செல்வத்தைப் பெருக்க இணைய தளங்களில் பல்வேறு வழிமுறைகள் சொல்லப்படுவது சரிதானா?
?விநாயகருக்கு கொழுக்கட்டையை எப்பொழுது வேண்டுமானாலும் படைத்து வழிபடலாமா?
- பொன்விழி, அன்னூர்.
தாராளமாக. முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானுக்கு அந்த முழுமையை அதாவது பூரணத்தை தனது உள்ளே அடக்கியிருக்கும் கொழுக்கட்டையை எப்பொழுது வேண்டுமானாலும் படைத்து வழிபடலாம். அதன் மூலம் இறங்கிய பணியில் நாமும் முழுமையான வெற்றியை அடைய இயலும்.
?கட்டிடங்கள் இடிந்து விழுவது போலவும் அதில் ஒரு குழந்தையை நான் காப்பாற்றுவது போலவும் கனவு கண்டேன். இதற்கு என்ன அர்த்தம்?
- ராமச்சந்திரன், துபாய்.
பேராசையால் உண்டாகும் பெருநஷ்டத்தில் இருந்து நீங்கள் உங்களைக் காப்பாற்றிக்கொண்டுவிட்டீர்கள் என்பதுதான் அதற்கான பொருள். ஆக, கனவின் பலனாக எந்த ஒரு விஷயத்திலும் அகலக்கால் வைக்காது நிதானித்து செயல்படுங்கள், வெற்றி நிச்சயம்.
?குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் திருஷ்டி கழிக்க ஒரே மாதிரி செய்யலாமா அல்லது மாற்றி செய்யலாமா?
- வண்ணை கணேசன், சென்னை.
ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு திருஷ்டி சுற்றிப் போடும்போது மட்டும்தான் ஒரு சில முறை களில் மாறுபாடு என்பது இருக்கும். மற்றபடி ஒரு வயதிற்கு மேற்பட்ட அதாவது குலதெய்வம் கோயிலில் மொட்டை அடித்து காது குத்திய பின்னர் எல்லா வயதினருக்கும் திருஷ்டி சுற்றிப் போடுதல் என்பது ஒரே சம்பிரதாயம்தான். அதில் மாறுபாடு ஏதும் கிடையாது.
?இரவில் குளிக்கலாமா? எந்த நேரத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
சாதாரணமாக தினசரி ஸ்நானம் என்று வரும்போது இரவில் குளிப்பதை சாஸ்திரம் அனுமதிக்கவில்லை. குழந்தை பிறப்பு, உறவினர்களின் இறப்பு செய்தி கேட்டல், சந்திர கிரஹணம் தவிர இரவில் காரணம் இல்லாமல் ஸ்நானம் செய்யக் கூடாது. சூரிய உதயத்திற்கு இரண்டு நாழிகைக்கு முன்னதாக ஸ்நானம் செய்து சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
?பிறந்த தேதி தெரியாமல் ஜாதகம் எழுதி வைக்காதவர்கள் தங்கள் எதிர்காலத்தை எப்படி அறிந்து கொள்வது?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த இடம் சரியாக தெரிந்தால் மட்டுமே ஜாதகம் கணித்து பலனை அறிந்து கொள்ள இயலும். ஜாதகம் இல்லாதவர்கள் பிரசன்ன ஜோதிட முறை மூலம் ஒரு நேரத்தில் ஒரு கேள்விக்கான விடையை மட்டும் அறிந்து கொள்ள இயலும். உதாரணத்திற்கு திருமணம் எப்போது நடக்கும் என்கிற கேள்விக்கும், அது சம்பந்தமான கேள்விக்கும் மட்டும் ஒரு நேரத்தில் இந்த முறையில் பலனை அறிந்துகொள்ள இயலும். என்ன படிக்கலாம், எந்த துறையில் வேலைக்குச் செல்லலாம், வீடு எப்போது கட்டலாம் என்று ஒரே நாளில் பல கேள்விகளுக்கு இந்த முறையில் விடை காண இயலாது. அதுபோன்று அறிந்துகொள்ள கண்டிப்பாக ஜனன ஜாதகம் என்பது அவசியம். இந்த பிரசன்ன ஜோதிட முறை என்பது கேரளாவில் பின்பற்றப்படுவது அல்ல. இது கேள்வி கேட்கப்படும் நேரத்தில் உள்ள கிரஹ நிலையைக் கொண்டு சொல்லப்படும் முறை ஆகும்.
?செல்வத்தைப் பெருக்க இணைய தளங்களில் பல்வேறு வழிமுறைகள் சொல்லப்படுவது சரிதானா?
- டி.நரசிம்மராஜ், மதுரை.
