குரு, சனி, புதன்) அதிர்ஷ்டகரமான தசைகளாக அமைந்துவிட்டால், அவர்களுக்கு அவயோக தசைகள் வந்தாலும் பெரிய பாதிப்பைத் தருவது கிடையாது. காரணம் இதுதான். ஒரு தசையில் நிறைய பணம் சம்பாதித்துவிட்டால், அடுத்த தசை அவயோக தசையாக இருந்தாலும், சமாளித்துவிட முடிகிறது அல்லவா. அது வைத்தியச் செலவாக இருந்தாலும், வழக்குச் செலவாக இருந்தாலும், பதவி இழப்பு இருந்தாலும் ஏற்கனவே சம்பாதித்த பணத்தை, அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஓரளவுக்குச் சமாளித்துக் கொள்ளலாம்.
அதே சமயம், வாழ்வின் முற்பகுதியில் அவயோக தசைகள் அடுத்தடுத்து வந்து வாழ்க்கையின் கடைசி நேரத்தில் யோக தசைகள் வந்து என்ன பிரயோஜனம்? ஒரு பெரியவருக்கு நிறையப் பூர்வீகச் சொத்து இருந்தது. ஆனால் பங்காளி பிரச்னைகளால் வழக்கில் இருந்தது. அந்த வழக்கு எளிதாக முடியவில்லை. 40 ஆண்டு காலம் இழுத்தது. ஒரு பக்கம் கடன் வாங்கி வழக்குக்குச் செலவு செய்தார். குடும்பத்தை நடத்துவதற்கும் கடன் தேவைப்பட்டது. காரணம், ஆறுக்கு உடைய அவயோக தசை நடந்து கொண்டிருந்தது. ஆறு என்பது கடன் வழக்கு பகை அல்லவா. அவர் மிகவும் சிரமப்பட்டு, தன்னுடைய குழந்தை களைப் படிக்க வைத்தார். ஒவ்வொரு நாளும் பிரச்னைதான். சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்பட்டார்.
ஆனால், அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் வழக்கு வெற்றி பெற்றது. கோடிக்கணக்கான சொத்துக்கள் வந்தன. ஆனால் என்ன பிரயோஜனம்? ஒரு வருடத்திற்கு முன் வந்திருந்தால் செலவு செய்து ஆரோக்கியத்தையாவது காப்பாற்றி இருக்கலாம்.
ஆஸ்பத்திரிக்கு கட்ட பணம் இல்லாமல் அவஸ்தைப் பட்டு, இதோ அதோ என்று இழுத்துக் கொண்டிருந்த பொழுது, காதில் தேன் பாய்வது போல வழக்கு வெற்றி பெற்றுவிட்ட செய்தி வந்தது. அந்த செய்தியைக் கேட்டுவிட்டு உயிரை விட்டார் என்பதைத் தவிர அந்த சொத்துக்களால் அவருக்குப் பயனில்லை. யோக தசை வந்தபோது உயிர் இல்லை. இதைச் சொல்வதற்குக் காரணம் கிரகங்கள் யோகங்களாக இருக்கலாம். அதை அனுபவிக்கும் தசை வரவேண்டும் அல்லவா. கோள்களின் நிலை ஒருவருக்குச் சாதகமாக இல்லாவிட்டால், அவரால் ஜாதகத்தில் பெற்று வந்த வரத்தைக் கூட (யோகங்கள்) பயன்படுத்த முடியாது. எனவே தோஷங்களும் யோகங்களும் ஜாதகங்களில் இருந்தாலும்கூட, நடைமுறை தசா புத்திகளை கணக்கில் கொண்டு பலன் சொல்ல வேண்டும்.
80 வயதுக்கு அப்புறம் வரப்போகின்ற அவயோக தசை குறித்து இப்போதைக்கு பயமுறுத்தத் தேவையில்லை. இது குறிப்பாக செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம் போன்ற தோஷங்களைச் சொல்பவர்களுக்குப் பயன்படும். ஜாதக கட்டங்களில் தோஷம் தரும் அமைப்பில் செவ்வாய் இருக்கலாம்.
ஆனால், அந்த தோஷம் தரும் காலகட்டம் அவருடைய வாழ்க்கையில் வரவில்லை அல்லது பிற்பகுதியில் வருகிறது அல்லது ஜாதகங்களில் அந்த தோஷத்தின் காலம் இளமையிலேயே கழிந்திருக்கும் என்று சொன்னால் பெரிய சங்கடம் எதுவும் இல்லை. பொதுவாகவே, திருமணத்திற்கு செவ்வாய் தோஷத்தைச் சொல்லி பலரும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த ஒருவருக்கு செவ்வாய் தசை பிறக்கும்போதே கழிந்து போயிருக்கும். இனி அவருடைய வாழ்க்கையில் செவ்வாய் தசை வருவதற்கான வாய்ப்பு இல்லை. இப்பொழுது செவ்வாய் தோஷத்தைச் சொல்லி என்ன பிரயோஜனம்? இதைப் போலவே ராகு கேது தோஷங்களையும் சொல்லலாம்.
