என்றென்றும் அன்புடன் திறமை இருந்தால் போதுமா?
திறமை இருப்பவர்கள் எல்லோரும் ஏன் வெற்றி பெறுவதில்லை?
வெற்றி பெறுவதற்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்க திறமை மட்டும் போதுமா?
திறமை வாழ்க்கையை எதிர்கொள்ள உதவுமா?
இதுபோல் பல கேள்விகள் தொடர்ந்து கொண்டே போகும். பெரும்பாலான
திறமையானவர்கள் தனிமையில் இருப்பதை பார்க்கலாம்.
எல்லோரிடமும் சில திறமைகள் இருக்கத்தான் செய்கிறது. சிலர் அதை பட்டை தீட்டிக் கொள்கின்றனர்.
அதனிடையே வாழ்கின்றனர். சிலர் அதை வேண்டும்பொழுது கையில் ஏந்திக் கொள்கின்றனர். ஆனால், வெற்றி பெறுவது என்னும் இடத்திற்கு வருவதற்கு வெறும் திறமை மட்டும் போதாது. சரியான அணுகுமுறை வேண்டும். வெற்றி என்பது ஒரு தடவை மட்டும் அடையும் இலக்கு இல்லை. வாழ்க்கையில் ஒவ்வொரு நிலைகளிலும் வெற்றியின் துணை தேவைப்படும்.
நன்றாக படித்தால் போதுமா? நல்ல வேலை கிடைக்க வேண்டும்.
நல்ல வேலை கிடைத்தால் போதுமா? நல்ல துணை கிடைக்க வேண்டும்.
நல்ல துணை கிடைத்தால் போதுமா? நல்ல குழந்தைகள் வேண்டும்.
நல்ல குழந்தைகள் இருந்தால் போதுமா? மத்திம வயதில் புகழ், பணம் பெருக வேண்டும்.
இதற்கு ஒரு முடிவே கிடையாது. எல்லாம் திறமை இருப்பவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கிறதா என்றால் இல்லை.திறமை ஒரு நல்ல ஆயுதம் போன்றது. அதை அவர்களுக்கு கையாளத் தெரிய வேண்டும். இல்லையென்றால் ஏதோ ஒரு இடத்தில் எதையாவது தவற விட்டு விடுவார்கள்.திறமையுடன், மனிதர்களிடம் சிறந்த அணுகுமுறை உள்ளவர்கள் மட்டுமே இவை அனைத்தும் கொள்ள முடியும். திறமையினால் ஏற்படும் கர்வத்தை தவிர்த்து அணுகுமுறையில் கவனமாக இருப்பவர்களை சமூகம் கையில் ஏந்திகொள்ளும்.
மகாபாரதத்தில் கர்ணனும், அர்ஜுனனும் சிறந்த வில்லாளிகள். அவர்களை வித்தியாசப்படுத்தியது அவர்களின் அணுகுமுறையே.அர்ஜுனனுக்கு நல்ல திறமை இருந்தாலும் அவனுடைய அணுகுமுறையில் பணிவு இருந்தது. கிருஷ்ணன் பஞ்ச பாண்டவர் களில் அர்ஜுனனையே தேர்ந்தெடுக்கிறார்.கிருஷ்ணனுக்கு தேவை இந்த இடத்தில perfectionist இல்லை. அர்ஜுனன் தன்னை ஒரு களிமண் போல் வைத்திருந்தான். அவனைக் கொண்டு எது வேண்டுமானாலும் செய்ய முடிந்தது. அவனிடம் இருந்த பயங்களையோ, சபலங்களையோ, ஆசைகளையோ அவன் மறைக்கவில்லை. எல்லாவற்றையும் எதிர்கொண்டான். அதே நேரத்தில் காதைத் திறந்து வைத்துக் கொண்டான். தவறு செய்தாலும் அதை சரி செய்வதற்கான முயற்சியை எடுத்தபடி இருந்தான்.