யார் என்ன சொன்னாலும் உண்மையாக உழைத்தால் மட்டுமே உயர்வு என்பது கிடைக்கும். உழைக்காமல் கிடைக்கும் செல்வம் நிலைக்காது. உழைத்து சம்பாதிக்கும் பொருளை சேர்த்து வைக்க வேண்டும் என்றால் அதற்கு சுத்தமும் சுகாதாரமும் முக்கியம். இதைத்தான் நம்முடைய சாஸ்திரமும் சம்ப்ரதாயங்களும் வலியுறுத்துகின்றன. சரஸ்வதி பூஜை, தீபாவளி, பொங்கல் முதலான பண்டிகைகள் அனைத்துமே உண்மையாக உழைத்து சம்பாதிக்க வேண்டும், அந்த சம்பாத்யத்தை நல்லபடியாக சேர்த்து வைக்க வேண்டும். இல்லாதோர்க்கு இருப்பவர்கள் கொடுத்து உதவ வேண்டும். எல்லோரும் நல்லபடியாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தை முன்வைத்துத்தான் பூஜைகள் செய்யப்படுகின்றன. செல்வத்தைப் பெருக்க வேண்டும் என்றால், முன்னோர்கள் சொல்லித்தந்த சாஸ்திர சம்ப்ரதாயங்களைச் சரிவர பின்பற்றி வருவதோடு உண்மையாக உழைத்துவந்தாலே போதுமானது.
?முகத்திற்குப் பூசிய மஞ்சள் பொடியை தற்போது தண்ணீரில் சேர்த்து வாசல் தெளிப்பது ஏன்?
- சு.ஆறுமுகம், கழுகுமலை.
பசுஞ்சாணம் கிடைக்காத தருணத்தில் இதுபோல் மஞ்சள் பொடியை தண்ணீரில் கரைத்து வாசல் தெளிக்கிறார்கள். பசுஞ்சாணத்தைப் போலவே மஞ்சள்பொடி என்பதும் கிருமிநாசினியாக செயல்படுகிறது. வீட்டிற்குள் எந்தவிதமான நோய் கிருமிகளும் அண்டக் கூடாது என்பதற்காகத்தான் பசுஞ்சாணம் தெளிக்கப்பட்டது. சாணம் கிடைக்காத பட்சத்தில், அதே போன்று கிருமிநாசினியாக பணியாற்றும் மஞ்சள்பொடியை தண்ணீரில் கரைத்து வாசல் தெளிப்பதில் எந்தவிதமான தவறும் இல்லை. அதே நேரத்தில் பெண்கள் குளிக்கும்போது அவசியம் முகத்திலும் மஞ்சள் பூசிக் குளிக்க வேண்டும்.
?பிரம்மதேவனின் நான்கு முகங்கள் ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களைக் குறிக்கிறதா?
- ஜெ. மணிகண்டன், வேலூர்.
நான்கு வேதங்களோடு நான்கு திசை களையும் குறிக்கும். பிரம்மா படைப்புக் கடவுள் என்பதால் நான்கு திசைகளையும் நோக்கிக் கொண்டிருப்பார் என்றும், உலகில் தோன்றும் அனைத்து ஜீவராசிகளும் அவரது சிருஷ்டியினால் உருவானது என்றும், இது இந்த பிரபஞ்சத்தின் முழுமையை உணர்த்துகிறது என்றும் ஸ்மிருதி சொல்கிறது.
?ஜென்ம நட்சத்திரத்தன்று என்ன செய்யலாம்?
- ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி.
வழக்கம்போல் என்னென்ன செய்வோமோ அனைத்தையும் செய்யலாம். அது நாம் செய்கின்ற செயலுக்கு உகந்த நட்சத்திரமாக அமைந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, ஒருவர் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார் எனும் போது, கிருத்திகை நட்சத்திர நாளில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவதில்லை. அதே நேரத்தில் ஒரு பெண் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார் எனும்போது, உத்திரம் என்பது திருமணம் நடத்து வதற்கு ஏதுவான நட்சத்திரம் என்பதாலும் பெண்களுக்கு ஜென்ம நட்சத்திரத்தில் திருமணத்தை நடத்துவது என்பது விசேஷம் என்பதாலும் தாராளமாக ஜென்ம நட்சத்திர நாளிலேயே திருமணத்தை நடத்தலாம். நாம் செய்யப்போகும் செயலுக்கு ஏதுவான நட்சத்திரமாக நமது ஜென்ம நட்சத்திரம் என்பது அமைந்திருந்தால் தாராளமாக அந்தச் செயலை ஜென்ம நட்சத்திர நாளிலும் செய்யலாம்.
உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பி வைக்கவும். ஏன் எதற்கு எப்படி..? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை - 600 004.