திருமணமாகி நன்கு வாழ்கின்ற தம்பதிகள் பலரின் ஜாதகங்களில் ராகு கேது தோஷங்கள் இருக்கவே செய்கின்றன. இன்னொரு விஷயம். இங்கே திருமணம் என்பது நட்பு போலத்தான். ஏழாம் இடம் என்பது சம நட்பு கொடுக்கக்
கூடிய இடம். சுக்கிரன், பன்னிரண்டாம் இடமாகிய அயன சயன போக ஸ்தானம், செவ்வாய், குரு இவர்களெல்லாம் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டுதான் நாம் அவர்களின் தனிப்பட்ட உடல் சார்ந்த வாழ்க்கையைப் பற்றிய பிரச்னையை (sexual problems) பரிசீலிக்க முடியும்.
வெறும் ஏழாம் இடத்தை வைத்துக்கொண்டு சொல்ல முடியாது. ஏனென்றால் ஏழாம் இடம் என்பது நட்பு, தொழில் மற்றும் பொதுஜன தொடர்பு போன்ற விஷயங்களையும் குறிப்பிடும். அதைவிட செவ்வாயின் நிஜமான பலத்தைக் கணக்கிட்டு, பின்தான் செவ்வாய் தோஷத்தைப் பற்றி சொல்ல முடியும். செவ்வாயில் ஸ்தானபலம், திக்பலம், செவ்வாயோடு சேர்ந்த கிரகங்கள், செவ்வாய்க்கு வீடு தந்த கிரகத்தின் நிலை, செவ்வாய்க்கு சாரம் தந்த கிரகத்தின் நிலை என இத்தனையும் அனுசரித்துத் தான் பலன் எடுக்க முடியும். ஏழில் செவ்வாய் செயல்பட முடியாத நிலையில் இருந்தால், அவரால் எப்படி தோஷத்தைத் தர முடியும். அல்லது அவருடைய நிர்வாக காலம் என்று சொல்லக்கூடிய அவருக்கே உரிய தசா காலம் முடிந்த பின்னால் அவரால் எப்படி பெரிய அளவில் தீமையைச் செய்ய முடியும்?
மற்ற கிரகங்களின் தசா காலங்களில், அவர் புத்தி அந்தர நாதனாகச் செயல்பட்டாலும், தசாநாதன் அனுமதியின்றி அவரால் பெரும் தீங்கு செய்துவிட முடியாது. அப்படி நடக்கிறது என்று சொன்னால் அந்த தசாநாதன் பாதிப்படைந்து இருப்பார். எனவே இவற்றை எல்லாம் அனுசரித்துத்தான் நாம் செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம், போன்ற தோஷங்களையும் கணக்கிட வேண்டும். அதைவிட முக்கியமான ஒரு செய்தி, சூரிய தோஷம், சந்திர தோஷம் என்று ஒவ்வொரு கிரகங்களுக்கும் தோஷமும் உண்டு யோகமும் உண்டு.
அது என்னவோ சனி ராகு செவ்வாய் போன்ற கிரகங்களுக்கு மட்டும்தான் நாம் பார்க்கிறோம். பலம் இழந்த சூரியன் ஏழில் இருந்தாலோ ஆயுள் ஸ்தானத்தில் இருந்தாலோ பலம் இழந்த குரு ஏழில் இருந்தாலோ, அல்லது அஷ்டம ஸ்தானத்தில் இருந்தாலோ, அல்லது வக்ரகதியில் இருந்தாலோ, நீசம் பெற்று இருந்தாலோ, அவர் என்னதான் சுபகிரகமாக இருந்தாலும் என்ன பலன் செய்து விட முடியும்? அவர் தோஷத்தைத் தானே செய்வார்.
அதே நேரம், தோஷம் என்று சொல்லப்படுகின்ற செவ்வாய், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் யோக நிலையில் அமர்ந்துவிட்டால் அவர்கள் தரும் யோகங்களைப் போல வேறு யாராலும் தர முடியாது. செவ்வாய் யோகம் பெற்ற நிலையில் நிலங்களை வாங்குகிறார்கள். பெரிய பெரிய வீடு கட்டுகிறார்கள். உயர்ந்த பதவிகளைப் பெறுகிறார்கள்.
அதிகாரத்தோடு பவனி வருகிறார்கள். இவ்வளவும் தருவது செவ்வாய் யோகமா? தோஷமா? என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.