அண்ணனிடம் கோபப்பட்டான். காதலில் விழுந்தான். போர்க் களத்தில் வில்லை கீழே போட்டான். திறமை இருந்தாலும் தான் எல்லோரையும் சார்ந்து இருக்கிறோம் என்பது அவனுக்குத் தெளிவாய் தெரிந்தது. எல்லோரிடமும் அவன் அணுகுமுறை பெரும் அளவில் அவன் திறமையை மேம்படுத்த உதவிற்று. போர்க் களத்தில் அவன் திறமையுடன் கண்ணனின் வழிகாட்டுதலே அவனை வெற்றிபெறச் செய்தது.
கர்ணனிடம் சிறந்த திறமை இருந்தாலும், அவனுடைய தாழ்வு மனப்பான்மை மற்றும் அவனுடைய இயலாமைகளை மறைத்தபடி இருந்தான்.
அவன் கோபத்தை கேடயமாக வைத்துக் கொண்டு அதன்பின் ஒளிந்துகொண்டான்.
அவனுடைய பயம் அவனை தன் குருவிடம் பொய் சொல்ல வைத்தது. கர்ணன், பரசுராமரிடம் பிரம்மாஸ்திரம் பயிலும்போது, ஒரு பிராமணராக பொய் சொல்லி அவரிடம் கல்வி கற்கிறான். ஒருமுறை, பரசுராமர் கர்ணனின் மடியில் படுத்து உறங்கும்போது, ஒரு வண்டு வந்து கர்ணனின் தொடையில் துளைக்கிறது. வலியைப் பொறுத்துக் கொண்டு, கர்ணன் ரத்தம் வரும் வரை அமைதியாக இருக்கிறான். விழித்த பரசுராமர், கர்ணனின் செயலைக் கண்டு, அவன் பிராமணன் இல்லை, சத்திரியன் என்று அறிந்து, அவனைச் சபித்து விடுகிறார்.
அதனால் கற்று கொண்ட வித்தை பயன் பெறாமல் போனது. .அங்கீகாரம் கொடுத்த துரியோதனனை எதிர்க்க துணிவு இல்லாமல் அவன் தவறுகளை தன் திறமையால் ஈடு செய்யலாம் என்று நினைத்தான். கடைசியாக போர்க்களத்திலும் அவன் அணியில் இருப்பவர்களுக்கே கர்ணனை பிடிக்காமல் போனது. அதன் உச்சம் சல்லியன் தேரோட்டியாக வந்து அவனை எதிர்த்தான் . கர்ணன் தன் திறமையை மட்டும் நம்பி இருந்தான். ஆனால், அது அவனுக்கு உதவவில்லை.
ராமாயணத்தில் சுக்ரீவன் பலசாலியாக இருந்தாலும், வாலியின் முன் அவன் ஒன்றுமே இல்லை. ஆனால், சுக்ரீவனின் அணுகுமுறை ஆஞ்சநேயனை சம்பாதித்துக் கொடுத்தது. பின்னர், அவரின் மூலம் ராமனும் லக்ஷ்மணனும் அவனின் ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்தனர்.இங்கு திறமை மட்டும் உதவாது. திறமையோடு சேர்ந்த அணுகுமுறையும் நேர்மறை எண்ணங்களும் , சிறந்த வழிகாட்டியையோ, குருவையோ அடையாளம் காட்டும். தவறு செய்தாலும் ஒப்புக்கொண்டு அதைச் சரிசெய்தபடி முன்னேற சுற்றியிருக்கும் உறவுகளும், நண்பர்களும் கை கொடுப்பார்கள்.
திறமையே இல்லாவிட்டாலும் அணுகுமுறை நம்மைச் சிறந்த இடத்திற்கு கொண்டு செல்லும். அப்பொழுது திறமை எங்கிருந்தோ ஓடிவந்து நம்மைப் பிடித்துக் கொள்ளும்.
(தொடரும்)