தினப் பொருத்தம் முக்கியமானதா?
தினப் பொருத்தம் என்பதே தினந்தோறும் கணவன் மனைவிக்குள் உண்டான பேச்சுக்கள், உரையாடல்கள், வாதங்கள் போன்றவற்றை குறித்துப் பேசுவதாகும். ஒரு நாளோ இரு நாளோ அல்ல மரண பரியந்தம் வரை தினந்தோறும் பார்த்துப் பழகுவதற்கான பொருத்தமென்பதால்தான் முதலில் இதை வைத்திருக்கிறார்கள். தினமும் எப்படியிருப்பார்கள் என்பதால்தான் தினப் பொருத்தம். மேலும், இந்த பொருத்தத்தை பார்த்துவிட்டால் முரண்பாடுகளற்ற வாழ்க்கையை எளிதாக வாழலாம். பிரச்னைகள் என்று வரும்போது சில நிமிடங்களிலேயே தீர்ந்து விடுவதாகவும் இருக்கும். ‘‘நான் சொன்னதை என்னிக்கு அவர் ஏத்துகிட்டிருக்காரு’’ என்கிற புலம்பலை தவிர்க்கலாம். ‘‘கல்யாணமான நாள்லேர்ந்து என் பேச்சை ஒன்னையாவது அவர் கேட்டிருக்காரா’’ எனும் ஆதங்கத்தை அகற்றலாம்.
‘‘என்னங்க காலையில எழுந்து எங்க போயிட்டு வறீங்க’’
‘‘ஏன் உங்கிட்ட அவசியம் சொல்லணுமா. சொல்லாம போயிட்டு வர அளவுக்குக் கூட எனக்கு சுதந்திரம் இல்லையா’’ என்று பதில் வந்தால் தினப் பொருத்தம் இல்லையென்று அர்த்தம்.
‘‘என்ன சமைச்சிருக்க. வாயிலயே வைக்க முடியலை. உப்பு சப்பில்லாம இப்படித்தான் உங்க வீட்ல சமைப்பீங்களா’’ என்று தொடர்ந்து ஏடாகூடமாக பேச்சு தொடர்ந்தால் தினப் பொருத்தம் சரியாக அமையவில்லை என்று கொள்ளலாம்.
இப்போது உதாரணத்திற்காக புனர்பூசம் என்கிற நட்சத்திரத்தை எடுத்துக் கொள்வோம். புனர்பூசத்திற்கு இரண்டாவதாக பூசம் நட்சத்திரம் வருகிறது. எனவே தினப் பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம். இப்போது தினப் பொருத்தம் சரியாக இருந்தால் மேலே சொன்ன உரையாடலையே, ‘‘உங்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னுதான் பார்த்தேன். ஆனா நீ பாத்ரூம்ல இருந்த. சரி வந்து சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன். பக்கத்துல தெருவில இருக்கற ப்ரெண்டோட பையனுக்கு உடம்பு சரியில்லையாம். அதான் பார்த்துட்டு வந்தேன்’’ என்று பேச்சு இருக்கும். அடிப்படையிலேயே சொல்லி விட்டுப் போவது நல்லது என்கிற தெளிவு இருக்கும்.
‘‘நல்லாதான் சமைச்சிருக்க. சாம்பார்ல ஒரு கல்லு உப்பு சேர்த்திருந்தா அமிர்தமா இருந்திருக்கும். நாளைக்கு ரசம் வைக்கும்போது ரெண்டு பூண்டு பல்லை போடு நல்லாயிருக்கும்’’ என்று அறிவுரையோடு குறையை நிறைவு செய்வார்கள். தவறுகள் திருத்திக் கொள்ளப்படும்.
இப்படி இரண்டாவது நட்சத்திரக்காரர்கள் பொருத்தமாக அமையும்போது தினசரி, பரஸ்பரம் பேச்சுவார்த்தைகள், கேள்வி பதில்கள் உடன்பாட்டோடு இருக்கும். ‘‘நானும் அதைத்தான் நினைச்சேன். நீயும் அதையே சொல்லிட்டியே’’ என்பார்கள்.
இப்போது நான்காவது நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கைத் துணையாக வரும்போது எதையுமே கேட்டுக் கேட்டு செய்வார்கள். ‘‘ஆபீஸ்ல எல்லாரும் ஒன்னா சாப்பிடப் போனோம். ஏதாவது வாங்கிட்டு வரலாம்னு யோசிச்சேன். போனவாரம்தான் பாவ்பாஜி வாங்கினேன். சரி இந்த வாரம் வேற வாங்கலாம்னுதான் இதை வாங்கிட்டு வந்தேன்’’ என்பார்கள். ‘‘உனக்கு இந்த ப்ரௌன் கலர் சுடிதார்தான் நல்லாயிருக்கும்’’ என்பீர்கள். பொதுவாகவே நான்காவது நட்சத்திரக்காரர்களை மணமுடிக்கும்போது சுகபோகமான வாழ்க்கையில் கவனம் செலுத்துவார்கள்.